அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 13 - பவுனி அல்லது சவணிக்கை


பவுனி அல்லது சவணிக்கை
அமைப்பு
மத்தளம் போன்ற உருண்ட வடிவத்தில் உடுக்கையைவிட பெரிதான இக்கருவியின் ஒருதலை சிறுத்தும், மற்றொன்று பெருத்தும் காணப்படுகிறது. சிறுத்த தலைப்பகுதியில் உடும்புத்தோல் போர்த்தப்பட்டுள்ளது. பெருத்த தலைப்பகுதி திறந்தநிலையில் இருக்கிறது. தோலின் மையப்பகுதியில் சிறிய ஓட்டையிட்டு, அதில் ஒரு நரம்பால் முடிச்சிட்டு, அதன் எதிர்நுனி திறந்த தலைப்பகுதி வழியாக வெளியில் வருகிறது. இடதுகையால் அந்த நரம்பை இறுக்கமாக இழுத்துப் பிடித்துக்கொண்டு, வலதுகையின் விரலால் அந்த நரம்பைச் சுண்ட, அந்த அதிர்வு தோலில் எதிரொலித்து, உடுக்கையை மீறிய உக்கிரமான நாதம் வெளிப்படுகிறது. மற்றொரு விரலில் சிறு சலங்கையை மாட்டிக்கொள்வதால் அந்தக் கலவையிசை இசைக்கப்படும் இடத்தில் அருளைச் சுரக்கிறது.

தமிழகத்தில் முன்னாளில் மூங்கிலிலும், பலா மரத்திலும் பின்னர் வெங்கலத்திலும் பித்தளையிலும் செய்யப்பட்டுள்ளது இக்கருவி. இலங்கையில் பலா மரமும் ஆட்டுத்தோலும் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் சவணிக்கை என்று அழைக்கப்படும் இக்கருவி சுமார் 1.5 அடி நீளம் உள்ளது. தமிழக பவுனி இவ்வளவு நீண்டு இல்லை.

குறிப்பு
தமிழகத்தில் இக்கருவி பவுனி அல்லது சம்மடிக்கான் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இக்கருவி சுடுக்கெ(சுடுக்கி) என்றும் , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இக்கருவி ஜமண்டிக்கா,  ஜமலிக்கா, பம்பா அல்லது சமடிக்காயே என்று அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் இக்கருவி சவண்டிகா அல்லது சவண்டிகெ என்று அழைக்கப்படுகிறது. சவணிக்கை தமிழ் சொல்லின் திரிபாக இவ்வணத்து சொற்களும் உள்ளதை நீங்கள் கவனிக்க வேண்டும். வட இந்தியாவில் இக்கருவி குப்குபா, லஹரி, குபா , காமொக் என்று பல பெயர்களில் சில மாற்றங்களுடன் புழங்கி வருகின்றது.

தமிழகத்தில் இக்கருவி மாரியம்மன் மற்றும் கிராம தேவதைகள் வழிபாட்டில் இசைக்கப்படுகிறது. இலங்கையிலும் இக்கருவியை நாட்டார் தெய்வ வழிபாட்டில் பயன்படுத்துகிறார்கள். மகாராட்டிரத்தில் இக்கருவியை ரேணுகா அம்மன் வழிபாட்டில் இசைக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் எல்லம்மா வழிபாட்டிலும் யாசகம் பெறவும் இசைக்கப்படுகிறது. ஜோகன்னா என்னும் திருநங்கை குழுக்கள் இக்கருவியை கர்நாடகத்திலும் மகாராஷ்டிராவிலும் பெரும்பாலும் தெய்வங்களை போற்றி புகழ்ந்து பாட பயன்படுத்துகிறார்கள்.தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளில் எல்லம்மா வழிபாட்டில் இக்கருவியை மிகுதியாக பயன்படுத்துகிறார்கள். எல்லாமாவின் கதையை ஆடிப்பாடி சொல்கிறார்கள். அப்பொழுது இக்கருவி முக்கிய பங்கு வகிக்கின்றது.பைண்ட்லா என்னும் சமுகத்தினர் இக்கலையை நிகழ்த்துகிறார்கள்.

இலங்கை முதல் இமயம் வரை உள்ள நிலப்பரப்பில் இக்கருவி இசைக்கப்படுவது ஒரு பழம் பண்பாட்டின் தொடர்ச்சி. இக்கருவி எல்லா இடங்களிலும் இசைக்கப்பட்டாலும் தமிழ் நிலத்தில் தான் இக்கருவி முதலில் தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும். இலங்கையில் இக்கருவி பழமை மாறாமல் பலாமரத்தில் செய்யப்படுகிறது தமிழகம் கர்நாடகம் போன்று இக்கருவி இலங்கையில் வெங்கலம் அல்லது பித்தளையில் செய்யப்படுவது இல்லை. இக்கருவியை பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் இல்லை என்றாலும் இதன் தொன்மை 2000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடிக்குப் பக்கத்திலுள்ள நடூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தனுக்கு இப்போது 90 வயது. இவரிடம் 100 ஆண்டு கடந்த பித்தளைப் பவுனி உள்ளது. இவரது மூதாதையருக்கும் பவுனி இசைப்பதுதான் தொழில். பல தலைமுறைகளாகப் பயன்படுத்திய மரத்தாலான பவுனியை பூசையறையில் வைத்திருக்கிறார். இப்போது இவர் வைத்திருப்பது பித்தளைப் பவுனி. ‘‘ஆரம்பத்தில் மூங்கிலாலேயே இக்கருவி செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் புளி, வேம்பு மரங்களில் செய்துள்ளார்கள். இப்போது கோவிந்தன் வைத்திருக்கும் பித்தளைப் பவுனி 142 ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்டது’’ என்கிறார் இசை ஆய்வாளர் பல்லடம் ப.க.பொன்னுச்சாமி. திருமண நிகழ்வுகளில் இசைக்கப்பட்டு வந்தது. இப்போது திருமணத்துக்கு வாசிக்கும் வழக்கம் ஒழிந்துவிட்டது. பொம்மிடியைச் சுற்றியுள்ள கோயில் திருவிழாக்களுக்கு கோவிந்தனை அழைக்கிறார்கள். கோவிந்தனின் மகனும் பவுனி இசைக்கிறார்.

கோவிந்தனின் இக்கருவி பற்றிய கட்டுறை 2005 ஆண்டு தமிழக தொல்லியல் துறை இதழான கல்வெட்டில் வெளிவந்துள்ளது. வெங்கலாத்தாலான இக்கருவியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் படத்தில் உள்ளது. இந்த பவுனியின் மேற்பரப்பில் அதுபற்றிய தகவல்கள் செதுக்கப்பட்டுள்ளன. கி.பி.1869ல், தயைய கவுண்டன், தம்பா கவுண்டன் ஆகியோர் இதைச்செய்து மருக்கம்பட்டி அருந்தியர் காமதன்றன், மூக்கன், சிட்டுக்கான் ஆகியோருக்கு வழங்கியதாகவும், இசைப்போரின் ஜீவனத்துக்கு மாட்டுப்பட்டி, கொலுகாறன்பட்டி, பெதறம்பட்டி, மூக்கனூர் பகுதி மக்கள் தலா 2 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு கொடுக்காவிட்டால் கங்கையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் சூழும் என்றும் எழுதப்பட்டுள்ளது. திருமணத்தில் பவுனி இசைக்க எவ்வளவு பணம், அரிசி தர வேண்டும் என்கிற செய்தியும் இதில் உள்ளது.

இலங்கையில் இக்கருவியை சவணிக்கை என்று அழைக்கிறார்கள். இலங்கை மட்டக்களப்பு பகுதியில் இக்கருவி இசைக்கப்படுகிறது பாரம்பரிய இசைக் கலைஞரான நல்லதம்பி வைரமுத்து என்பவர் இசைக்கிறார். உற்பத்தி செய்பவர் பொன்னுசாமி சுந்தர மூர்த்தி என்பவர்.

இலங்கை மற்றும் தமிழகத்தில் இக்கருவியின் பயன்பாடு மிகவும் அருகி வருகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கலைஞர்களே இக்கருவியை இசைத்து வருகிறார்கள். ஆனால் கர்நாடகத்தில் மகாராஷ்டிரத்திலும் இக்கருவி பெரும்பான்மையான கலைஞர்களால் பயன்படுத்தப்படுவது ஆறுதல் அளிக்கும் விடயமாகும். இக்கருவியின் தாய் நிலமான தமிழ் நிலத்தில் இக்கருவி மீண்டும் ஒலிக்க வேண்டும். இலங்கையின் தவில் நாதசுர கலைஞர்களுக்கே தங்களது 100% கவனத்தையும் பொருளையும் செலவு செய்யும் புலம் பெயர் தமிழர்கள் இலங்கையின் தொன்மை கருவிகளான மத்தளம், பெரும்பறை, ,தப்பட்டை ,உடுக்கு, எக்காளம். சவணிக்கை, கொம்பு, அம்மனிக்காய் ஆகியவற்றின் மீதும் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

புழக்கத்தில் உள்ள இடங்கள்
தமிழ்நாடு , தர்மபுரி மாவட்டம் பொம்மிடிக்குப் பக்கத்திலுள்ள நடூர் கிராமத்தில் -  திரு கோவிந்தன்
இலங்கை மட்டகளப்பு பகுதியிலும் அதை சுற்றிய சில ஊர்களிலும் இக்கருவி இசைக்கப்படுகிறதுஇசைப்பவர் திரு நல்லதம்பி வைரமுத்து

காணொளி
தமிழகம்:
மற்ற இடங்கள்:

-சரவண பிரபு ராமமூர்த்தி
1.     வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
2.     பவுனி புகைப்படங்கள் உதவிதிரு சரவணக்குமார் ராமச்சந்திரன் அவர்கள், கிருஷ்னகிரி.No comments: