சுவீடசிக்ஸ்டி - அடுத்த வீட்டுப் பெண் - சுந்தரதாஸ்

.


தமிழில் புராதன கதைகள், சரித்திர கதைகள், சமூக கதைகள் என பல படங்கள் உருவாகிய காலத்தில் நகைச்சுவை கதைகளையும் கொண்டு முழுநீள ஹாஸ்ய படங்களும் உருவாகிக் கொண்டிருந்தன. அவ்வாறு 1960ம் ஆண்டு உருவான படம் அடுத்த வீட்டுப் பெண்.

ஆரம்பத்தில் வங்காள மொழியிலும், பிறகு தெலுங்கிலும், பின்னர் தமிழிலும் இந்தக் கதை படமாக்கப்பட்டது. அம்மாயி என்ற பெயரில் தெலுங்கில் உருவான இப்படத்தில் நடித்த அஞ்சலிதேவி தமிழ் படத்திலும் கதாநாயகியாக நடித்தார். படத்தை அஞ்சலி பிக்சர்ஸ் சார்பில் அவரின் கணவர் பிரபல இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவ் தயாரித்தார்.

வசதி மிக்க குடும்பத்தைச் சேர்ந்த மன்னார் என்ற இளைஞனுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணான நீலா மீது காதல் பிறக்கிறது. நீலாவோ ஆடல் பாடல்களில் நாட்டம் கொண்டவள், போதாக்குறைக்கு  துடுக்கானவளும் கூட, வெகுளியான மன்னாருக்கு சுத்தமாக பாட வராது இதனால் தன் நண்பர்களை காதலுக்கு உதவும் படி கேட்கிறார்.மன்னார் வாயசைத்து பாவனை செய்ய நண்பன் மறைந்திருந்து பாடுகிறான். நீலா மன்னார்தான் பாடுவதாக எண்ணி அவனை காதலிக்கிறாள் .

இப்படி அமைக்கப் படட கதையில் பிரபலமான பல நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தார்கள். மன்னாராக டி ஆர் ராமச்சந்திரநும் அவரின் நண்பர்களாக கே ஏ தங்கவேலு, ஏ கருணாநிதி , சட்டாம்பிள்ளை வெங்கடராமன் , பிரண்ட் ராமசாமி ஆகியோர் நடித்தனர்.இவர்களுடன் கே சாரங்கபாணி,முத்துலட்சுமி ,பக்கிரிசாமி ஆகியோரும் உள்ளனர்.






படம் முழுவதும் நகைச்சுவையால் ரசிகர்களை குதூகலப்படுத்தியது, குறிப்பாக தங்கவேலு சரோஜா தோன்றும் காட்சிகள் அதீத புகழை பெற்றது. இலங்கை வானொலியில் இக்காட்சிகள் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டு பிரபலமடைந்தது. அதேபோல் பாட்டு வாத்தியாராக வரும் பக்கிரிசாமியம் வனிதாமணியே என்ற பாடலுக்கு அருமையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த ஒரு படத்தில்தான் அவருக்கு இப்படி ஒரு நல்ல வேடம் கிடைத்தது .

அழகான தோற்றம், நடனம், துடுக்கான நடிப்பென்று அஞ்சலிதேவி ரசிகர்களை பரவசம் ஊட்டினார். வசனங்களையும் பாடல்களையும் எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ் , பாடல் வசனம் இரண்டிலும் தன் அனுபவ முத்திரையை பதித்து இருந்தார் அவர்.




கண்களும் கவி பாடுதே , மலர்க்கொடி நானே, மாலையில் மலர் சோலையில் , கண்ணாலே பேசி பேசி கொல்லாதே ஆகிய பாடல்கள் இதமாக அமைந்தன.புதுப்பாடகரான பி பி ஸ்ரீநிவாஸுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது . படத்தை தயாரித்த ஆதிநாராயண ராவ் படத்தின் இசை அமைப்பாளரும் ஆவார். அவரின் இசை பாடல்களின் வெற்றி மூலம் நிரூபிக்கப்பட்டது . வேதாந்தம் ராகவையா படத்தை டைரக்ட் செய்திருந்தார். குடும்பத்தோடு பார்க்கக்கூடிய வெற்றிப்படமாக அடுத்த வீட்டுப் பெண் அமைந்தது.




பின்னர் இந்தியில் படோசன் என்ற பெயரிலும், சிங்களத்தில் அல்லப்புகெதர என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டு வெற்றி கண்டது. என்றும் அடுத்த வீட்டுப் பெண் என்றாலே ஒரு பரவசம் தான்

No comments: