கொல்லுங் கொரோனா - கவிஞர் த. நந்திவர்மன்கிருமி கொரோனா எம்மைத் தாக்கக்
      கிலிதான் பிடித்து வாழ்கின்றோம்
இருமல் வந்து இறக்கும் நோயால்
      இதயங் கலங்கி நிற்கின்றோம்
செருமல் கேட்டால் கூட நாங்கள்
      செத்தோம் என்றே நினைக்கின்றோம்
வருமோ வருமோ என்றே பயந்து
      வாழ்வை இழந்து நிற்கின்றோம்.          1

எதனால் இந்த நிலைமை எமக்கு
      என்றே எண்ணிப் பார்த்தோமா?
முதலில் அதனை நினைத்துப் பார்த்து
      முழுதாய் வாழ முனைவோமா?
இதயந் தன்னில் அதனை ஏற்று
      இனிதாய் வாழ நினைப்போமா?
அதனை இல்லை என்றே மறுத்து
      அவனி மழுதும் அழிப்போமா?                  2


மனித நேயங் கொண்டு வாழ
      மறந்து பகையை வளர்த்தோம்நாம்
புனிதர் பேரால் மதத்தைச் சொல்லிப்
      புவியில் கொலைகள் செய்தோம்நாம்
இனிதாம் உலகின் இயற்கைப் பொருளை
      எமதே என்றே அழித்தோம்நாம்
மனதில் பொறாமை, கோபம், ஆசை
      மறுத்து வாழ மறந்தோம்நாம்.                  3

இறைவன் தந்த இந்த உலகின்
      இயல்பை மாற்ற நினைத்தோம்நாம்
குறைகள் வளர்த்துக் குணங்கள் இழந்து
      கொள்கை இன்றி வாழ்ந்தோம்நாம்
துறைகள் தோறும் வேட்கை யாலே
      முறைகள் மாற்றத் துணிந்தோம்நாம்
இறைவன் கோபங் கொண்டால் எல்லாம்
      பொடிதான் என்றே மறந்தோம்நாம்.       4

துன்பந் தொலைக்கும் வழியே இன்றித்
      துவண்டு நிற்கும் மனிதர்காள்!
முன்பு வாழ்ந்த வாழ்வில் மாற்றம்
      முடிவாய்க் காண முயல்வீரோ?
இன்ப வேட்கை, பகைமை வளர்த்து
      இயற்கை அழித்து வாழ்வீரோ?
அன்பை வளர்த்து ஆசை அறுத்து
      அகிலங் காத்து வாழ்வீரோ?               5


சிட்னி – அவுத்திரேலியா
பங்குனி 2020No comments: