கேட்பதை மறுத்து கேடுசெய்தல் நன்றல்ல
பணிவாய் இருந்தால் இழிவாக நினைத்தல்
பாரிலும் சிலரது பண்பற்ற செயல்தான்
எதிரி இல்லையென எகிறி நிற்கிறாய்
உயிரும் உனக்கில்லை உயிரற்றும் நீஇல்லை
தனித்து வாழமாட்டியாம் தக்கஉயிர் வேணுமாம்
இதற்குத்தான் மனிதர்களை இதமாய் பிடிக்கிறாயோ
நின்று நிலைப்பதென நீள்சபதம் எடுத்தாயோ
கொன்று சரிப்பதென்று கொடும்சபதம் செய்தாயோ- எமக்கு
புத்தி சொல்லித்தர புதுவடிவம் புரிந்தாயோ
நன்றாய் ஆடுகின்றாய் நாசூக்காய் கொல்லுகிறாய்
என்றைக்கோ ஒருநாள் அழிக்கத்தான் போகினமாம்
ஏட்டிக்குப் போட்டியாய் அடுக்குகள் நடக்குது – உன்
எகத்தாளம் தெரியுது எண்டாலும் விடாயினம்
அறிவியல் உயிரியல் அனைத்தும் தெரிந்தோர்
அப்படியே உன்னை அழித்தே விடுவினம்
நொந்திட்ட மனிதர்களை குண்டிட்டு அழிக்கவும்
வலிதற்ற பிராணிகளை வருத்திக் கொல்லவும்
எந்நேரமும் கைப்பேசி எடுத்துப் பார்க்கவும்
சொகுசாக வாழ்ந்திட வசதிகள் படைக்கவும்
வேலைக்காய் அலைந்து காலத்தை முடிக்கவும்
பாதைகள் காட்டும் பதர்கள் அவரல்ல
முக்காலும் உணர்ந்தவர்கள் முழுவதும் புரிந்தவர்கள்
எக்காலும் மக்களுக்கு விருப்புடன் உழைப்பார்களாம்
வெளவால் தின்றதாலே வந்தவினை என்றதனால்
வன்மத்துடன் தேடுகிறார் தின்றவனை கண்டறிய
இன்னோர் குழுவிங்கே இன்னும் உசாராக
அசுரர்களும் தேவர்களும் வாசுகியை அலைக்கழிக்க
ஆக்கினை தாங்காமல் ஆலகால விசம்கக்க
ஆதிசிவன் அவசரமாய் அள்ளியதை தான்விழுங்க
ஆபத்து என்றுசொல்லி பாருவதி கழுத்தமத்தி
பாம்புவிசம் கூடாது பாதகமே என்றுசொல்ல
பாவிகள் கேளாமல் பாம்பை சுவைத்தமையால்
பற்றியது கொரொனா மானிடரை என்கிறார்கள்
சிரிக்காதே உன்னவர்கள் ஏச்ஐவி சார்சுபோல
இப்பவும் இங்கே இன்னும்பலர் சுத்துகினம்
இந்தநேரம் பழமைகளை இழுக்குகினம் தமிழர்களும்
வீட்டுக்குள் வரும்போது கால்கையை கழுவிவிடு
குழந்தைகளை தொடுமுன்பு கைகளை கழுவிக்கொள்
கொஞ்ச விரும்பினால் பாதங்களை முத்தமிடு
முகத்திலே கண்டபடி தொடுவதை தவிர்த்துவிடு
இளம்பிள்ளை என்பதால் விரைவாக நோய்தொற்றும்
சொன்னதற்கு எமைநோக்கி எரிச்சலுடன் ஏளனமாய்
பட்டிக்காடு என்றுசொல்ல பவ்வியமாய் நெளிஞ்சவை
சுட்டிக்காட்டிச் சொல்லுகினம் சித்தமருந்து நல்லதாம்
அந்நாளில் வைரசு தமிழர்களை தாக்கிவிட்டால்
அம்மன் நோயென்று ஆட்களை தனிமையாக்கி
வேப்பிலையில் படுக்கவைத்து எலுமிச்சைக் காவலிட்டு
வெங்காயம் வெட்டியிட்டு வெண்மோர் குடிக்கவைத்து
மாமிசத்தை விலக்கிவிட்டு மரக்கறியை உண்ணச்சொல்ல
ஐயையோ வைரசு தெரிந்திடுக என்றியம்பி
எம்மவரை பரிகாரி என்றழைத்து பரிகசித்து
ஆங்கில மருத்துவம் ஆண்டுக்கொரு சோதனை
நீண்டு வாழ்வமென்று நிம்மதியாய் மகிழ்ந்திருக்க
வந்திட்டாய் நீயெங்கள் வாழ்வைக் கெடுக்கவென்று
கட்டிய மனைவிகூட எட்டநின்று பார்க்கிறா
பெற்றிட்ட பிள்ளைகளும் பேசிட மறுக்குது
எல்லோரும் தனித்தனிதான் என்றிங்கு இயம்பிடத்தான்
பிரசவித்து வந்தாயோ பதறவைத்து பார்க்கிறாயோ
சுகமில்லை எனவறிந்து ஓடிவந்து பார்த்தவர்கள்
சுகமென்று தெரிஞ்சால்தான் பார்க்க வருவினமாம்
முத்தங்கள் கொடுத்து முகம்சுளிக்க வைத்தவர்கள்
சத்தமே போடாமல் சுத்தமாய் இருக்கினாமாம்
மொத்தமாய் சமைத்து குளிருக்குள் புகுத்தி
அப்பப்ப சூடாக்கி ஆனந்தமாய் உண்டம்
நீஇங்கு வந்து வேலைதனை கூட்டி
சூடாக சமைக்கிறோம் நேராக உண்கிறோம்
குடும்பமாய் வாழ்கிறோம் கடைகளையும் மறந்திட்டம்
உலகத்தை இயக்குவதாய் ஊக்கமாக சொன்னவர்கள்
சத்தமும் கேட்கவில்லை சாதிப்பும் தெரியவில்லை
எப்போதும் மிடுக்காக உயர்வாக தமைக்காட்டி
பட்டங்கள் கொண்டு பதவியுடன் அலைந்தவரை
திட்டங்கள் தீட்டி விழுத்திட்டாய் நீயும்
இருந்தாலும் யாருக்கும் ஆகாது இந்தக்குணம்
சீண்டிப் பாராதே சீரழிந்து போவாயாம்
கற்காலம் இல்லையிது கணினிக்காலம் தெரிந்துவிடு
நொடிப்பொழுதில் பலசெயல்கள் விரைவுடனே நடக்கிறது
புவியைக் குழப்பிவிட்டு புதிய இடமென்று
சந்திரனில் செவ்வாயில் வாழஇடம் தேடுகினம்
எல்லாம் தெரியுமென்று எக்களிப்பு வந்துவிட்டால்
கடவுளும் மனிதர்களை கவனித்துப் பார்ப்பாராம்
அதுதானோ நீவந்து அட்டகாசம் புரிகின்றாய்
வியாபார உலகமென்று விளக்க நினைக்கிறாய்
இருந்தாலும் பரவாயில்லை இப்புவியில் நாம்வாழ
இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம் --------------
No comments:
Post a Comment