கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -11 கற்பித்தலுடன் மாணாக்கரை நல்வழிப்படுத்துதலும் சமுதாயப்பணிதான்


யாழ். பரியோவான் கல்லூரியிலிருந்து  பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பிருந்தும், எனது குடும்பத்தின் நிலைமையினால் நான்  அந்த வாய்ப்பினை  இழந்தேன்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அம்பி மாஸ்டராக நான் புதிய அவதாரம் எடுத்தபோது,  மாணவர் ஒழுக்கத்தையும்  கவனிக்கவேண்டிய Discipline Master  என்ற பணியும் என்மீது சுமத்தப்பட்டது.
தகுதியுள்ள மாணவ – மாணவிகளை மாணவர் தலைவர்களாக நியமித்து, ஒழுங்குமுறை நிலைநாட்டும் முயற்சியில் மாணவர்களையும் ஈடுபடவைக்கும் பொறுப்பு என்மேற் சுமத்தப்பட்டது.
நான் படித்த கல்லூரியிலே மாணவர் தலைவனாகப்பெற்ற அனுபவமும் அதிபர் அருளானந்தம் வழங்கிய சான்றிதழும் இளமையிலேயே எனக்கு அப்பொறுப்பைச் சுமத்தின எனலாம்.
ஒழுங்கு முறையை நிலைநாட்டுதற்குச் சிறந்த வழி, போதனையும் கட்டுப்பாடும் மட்டும் அல்ல. நடத்தையால் முன்மாதிரி காட்டுதலே முதலில் தேவை என்பதை நான் உணர்ந்தேன்.
அதனால், அக்காலப்பகுதியில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள நான், பாடசாலையிலும் மாணாக்கர் முன்னிலையிலும் புகைப்பதை நிறுத்தினேன். பாடசாலைக்கு நேரத்துக்கு வரவேண்டும். அதைச்சொல்வதிலும் பார்க்க நாமே அதைச்செய்தல் வேண்டும். மணி அடித்துச் சில நிமிடங்களுள் வகுப்பறைக்குச் சென்று பாடத்தை துவங்கவேண்டும். இப்படிச் சில செயல்களைச் செய்ததன் மூலம் ஒழுங்கு முறையை நிலை நிறுத்த முடிந்தது.
பரமசாமி வாத்தியார், பீற்றர் சோமசுந்தரம் ஆகியோர் காட்டிய வழியையும் நான் விரைவிலேயே தொடர்ந்தேன். வட இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்திய ஜே.எஸ். சி பரீட்சைக்கும் சிரேஷ்ட தராதர எஸ்.எஸ்.சி. பரீட்சைக்கும் தயாராகிய எனது வகுப்பு மாணாக்கருக்கு இலவசமாக வகுப்புகள் நடத்தி மனநிறைவு பெற்றேன். மற்றைய ஆசிரியர்களின் வகுப்பு மாணாக்கரும் விரும்பிவந்து படித்தனர் என்பது பெரும் மனநிறைவு தந்தது.

நன்றாகப்படித்து, நல்லொழுக்க சீலராக வளரும் மாணாக்கரைத் தட்டிக்கொடுத்து, அவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவு செய்வதற்குச் சில வாய்ப்புகள் அன்று இருந்தன. கல்லூரி ஆசிரியர் கழக நிதியம் ஒன்றைப் பயன்படுத்தி, வசதி அற்ற மாணாக்கருக்குத்  தேவையான பாடப்புத்தகங்களை வழங்குதற்கும்  முயற்சி எடுத்தேன். அப்படியான நிலையில் உதவி பெற்ற மாணாக்கருள் ஒருவர் பிற்காலத்தில் வைத்திய கலாநிதியாகியபொழுது, நான் என்னுள் மனநிறைவு பெற்றேன்.
சில விசேட உதவிகள் தேவைப்பட்டவர்களை இனங்கண்டு ஆக்கபூர்வமாக உதவிய அனுபவமும், அதனாலே காலத்தாற் செய்த உதவி மூலம் சிலரை  “ ஆளாக்கி “ னேன் என்பதிலும் என் உள்ளம் மகிழ்வெய்தியது. அவற்றில் ஒரு சில பற்றி இங்கே பதிவிட விரும்புகின்றேன்.
கல்லூரியிலே, எனது இல்லத்தைச் சேர்ந்த ஒரு மாணவன். பருத்த உடல். ஆனால், சோம்பேறி. மற்றைய மாணவருடன் சேர்ந்து விளையாடுவதும் இல்லை. வகுப்பு முடிந்த பின், வகுப்பறையிலேயே மாலை ஐந்தரை மணிவரையும் சோம்பி இருப்பான். படிப்பிலும் அக்கறை குறைவு. இப்படியான இயல்புடைய அம்மாணவன், மிக வசதியுள்ள குடும்பத்துச் செல்லப்பிள்ளை.
ஒரு நாள் அவன் இருந்த வகுப்பறைக்குத் தற்செயலாகச் செல்வதுபோலச் சென்றேன். அவனுடன் சிறிது நேரம் பேசினேன்.  “ நீ ஏன்  படிப்பதில்லை.? நீ ஏன் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் இல்லை.? ஏன் நேரத்துக்கு வீட்டுக்குச்செல்வதில்லை.?
இப்படிச் சில கேள்விகளைக் கேட்டேன். வீட்டிற் பெற்றோர் வைதலும், படிப்பில் பின்தங்கியதால் கண்டிப்பதும், சக மாணவர் ஏளனஞ் செய்தலும்  அவனை மிகவும் பாதித்திருந்ததை அவதானித்தேன். அவனுக்கு நம்பிக்கையான கொழுகொம்பு வீட்டில் இல்லை. வகுப்பிலும் இல்லை.  நான் வகுப்பாசிரியனும் அல்லன்.
நான்  ‘ இல்ல  ‘ ஆசிரியனாகவிருந்த  ‘ டிக்சன்  ‘ இல்ல மாணவன் என்பதே தொடர்பு. அதைப்பயன்படுத்தி, அவனை வழிப்படுத்த முயன்றேன்.
 ‘ டிக்சன்  ‘ இல்லத் தலைவனின் உதவியுடன் அவனை விளையாட்டுகளில் ஈடுபடத்தூண்டினேன். ஓட்டம், பாய்ச்சலில் அவன்  ‘உடற்பருமன் ‘ காரணமாக ஈடுபட வாய்ப்பிருக்கவில்லை. ஆனால், குண்டெறிதலிலும் ஈட்டி எறிதலிலும் பெரு வெற்றிபெற்றான். புத்துணர்வும் உயிர்ப்பும் பெற்ற அவன், பல்கலைக்கழக பொறியியலாளர் பட்டம் பெற்றுத் தொழில் புரிந்த வேளையிலும், மிகப்பணிவன்புடனும் நன்றி உணர்வுடனும்  “ சேர்  “ என்று வந்தணைவதுண்டு.
அடுத்து நான் சொல்லவிரும்பும் கதை, எனது பழைய கல்லூரியுடனும் தொடர்புடையது. அங்கு பயின்ற பணக்காரக்குடும்ப மாணவன் ஒருவன் பற்றிய கதை. யாழ்ப்பாணப்பட்டினத்திலே, பல்வேறு வசதிகளுமுள்ள செல்வந்தக்குடும்பத்தில் பிறந்த அவன், படிப்பதில் அக்கறை காண்பிப்பது இல்லை என்பது மட்டுமல்ல, கல்லூரியில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு இயலாது என்று சொல்லிய நிலை. செல்வமும் உயர் பதவியும் உள்ள பெற்றோர் அவனை எந்தப்பள்ளியிற் சேர்க்கலாம் என்று தேடி அலைந்து, யூனியன் அதிபரிடம் வந்து பேசினார்கள்.  அதிபர் பதில் அளிப்பதற்கு முன் என்னுடன் தனியாகப்பேசி, தமது சங்கட நிலையையும் எடுத்துக்கூறினர்.
அவ்விளைஞனின் பிரச்சினையை மிக விரைவில் நான் கண்டுகொண்டேன். பணம் – மோட்டார் சைக்கிள் – நண்பர்கள்! அவனிடமிருந்த மோட்டார் சைக்கிளை நீக்கி, நண்பர்களையும் அவனிடமிருந்து பிரித்தால், அவன் திருந்தக்கூடும் என்பது எனது கணிப்பு. அதை அதிபர் ஐ. பி.யிடம் சொன்னேன்.
 “ அவன் விடுதியில் தங்கியிருந்து படிக்கவேண்டும்.  மோட்டார் சைக்கிள் கல்லூரி வளவுக்கு வரக்கூடாது. நண்பர்கள் வந்து கல்லூரியில் பேசக்கூடாது. கல்லூரி வளவுக்கு வெளியே அதிபரின் அனுமதியின்றி அவன் செல்லக்கூடாது.  “
இந்த நிபந்தனைகளுடன் அம்மாணவனை யூனியன் கல்லூரியில் சேர்த்தார் அதிபர்.  அவனை ஊக்கமுடன் படிப்பதற்கு  உதவுமாறு அதிபர் என்னையும் கேட்டுக்கொண்டார். மிக விரைவிலேயே அவன் மாறியதுடன் புது வாழ்வும்  பெற்றான். கல்லூரியின் மாணவர் தலைவனாகவும் கிரிக்கட் – உதைபந்தாட்டங்களில் முன்னணி வீரனாகவும் திகழ்ந்தான். பிற்காலத்தில், தரைப்படையிற் சேர்ந்து பணியாற்றி மேஜர் பதவி வகிக்கும்போது என்னைச்சந்தித்த வேளை அந்த பழைய நினைவுகளைக் கூறினான்.
இன்னுமொரு கதையுடன்,   இந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட கதைகளை நிறைவுசெய்யலாம் என்பது எனது எண்ணம். அது ஒரு எட்டாம் வகுப்பு மாணன்- மாணவி சம்பந்தப்பட்ட கதை!
 ‘ ஒழுங்கு  ‘ நிலைநாட்டும் ஆசிரியர் என்ற வகையில் என்னிடம் வந்த முறைப்பாடு பற்றியது.
எட்டாம் வகுப்பு மாணவி ஒருத்தி, கலங்கிய கண்களுடன் வந்தாள்.  “ என்ன நடந்தது..? ஏன் அழுகிறாய்..? என்று கேட்டேன்.  அவள் கடிதம் ஒன்றை என்னிடம் தந்தாள். அதை நான் படித்துப்பார்த்தேன்.
அது ஒரு காதல் கடிதம். அதே வகுப்பு மாணவன் எழுதிய கடிதம். அவளது அழகு, கவர்ச்சி, நடை… இப்படி வருணனை பல. முடிவாக எழுதிய வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தன. அவனால் அம்மாணவிக்கு எதுவித பிரச்சினையும் வரமாட்டாது  என்ற  நம்பிக்கை அளித்த வரிகள் அவை.
 “ …..அன்பே! உண்மையில் நான் உன்னைக் காதலிக்கின்றேன். என் காதலை நீ ஏற்பாய் என நம்புகிறேன்.  நீ ஏற்றால், பதில் எழுது. நான் மிகவும்  மகிழ்ச்சி அடைவேன்.  நீ என் காதலை ஏற்காவிட்டாற் கவலைப்படுவேன் என்பது உண்மை.  ஆனால், மனிதனைப்போலச் சகித்துக்கொள்வேன்.  “
இந்தப்பகுதியை திரும்பவும் வாசிக்குமாறு அப்பிள்ளையிடம் சொன்னேன்.  அவள்  நாணத்துடன்  வாசித்தாள்.
அதன்பின்பு,  நான்  அவளைக் கேட்டேன்:
 “ நீ அவனது காதலை ஏற்க மறுத்தால்,  அவன் தொடர்ந்து தொந்தரவு தருவான் என்று பயப்படுகிறாயா..?  “
“  இல்லை சேர்  “ என்றாள் . புன்னகையுடன் திரும்பிச்சென்றாள்.
அக்கடிதத்தை வாங்கி அந்த மாணனை அழைத்துக்கொடுத்தேன். அவன் ஒருகணம் திகைத்தான்.                    “ சேர்… சேர்  “ என்றான்.   “ அதிபரிடம் சொல்லாதையுங்கோ  “ என்று மன்றாடினான். நான் அக்கடிதத்தை மீண்டும் பெற்று கிழித்தேன்.
 “ நீயும் மற. நானும் மறக்கிறேன்  “ என்றேன். கதை முடிந்தது.
இவைபோல இன்னும் பல கதைகளைச் சொல்லலாம். ஆனால், எனது  நோக்கம் அதுவல்ல.  வழிதவறும் மாணாக்கரை எவ்வாறு அன்பாலும் ஆதரவாலும் வழிப்படுத்தலாம். அவர்களைத் திசை திருப்பி எவ்வண் நல்வழியைத் தொடரச்செய்யலாம். ஆக்கபூர்வமான முறையில் எவ்வாறு உதவி, அவர்களை ஆளாக்கலாம் என்பதையும் காலா காலத்திலே பொருத்தமான நடவடிக்கை எடுப்பதன் மூலம் பாதை மாறும் இளைஞருக்கு எவ்வாறு புனர்வாழ்வு அளிக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்துதற்கே இக்கதைகளைச் சொல்ல நினைத்தேன.
வழிதவறி அழிவுப்பாதையிற் செல்லும் அல்லது மனப்பிறழ்வு அடையும் மாணாக்கரைத் தண்டித்தும், அலட்சியப்படுத்தியும், பாடசாலையால் நீக்கியும் பழிவாங்குவது சுலபம். ஆனால், புரிந்துணர்வோடு செயலாற்றிப் புது நம்பிக்கை அளிப்பதுவும் கொழுகொம்பாக்குவதும் மிக ஆரோக்கியமான மனிதாபிமானச் செயல்கள் நன்மைதரும் என்பதும் உண்மை.
வளரிளம் பருவத்திலே உடலியல் அல்லது உளவியற்  காரணங்களால், சூழல் தாக்கத்தினால், சகவாச தோஷத்தால், இளைஞர் மனப்பாங்கு பிறழ்வதும் பாதை மாறுவதும் இயற்கை. பள்ளிப்பருவத்திலே அதை இனங்கண்டு தக்க  பரிகாரம் செய்வது நல்லாசிரியருக்குள்ள பெரும் பொறுப்பாகும். பெற்றோர் கண்டறிந்து கொள்ளமுடியாத சால்புகளை, பள்ளிக்கூடத்திலே ஆசிரியர்கள் கண்டறிந்து வழிப்படுத்த முடியும்.
வகுப்பறையிலே கற்பிக்கும்போது  எனது ரியூஷன் வகுப்புக்கு வரவேண்டும்  என வலியுறுத்துபவர் மட்டும்தான் சமூக விரோத ஆசிரியர் அல்லர்.  தாம் செய்யக்கூடிய ஆக்கபூர்வமான செயல்களுக்குப் பங்களிப்புச் செய்யத்தவறும் ஆசிரியர்களும் மாணாக்கரைப்பொறுத்த அளவில் மட்டுமல்ல, சமுதாயத்தை பொறுத்த அளவிலும் சமூகவிரோதச்செயல் புரியும் ஆசிரியர்களே. ஏனெனில், அவர்களின் அலட்சியத்தினாலே வளரும் பயிர் ஒன்று வளம் இழக்கலாம்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியப்பணி புரியத்தொடங்கிய நாள் முதல்  “ அம்பி மாஸ்டர்  “ ஆகிய நான், இன்றுவரை, அம்பி மாஸ்டர்தான். பரமசாமி வாத்தியார், வல்லிபுரச்சட்டம்பியார், சீவரத்தினம் உபாத்தியாயர், சங்கரப்பிள்ளை உபாத்தியாயர் என ஆசிரியர்களைப் பல மாதிரி அழைத்த காலம் ஒன்றுண்டு.
ஆங்கில மொழியின் தாக்கத்தாலே, உபாத்தியாயர் என்ற சொல்  “ மாஸ்டர்  “ ஆகி, அம்பிகைபாகன் மாஸ்டர்,  “ அம்பி மாஸ்டர்  “ ஆனார்.  ஈழத்தின் சில பிரதேசங்களில் அம்பி ஸேர்  “ என்றும் திரிபடைந்தார்.
இந்நாட்களில் எனது பழைய மாணாக்கர்,  என்னை அம்பி மாஸ்டர் என அழைப்பதுதான் வழக்கம். அவர்களின் அன்பும் பணிவும் அந்த அழைப்பொலியில் எதிரொலிக்கும்.
பெற்றோர் என்னை அம்பி மாஸ்டர் என்று அழைத்தபோதும்,  அவர்களின் பிள்ளைகள்  “ அம்பி அங்கிள்    “  -  “ அம்பி மாமா  “ என அழைப்பதுண்டு. ஆயினும் அதே பிள்ளைகள், பெற்றோர் அழைப்பதுபோல அழைப்பதுதான் சரி என எண்ணியோ ஏதோ...
“ அம்பி அங்கிள்  “ என வழமையாக அழைத்த தாரணி ஒருநாள், அம்பி அங்கிள் எனத் தொடங்கி, திடீரென்று இல்லை எனும் பாவனையில் தலையசைத்து, தன்னைத்திருத்தி, அம்பி மாஸ்டர் என்று மீண்டும் பேசத் துவங்கினாள்.
 “ அம்பி அங்கிள்  “ என வழமையாக அழைத்த மயூரி இன்னும் ஒரு படிமேலே செனறாள்.  தொலைபேசியில் நான் அழைத்தபொழுது, அவள் என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
உள்ளே இருந்து தாயார்,  “ யார் மயூரி பேசுவது ?   “  என்று கேட்கவும் அவள் அளித்த பதிலும் எனக்குக் கேட்டது.
மயூரி கூறினாள்:   “ அம்பி மாஸ்டர் அங்கிள்  “
வாசகர்களே…  “ போதும் மாஸ்டர்   “ என்று  நீங்கள் கூறுதற்கு முன்னர், நானே வழிதிரும்புகிறேன். அம்பி மாஸ்டர், தொழில் காரணமாக ஊர்பெயர்ந்த கதை அது.
( தொடரும் )







No comments: