சுவீடசிஸ்ட்டி - களத்தூர் கண்ணம்மா - சுந்தரதாஸ்

. 



தமிழில் இதுவரை ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளன ஆனால் இவற்றில் எந்த படத்திற்கும் கிட்டாத பெருமை ஏவிஎம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா விற்கே உண்டு ஒரு படம் ஒரு மொழியில் ஒரு தடவை தயாரிக்கப்பட்டு பின்னர் ஆண்டுகள் கடந்து மீண்டும் தயாரிக்கப்படுவது வழமை, ஆனால் களத்தூர் கண்ணம்மாவோ  ஒரே காலகட்டத்தில் நான்கு மொழிகளில் இரண்டு தடவைகள் தயாரிக்கப்பட்டு சாதனை புரிந்திருக்கிறது. இதனை வேறு எந்த படமும் இதுவரை முறியடித்ததாக தெரியவில்லை Nobody's Child  என்று ஆங்கிலத்தில் வெளிவந்த படம் தான் இந்த படங்களுக்கு எல்லாம் மூலம்.  

Nobody's Child அதாவது எவரது குழந்தையும் அல்ல என்று பெயர் வைத்த நேரமோ என்னவோ பலரும் இந்தக் கதையை கையாண்டிருக்கிறார்கள்.  இந்தப் படத்தின் கதையை தழுவி பிரபல நடிகரும் கதாசிரியரும் ஆன ஜவகர் சீதாராமன் களத்தூர் கண்ணம்மா படத்தின் கதையை எழுதி அதில் ஒரு வேடத்தில் நடித்தார். ஏவிஎம் தயாரித்த இந்தப் படத்தில் நடிக்கும் போதே அவருக்கு சின்ன அண்ணாமலை கதை வசனம் எழுதி தயாரித்த கடவுளின் குழந்தை படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் நடிக்கும் போது தான் அவருக்கு தான் எழுதிய கண்ணம்மாவும் கடவுளின் குழந்தையும் ஒரே கதை என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஜவகர் விஷயத்தை  ஏவிஎம்மின் காதில் போட்டுவிட்டார். கலக்கமடையாத  ஏவிஎம், தன்  நிறுவனத்தின் தரத்திற்குரிய விதத்தில் களத்தூர் கண்ணம்மாவை தயாரித்து வெளியிட்டார்.  அதே கையோடு கடவுளின் குழந்தையும் வெளிவந்தது.  இந்த பட ரேசில் கண்ணம்மா வெற்றி பெற்று  விட்டாள் . இதன் வெற்றியைத் தொடர்ந்து ஏவிஎம் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து மாவூரி அம்மாயி என்ற பெயரில் வெளியிட்டார்.  படம் இரண்டு வாரங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போதே தெலுங்கு விநியோகஸ்தர் ஏ வி எம் இடம் வந்து நல்ல படமான இதை என் டப் செய்தீர்கள் தெலுங்கிலேயே எடுத்தால் நன்றாக இருக்கும் என்று வற்புறுத்தி டப்பிங் படம் நிறுத்தப்பட்டு தெலுங்கு படம் தயாராகத் தொடங்கியது.  முகநோமு  என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிகண்டது. 





தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் வெற்றிபெற்ற படத்தை இந்தியில் தயாரிக்கத் தொடங்கினார் ஏவிஎம் மெயின் சூப் ரகீங்கி என்ற பெயரில் படம் வெளிவர தயாரான போது தான் இதே கதை  கால் காபூல் என்ற பெயரில் வெளிவந்து ஓடுவது தெரியவந்தது,  ஆனாலும் ஏவிஎம்மின் இந்தி படமே 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.  தமிழ் தெலுங்கு இந்தி என்று மூன்று மொழிகளில் இரு  தடவை வெளிவந்த களத்தூர் கண்ணம்மா சிங்களத்தையும் விட்டுவைக்கவில்லை 1963 ஆம் ஆண்டு மஸ்தான் டைரக்சனில் உடரடட மெனிக்கே என்ற பெயரிலும், ஏ டபிள்யூ ஐயமானவின்  இயக்கத்தில் மங்கா என்ற பெயரிலும் வெளிவந்தது. 



ரயில் பயணத்தில் அறிமுகமாகும் ஜமீன்தாரின் மகன் ராஜாவும் குடியானவன் மகள் கண்ணம்மாவும் காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் கல்யாணம் செய்கிறார்கள் மேற்படிப்புக்காக லண்டன் செல்ல கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கிறது அதனை அவள் தந்தை அனாதை விடுதியில் விட்டுவிடுகிறார் குழந்தை இறந்து விட்டதாக பொய் கூறிவிடுகிறார்.  ராஜா தான் தன் கணவன் என்று ஒருவரிடமும் சொல்வதில்லை என்று கண்ணம்மா விடம் சத்தியம் வாங்கி விடுகிறார் கண்ணம்மா வேறு ஊருக்கு குடிபெயர்கிறாள்.  ஊருக்கு வரும் ராஜா கண்ணம்மாவை காணாமல் குடிகாரனாகிறான் ,  குழந்தை ஆசிரமத்தில் வளர்கிறது இப்படிப் போகும் படத்தில் ஜெமினியும் சாவித்திரியும் ஜோடியாக நடித்தனர் இவர்களுடன் குட்டி நட்சத்திரமான கமல்ஹாசனும் இப்படத்தில் அறிமுகமானார் படத்தில் முக்கிய வேடத்தில் வரும் அவருக்கு அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலும் உண்டு இவர்களுடன் பாலையா சுப்பையா குலதெய்வம் ராஜகோபால் மனோரமா ஜவகர் சீதாராமன் ஆகியோரும் நடித்தனர் எல்லோருடைய நடிப்பும் சிறந்த முறையில் அமைந்தது சுதர்சனம் இசையில் ஆடாத மனமும் ஆடுதே, கண்களின் வார்த்தைகள் புரியாதா,  அருகில் வந்தாள் ஆகிய பாடல்கள் இனித்தன ஜாவர் சீதாராமனின் வசனம் பொருள்பட அமைந்தது .  ஆரம்பத்தில் பிரகாஷ் ராவ் இயக்கி பின்னர் அவர் ஒதுங்க பீம்சிங் டைரக்ஷனில் வந்த களத்தூர் கண்ணம்மா ஜனாதிபதி விருதையும் பெற்றுக்கொண்டது




No comments: