கொரோனாவின் கோரப் பிடியால் நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரம் முற்றாக முடக்கம்





உழைப்பினை உதிரமாக்கி உலகத்தை காக்கும் உலக தொழிலாளர்களுக்கான தினம் வருடந்தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டப்படும் என்பது யாவரும் அறிந்ததே. இவ்வருடம் இத்தினமும் உலகம் முழுவதும் கொண்டாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விட்டது. காரணம் கொவிட்-19 என்ற புதிய ஆட்கொல்லி வைரஸ் உலகம் முழுவதையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்ட காரணத்தலே ஆகும்.
இவ்வருட உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்காக கடந்த வருட திட்டங்கள் யாவும் வெறும் கனவாக மாறி விட்டது. இது ஒருபுறம் இருக்க கொவிட்-19 காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நடுத்தர வருமானத்தை சார்ந்த நாடாகும் அதாவது அபிவிருத்தி அடைந்து வரும் வரிசையிலே காணப்படுகின்றது. ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம் இலங்கை தற்பொழுது உயர் பட்ச வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கும் பொருளாதாரத்திலே முன்னிலை வகிப்பதற்கும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது தொழிலாளர்களின் அல்லது வேலை செய்பவர்களின் வருமானமாவது இதுவரையிலும் உயரவில்லை என்பதே இதிலிருந்து வெளிப்படும் உண்மையாகும். தொழிலாளருக்கு போதிய சம்பளம், வருமானம் என்பன இன்று வரையிலும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதேபோல அகில இலங்கை ரீதியில் கடந்த தசாப்த காலத்திற்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.
ஒரு சிறிய நாட்டில் சமூகம் பெறும் வருமானத்தில் அரைவாசியில் உணவிற்காக செலவிடப்படுகின்றது. அதேபோல இலங்கையிலும் மிக குறைவான வருமானம் பெறும் சமூக அமைப்பு உணவிற்காக செலவிடும் அதேவேளை எதிர்கால நலன்கள் விசேடமாக கல்வி, வீட்டு வசதி போன்றவற்றிக்கு செலவிடப்படுவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் மிகக் குறைந்த வருமானம் பெறுவோருக்கும் அதுபோல உயர்ந்த வருமானம் பெறுவோருக்கும் இடையில் ஒரு நடுத்தரப் பிரிவினர் இருக்கின்றனர். இவர்கள் நடுத்தர வருமானம் பெறுவோர் என்ற கூட்டத்தில் உள்ளடக்கப்படுவர். தற்போதையை சூழ்நிலையில் இலங்கையில் இந்த நடுத்தர, இடைப்பட்ட வருமானம் பெறுபவர்களே மிக அதிகளவில் காணப்படுவதாக தொகை மதிப்பு புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண கால சூழ்நிலையில் இந்த நடுத்தர வர்க்கத்தினர் பாரிய பிரச்சினைகளுக்கும் இன்னல்களுக்கும் முகம் கொடுக்கின்றனர். அதற்குக் காரணம் கொவிட்-19 என்ற ஆட்கொல்லி வைரஸ் ஏற்படுத்திய பாரிய பொருளாதார இடரே ஆகும். புதிய முயற்சிகளின் ஊடாக மீண்டும் புத்துயிர் பெற்றிருந்த சிலரும் பாரியளவிலான புதிய பொருளாதார திட்டங்களை வகுத்திருந்த பலரும் இன்று கொரோனாவின் கோரப் பிடியின் காரணமாக செய்வதறியாது திணறுகின்றனர்.
இவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், மிகக் குறைந்த வருமானம் பெறும் அதேவேளை நடுத்தர வருமானம் பெரும் வர்க்கத்தினருக்கு விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது முக்கியமாகும். காரணம் கொவிட்-19 காரணமாக இவர்கள் முழுமையாக முடக்கப்பட்டு விட்டனர். இவர்களை மீள உயிர்ப்பித்து விடுவது காலத்தின் கட்டாய தேவையாகும்.
அதேபோல அடுத்த கட்டமாக கைத்தொழில், சுயதொழில், விவசாயம் போன்ற துறைகளில் அநேகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் விருத்திக்கும் பாரிய திட்டக் கொள்கைகளை எதிர்காலத்தில் வகுப்பது தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடுத்தர வருமானம் பெறுவோர் முகம் கொடுக்கும் பிரச்சினை என்ன என்பது தொடர்பாக நாம் அவதானம் செலுத்துவது முக்கியமாகும். இந்த பிரிவினைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட கல்வி அறிவை  பெற்றவர்கள். அதே நேரம் பலர் இன்று நகரத்தை அண்டி குடிபெயர்ந்து விட்டார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அவை கல்வி, தொழில் வாய்ப்பு, நகர மயமாதல் போன்றவற்றை குறிப்பிடலாம். குறிப்பாக இவர்கள் தங்களைவிட தங்களின் பிள்ளைகளின் நலன்களை கருத்திற் கொண்டே அதாவது சிறந்த பாடசாலை, மேலதிக வகுப்பு போன்ற காரணத்தினால் இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளனர்.
பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவரும் தொழில் செய்பவர்களாக இருக்கின்றனர். தங்களுக்கென ஒரு காணியினை நகரத்தின் மத்தியில் வாங்குகின்றனர். அதேநேரம் தமக்கென ஒரு வாகனத்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டிகளை பெற்று இதற்கான மாதாந்த கட்டணம் மற்றும் அதற்கான மேலதிக செலவுகளை மேற்கொள்ளும் போது பாரிய பொருளாதார நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கநேரிடும். சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு இந்த நடுத்தர வருமானம் பெறுவோர் முடிந்தளவு முயற்சி செய்த பொழுதும் திறந்த பொருளாதார முறையானது இவர்களை விழுங்கி விடுகின்றது.
ஒரு காணியை பெற்றுக் கொள்ள அதே நேரம் ஒரு வீட்டை கட்டிக் கொள்ள வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக் கொள்கின்றனர். அதுவும் போதாத காரணத்தினால் சிலர் தங்களது சேமலாப நிதியத்திலும் ஒரு தொகையை கடனாக பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறே தங்களது வீட்டை அரைவாசி கட்டிக்கொண்டு போகும் போதே மாதாந்த லீசிங் முறைக்கு ஒரு வாகனத்தையும் பெற்றுக் கொள்கின்றனர். அதுமட்டுமா வங்கிகளில் கடன் அட்டைகளையும் பெற்றுக் கொள்கின்றனர். ஆகையினால் இந்த நடுத்தர வருமானம் பெறுவோர் மாதாந்தம் கடன் மற்றும் வட்டி நிலுவைகளையே கட்டுவதற்கு ஆளாகின்றனர்.
கொவிட் 19 காரணமாக தற்பொழுது இலங்கையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நடுத்தர வருமானம் பெறுவோர் உட்பட பலரும் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். ஆனால் பலருக்கு அரசாங்கம் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டபோதும் இவர்களுக்கு குறிப்பாக நடுத்தர வருமானம் பெறுவோர் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் இவர்களுக்கும் ஏதாவதொரு நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும்.
ஜயகுமார் ஷான் - மொனறாகலை - நன்றி தினகரன் 


No comments: