எஸ்.எல்.எம்.ஹனீபா
கானல் தேசம்- நொயல் நடேசன் என்ற மனிதன் தான் சார்ந்த சமூகத்தின் தனக்கு கிடைத்த கரிசனைக்கு வாழ்க்கை என்ற சாளரத்தினூடே இந்த நாவலை உருவாக்கியுள்ளார். செய் நேர்த்தியும் – உழைப்பும் மிக்க படைப்பு.
தனது மற்றைய எழுத்துக்களிலிருந்து, இந்த நாவலை அவர் எழுத கைக்கொண்ட மொழி ஒரு கோட்டோவியம் போன்றது. நாவலில் வரும் கதாமாந்தர்கள் அனைவரும் தங்களுக்கு படைப்பாளியால் வழங்கப்பட்டஎல்லைகளிலிருந்து ஒரு இஞ்சியேனும் பிசகாத நிலையில் கனகச்சிதமாக வந்து போகிறார்கள்.
நாவலில் பல பாத்திரங்கள் மறக்க முடியாத சிலர் அதிசயிக்கும் படியாக தங்கள் தங்கள் எல்லையிலேயே நிற்கிறார்கள் அல்லது நடேசனின் மேற்பார்வையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள், அழகிய ஜெனி மட்டும் எல்லைகளை மீற துடிப்பவளாகவும், அதே நேரம் பின்வாங்குபவளாகவும் ஓ… ஜெனி உன்னை மறக்கமுடியவில்லை
நடேசனின் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் சொல்வதென்ன! 30 ஆண்டு கால போரின் உட்கட்டமைப்பு, அறியாமை, உணர்ச்சிப் பொங்கல், ஏமாற்றம், அழகிய காமம், தனி மனித பலவீனங்கள், இழிவுகளென்று இலகுவாக கடந்து செல்ல முடியவுமில்லை.
நாற்பது ஆண்டு போர்க்கால வாழ்பனுபவங்களை, கடந்த இருபதாண்டு காலங்களில் இருபதுக்கும் மேற்பட்டநமது படைப்பளிகள் நாவல் இலக்கியங்களாக பதிவு செய்திருக்கின்றார்கள். இந்த எழுத்துக்களின் சிருஷ்டித்துவத்தின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தி காலமே. இந்த துயர்மிகு வாழ்வின் கொடூரங்களை முன்வைத்தவர்களில் பலரும் வடபுலத்தில் வாழும் தமிழ் மக்களின் அவஸ்த்தைகளுக்கே அதிகபங்களிப்பு செய்தார்கள். தனது சகோதர இனமாக பல்லாண்டு காலம் தம்மோடு ஒட்டி உறவாடி வாழ்ந்த வடபுலத்து முஸ்லிம்களின் துயரங்களையோ, தெற்கில் வாழும் சிங்கள் மத்தியதர குடும்பங்களிலிருந்து பெரும்பாலும் தொழில் நிமித்தம் இணைந்து கொண்ட இராணுவத்தினரின் உணர்வுகளையோ இந்தப்படைப்புகள் மனங்கொள்ளத்தக்கதாக வெளிக்காட்ட தவறின. (சாத்திரியின் ஆயுத எழுத்தில் இந்த விடயம்போகிற போக்கில் தொட்டுக் காட்டப்படுகின்றது.)
நொயல் நடேசன் என்கின்ற கலைஞன் மானுஷிகத்தின் ஒரு சாட்சியாக சிங்கள, முஸ்லிம் உணர்வுகளையும்இங்கு பதிவு செய்திருப்பது மனநிறைவைத் தருகின்றது.
“பழையசாரயத்தைத் தனது கிளாசில் ஊற்றிக்கொண்டு மகிந்த தயாரத்தின ‘நண்பர்களே இந்த பதினைந்துவருடப் போரில் தமிழ் பயங்கரவாதிகளுடன் மட்டுமல்ல சிங்கள ஜேவிபியுடனும் போரிட்டேன். ஏதோஅதிர்ஸ்டத்தால் உயிர் பிழைத்தேன். நான் தப்பினாலும் எத்தனை நண்பர்கள் இறந்தார்கள்? இப்பவும் அந்த நண்பன் லியனகே கண்ணுக்குத் தெரிகிறான். அவன் குடும்பம் பொலன்னறுவையில் காட்டில் மிருகங்கள் மத்தியில் வாழ்கிறது. அந்தப் பெண் சீதா எனக்குத் தங்கை இந்திராணி மாதிரி. அண்ணே அண்ணே குளத்து மீனோடு எனக்குத் தந்த அவளது உணவு எனது இரத்தத்தில் இன்னமும் ஓடுது. அந்தக் குடும்பத்திற்கு அரசாங்கம் என்ன செய்தது? லியனகேபோல நாட்டிற்காக உயிர் கொடுத்தவர்களை இந்த அரசியல்வாதிகள்கொஞ்சமும் மதிப்பதில்லை. அவர்களது உயிர்த்தியாகத்தை மிதித்தபடி ஏணியாக பதவியேறுகிறார்கள். எங்களை அவர்களது ஏவல் நாய்களாக நினைக்கிறார்கள்.’
என நானூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் சிங்கள, முஸ்லிம் தரப்பு யதார்த்தங்களையும், நியாயங்களையும் பலபக்கங்களில் அவர் சாட்சிப்படுத்துகிறார்.
அத்தோடு நாவலில் இன்னுமொரு சாட்சி “அவர்களால்த் தயாராக வைத்திருந்த லொறிகளில் ஏறுவதற்கு வரிசையாக நின்ற போது மனோகரா தியேட்டர் அருகில் இதுவரை எதிர்பார்க்காத இடி விழுந்தது. ‘ஐநூறுரூபாவும், ஒரு சோடி உடுப்பு மட்டும் எடுத்துச் செல்லலாம்.’ என்றபோது எல்லோரும் அழத்தொடங்கினர். அதைப்பொருட்படுத்தாது தியேட்டருக்கு உள்ளே அனுப்பியவரிடையில் நிற்க வைத்து பொருட்களை பறித்தார்கள். நகைகளை கழட்டி தரும்படி வாங்கினர் மறுத்தவர்களை ஆயுதமுனையில் பயமுறுத்தினர். சிறுமிகள், குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. குழந்தைகளின் காது தோட்டைக்கூட கேட்டு வாங்கினார்கள். அம்மாவிடமிருந்து நகை பையை பறித்தபோது அம்மா கதறிய விதத்தை பார்க்க முடியாது நான் முகத்தை மூடியபடிஇருந்தேன். யாரோ தோளில் தட்டியது போன்றிருந்தது முகத்திலிருந்து கையை எடுத்தேன். எதிரே நின்றவரில்இயக்கம் என்ற முத்திரை முகத்திலும், உடலிலும் தெரிந்தது. இராணுவ உடுப்பு அணியாது இடுப்பில் பிஸ்டல்வைத்திருந்தார்.
“நியாஸ்தானே”<
“ஆ” தலையாட்டினேன்
நிகழ்வுகளுடன் உண்மையின் அசலையும் காட்டி, படிப்பவர்களிடம் தாக்கத்தை, தொந்தரவுகளை ஏற்படுத்துவதாக எழுத்து இருக்க வேண்டும், என்ற முனைப்பை நாவலில் பல பக்கங்களிலும் காண முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால் நடேசனின் ஊடுருவும் பருந்துப் பார்வையின் வீச்சு கானல் தேசத்தின் உண்மை தன்மையை நாற்புறமும் முன் மொழிந்து வழி நடத்துவது வியப்பளிக்கிறது.
யார் இந்த நாட்டில் போராட வேண்டும்?
யாருக்கு எதிராக ஆயுதம் தூக்க வேண்டும்?
எதிரிகள் யார்?
நண்பர்கள் யார்? என்பது எனது கேள்வியாக இருந்தது.
விடை இலகுவாக கிடைக்கவில்லை.
‘கடையில் வேலை செய்யும்போது பலரை சந்திப்பேன். சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் வந்து போவார்கள். எனது நண்பர்களாக இருந்த இடதுசாரிகள் ஆரம்பத்தில் சீனா, சோவியத் எனப் பிரிந்தது போன்று இப்பொழுது பல இயக்கங்களுக்குப் பிரிந்தார்கள். எவர்களிடமும் அரசியல் தெளிவு தெரியவில்லை. எம்மிடையே இருந்தவர்களில் சுத்தமானவர்களென நம்பிய இடதுசாரித் தலைவர்களும் தொண்டர்களும் பிரிவினைவாத அரசியலுக்குள் சென்றார்கள். எரியும் நெருப்பில் நெய் வார்ப்பது போல் இராணுவத்தின் ஒடுக்கு முறை கூடியது. அதிலும் யாழ்ப்பாண நூல்நிலைய எரிப்பு எங்களைப் போன்றவர்களை செயலிழந்து வாயடைக்க வைத்ததுடன்பிரிவினை கோரியவர்களை சமூகத்தின் கதாநாயகர்களாக்கியது.’
நானூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவலைப் பற்றிய பார்வைகளை எழுத்தில் தருவதை விடவும் ஒரு மணிநேரம் என்னால் கலாதியாக கதைக்க முடியும். அந்த தகுதி ஈழப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துஇயக்கங்களினதும் சந்தா செலுத்தாத உறுப்பினராக வாழ்ந்த அனுபவத்தினால் வந்த வினைகளில் ஒன்று
இனிவரும் நாட்களில் கானல் தேசத்திலிருந்து சில பத்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சகல மனத்தடைகளையும் தற்காலிகமாகவேனும் ஒரு பக்கமாக சாய்த்துவிட்டு நாவலை படித்து பாருங்கள். நாம் தோற்றுப் போனதற்கான விடைகள் கிடைக்கலாம், சில வேளை நமது தேடலுக்கேற்ப நாம் எதிர்பார்க்கும் விடைகள் கிடைக்காமலும் போகலாம்.
வாழ்த்துக்கள் நொயல் நடேசன் அவர்களே.
No comments:
Post a Comment