மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 28 முருகபூபதி


 லகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வந்திருக்கும் இக்காலப்பகுதியில்  ஏன்தான்  தாயகத்திற்கு வந்தேனோ…?!  என்ற மனப்போராட்டத்துடன்,   சண்முகநாதன் வீட்டின் பின்வளவில் நடமாடினார்.
 தனது  வீட்டிற்கு  எங்கிருந்தோ வந்திருக்கும்  ஒரு சாதாரண வேலைக்காரி,  இவ்வளவு அழகாக தனது வீட்டை பராமரித்து,   காய்கறித்தோட்டமும் உருவாக்கி, அதனையும் நேர்த்தியாக கவனித்துக்கொண்டிருப்பதை அவதானித்த  சண்முகநாதன், தனது பெறாமகள் ஜீவிகாவை மனதிற்குள் மெச்சிக்கொண்டார்.
 ‘ ஜீவிகாவின் தெரிவு சரியானது.  ‘ 
முன்னர் இருந்த வேலைக்காரிகளும் சமையலுக்கும் தனது மனைவிக்கு பணிவிடை செய்யவும்  வந்த பெண்களும் ஏன் இடையில் விட்டுச்சென்றார்கள்..?  என்பதை நனவிடை தோய்ந்தார். மனைவியின் நீண்ட கால சுகவீனத்தினால், தான் இழந்துபோன இன்பங்களை, அந்தப்பெண்களிடம் தேடப்போனதனால், வந்த விபரீதங்களை, பணம் கொடுத்தும் சலுகைகள் தந்தும் சமாளித்துக்கொண்டவர். ஆனால், எந்தப்பெண்ணும் அவரது வலையில் சிக்கவில்லை.  தனது சில்மிஷங்களை தனக்குள் அடக்கிவைக்கத் தெரியாமல் உளரீதியாக நொந்துபோயிருந்தவர், கற்பகத்திடம் வசமாக மாட்டி வாங்கிக்கட்டிக்கொண்டார்.
மனைவியின் இறுதிநிகழ்வுகள் அனைத்திலும் அந்தப்பெண்கள் வந்து நின்று தங்கள் தரப்பு சேவைகளை எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி செய்துகொடுத்ததை நன்றியுடன் நினைத்துப்பார்த்தார்.
மனைவியின் பெரும்பாலான உடு புடவைகளை இறுதியில் அந்தப்பெண்களுக்கே பகிர்ந்தும் கொடுத்தார். அவற்றில், மனைவி நீண்ட காலம் பத்திரப்படுத்திவைத்திருந்த திருமணத்தன்று அணிந்த கூறைச் சேலையொன்றும் இருந்தது.
மனைவியின் நினைவாக அவரிடம் எஞ்சியிருந்தது பதிவுத்திருமணத்தின்போது மனைவி அணிவித்த மாற்று மோதிரம் மாத்திரமே. அதுவும் லண்டனில்  அவரது மகள் வீட்டின் சுவாமி அறையில் ஒரு சிறிய   எவர்சில்வர் கிண்ணத்தில் கவனிப்பாரற்று கிடக்கிறது. மனைவிக்கு அணிவித்த தாலிக்கொடியையும்  மோதிரத்தையும் மகன், அம்மாவின் நினைவாக தனக்கு வேண்டும் என்று எடுத்துச்சென்றான்.
எஞ்சியிருந்த மனைவியின் நகைகளை இரண்டு மகள்மாரும் பங்கிட்டுக்கொண்டனர்.  லண்டனுக்கு எடுத்துச்செல்ல முடியாத  உடைகள், சாரிகளை, வீட்டில் வேலைக்கிருந்த, அம்மாவுக்கு பணிவிடை செய்த  நிகும்பலையூர் பெண்களுக்கு கொடுத்துவிடும்படி மூத்த மகள் ரோகிணிதான் சொன்னாள்.
அந்தப்பெண்களின் முகம் மனதில் வந்து நிழலாடின.  வலது கரத்தால்  தலையின் பின்புறத்தை தட்டிக்கொண்டார்.  அந்த முகங்கள் தனது மனதிலிருந்து முற்றாக அழிந்துவிடவேண்டுமென்று மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட்டார்.
 “  அய்யா… என்ன கடுமையான யோசனை….?  எப்படி இருக்கிறது உங்களது வீட்டு காய்கறித்தோட்டம்…?   “ எனக்கேட்டுக்கொண்டு வந்தாள் அபிதா.

அவளை ஏறெடுத்தும் பார்க்காமலேயே, “  வெரி குட்.  அழகாக இருக்கிறது. மரக்கறி வாங்க சந்தைக்கே போகத் தேவையில்லை. அந்தளவுக்கு நேர்த்தியாக வளர்த்து பராமரித்திருக்கிறாய்.  அது மட்டுமல்ல, முன்னர் நான் இங்கிருந்தபோது இல்லாத புதியவகை பூமரங்களையும் உண்டாக்கியிருக்கிறாய்.  எக்ஸலன்ட். ,  நீ சகலகலாவல்லிதான்.  “
 “ அய்யா, என்னை ரொம்பவும் புகழுறீங்க….  எனக்கும் பொழுதுபோகத்தானே வேண்டும். அதுதான்…  “
“   நீ…. எப்போதோ இங்கே வந்திருக்கவேண்டியவள்.  என்ர வருத்தக்கார மனுஷியையும் நன்றாக பார்த்திருப்பாய்.  இல்லை… இல்லை நீ வந்திருக்கவே முடியாது. சொறி. அச்சமயம் நீ படித்துக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது, உனக்கு திருமணமாகியிருக்கலாம்.   அவ… என்ர மனுஷி இறந்து, ஒரு வருடத்தில் லண்டனிலிருக்கும்  பிள்ளைகள் அழைத்துப்போய்விட்டேன். அதன் பிறகு ஒரு தடவைதான் வந்தேன். இந்தப்பயணம் இரண்டாவது.   முதல் தடவை வந்தபோது,  ஜீவிகாவுடன், அந்த கற்பகம் ரீச்சர் மாத்திரம்தான் இருந்தாள்.  அவவைப்பற்றி நீ  என்ன நினைக்கிறாய்.  “ தனது வீட்டுப்பணிகளை பாராட்டிப்பேசும் லண்டன்காரர், இப்படியும் ஒரு வினாவைத் தொடுப்பார் என்று அபிதா நினைத்திருக்கவில்லை.
 “ பாவம்  கற்பகம் ரீச்சர்.   வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டிருக்கிறா என்பது மாத்திரம்தான் தெரியும். மற்றவர்களைப் பற்றியெல்லாம் எதற்காக ஒரு வேலைக்காரி – சமையல்காரி ஆராயவேண்டும் அய்யா.  நீங்கள் லண்டன்தானே…? ஜெர்மனியும் உங்கட அய்ரோப்பாவுக்குள்ளதானே வருது.  ரீச்சரின் அந்த கணவனை கண்டு பிடித்து, இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்துவிடுங்களேன் அய்யா. அது பெரிய புண்ணியமாகவும் இருக்கும்.  பாவம் ரீச்சர்,  விரதமும்  கோயிலும்  பிரார்த்தனையுமாக  இருக்கிறா. கொஞ்சம் சிடு சிடுப்புத்தான். அதுவும் என்னிடம் மாத்திரம்தான். நான் வேலைக்காரியாக இருக்கிறதும் ஒரு காரணமாக  இருக்கலாம்.   “ என்றாள் அபிதா.
 "  நீ தெரியாத ஊருக்கு பாதை காண்பிக்கிறாய்.  அந்த ஆளை எங்கே போய் நான் தேடுவது.  அதெல்லாம் இனி சரிப்பட்டு வராது,  அந்த ரீச்சர்,  ஏன் காலத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறா..?  இரண்டாம் தாரமாக யாரையாவது திருமணம் செய்திருக்கலாம். . “  என்று சண்முகநாதன் சொன்னதும் அபிதா மனதிற்குள் திடுக்கிட்டாள்.
அந்த உள்நோக்கத்துடன்தான், இவர் அந்தத்தடவை இங்கே வந்தபோது, கற்பகம் ரீச்சரை அணுகினாரோ…  வாங்கிக் கட்டினாரோ…
அபிதா பேச்சின் திசையை மாற்றினாள். அவரும் அந்த நேர்கோட்டிற்கு வந்திருப்பது, அடுத்து வந்த வார்த்தைகளிலிருந்து அபிதாவுக்கு புரிந்தது.
 “ நீ நல்ல புத்திசாலி, அவவினர ஸ்கூல் பெடியன்களுக்கு பேச்சுப்போட்டிக்கு எழுதிக்கொடுத்து, பயிற்சியும் தந்து பரிசு வாங்க வைச்சிட்டியாமே… எல்லாம் ஜீவிகா சொல்லித்தான் தெரியும்.  “
 இந்தக்கதையெல்லாம் இந்த மனுஷனுக்கு தெரிந்துவிட்டதா..? அபிதா, சண்முகநாதனை உற்றுப்பார்த்து சிரித்துவிட்டு,               “ அதுவும் ஒரு பொழுது போக்கு வேலைதான் அய்யா.   உதவி கேட்டு வந்த மாணவர்கள். எழுதிக்கொடுத்தேன். அவ்வளவுதான். “ 
 “ நீயும் ரீச்சர் வேலைக்குப்போயிருக்கலாம் அபிதா.  ஏன் முயற்சி செய்யவில்லை.?    “
அந்தக்கேள்விக்கு அவளிடம் பதில் இருந்தது. சொல்லவில்லை. பெண்களிடம் திறமையையா எதிர்பார்க்கிறார்கள். அதுவும் விதவையாகிவிட்ட இளம் பெண்களிடத்தில்….  என்ற பதிலே அபிதாவின் உதடுவரையும் வந்துவிட்டு, உட்சென்ற வார்த்தைகள்.
இருவரும் பேசிக்கொண்டே வீட்டின் பின்புற படியருகில் வந்தனர்.  சண்முகநாதனை முதலில் ஏறிச்செல்லவிட்டு, அதன்பிறகு அபிதா உள்ளே வந்தாள்.
ஜீவிகா, கைத்தொலைபேசியில் முகநூல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இருவரும் உள்ளே வந்த அரவம் கேட்டு திரும்பிப்பார்த்தாள்.
 “ என்ன பெரியப்பா… எப்படி எங்ட வீட்டுத்தோட்டம். அபிதாவைப்பற்றி என்ன நினைச்சீங்க…? ஆள் பெரிய ஆள்தான். அவவுக்கு என்னதான் தெரியாது…! இப்ப… பாருங்க, கொம்பியூட்டரும் படிக்கப்போறா…. எல்லோரையும் ஒரு நாளைக்கு மிஞ்சத்தான் போகிறாள்.  இருந்து பாருங்களேன்.  “
 “ போதும் போதும்.  வெக்கை கூடியிருக்கிறது.  தலையில் இரண்டுபேருமாகச்சேர்ந்து ஐஸ் வைக்கவேணாம்.  “ அபிதா நாணத்துடன் தலைகுனிந்தவாறு சமையலறையில் மூழ்கினாள்.
 “  பெரியப்பா,  இந்தப்பக்கம் வாங்க… இருங்க…  “ என அழைத்து, சண்முகநாதனை அமரவைத்தாள் ஜீவிகா.
 “ என்னம்மா… சொல்லப்போகிறாய்… ஏன் இந்த நெருக்கடியான நேரத்தில் இங்கே வந்தீர்கள்… ? என்றுதானே கேட்கப்போகிறாய்.!  அதுபற்றித்தான் பின்புறம் தோட்டத்தில் யோசித்துக்கொண்டிருந்தேன்.  சரி… நீ என்ன சொல்லப்போகிறாய்..?  சொல்லு… கேட்போம்.  அபிதா, எனக்கு ஒரு..  ரீ…. “  சண்முகநாதன் அமர்ந்தார்.
 “ ஒரு நிமிடம் அய்யா. கொண்டுவாரன்  “ குரல்கொடுத்தாள் அபிதா.
சோபாவில் கிடந்த ஜீவிகா பணிபுரியும்  நிறுவனத்தின் வெளியீடான முதல் நாள் பத்திரிகையை  கையில் எடுத்து விரித்துக்கொண்டு,  அருகில் நின்ற காற்றாடியை அழுத்தி சுழலவிட்டார்.
 “ பெரியப்பா,  பேப்பரைப்பார்த்தீர்களா… எங்கட நாட்டில் தேர்தல் திருவிழா தொடங்கிட்டுது.   எங்கட யாழ்ப்பாணத்தைப்பாருங்க.  மக்கள் தெரிவுசெய்யவேண்டியது ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான், போட்டியிடும் வேட்பாளர்கள் முந்நூறுக்கும் அதிகம். ஆளுக்கொரு கட்சி. மேலும் சுயேட்சைக்குழுக்கள்.  இவங்களுக்கெல்லாம் தேர்தல் செலவுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது… என்பதுதான் தெரியவில்லை.   “
 “ வேறு எங்கேயிருந்து,  கனடா, லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, அவுஸ்திரேலியா… இப்படி அள்ளிக்கொடுக்க ஆட்கள் இருக்கினம்.   “
 “ நீங்களும் கொடுக்கிறீங்களா பெரியப்பா…?  “
 “ சீச்சீ… நான் எங்கேயிருந்து கொடுப்பது, நானே  ஓய்வூதியத்தில் சீவிக்கிறன். நான் எப்படி கொடுக்கமுடியும்.  தங்கட சொந்தக்காரங்களுக்கு சீட் கொடுக்கச்சொல்லி கொடுக்கிறவங்களும் இருக்கிறாங்கள்.  இதில் நிறைய மோசடிகள், ஊழல் எல்லாம் இருக்கிறது என்பதும் தெரியும். எனக்கு இந்த கட்சிகளில் நம்பிக்கையில்லை. அவர், தலைவர் போனதன் பிறகு இவுங்கள் தலைகால்  தெரியாமல் ஆடுறாக்கள்.  அவர் இப்போது இருந்திருக்கவேணும்….. “ என்று சண்முகநாதன் இழுத்தபோது, ஜீவிகா  அவரை இடைமறித்தாள்.
 “ இருந்திருந்தால், தலையில் போட்டிருப்பாரா…?  அவரால் உருவாக்கப்பட்ட தேசியத் தலைவர்கள்தானே… கூட்டமைப்புத்தானே அணி பிரிந்திருக்கிறது…  எல்லோரும் தமிழ்த் தேசியம் பேசுகினம். சுயநிர்ணயம் பேசுகினம்.  ஆனால்,  அதிபர் தேர்தல்களில் என்ன செய்கிறார்கள் பார்க்கிறீங்கள்தானே… அது கிடக்கட்டும். நீங்கள் லண்டனிலிருந்து என்ன செய்கிறீங்க…? இங்கே உங்கட ஊரில் கோயில் கட்டுவதற்கும், கும்பாபிஷேகம் செய்வதற்கும் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறீங்க… ஒரு செய்தி தெரியுமா..? கனடாவிலிருக்கும் ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழன், ஐம்பத்திநான்கு இலட்சம் ரூபா செலவிட்டு, இங்கே தன்ர ஊரில் ஒரு கட்டிட ஒப்பந்தக்காரனைப்பிடித்து ஒரு கோயிலை கட்டியிருக்கிறான்.  ஆனால், அவன் எதிர்பார்த்த மாதிரி… ஏதோ  வாஸ்த்து கீஸ்தோ…  சாத்திரப்பிரகாரம் அது கட்டுப்பட்டிருக்கவில்லை என்பதை அறிந்து கனடாவிலிருந்து ஓடோடி வந்து, கட்டின கோயிலை இடித்தானாம்.  இதுவேல்லாம் தேவைதானா.??  “
சண்முகநாதன் எதுவும் பேசாமல் தலைகுனிந்திருந்தார்.
அபிதா, அவருக்கு இஞ்சியும் தட்டிப்போட்ட பால் தேநீர் தயாரித்து எடுத்துவந்து கொடுத்தாள்.
பெரியப்பா – பெறாமகளின் உரையாடலுக்குள் அபிதாவுக்கு நுழைவதற்கு விருப்பம் இருந்தும்,  தன்னைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதுவும் கேட்காததுபோல் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.
வன்னியிலிருந்தபோது ஒரு  சந்தர்ப்பத்தில்,  இந்த கோயில் சமாச்சாரம் பற்றி வந்த உரையாடலில் கணவன் பார்த்திபன் சென்னதுதான் அப்போது அபிதாவின் நினைவுப்பொறியில் தட்டியது.
 பார்த்திபனுக்குத் தெரிந்த கவிஞர் எழுதிய கவிதை வரிகளை அப்போது சொல்லியிருக்கிறான்.
கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார்..!
கட்டிய கோயில்களில் என்னதான் கண்டார்..?  
அதிகப்பிரசங்கித்தனமாக இதனையெல்லாம் இங்கே கொட்டிவிடக்கூடாது,  எல்லாப்பேச்சையும் ஒரு எல்லைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். 
ஜீவிகாவின் வாதத்திற்கு லண்டன் பெரியப்பா என்ன சொல்கிறார்…?  என்பதை கேட்பதற்கு காதுகளை கூர்மையாக்கிக்கொண்ட அபிதா, அவர் விரும்பியிருக்கும் துவையலுக்கான வல்லரை இலைகளை துப்பரவாக்கத் தொடங்கினாள்.
அதுவரையில், வேலைக்குப்போயிருந்த கற்பகம், மஞ்சுளா, சுபாஷினியிடமிருந்து அவளுக்கு கோல் எதுவும் வரவில்லை என்பதும் ஏமாற்றமாக இருந்தது. யாராவது  ஒருவர், அவ்வப்போது சம்பிரதாயத்திற்குப் பேசுவார்கள்.
பெரும்பாலும் இன்று என்ன சமையல்..?  என்ற கேள்வியாகத்தான் இருக்கும். சுபாஷினியும் மஞ்சுளாவும் நுவரேலியா செல்ல திட்டம் வகுக்கலாம். கற்பகம் ரீச்சர், விடுமுறை தரப்படுவதால், யாழ்ப்பாணத்திற்கு பேக்கை தூக்கலாம்.  லண்டன் பெரியப்பாவும் ஜீவிகாவும்  ஊருக்குப்புறப்பட்டால், எனது நிலை என்னவாகும்…?  என்னை இங்கே தனியே விட்டுவிட்டுப்போய்விடுவார்களா…?
சுபாஷினி என்னையும் நுவரேலியாவுக்கு அழைத்துப் போவதாகச்சொன்னாளே…?
எதிர்பாராமல் வந்து சூழ்ந்திருக்கும் கொரோனா மீது அபிதாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
ஆணவம்,  ஆக்கிரமிப்பு,   மேலாதிக்கம்,  இன, மதக் குரோதம்,  பிடிவாதம், பொறாமை, துரோகம், வஞ்சகம் யாவும் இந்தக்கண்ணுக்குத்  தெரியாத வைரஸின் முன்னால் என்னவாகியிருக்கின்றன…?
வானத்தை அளக்கப் புறப்பட்ட விஞ்ஞானத்திற்கு அணு ஆயுத அச்சுறுத்தல் காண்பித்த  வல்லரசுகளுக்கு பாடம் கற்பிக்க வந்ததை கண்டு முழு உலகுமே அஞ்சியிருக்கிறதே.  இந்த அச்சத்தையெல்லாம் பார்க்காமல் போய்விட்ட கணவன் பார்த்திபனும் செல்ல மகளும் அபிதாவின் மனதில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
ஜீவிகாவின் கேள்விகளில் புதைந்திருந்த உண்மைகள் பற்றி விரிவாக எழுதினால் என்ன…?  அபிதா,  அந்த வீட்டிலிருக்கும் பழைய பத்திரிகைகள், இலக்கிய சஞ்சிகைகளை நேரம் கிடைத்தபோதெல்லாம் படித்திருக்கிறாள்.
அவற்றையெல்லாம் எடுத்து கட்டிவைத்து,  பழைய பேப்பர் கடைக்கு கொடுக்கவேண்டும் என்று பல நாட்களாக ஜீவிகா அவளிடம் சொல்லிவருகிறாள். ஆனால், அவற்றினுள் தனக்குத்  தேவையான எவ்வளவோ விடயங்கள் இருப்பதாகவே அபிதா உணர்ந்தமையால், ஜீவிகாவின் அந்தக்கட்டளையை மாத்திரம் இன்னமும் அவள் நிறைவேற்றவில்லை.
 “ கோயில் கட்டினால், கும்பாபிஷேகம் செய்தால் புண்ணியம்  கிடைக்கும்.  அதுதான் கோயில் திருப்பணிக்கு கொடுக்கிறேன். அது தவறா…?   “ இவ்வாறு சண்முநாதன் சொன்னதும், ஜீவிகா உரத்து சிரித்தாள்.
 “ சும்மா ஜோக் அடிக்காதீங்க பெரியப்பா… அந்தப்பணத்தையெல்லாம் ஏழை எளியதுகளின்ர வாழ்வாதாரத்துக்கொடுங்கோ… அதுதான் புண்ணியம்.  இருக்கும் கோயில்கள் போதாதா… இன்னமும் வேண்டுமா…?  வாழ்வதற்கு ஒழுங்கான வீடு இல்லாமல் எத்தனை சனம் ஊரில் கஷ்டப்படுது.  நீங்கள் எல்லாம் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்…. புண்ணியம் தேடுவதற்கு பல வழிகள் இருக்கின்றன.  எங்கட அரசியல்வாதிகளும் செய்யவேண்டிய  பாவங்களையெல்லாம் செய்திட்டு, திருப்பதிக்கும் புத்தகாயாவுக்கும்  போய்வாராங்கள்.  நீங்கள் என்ன பாவங்கள் செய்தனீங்கள்…? சொல்லுங்க பெரியப்பா..?  “
அதனைக்கேட்பதற்கு அங்கிருந்த முன்னாள் வேலைக்காரிகளும் கற்பகம் ரீச்சரும் அவ்விடத்தில் இல்லையே என்ற ஏமாற்றம் அபிதாவுக்கு வந்தது,
( தொடரும் )






,



No comments: