சம தர்மப் போராளியாக வாழ்வதென்பது ஒரு இயக்கத்தின் பின்னணியில் இருந்து தான் பயணிக்க வேண்டியதில்லை.
குறித்த அரசியல் சித்தாந்தத்தை வாழ்வியலிலும் கைக்கொள்ளும் போதும், வெற்றிகரமான அரசியல் எழுச்சியில் அதனைத் தொடரும் போதும் எழு முரண்பாடுகளின் யதார்த்தத்தை ஆட்சிக் கட்டிலில் ஏறும் போது தான் அனுபவ ரீதியாகக் கண்டுணர முடியும்.
நம் வாழ்வுக்கும் கொண்ட அரசியல் சித்தாந்தங்களுக்கும் இடையில் எழும் உரசல்களில் அதுவரை தியாக மனப் பான்மையோடு போராடிய தோழர்களின் உழைப்பு உரமானதைக் காலம் மறந்து விடுகிறது. இந்தச் சமூகம் மெய்யான வரலாற்றையும், தியாகங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதுமில்லை, விரும்ப முற்படுவதுமில்லை.
இப்படியான பல உள்ளார்ந்த கேள்விகளை எழுப்பி விட்டது “லால் சலாம்” மலையாளத் திரைப்படம்.
கம்யூனிசிய சித்தாந்தங்கள் முளை விட்ட காலத்தில் இயக்க ரீதியாக அதனை முடக்கியப் போட்ட சூழலில், வர்க்க எதிர்ப்புப் போராட்டம் ஒன்றில் எழுந்த கொலைப் பழியால் கேரளச் சிறையில் இருந்து வெளியே வரும் தோழர்கள் ஸ்டீபன் நெத்தூர் (மோகன்லால்), டி.கே.ஆன்டனி (முரளி), சேது லட்சுமி (கீதா) இவர்களின் தொடர்ந்த அரசியல் பயணம் எப்படிச் செல்கிறது, தம்முடைய பழைய அந்தப் போராட்ட வாழ்வியலில் இருந்து எப்படி முரண்படுகிறார்கள் என்பதைத் தொடர்ந்து வரும் கதையோட்டம் காட்டுகிறது.
கம்யூனிசிய இயக்கம் கேரளாவில் எவ்வளவுக்கெவ்வளவு சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கட்டியெழுப்பப்பட்டதோ அவ்வளவுக்கவ்வளவு விமர்சனங்களையும் அது எதிர் கொள்ளத் தவறவில்லை.
இந்தப் படம் ஒரு கடும் போக்கான விமர்சனத்துடனான கதையோட்டத்தைக் கொண்டிராவிட்டாலும் பல கேள்விகளை முன் வைக்கிறது. கேரளாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியாகி 200 நாட்களைக் கடந்த ஒரு திரைப்படம் இப்படியான அதிர்வான எண்ண அலைகளை எழுப்புவது ஆச்சரியம் தருகிறது.
லால் சலாம் படத்தின் கதைப் பின்னணி கம்யூனிசிய இயக்கத்தின் எழுச்சி, அந்த இயக்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறுவது போன்ற மெய் வரலாற்றோடே நகர்வதால் இந்தப் படத்தின் கதை மாந்தர்களாக அமையும் கம்யூனிசிய இயக்கத்துக்காகவே தன் வாழ்வைப் பங்கு போட்டு ஈற்றில் தூக்கி வீசப்படும் நெத்தூரான் என்ற மோகன்லால் பாத்திரம் வர்கீஸ் வைத்தியனையும், தோழர் டி.கே.ஆன்டனி என்ற அரசியலுக்கும், குடும்ப வாழ்வுக்கும்
இடையில் திரிசங்கு வாழ்வைக் கொண்ட முரளியின் பாத்திரம் T.V தோமஸ் ஐயும், அமைச்சராகப் பொறுப்பேற்று
இன்னும் கடும் கம்யூனிசக் கொள்கையோடு பயணிக்கும் சேதுலட்சுமி என்ற கீதாவின் பாத்திரம் கே.ஆர்.கெளரி அம்மாவையும் நிஜ வாழ்வில் பொருத்திப் பார்க்கிறது. இவர்கள் கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரி பாட் இன் அமைச்சரவையில் இருந்தவர்கள். கே.ஆர்.கெளரி அம்மாள் 100 வயது கடந்து இன்னும் உயிர் வாழ்கிறார் என்பது உபரித் தகவல்.
தன்னுடைய இயக்கத்துக்காக உயிரைக் கொடுத்துப் போராடும் தொண்டனாகவும், அந்த இயக்கத்தாலேயே அவமானப்பட்டுத் தலை குனியும் பாத்திரத்தில் மோகன்லால் வழக்கம் போல நடிப்பில் நெகிழ வைக்கிறார். முரளியின் பாத்திரம் படத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் போலவே குழ்ப்பமானது. முறை தவறிய வாழ்க்கையை இறுதி வரை அவர் நியாயப்படுத்துவது போலுள்ளது.
கீதாவுக்கு மலையளவு நடிப்பைக் கொடுத்து, ஊர்வசியை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த ஊர்ப் பெருந்தனக்காரர் வெளாந்தி மகள் வேலையில்லாக் கம்யூனிஸ்ட்காரனைக் கல்யாணம் கட்டித் தன் சுக துக்கங்கள் பறி போகும் சின்னச் சின்ன இடங்களில் நடிப்பால் அசரடிக்கிறார். ரேகா, மது, நெடுமுடி வேணு, ஜெகதி ஶ்ரீகுமார் என்று தத்தம் பாத்திரங்களில் மின்னும் நட்சத்திர அணி வகுப்பு.
மலையளத்தின் முக்கிய நடிகர் சக இயக்குநர் வேணு நாகவல்லி இயக்கிய படமிது.
1990 ஆம் ஆண்டில் தான் பாரதிராஜாவின் “என் உயிர்த் தோழன்”, மற்றும் வேணு நாகவல்லியின் “லால் சலாம்”. வெளியாகியிருக்கின்றன.
முன்னது தன் அரசியல் இயக்கத்துக்காக ஓடாய் உழைத்து நொந்து வீழ்ந்தவனின் கதை,
பின்னது தன் அரசியல் இயக்கத்துக்காக ஓடாய் உழைத்து நொந்து வாழ்வியல் யதார்த்தத்தை உணர்ந்த் மீண்டவனின் கதை. ஆனாலும் அவன் இன்னொரு போராளியை உருவாகத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
பி.கு
லால் சலாம் Amazon Prime இலும் கிடைக்கிறது. வீட்டில் முடங்கியிருக்கும் காலத்தில் பார்க்கத் தகுந்தது.
No comments:
Post a Comment