இது கொரோனா அல்ல - ப தெய்வீகன்

.


உலகின் உயிர்குலையை தொற்றுநோய் கிருமிகள் தின்று செமிக்க முயன்ற காலங்களிலெல்லாம் அந்த கிருமிகளிடம் தப்புவதற்கு மக்கள் தங்களை தனிமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போது பின்பற்றப்படுகின்ற social distancing எனப்படும் நோய்க்கால பண்பாட்டு வடிவமானது மிகப்புராதனமானது. இவ்வாறு தப்பி வந்தவர்கள் பலர் தாங்கள் தனிமையிலிருந்த காலப்பகுதியில் பல கலைவடிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஐரோப்பாவையும் ஆசியாவையும் 13 ஆம் நூற்றாண்டில் தின்று தொலைத்த பிளேக் நோயினால் 20 கோடி மக்கள் உயிரிழந்தார்கள். 1347 முதல் 1351 ஆம் ஆண்டுவரை பிளேக் தொற்றுநோய் கிருமியால் இடம்பெற்ற இந்தப்பலிகள்தான் மனிதகுல வரலாற்றில் இதுவரையில் தொற்றுநோய் ஏற்படுத்திய மிகப்பெரிய அழிவெனப்படுகிறது. மத்திய ஆசியாவில் உருவாகி வர்த்தக கப்பல்களின் வழியாக ஐரோப்பாவில் பரவி சுமார் அறுபது சதவீத சனத்தொகையை அழிந்தொழித்தது இந்த பிளேக் தொற்றுநோய். இதிலிருந்து ஐரோப்பா மீண்டுவருவதற்கு இரண்டு நூற்றாண்டுகளானது எனப்படுகிறது.
இந்த நோய்க்காலப்பகுதியை புனைவின் வழியாக வெளிக்கொண்டுவந்தவர் இத்தாலிய எழுத்தாளர் Giovanni Boccaccio. இவர் எழுதிய நூறுகதைகளைக்கொண்ட The Decameron என்ற நூலானது இன்றுவரை உலக இலக்கியத்தின் உன்னதமாக கொண்டாடப்படுகின்றதொரு பிரதியாகும்.
பிளேக் நோய் இத்தாலியில் பரவத்தொடங்கிய காலப்பகுதியில் தங்கள் வீடுகளிலிருந்து தப்பியோடுகின்ற ஏழு யுவதிகளும் மூன்று இளைஞர்களும் நோய் அண்டாத தூரக்கிராமம் ஒன்றுக்கு ஓடிச்சென்று தஞ்சமடைகிறார்கள். வெளி உலகோடு எந்தத்தொடர்புமில்லாத இவர்கள் பத்துப்பேரும் இரண்டு வாரங்களை தனிமையில் களிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மாலைவேளை, பத்துப்பேரும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் வேலைசெய்வதற்கு ஒரு நாளும் மத வழிபாடுகளுக்கும் ஒருநாளும் என்றும் போக, இரண்டு வாரங்களிலும் மீதமுள்ள பத்து நாட்களிலும் பத்துப்பேரும் சொன்ன கதைகளின் நூறு கதைகள் கொண்ட தொகுதி The Decameron .



Giovanni Boccaccio எழுதிய இந்தப்புனைவு அதற்கு பின்னர் உருவான எல்லா ஐரோப்பிய இலக்கியத்திலும் நீக்கமறக்கரைந்திருக்கிறது. இந்தப்பிரதியிலுள்ள ஒவ்வொரு பாத்திரமும் சொல்கின்ற ஒவ்வொரு கதையின் ஊடாகவும் மனித குலத்தின் அத்தனை மேன்மைகளையும் உன்னதங்களையும் கீழ்மைகளையும் அறமற்ற மனப்பிறழ்வுகளையும் என்று அனைத்து மனவிகாரங்களயும் எழுதியிருக்கிறார் Giovanni Boccaccio. இன்றும் இந்தக்கதைகள் மனித மனங்களின் சாய்வுகளின் மீது அளவீடுகளாக வைத்து பிரம்மிக்கத்தக்க வகையில் தரிசனம் மிகுந்த பார்வையோடு இலக்கியமாக்கப்பட்டிருக்கிறது.
The Decameron கதைகளின் அடியொற்றித்தான் ஷேக்ஷ்பியரின் சில நாடகங்களே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூறுகதைகளின் தரிசனத்தின் வழியாக கவிதைகள், பாடல்கள், ஒப்ரா எனப்படுகின்ற நாடகீய இசை, திரைப்படங்கள் என்று எத்தனையோ கலைவடிவங்கள் ஐரோப்பாவில் உருவாகியிருக்கின்றன.
இத்தாலியின் புளொரென்ஸ் மொழியில் Giovanni Boccaccio எழுதிய இந்த நூல் ஆங்கிலத்தில் மாத்திரம் ஒவ்வொரு காலப்பகுதியிலும் வெவ்வேறு நபர்களினால் மொழிபெயர்ப்பக்கப்பட்டிருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் ஆங்கிலத்தில் மாத்திரம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது.

நன்றி ப தெய்வேகன் ( அவரின் அனுமதியின்றி அவரின் முகப்பு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட்து . நல்ல விடயத்தை பலர் பார்க்க உதவும் என்ற நம்பிக்கையில் ) 

No comments: