தமிழ் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பில் TNA கலந்துரையாடல்
கைதான கற்பிட்டி நபரின் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்கள் மீட்பு
மே 11 முதல் இயல்பு நிலையை கொண்டுவருவது குறித்து ஆராய்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொரோனா கட்டுப்பாட்டு முறைகளுடன் எளிமையாக அனுஷ்டிக்கப்படும்
பிரித்தானிய அமைச்சரான ரணில் ஜயவர்தன
அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டோர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய பெயர்
அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 272 பேர் வருகை
தமிழ் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பில் TNA கலந்துரையாடல்
Monday, May 4, 2020 - 10:06pm
பிரதமருடன் TNA பிரத்தியேக சந்திப்பு
கைதான கற்பிட்டி நபரின் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்கள் மீட்பு
Monday, May 4, 2020 - 10:38pm
அரச சார்பற்ற நிறுவனத்திற்கு நிதி வழங்கிய பற்றுச்சீட்டுகள் பள்ளிவாசலொன்றில் மீட்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (04) பிற்பகல் விஜயராம மாவத்தையிலமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்தும் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக அறிய வருகிறது.
நீண்டகாலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் காணப்படும் சட்ட நடைமுறைமைகளை ஆராய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இதன்போது உறுதியளித்ததாகவும் அவர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கும் சாத்தியம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவதாக வாக்குறுதியளித்ததாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், எஸ். ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், உள்ளிட்ட கட்சி முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், பிரதமருடன், பசில் ராஜபக்ஷ, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதிகளில் வனவள திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறும் கோரப்பட்டதோடு இது குறித்தும் கவனிப்பதாக பிரதமர் உறுதியளித்தாக அறிய வருகிறது. (பா) நன்றி தினகரன்
Monday, May 4, 2020 - 10:38pm
அரச சார்பற்ற நிறுவனத்திற்கு நிதி வழங்கிய பற்றுச்சீட்டுகள் பள்ளிவாசலொன்றில் மீட்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கமைய நேற்று (04) கற்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நடாத்திச் சென்ற பள்ளிவாசல் ஒன்றின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் பல்வேறு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பு 15 இலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடாத்திச் சென்ற அலுவலகத்தில் இருந்த பல்வேறு ஆவணங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆவணங்கள் மூலம் இந்த அமைப்புக்கு நிதி வழங்கிய நபர்கள் மற்றும் நிதி தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றையதினம் (04) குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றை பரிசோதித்தபோது சந்தேகநபர் பொறுப்பாக இருந்த குறித்த அரசசார்பற்ற நிறுவனத்திற்கு பல்வேறு வகையிலான நிதிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பான பல்வேறுபட்ட பற்றுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த இடத்திற்கு சீல் வைத்து அதனை பொலிஸ் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைமையகமாக செயற்பட்டு வந்த புத்தளத்தில் உள்ள நிறுவனத்தையும் சீல் வைத்து பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர் தீவிரவாத தடுப்பு தற்காலிக சட்டதிட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபரின் மூலம் தீவிரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
இதன் மூலம் விசாரணைகளை மிகத் துரிதமாக மேற்கொண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது பண பற்றுச்சீட்டுகள் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பிலான வங்கி கணக்குகள் மற்றும் பணம் செலவிடப்பட்ட விதம் உள்ளிட்ட ஏனைய விபரங்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார். நன்றி தினகரன்
மே 11 முதல் இயல்பு நிலையை கொண்டுவருவது குறித்து ஆராய்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொரோனா கட்டுப்பாட்டு முறைகளுடன் எளிமையாக அனுஷ்டிக்கப்படும்
பிரித்தானிய அமைச்சரான ரணில் ஜயவர்தன
அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டோர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய பெயர்
அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 272 பேர் வருகை
Tuesday, May 5, 2020 - 11:31pm
- ஆளுநர்கள், அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் மே 11 திங்கள் முதல் வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரிவாக ஆராய்ந்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அரச, தனியார் துறையின் அனைத்து சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இது பற்றி தெரிவித்தார்.
நிறுவன செயற்பாடுகள் குறித்து விரிவான திட்டங்களை சுகாதாரத் துறைகளுக்கு முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டது.
பொது போக்குவரத்து நடவடிக்கைகளை உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், பணிக்குழாமினருக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் குறித்த நிறுவனங்களின் நலன்புரி சங்கங்களுடன் இணைந்து திட்டமிடக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
நிறுவனங்களை நடத்திச் செல்லும் போது ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பது சேவைகள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். நிறுவன கட்டமைப்புக்கு ஏற்ப பணி முறைமாற்றங்களை தீர்மானிக்க முடியும். சேவைக்கு சமூகமளிக்கும் நேரத்தை கட்டளையாகவன்றி நிறுவன தேவையின் படி தீர்மானிக்க வேண்டும்.
வீடுகளில் இருந்து வேலை செய்யும் போது சில நிறுவனங்கள் விரிவான ஒழுங்கில் சேவைகளை வழங்கியுள்ளன. அவற்றை முன்னெடுத்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் அவற்றுக்கு பதில்களை வழங்குவதற்கும் அதற்கு சட்ட ஏற்பை வழங்குமாறும் ஜனாதிபதி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
அடையாள அட்டை, கடவுச் சீட்டு மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வலய கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளின் பேரில் கிராமிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை திறக்கக்கூடிய வாய்ப்புகளை கண்டறியவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் போது நீர், துப்பரவேற்பாடு வசதிகள் மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், விவசாயம், கட்டிட நிர்மாணம் போன்ற அபிவிருத்தி பணிகள் ஏனைய மாவட்டங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மே 11ஆம் திகதி முதல் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வரும் மாவட்டங்களிலும் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட முடியும். வேலைத்தளங்கள் மற்றும் நிறுவனங்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் தொடர்பில் எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொரோனா கட்டுப்பாட்டு முறைகளுடன் எளிமையாக அனுஷ்டிக்கப்படும்
Thursday, May 7, 2020 - 9:39am
முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இவ்வருடம் எளிமையான முறையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து ஏற்பாட்டுக்குழு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்விப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைகளின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி அன்று நடைபெறும். கொவிட் 19 பரவல் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள், சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும்.
உள்ளூர் வளங்களை ஒன்று திரட்டிப் பயன்படுத்துவதன் மூலம் இந் நினைவேந்தல் எளிமையாகவும் உரியமுறைப்படியும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது.
இந்நினைவேந்தல் நடவடிக்ககைகள் தொடர்பில் அனைத்துப் பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் அனைவரையும் எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதுடன் நினைவேந்தல் தொடர்பான நிகழ்சி ஒழுங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
முல்லைத்தீவு விசேட நிருபர் - நன்றி தினகரன்
பிரித்தானிய அமைச்சரான ரணில் ஜயவர்தன
Thursday, May 7, 2020 - 4:59pm
பொரிஸ் ஜோன்ஸனால் நேரடியாக நியமனம்
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன, வர்த்தகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரணில் ஜயவர்தன, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஹாம்ப்ஷயர் (Hampshire) பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிரித்தானிய பிரதமராக தெரேசா மே இருந்த வேளையில், இலங்கைக்கான தனது வர்த்தக பிரதிநிதியாக ரணில் ஜயவர்தனவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டோர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய பெயர்
Friday, May 8, 2020 - 8:13pm
அமெரிக்க பிரஜாரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பிரஜாவுரிமையிலிருந்து நீக்கிக்கொள்வதற்கு விண்ணப்பித்து அது அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க பெடரல் பதிவு திணைக்களம் குறித்த பெயர்ப்பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
ஒவ்வொரு காலாண்டிலும் இவ்வாறு குடியுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளடங்கிய பட்டியலை வெளியிடுவதற்கு அமைய, இவ்வருட முதல் காலாண்டுக்கான பெயர்ப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
2020 மார்ச் 31 இல் நிறைவடையும் முதல் காலாண்டுக்கான பட்டியலே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 272 பேர் வருகை
Sunday, May 10, 2020 - 1:08pm
மலேசியாவிலிருந்து மற்றுமொரு குழு வரவுள்ளது
கொரோனா தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 272 பேர், இன்று (10) காலை மெல்பேர்ன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இன்று காலை 6.12 மணிக்கு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 605 எனும் விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களும் அவர்களின் பயணப் பொதிகளும் இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.
அத்தோடு, அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரிகளினாலும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளினாலும், சோதனை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரால் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று பிற்பகல் மலேசியாவிலிருந்து மற்றுமொரு குழுவினர், ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment