பேயாட்டம் ஆடியிங்கே பேரழிவைச் செய்கிறையோ ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


          கொரனோவே கொரனோவே எதற்காக நீவந்தாய்
          குழந்தைகள் பெரியோர்கள் உனக்குத்தான் என்னசெய்தார்
          நடுத்தர வயதுயுடையார் நாட்டின் முதுகெலும்பன்றோ 
          அனைவரையும் அழிக்கவென்று ஆருனக்கு ஆணையிட்டார்  !

          சர்க்கரை நோயுள்ளார் சந்தோஷம் கெடுக்கின்றாய் 
          மூச்சுவிடத் துடிக்கின்றார் மூச்சினையே எடுக்கின்றாய் 
          கர்ப்பிணியைப் பற்றுகிறாய் கருணையினைக் கொல்லுகிறாய் 
          இப்படியே செய்கவென்று எவருன்னை அனுப்பிவைத்தார்  ! 

          படிக்கின்ற பிள்ளைகள் படிப்பில்கையை வைத்தநீ 
          எடுக்கின்ற நடவடிக்கை அத்தனையும் குலைக்கின்றாய் 
          உதவிக்கரம் நீட்டவரும் உயர்வுள்ளம் கொண்டவரை 
          ஒடுக்கிவிட உடனடியாய் ஓடிவந்து நிற்கின்றாய்  ! 

          வணக்கத்தலம் அத்தனையும் மூடிவிட வைத்துவிட்டாய் 
          பிணக்குவியல் விழவைத்து பெருமகிழ்வு எய்துகிறாய் 
          சனம்நிறைந்த இடம்பார்த்து சன்னதத்தை ஆடுகின்றாய் 
          சதிசெய்ய உலகினுக்கு அனுப்பியது யார்சொல்லு  !

image1.JPG           அன்றாடம் உழைக்கின்றார் அல்லலுக்கு  ஆக்கிவிட்டாய்   
           அரிசியொடு அத்தனையும் வாங்குதற்கு அலைவிட்டாய் 
           வீடுகளில் அமைதியின்மை உருவாகக் காலானாய் 
           வில்லங்கமாய் உன்னை அனுப்பியது யார்சொல்லு  ! 

           சாதி சமயமெல்லாம் பேதமறச் செய்துவிட்டாய் 
           ஓதி உணர்கவென்று ஓய்வெடுக்கச் செய்துவிட்டாய் 
           நீதி நெறிமுறையை நீபாரா ஒதுக்கிவிட்டாய் 
           காதலுடன் உனைச்செய்ய அனுப்பியது யார்சொல்லு  ! 

           சீனாவா அனுப்பியது  செப்பிவிடு  கொரனோவே 
           யார்நலனை கருத்தேற்றி வந்தாய்நீ கொரனோவே 
           ஊரழித்து வாவென்று உன்னெஜமான் உரைத்தானா 
           நீயழித்து உன்கடமை நிறைவேற்றத் துடிக்கின்றாய்  ! 

            ஆயுதத்தால் உலகுதனை அழிப்பதற்குச் செலவாகும்
            ஆதலினால் கொரனோவே உனக்குருவை கொடுத்தானா 
            நீயுந்தன் எஜமானின் நீக்கமறா கட்டளையால்
            பேயாட்டம் ஆடியிங்கே பேரழிவைச் செய்கிறையோ  ! 






No comments: