முகத்தை அலங்கரிக்கும் முகக்கவசம் அமெரிக்க அதிபரும் சாமானிய மக்களும் ரஸஞானி


முழுஉலகையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸிற்கு மத்தியில்  அதனை எதிர்கொள்வதற்கான தேவைகளும் அதிகரித்துவருகின்றது.
கடந்த  காலங்களில்,  வல்லரசுகள்  தங்கள்  வலிமையை  ஆயுதபலத்தின் ஊடாக  காண்பித்து, எதிரிநாடுகளை அச்சுறுத்தி வந்தன.
தங்கள் நாடுகளின் சுதந்திர தினக்கொண்டாட்டங்களின்போது நடத்தும் ஊர்வலங்களில் ஆயுதப்படையினரின் அணிவகுப்பிற்கு முதன்மையை வழங்கி,  கனரக ஆயுதங்களை காட்சிப்படுத்தும்  ஊர்திகளைக்காண்பிப்பதன் மூலமும் தங்கள் பலத்தை வெளியுலகிற்கு காண்பித்து வந்தன.
கடந்த 2019 ஆம் ஆண்டு  முடிவுற்ற வேளையில்,   “  உங்கள் வசம் இருப்பது கண்ணுக்குத் தெரியும் மனித உயிரைக்குடிக்கும் போராயுதங்கள், இதோ  பார் மனித குலத்தையே இனம் – மதம் – மொழி – சாதி வேறுபாடின்றி கொன்றழிக்கத்தக்க ஆயுதம் கண்களுக்கு புலப்படமால் வந்திருக்கின்றேன்  “ என்று தனது கோர முகத்தை காண்பிக்காமல் வந்து  தொற்றியிருக்கிறது இந்த வைரஸ் கிருமி!
கடந்துவிட்ட  2019 ஆம் ஆண்டில் மாத்திரம்  இந்த வல்லரசுகள் முடிவுறாமல் நடத்திவந்த நீடித்த போருக்கு மாத்திரம் செலவிட்ட தொகை :  383,400,000,000,000 என்று புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு செலவிட்ட நாடுகள் 2020 ஆம் ஆண்டு முதல், சீரான ஆரோக்கியமான செயற்கை  சுவாசத்திற்காக வெண்டிலேட்டர்களை பெருமளவில் உற்பத்திசெய்வதிலும் முகக்கவசங்கள் தாயாரிப்பதிலும் நேரத்தையும் நிதியையும் செலவிட்டுவருகின்றன.
ஆயுதங்களுக்காக கந்தகம் நாடிய தேசங்கள், கொரொனா தொற்றாளர்களை சுகப்படுத்துவதற்காக மருத்துவமனைகளை தேடி அலைகின்றன.
யுத்தங்களின் போது இராணுவத்தினரையும் ஆயுத தளபாடங்ளையும்   தங்க வைத்த முகாம்கள்,   தற்போது தொற்றாளர்களை தங்கவைத்து சிகிச்சைக்குட்படுத்தும் சரணாலயங்களாக அவற்றை மாற்றிவருகின்றன.
இந்த அதிவேக மாற்றத்தினை  பூமிப்பந்தில் அரங்கேற்றிய  கண்ணுக்குத் தெரியாத வைரஸிலிருந்து முதற்கட்டமாக தப்பிக்க தேவைப்பட்டிருக்கும் முகக்கவசம் இன்று பேசுபொருளாகிவிட்டது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல்,  அதிரடியாகவும் அசட்டுத்தனமாகவும் கருத்துச்சொல்லும் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் என்ற இடத்தில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சக அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஆலை நிர்வாகி கொடுத்த முகக்கவசத்தை வாங்கி அணிய டிரம்ப் மறுத்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக தொழிற்சாலை நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். கொரோனா காரணமாக ஆலைக்குள் நுழைபவர்கள் சானிடைசரை உபயோகித்துவிட்டு, முகக்கவசத்துடன் நுழைய வேண்டும், சமூக விலகலை – இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை எழுதியுள்ளனர். இந்த விதிமுறைகள் அனைத்தையும் டிரம்ப் மீறியவாறு,  ஆலையை பார்வையிட்ட புகைப்படம், வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் சபை முதலானவை கொரோனா – கோவிட் 19  எனப்பெயர் சூட்டியபோது,   இதே  டொனால்ட்  ட்ரம்ப்தான்,  இந்த தொற்றினை,  சீன வைரஸ் என்று பெயர் சூட்டி தனது குரூர எதிர்ப்பு  முகத்தை காண்பித்தவர்!  
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு இதுவரைகாலமும்  வழங்கி வந்த நிதி ஆதரவையும் நிறுத்தப்போவதாகவும்  அச்சுறுத்தினார். இந்த அச்சுறுத்தல் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கும் ஈடானதா என்று மனிதநேயவாதிகள் கலங்கிப்போயுள்ளனர்.
இக்காலப்பகுதியில் பல தன்னார்வத்  தொண்டர் அமைப்புகளும் தம்மாலியன்றி  இடர்கால நிவாரணப்பணிகளில்  ஈடுபட்டுவருகின்றன.
முகங்களை அழகுபடுத்தி மெருகேற்றுவதற்கு நாடெங்கும் அழகு சிகிச்சை நிலையங்கள் இயங்கின. சுய அழகையே மாற்றிக்கொண்டு ,  வண்ணப் பூச்சுக்களின் மூலம்  செயற்கை முகத்தை காண்பித்து நடமாடியவர்கள்,  தற்போது தமது நேரத்தை முகக்கவசம் தெரிவுசெய்வதில் செலவிட நேர்ந்துள்ளது.
இந்தப்பின்னணியில்  தையல் கலை தெரிந்த ஆண் – பெண் இருபாலாரும் தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டுள்ள செய்திகளும் எம்மை வந்தடைந்தன.
   இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று  பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மாநகரில் வதியும்,   ஒரு இளம் பெண்  தன்னிடமிருக்கும் பழைய தையல் இயந்திரத்தின் துணையுடன்  வண்ணத்துணிகளினால், முகக்கவசங்களை தைத்து அயலில் வதியும் குடும்பத்தினருக்கு வழங்கிவருகிறார்.
வீட்டில் முடங்கியிருந்து, வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும் கொரோனா தொடர்பான மீம்ஸ்களை பதிவேற்றிக்கொண்டிருப்பவர்கள் பெருகியிருக்கும் இக்காலப்பகுதியில்,  காலத்தின் தேவை  அறிந்து தன்னால் முடிந்த சமூகப்பணியை செய்வதற்கு முன்வந்துள்ள இந்த தமிழ் நங்கையின் சேவை முன்மாதிரியானது.
முகக்கவசம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலம் மென்மையான நீல நிறத்தில் அல்லது வான் மேக நிறத்தில்  விற்பனை செய்து கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த தமிழ்நங்கை, வீட்டிலிருந்தவாறு தனது வசமிருக்கும் புதிய துணிகளை பயன்படுத்தி  பல வர்ண  நிறத்தில் முகக் கவசங்களை தைத்து, அயலில் வாழும் மக்களுக்கு இலவசமாகவே வழங்கிவருகிறார்.
அவரது பெயர் ராணிமலர் செல்லையா. 
அவர் கடந்த மார்ச் மாதம் அனைத்துலக மகளிர் தினத்தின்போது தனது அருமைத்தந்தையார் ( அமரர் ) செல்லையா அவர்களின் வாழ்வும் பணிகளும் என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார்.
எதிர்பாராதவகையில் வைரஸ் அச்சுறுத்தல் வந்ததையடுத்து அந்த நூலின் வெளியீட்டையும் மிகவும் அமைதியாக விரல் விட்டு எண்ணத்தக்க அன்பர்களை மாத்திரம் அழைத்து எளிமையாக நடத்தினார்.
 சமூகப்பயன்பாடு மிக்க இந்த மனிதநேயச்செயற்பாட்டில் ஈடுபடும் ராணிமலர் செல்லையா, இரவிரவாக கண்விழித்து தனது பழைய தையல் இயந்திரத்தின் சிக்கல்களையும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு வண்ண வண்ண முகக்கவசங்களை தயாரித்து  இலவசமாக வழங்கிவருகிறார்.
அவரது தன்னார்வத்திற்கும் மனித நேய செயற்பாட்டிற்குக்கும் எமது வாழ்த்துக்கள். இதுபோன்ற நற்சேவைகள் மேற்கொள்பவர்கள் பற்றிய செய்திகள் சமகாலத்தில் வெளிவருவதன்மூலமும்  மானுடத்தின் மகத்துவத்தை நாம் அறியமுடிகிறது.
---0---




No comments: