நானிலம் போற்றும் நன்மகளின் பாட்டு..
வாழ்க்கையின் திசை வெவ்வேறாக இருப்பதுபோல கவிதையின் ஆழமும் சுவையும் கூட மனிதர்களையொத்து வெவ்வேறாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் எழுதும் கவிதைக்கு புதுப்புது முகங்களும் கடலாழ அர்த்தங்களும் கூட விளங்குவதுண்டு. இதுநாள் வரை அவர்களுக்கு வலிப்பதையும் பிடித்ததையும் கூட அவர்கள் நாக்கின்மீது நின்று தாங்களாகவே ஆண்கள்தான் அதிகம் பேசிக்கொண்டிருந்தோம், இப்போது அந்த இடைச் சுவர் உடைந்து அவர்கள் நேராகவே பேசும் காலம் மிகச் சிறப்பானதாக அமைந்திருக்கிறது.
அவர்களுக்கு எப்படி எது பிடிக்கும், அவர்களுக்கு எது மாறானது, எது நேரானது என அனைத்து எழுதா குறைகளையெல்லாம் இனி பெண்களே எண்ணற்றோர் எழுதும் பொற்காலமிதில்; நல்முத்து ஒன்று சிப்பிக்குள்லிருந்து ஓடுடைத்து வெளிவந்தாற் போல நம் கவிஞர் இறையாளும் வந்திருக்கிறார்.
இறையாளின் கவிதைகள் இதயத்திலிருந்து பேசுகிறது. உணர்வுகளை விளைநிலங்களில் நெல்லறுக்கையில் பாட்டாக தொடுத்து வயலெங்கும் நிரப்பிய விவசாயிகளைப் போல மனதெங்கும் கூவி கூவி கவிதைகளாய் நிரைகிறாள் இந்த கவிஞர் இறையாள்.
இறையாள் பேசும் மொழி மிக மென்மையும் சாதுர்யமுமானது. கவிதைகளின் வழியே நின்று காலத்தை எச்சரிப்பதும் தனது வாழ்வின் கேள்விகளை தொடுப்பதும் வாலிபத் தெருவில் நின்று எம் காதல் பாட்டுகளை பதிவதுமாய் முழுக்க முழுக்க உணர்வுகள் நெய்த எழுத்துக்கள் இறையாளின் எழுத்துகள்.
“அனுமதி கோரவா
அப்படியே உடுத்திக் கொள்ளவா
ஏதும் அறியேன் ஆனாலும் ஆர்வம்
கொண்டேன்,
ஆர்வத்தோடு ஆரவாரம் புகுந்தது
அங்கலாய்த்தேன் அளப்பறையானேன்
அப்படியே அமைதியானேன்,
தாக நதி தட்டுவதாய் ஓர் உணர்வு
தாழாத பாசம் தேடி ஏகனிடம் கிடைக்குமோ என்று
எடுத்தாற் போல் சரண் புகுந்தேன்,
அங்கு பாச நதி பெருக்கெடுக்கக்
கண்டேன் ஆனால் கரை காணேன்
காலமே நீ சொல்; நான் மூழ்கவா இல்லை மீளவா!?”
இந்தக் கவிதைக்கு ஆடைகட்டியிருப்பது அத்தனையும் உணர்வன்றோ? உணர்வின் ஆழ்த் தெளிதலிலன்றோ ஞானம் பிறக்கிறது. இவருக்கும் விரைவில் ஞானம் வாய்க்கும் கவிதை வாய்ப்போருக்கு ஞானம் எளிதில் வாய்த்துவிடுகிறது.
“அன்பிழைத்த நேசங்கள் எங்கோ கானலானது
நட்பு கொண்ட அரவணைப்புகள் தூரமானது
பாரில் யாரில் உறைவதென்றே மனதுள்
ஏக்கமானது, மொத்தத்தில் எல்லாமெனக்கு பயமானது
நான் பறப்பதை மட்டும் நிறுத்தவில்லை என்
இறக்கைகள் சற்றே உதிர்ந்தபோதும்
இறக்கையின் நரம்புகள் இறக்கும் தருவாயிலும்
நான் மட்டும் பறப்பதை நிறுத்தவில்லை”
என்று கவிஞர் இறையாளின் மனவுறுதி இங்கே மிக அழகாக வெளிப்படுகிறது. யாரையும் இந்த உலகில் நம்புவதற்கில்லை என்பதை விட எதிர்ப்பார்ப்பதற்கில்லை எனலாம். பிறரை எதிர்பார்த்துக்கொள்ளாத மனது யாரிடமும் வருந்துவதுமில்லை யாராலும் நோவதுமில்லை. மனதுள் தனித்திரு என்பதில் இதெல்லாம் கூட அடங்கிக்கொள்ளும் போல்; யாரையும் எதிர்பாராமல் இருப்பதும், சுயமாக இயங்குவதும்.
“பெண் என்றதும் மண்ணென்று
மிதிக்கும் உங்களுக்கு
நன்றி ஆம் அவள் மண்தான்;
நீங்கள் விழைந்த மண்....
நீங்கள் தவழ்ந்த மண்....
நீங்கள் நடந்த மண்
நீங்கள் இளைப்பாறிக் குதூகலித்துச்
சலிக்கச் சலிக்க விழுந்து கிடந்த மண்......”
இது ஒரு சிறுபெண்ணின் கோபமா என்றால் இல்லை எனலாம். ஆனால் சிறுவயதில் இதை எழுதும் வலி எத்தகையது ? பெண்களை அழகாக வர்ணிக்கும் கவிதைகளையெல்லாம் தூக்கிலிட்டு விடுகிறது இந்த நான்கைந்து வரிகள். உண்மையில் நாமெல்லாம் பெண்கள் வந்துவிட்டார்கள், விமானம் ஓட்டிவிட்டார்கள், பெண்ணடிமைத் தீர்ந்துவிட்டது என்று நெஞ்சு நிமிர்ந்துகொள்கிறோம். கண்ணுக்குத் தெரியாத வீடுகளில் இப்படி மனது கனத்த மங்கையரை கவிஞர் இறையாளின் கவிதைகள் ஆராதித்துக்கும் போல்.
நிறைய எழுதியிருக்கிறார். காதல் மனது வாழ்க்கை ஆண் பெண்ணென ஒரு மனதிறுகும் கணப்பொழுதுகளை எல்லாம் சேர்த்து பல கவிதைகளை வடித்திருக்கிறார். நீங்களே வாசித்துப் பாருங்கள்.
மீன் வாங்கச் செல்கையில் சற்று செதில் விரித்து மீனின் இரத்தத் சிவப்பு பார்ப்பதைப்போல கவிதைகளில் ஒன்றிரண்டை எடுத்து இறையாளின் உணர்வின் நிறம் பார்த்து வைத்துச் செல்கிறேன் நான். மிச்சமுள்ள எல்லா கவிதைகளோடும் ஒன்றி கடலெங்கும் திரிவதும் வானெங்கும் பறப்பதும் மனதெங்கும் பூப்பதுமெல்லாம் உங்கள் வேலை. நீங்கள் மனதால் பறக்கலாம் சிரிக்கலாம் அழுவலாம், அத்தகு உணர்வின் கூடாக நீள்கிறது இறையாளின் ஒரு பெரும் கவிதை வெளி, நமது தமிழுலகைத் தேடி.
ஆக, நம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு ராணி தேனீ கிடைத்திருக்கிறாள். இந்த ராணியின் எழுத்துக் குவியலிலிருந்து பல எழுதும் படைப்பாளிகள் பலர் கிடைக்கப்பெறுவார்கள் எனும் பெருநம்பிக்கையோடு, ‘ஒரு ராஜபாட்டை காத்திருக்கிறது மெல்ல எழுந்து வா மகளே’ என்று கவிஞர் இறையாளை வாழ்த்தி பேரன்போடு விடைகொள்கிறேன். வாழ்க பல்லாண்டு!!
பேரன்புடன்...
வித்யாசாகர்
(எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் நாவலாசிரியர்)
No comments:
Post a Comment