ஜீவிகா கணினியில் எழுதியிருந்த கட்டுரையின் தலைப்பைப் பார்த்த அபிதா, “ நான் இதனை வாசிக்கலாமா..? “ எனக்கேட்டாள்.
“ ஓம் தாராளமாக வாசிக்கலாம். இதிலும் உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கப்போகிறேன். இப்போது உங்களுக்கும் ஓரளவு பயிற்சி இருக்கும்தானே…? வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு வாங்க. பார்க்கலாம். “ என்றாள் ஜீவிகா.
காலை வேளைக்கான உணவைத்தயாரித்துக்கொண்டே, எல்லோரும் துயில் எழுவதற்கு முன்னர் வெளியே சென்று மங்களேஸ்வரி ரீச்சரின் வீட்டுக்குப்போய் வந்த செய்தியையும் அபிதா சொன்னாள்.
மூன்று பெண்களும் அபிதா சொல்வதை ஆர்வமுடன் கேட்டனர்.
“ ஏதோ செமினார் இருக்கிறது என்று சொன்னாவே. போகிறாவா…“ என்று கண்ணை சிமிட்டிக்கொண்டு மஞ்சுளா கேட்டாள்.
“ இந்த ஊரடங்கு காலத்தில் இங்கே வீட்டில் இருந்தால் ஏதும் வேலை செய்யவேண்டி வரும் என்றுதானாக்கும் தப்பினேன் பிழைத்தேன் என்று அவ ஓடிவிட்டா“ என்றாள் சுபாஷினி.
ஜீவிகா எந்தவொரு எதிர்வினையும் சொல்லாமல், “ என்ன… திரும்பி வருவாங்களா… அல்லது கொரோனா ஓடிப்போனபின்னர் வருவாங்களா..? “ எனக்கேட்டாள்.
“ நானும் வரச்சொல்லித்தான் இருக்கிறேன். பாவம் ரீச்சர். என்னுடைய கைப்பக்குவம் அவவுக்கு தேவைப்படுது. நான் வைத்துக்கொடுக்கும் மிளகு ரசம் சுவையானது என்றா. நாக்குச்செத்துப்போயிருக்கிறா போலும். எல்லோரும் இங்கே முடங்கிவிட்டோம். கற்பகம் ரீச்சர்தான் இல்லை. அங்கே இருந்தாலும் எப்போதும் உங்கள் அனைவரதும் நினைப்புத்தான் அவவுக்கு. “ புட்டுக்கு தேங்காய் துருவிக்கொண்டே அபிதா சொன்னாள்.
இந்த மூன்று பெண்களுக்கும் கற்பகம் ரீச்சர்தான் இனி மெல்லுவதற்கு அவலாகிவிடுவா. துரிதமாக புட்டும் அவித்து, சம்பலும், ஒரு கறியும் செய்து விட்டு, ஜீவிகா எழுதியிருக்கும் அரசியல் கட்டுரையை பார்க்கவேண்டும். தானாகத் தேடி வரும் சந்தர்ப்பம். வேர்ல்ட் கொமியூனிக்கேஷன் சென்டரும் ஊரடங்கு உத்தரவாலும், இடைவெளி பேணவேண்டிய புதிய நடைமுறையாலும் மூடிக்கிடக்கிறது. இனி எப்போது திறப்பார்களோ தெரியாது. வீட்டிலிருந்து ஜீவிகாவின் கணினியில் பயிற்சி பெறுவதற்கு நல்லதோர் சந்தர்ப்பம் வந்துள்ளது. இதனை தவறவிடக்கூடாது. - அபிதா மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டாள்.
ஜீவிகாவின் அறையிலிருந்து அப்போதுதான் பெரியப்பா சண்முகநாதன் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்துவந்தார். காலைப்பொழுது பத்துமணியும் கடந்துவிட்டிருந்தது.
அபிதா, அவருக்கு தேநீர் தயாரித்துக்கொடுத்தாள்.
“ இன்றைக்கு மார்க்கட்டுகள் திறந்திருக்குமா அபிதா…?“
“ ஓம் அய்யா. ஆனால், மதியம் இரண்டு மணிக்கு மேல் மீண்டும் ஊரடங்கு வந்துவிடும். ஏன்..? ஏதும் வாங்கவேண்டுமா அய்யா..? “
“ மீன்கடைப்பக்கம் போகவேணும். நிகும்பலையூர் மீன் சாப்பிட்டு கணகாலம். எதற்கும் நீயும் வரவேண்டும். இப்போது இந்த ஊரிலும் நிறைய மாற்றங்கள் தெரியுது. நீயும் உடன் வந்தால் நல்லது. நடந்துபோகும் தூரம்தானே…? “
சண்முகநாதன் அறையிலிருந்து, செவியை கூர்மையாக்கி, வீட்டின் கூடத்திலிருந்தும் சமையலறையிலிருந்தும் வந்த செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தவர். கற்பகம் தவிர்ந்த இதர நான்கு பெண்களினதும் குரல்கள் அவரது செவியை வந்தடைந்தன.
அதிலிருந்து கற்பகம் ஊருக்கும் போகவில்லை, ஆசிரியர்களுக்கான கருத்தரங்கிற்கும் போகவில்லை. அபிதாவின் கைப்பக்குவத்திற்கு மாத்திரம் ஏங்கிக்கொண்டிருக்கிறாள் என்பது அவருக்குப் புரிந்தது.
கடந்த தடவை வந்தபோது செய்துவிட்ட தவறுக்கு பிராயச்சித்தம் இந்தப்பயணத்தில் தேடிவிடவேண்டும் என்ற மனப்போராட்டம் மனதில் உருவாகியிருந்தது. அவருக்கு நிகும்பலை மீன் அல்ல முக்கியம். இந்தத்தருணத்தில், அபிதாவை உடன் அழைத்துச்சென்றால் கற்பகத்தின் தற்போதைய மனநிலையை அறியவும் முடியும். வீட்டில் அனைவரையும் வைத்துக்கொண்டு எதுவும் பேசமுடியாது.
பாவமன்னிப்புக்கு அபிதாவைத்தான் தூதுக்கு தயார்படுத்தவேண்டும். சண்முகநாதன், தொலைக்காட்சியில் நாட்டு நடப்புகளையும் உலகச்செய்திகளையும் பார்த்தவாறு தேநீரை அருந்தினார். லண்டன் நிலைமைகளும் அவரை வாட்டிக்கொண்டிருந்தது. அங்கும் மக்கள், மருமக்கள் வேலைக்குப்போயிருக்கமாட்டார்கள். பேரப்பிள்ளைகளும் வீட்டுக்குள் முடங்கியிருப்பர்.
இந்த பேரவலத்தின் பின்னணிக்கான காரணம் என்ன என்பதை விஞ்ஞானரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் பலவாறு யோசித்து யோசித்து மனமும் பேதலித்திருந்தது. செய்த பாவங்களுக்கு சங்கீர்த்தனம் செய்வதற்கும் இந்த கண்ணுக்கு புலப்படாத வைரஸ் வந்திருக்கலாமோ..?
விடை தெரியாத வினாக்கள்தான் அவரது மனதில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன. அந்த அலைமோதல் இன்று தனக்கு மட்டுமல்ல, ஏழை முதல் செல்வந்தன் வரையில், பாமரன் முதல் படித்தவன் வரையில், ஆதிக்கப்போட்டிக்காக கோடிக்கணக்கில் செலவிட்ட வல்லரசுகளின் தலைவர்கள் வரையில், மதவாதிகள், இனவாதிகள் வரையில் இந்த வினாக்கள் தொடரும் காலத்தில் இந்தப்பயணத்தில் நானும் சிக்கிக்கொண்டேன்.
மஞ்சுளாவும் சுபாஷினியும், சாப்பாட்டு மேசையில் அபிதா பரிமாறி வைத்திருந்த காலை ஆகாரத்தை அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, தாங்கள் கடைத்தெருப்பக்கம் செல்வதாக சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் சொற்பவேளையில் வெளியே சென்று செய்யவேண்டியவற்றை செய்து முடித்துவிடவேண்டும் என்ற அவசரகதி அனைவரிடமும் வந்துவிட்டது.
“ அய்யா, நீங்களும் குளித்துவிட்டு வெளிக்கிடுங்க. சாப்பிட்டுவிட்டு போகலாம். நீங்கள் வெளிக்கிடுவதற்கிடையில், ஜீவிகா கம்பியூட்டரில் எழுதிவைத்திருக்கும் செய்திக்கட்டுரையை படிக்கலாமா..? “
அபிதாவின் வேண்டுகோளை சண்முகநாதன் ரசித்தார்.
இவளுடைய காலில் சக்கரமா பூட்டப்பட்டிருக்கிறது. எல்லோருக்கும் முன்னர் எழுந்து வெளியே சென்று மரக்கறிகளும் வாங்கிக்கொண்டு, கற்பகத்தையும் பார்த்துவிட்டு வந்து செய்தியும் சொல்லி, காலை உணவும் தயாரித்துவிட்டு, கம்பியூட்டரில் செய்திக்கட்டுரையும் படித்துவிட்டு, மீன்கடைக்கு தன்னோடு வருவதற்கும் தயாராகின்றாளே…?
இந்தச் சுறுசுறுப்பு இவளது பிறவிக்குணமா..?
இந்த நிகும்பலை வீட்டுக்கு, முன்னர் வேலை செய்வதற்கு வந்த எத்தனையோ வேலைக்காரிகளிலிருந்து இவள் முற்றிலும் வேறுபட்டவளாகத் தென்படுகிறாள். புத்திக்கூர்மை, சாமர்த்தியம், தேடல் மனப்பான்மை, சூது வாதற்ற மென்மையான இயல்பு, முகம் கோணாத பார்வை. எங்கேயோ இருந்திருக்கவேண்டியவள். இளம் வயதில் குடும்ப உறவுகளை இழந்துவிட்டு, நினைவுபடுத்தினால் மாத்திரம் கலங்கி, மற்றநேரங்களில், எந்த மனவலியையும் காண்பிக்காமல் சுமுகமாக நடமாடும் ஜீவன்.
இந்த வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக சென்றுவிட்டால் இவளின் கதி என்னவாகும்..?
என்றாவது ஒரு நாள் கற்பகம் ஊரோடு மாற்றம் பெற்று போகலாம். ஜீவிகா, மஞ்சுளா, சுபாஷினி திருமணம் முடித்து தனிக்குடித்தனம் சென்று விடலாம். இறுதியில் இவள் அபிதாவுக்கு எஞ்சப்போவது யார்..?
எதிர்பாராமல் வந்துள்ள கொடிய வைரஸ், மற்றவர்களின் நலன் பற்றியும் ஏனையோரின் எதிர்காலம் பற்றியும் யோசிக்கத்தூண்டுகிறதே..?
சண்முகநாதனும் குளித்து, உடைமாற்றிவந்து சாப்பிடத்தயாரானார்.
அபிதா, ஜீவிகாவின் மடிக்கணினியின் முன்னமர்ந்து, அவள் எழுதி வைத்திருந்த மரண தண்டனையும் பொது மன்னிப்பும் ! ? என்ற செய்திக்கட்டுரையை படிக்கத் தொடங்கினாள்.
ஜீவிகா, சாப்பாட்டு மேசையிலிருந்து தனது தட்டத்தில் புட்டும் கறியும் சம்பலும் எடுத்துக்கொண்டு வந்து, அபிதாவுக்கு முன்னாலிருந்த சோபாவில் அமர்ந்து சாப்பிட்டவாறு, அபிதாவை அவதானித்தாள்.
அவள் ஆர்வம் மேலிட மவுஸை நகர்த்தியவாறு படித்துக்கொண்டிருப்பதையும், இடைக்கிடை பெருமூச்சு விடுவதையும் கவனித்த ஜீவிகா, “ எப்படி இருக்கிறது..? “ எனக்கேட்டாள்.
“ இன்றைக்கு புட்டும் கறியும் எப்படி இருக்கிறது..? “ என்று கணினியிலிருந்து முகத்தை திருப்பாமலேயே அபிதா கேட்டதும், ஜீவிகாவுக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்து, புரைக்கேறியது. சண்முகநாதனுக்கும் சிரிப்பு வந்தது.
“ தண்ணீர் குடிங்க அம்மா. சாப்பிடும்போது பேசக்கூடாது. “
ஜீவிகாவுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.
“ சிரிக்காமல் சாப்பிடுங்க.. நீங்க எழுதியிருப்பது எப்படி இருக்கிறது என்று கேட்டீங்க… நான் அவித்த புட்டு எப்படி இருக்கிறது என்று நான் கேட்டேன். அவ்வளவுதான். இதிலென்ன சிரிக்கவிருக்கிறது. நல்லாத்தான் எழுதியிருக்கிறீங்க. சின்னச்சின்ன எழுத்துப்பிழைகள் இருக்கிறது. திருத்திவிட்டு அனுப்புங்க. ஆட்சியாளர்களிடம் நீங்கள் முன்வைத்திருக்கும் கேள்விகள் அற்புதம். அவர்கள் இந்தத் தமிழைப்படிப்பார்களா..? படிக்கத் தெரியுமா..? “ அபிதா அந்தக்கட்டுரையை முழுமையாக படித்து விட்டு எழுந்தாள்.
சிங்கில் தட்டத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டே, “ எனது கட்டுரையின் உள்ளடக்கம் எப்படி இருக்கிறது..? சொல்லுங்க அபிதா..? “ ஜீவிகா கேட்டாள்.
“ நான் என்ன சொல்லமுடியும். எனக்கு அதிகம் அரசியல் தெரியாது, ஆனால், என்ர அவருக்கு நல்லாத் தெரியும். அவர் எழுதும் கட்டுரைகளை முன்பு படித்திருக்கிறேன். அவருக்கு இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் நிறையச்சொல்லிக்கொடுத்திருக்கிறார். அந்த ஆலோசகரும் முன்னர் கொழும்பில் ஒரு பத்திரிகையில் வேலைசெய்தவராம். பிறகு பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிசெய்துவிட்டு லண்டன்போய் வந்தவர். அவரையும் அவருடைய வெள்ளைக்கார மனைவியையும் தெரியும். என்ர அவர், அவவை அன்ரி என்றுதான் கூப்பிடுவார். ஒரு சில தடவை பார்த்திருக்கிறேன். இந்தக்கட்டுரையை மீண்டும் ஒரு தடவை நீங்கள் பார்க்கவேண்டும். சில முக்கியமான எழுத்துப்பிழைகள் தெரிகிறது. அது கருத்துப்பிழையாகவும் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது . திருத்தினால் நல்லது. “ என்றாள் அபிதா.
சண்முகநாதனும் அபிதாவும் மீன் சந்தைக்குப்புறப்பட்டனர்.
“ என்ன அய்யா வாங்கவேணும்…? “
“ மீன், இறால், நண்டு, இன்றைக்கு நண்டு சமைக்கிறாயா… கணநாள் சாப்பிட்டு, மீனையும் இறாலையும் வாங்கி வந்து ஃபிறிட்ஜில் வைப்போம். முருங்கைக்கீரையும் போட்டு சமைத்தால் நண்டுக்கறி சுவையாக இருக்கும். உன்னிட்ட கற்பகத்தின் இலக்கம் இருக்கிறதா..? இருந்தால், அவவையும் வரச்சொல்லேன். நீ… அவ விரும்பும் மிளகு ரசமும் வைத்துக்கொடுக்கலாம் அல்லவா..? “
இருவரும் வீதியோரமாக நடந்து வந்தனர். சண்முகநாதனின் ஸ்பரிசம் பட்டுவிடாமலிருக்க அபிதா, சற்று ஒதுங்கியவாறே நடந்தாள். அவரை அந்த ஊரில் முன்னர் தெரிந்த ஒரு சிலர் எதிரே வந்து “ எப்போது வந்தீர்கள்..? “ என சுகம் விசாரித்தனர்.
சுமார் பத்து யாருக்கு ஒருவர் வீதம் யாராவது ஒரு ஆள் எதிர்ப்பட்டார். சண்முகநாதன் தரித்து நின்று, எவருக்கும் கைகொடுக்காமல், சிரித்துப்பேசினார்.
“ அய்யா, கெதியா போவோம். இப்படியே நின்று நின்று பேசினால் நேரம் போய்விடும். கடைகளை மூடிவிடுவாங்கள் “ அபிதா துரிதப்படுத்தினாள்.
சண்முகநாதனும் அதனையே விரும்பியவர்.
அவளிடம் சொல்லிக்கொண்டு வந்ததை மீண்டும் தொடர்ந்தார்.
“ அபிதா, உன்னால் எனக்கொரு உதவி ஆகவேண்டும். செய்வாயா..? “
“ சொல்லுங்க அய்யா… “
“ அந்த கற்பகம் ரீச்சர் ஏதும் சொன்னாவா..? “
“ எதைப்பற்றி அய்யா..? “
“ என்னைப்பற்றித்தான்! “
இவ்வாறு அவர் திடீரெனக்கேட்பாரென அவள் எதிர்பார்க்கவில்லை. இந்த மீன்கடைவீதிக்கான பயணம் இந்த உரையாடலுக்காகத்தானா..?! வீட்டிலிருக்கும்போது கேட்க முடியாத கேள்விகளை வீதிக்கு வந்து கேட்கிறாரே?!
“ உங்களைப்பற்றி அவ ஏனய்யா கேட்கப்போகிறா…? இந்தக்கொரோனாவைப்பற்றித்தானே எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறாங்க. அவவவும் அப்படித்தான். “
வீதியில் சனநடமாட்டம் படிப்படியாக பெருகியது. ஓட்டோக்கள் எதிரும் புதிருமாக விரைந்துகொண்டிருக்கின்றன. சந்திக்கு சந்தி பொலிஸார் நிற்கின்றனர். பாதசாரிகளின் நடையில் வேகம்.
“ அந்த கற்பகம் ரீச்சருக்கு என்மீது தப்பான அபிப்பிராயம் இருக்கிறதுபோலத் தெரியுது. அதனை சரிசெய்து சீராக்கவேணும். அதற்கு நீதான் உதவவேண்டும். “ என்று சண்முகநாதன் சொன்னதும் அபிதா சற்று திகைத்தாள்.
இப்படியும் ஒரு வேலை எனக்கு கிடைக்கப்போகிறதா..? கொரொனோ ஒரு புறம் தனது வேலையை மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாமல் தொடருகின்றது.
மனித மனங்கள் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்களுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கின்றன. விடைதெரியாத வினாக்களையும் சுமந்தவாறு, சுமக்கமுடியாத மனவுளைச்சல்களை வெளிப்படுத்தத் தெரியாமல் அவதியுற்றும் அலையும் இவரைப்போன்று பலரும் நடமாடிக்கொண்டுதானிருக்கிறார்கள் போலும்.
ஆழ்கடலுக்குள்ளிருந்து மீனவர்கள் பிடித்துவரும் உயிரினங்களை உண்டு களிக்க ஆசைப்படும், நிலத்தில் ஊர்ந்தும் நடமாடியும் உயிர் வாழ ஆசைப்படும் ஜீவராசிகளை பிடித்துக்கொன்று தின்று கொழுக்க விரும்பும் மனித குலத்தின் முன்னே திடீரென்று வந்து தோன்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் , “ முடிந்தால் என்னைக்கொன்று சாப்பிடுங்கள் பார்க்கலாம் “ என்று கொக்கரிக்கும்போதுதான், ஞானோதயம் தோன்றுகிறதோ…? வன்னியிலிருந்து வைரஸ் வரையில் என்ற தலைப்பில் தன்னாலும் இப்போது ஒரு கட்டுரை எழுதமுடியும் என்ற விநோதமான நம்பிக்கையும் அபிதாவிடத்தில் துளிர்விட்டது.
“ அய்யா, உங்களுக்கு கற்பகம் ரீச்சருடன் பேசவேண்டும். அவ்வளவுதானே..? அதுக்கு நான் ஏற்பாடு செய்யிறன். யோசிக்கவேண்டாம். முதலில் மீன்கடைக்குப் போய்ச்சேருவோம். நேரம் போகுது.. “ அபிதா எட்டி நடந்தாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment