உலகச் செய்திகள்


கொவிட்-19: இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் முடக்கம்

கொவிட்-19: உலகில் உயிரிழப்பு எண்ணிக்கை 7000ஐ தாண்டியது

43 வயது தாய்க்கு முதல் தடுப்பு மருந்து சோதனை

இரு வார காலமாக முடக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாலி

கொரோனா மரணம் 10,000ஐ தாண்டியுள்ளது

இத்தாலியில் 2,600க்கும் அதிக மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று



கொவிட்-19: இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் முடக்கம்
Monday, March 16, 2020 - 6:00am

உலகளாவிய வைரஸ் தொற்று 150,000ஐ தாண்டியது
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இத்தாலிக்கு அடுத்து ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் பிரான்ஸும் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளன. இந்த வைரஸ் தற்போது 152க்கும் அதிகமான நாடுகளில் 150,000க்கும் அதிகமானவர்களை தொற்றியிருப்பதோடு 5800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி ஸ்பெயினில் உணவு கொள்வனவு, மருத்துவம் அல்லது வேலை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் தொற்றினால் ஸ்பெயினில் 196 பேர் உயிரிழந்திருப்பதோடு இத்தாலிக்கு அடுத்து ஐரோப்பாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்், பிரதமர் பெட்ரோ சான்செஸ் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் (45) கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோமேஸ் இருவரும் நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம் பிரான்ஸில் உணவு விடுதிகள், மதுபான விடுதிகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதோடு உணவுக் கடைகள், மருந்தகங்கள், வங்கிகள் மற்றும் புகையிலைக் கடைகள் தொடர்ந்து திறந்திருக்கும் என்பதோடு நேற்று உள்ளுர் தேர்தலும் திட்டமிட்டபடி நடைபெற்றது.
பிரான்ஸில் சுமார் 4,500 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா தமது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத் தடையை பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இது இன்று திங்கட்கிழமை தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் விமானநிலையங்களில் குழப்ப சூழலை ஏற்படுத்தி இருப்பதோடு நாட்டுக்குள் வரும் பயணிகள் மருத்துவ சோதனைக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2,700க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வீடியோ முறையில் அரசு நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
இதுகுறித்து தலைநகர் ஒட்டாவாவிலுள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் இல்லை. இருந்தாலும், நான் முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வீட்டிலிருந்தபடியே அரசு நிர்வாகத்தை கவனிப்பதற்கு தொழில்நுட்பம் எனக்கு உதவுகிறது என்றார் அவர்.
ட்ரூடோவின் மனைவி சோபிக்கு கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
எல்லைகள்,
விமானநிலையங்கள் பூட்டு
கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் பல நாடுகளில் பாடசாலைகள் மற்றும் வர்த்தகங்கள் மூடப்பட்டு, மில்லியன் கணக்கான பயணிகள் எல்லை கடப்பது தடுக்கப்பட்டிருப்பதோடு, பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இத்தாலியும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தப்பது.
இந்நிலையில் நாட்டுக்குள் வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா நேற்று அறிவித்துள்ளது.
“எமது வாழ்க்கைப் போக்கில் சில மாற்றங்களை நாம் கொண்டுவரவுள்ளோம்்” என்று குறிப்பிட்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், இது நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் என்று நேற்று குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவில் சுமார் 250 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு மூவர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைக்கு 50 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கினார். ஆஸ்திரியா மற்றும் கனடா நாடுகளும் இதுபோன்ற அறிவிப்பை கடந்த சனிக்கிழமை வெளியிட்டன.
ஐரோப்பிய நாடுகள் எல்லைகளை கட்டுப்படுத்துவதை தீவிரப்படுத்தியிருப்பதோடு சிலி இரு சொகுசுக் கப்பல்களில் இருக்கும் 1,300க்கும் அதிகமானவர்களை தனிமைப்படுத்தியுள்ளது. இந்தக் கப்பலில் இருந்த வயதான பிரிட்டன் நாட்டவர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே அந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பாவில் வைரஸுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மிலான் தொடக்கம் மெட்ரிட் வரை வீதிகள் மற்றும் சதுக்கங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சில இத்தாலியர்கள் தனிமையில் இருந்து மீள தமது வீடுகளின் ஜன்னல்கள் வழியாக பாட்டுப்பாடி தமது ஆதரவை வெளியிட்டனர்.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உச்சம் பெற்று 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் காலப்பிரிவில் ஈரானில் 97 பேர் உயிரிழந்திருப்பதோடு ஸ்பெயினில் 63 பேர் பலியாகியுள்ளனர்.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஈரானில் இதுவரை 611 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு 12,729 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகளாவிய நோய்த்தொற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக தற்போது ஐரோப்பா மாறியிருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. கடந்த டிசம்பர் கடைசியில் இந்த வைரஸ் முதல்முறை தோன்றிய சீனாவில் உள்நாட்டு வைரஸ் தொற்று சம்பவங்கள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன.
சீனாவில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த 16 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஒரு வாரத்திற்கு மேலான காலத்தில் பதிவான அதிக சம்பவமாகும்.
சீனாவில் அதிகபட்சமாக 80,800 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 3,200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தென் கொரியாவில் மேலும் 76 புதிய கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இத்துடன் அங்கு அந்நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,162க்கு உயர்ந்துள்ளது.
இதுவரை தென் கொரியாவில் 75 பேர் கொவிட்–19 வைரஸ் தொற்றுக்குப் பலியாயினர். இந்த வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருவதாக நம்பப்படுகிறது.
நோர்வே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் திங்கட்கிழமை தொடக்கம் மூடவுள்ளது. இருப்பினும், வெளிநாடுகளிலிருந்து திரும்பும் நோர்வே குடிமக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் கட்டாய தனிமைப்படுத்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் கொரோனா வைரஸ் தொற்றினால் 111 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றுத் தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு அனைத்து சர்வதேச விமானங்களையும் இடைநிறுத்தும் அறிவிப்பை சவூதி அரேபியா வெளியிட்டுள்ளது.
சவூதியில் இதுவரை 86 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கா, மதீனா நகரங்களுக்கான உம்ரா புனிதப் பயணங்களையும் சவூதி அரேபிய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் தொழுகை மற்றும் வழிபாடுகள் நிறுத்தப்படுவதாக பலஸ்தீன நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கின் பல நாடுகளிலும் இவ்வாறான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
வத்திக்கானின் சம்பிரதாயமான ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள் வழிபாட்டாளர்கள் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ள நிலையில், ராணி எலிசபத் பாதுகாப்பு காரணமாக பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 93 வயதான இங்கிலாந்து ராணி எலிசபத், அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விண்ட்சர் கோட்டைக்கு மாறியுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் செஷயர் மற்றும் கேம்டனுக்கான இங்கிலாந்து ராணியின் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடி
மனிதப் பாதிப்பின் வேகத்திற்கு ஒப்ப கொரோனா வைரஸ் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்ட நிலையில் பொருளாதார மந்த நிலை ஒன்று பற்றி அச்சம் நிலவி வருகிறது.
தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பில் சீனாவுக்கு வெளியில் இருக்கும் தனது அனைத்து விற்பனையகங்களையும் மார்ச் 27 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்திருக்கும் அதேவேளை பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வேலை இழப்புகள் குறித்து அதன் நிறைவேற்று அதிகாரி லெக்ஸ் க்ரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
விமானசேவைகள் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்களை ரத்துச் செய்துள்ளது. சில விமானநிலையங்கள் விமானத் தளங்களை மூடியுள்ளன.
இத்தாலி கார் உற்பத்தி நிறுவனமான பெராரியின் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் இரண்டு வாரங்களுக்கு உற்பத்திகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.   நன்றி தினகரன்













கொவிட்-19: உலகில் உயிரிழப்பு எண்ணிக்கை 7000ஐ தாண்டியது






கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி இருப்பதோடு நோய்த் தொற்று பதிவான நாடுகள் 152 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றினால் உலகெங்கும் 173,344 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு நேற்று குறிப்பிட்டது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதோடு உலகெங்கும் எல்லைகள் மூடப்பட்டு இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஐரோப்பாவின் சுதந்திர நடமாட்டங்களை உறுதி செய்யும் செங்கன் வலய நாடுகளுக்கு இடையிலான அவசியமற்ற பயணங்களை தடை செய்வதற்கு ஐரோப்பிய ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வரவிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளும் பயணிகளுக்கு மூடப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக ஐரோப்பா மாறியிருக்கும் சூழலிலேயே அங்கு அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியில் வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறி இருக்கும் இத்தாலியில் கடந்த திங்கட்கிழமை முடிவில் மேலும் 349 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,158 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் 23,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மறுபுறம் பிரான்ஸ், நாட்டை முற்றாக முடக்கும் செயற்பாட்டை நேற்று ஆரம்பித்தது. குடிமக்கள் அனைவரையும் வீட்டிலேயே தங்கியிருக்கும்படி ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு, பணிக்குச் செல்ல மற்றும் மருத்துவக் காரணிகளுக்கு மாத்திரமே வீட்டை விட்டு வெளியேற முடியும் என்று மெக்ரோன் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு புதிய உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“நாம் தற்போது போரில் இருக்கிறோம். அரசாங்கத்தின் முழு கவனமும் அந்தத் தொற்று நோயை எதிர்ப்பதில் உள்ளது” என்றார். பிரான்ஸில் 6,600க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 148 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.ஏற்கனவே இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளும் தமது நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடா, சிலி மற்றும் ஏனைய நாடுகளும் தமது எல்லைகளை மூடியுள்ளன. பிரதான வீதிகளை முடக்கும் நடவடிக்கையாக அந்த வீதிகளில் முகக்கவசம் அணித்த இராணுத்தை பெரு நிறுத்தி இருப்பதோடு அயர்லாந்து புதிய சுகாதார ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. விமான சேவைகள் விமானப் பயணங்களை நிறுத்தி வருவதோடு வேலை வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன.
அரசுகள் கடன்கள் மற்றும் மானியங்களை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியபோதும் பிரேசில் மற்றும் மெக்சிகோவில் இன்றும் பாரிய அரசியல் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. பிரிட்டர் தொடர்ந்து பாடாசலைகளை திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 








43 வயது தாய்க்கு முதல் தடுப்பு மருந்து சோதனை






கொரோனா வைரஸுக்கான சோதனை தடுப்பு மருந்து அமெரிக்க ஆய்வாளர்களால் கடந்த திங்கட்கிழமை நான்கு பேருக்கு முதல் முறை செலுத்தப்பட்டதாக கெய்சர் பெர்மனன்ட் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து கொவிட்–19 நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வைரஸில் இருந்து நகலெடுக்கப்பட்ட பாதகமில்லாத மரபணு குறியீட்டைக் கொண்டுள்ளது.
இந்த தடுப்பு மருந்து அல்லது ஆய்வுக்கு உட்பட்டு வரும் ஏனைய மருந்துகள் செயற்படுவது குறித்து அறிந்துகொள்ள இன்னும் பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் முதல் நபராக சியாட்டலைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு வயது குழந்தையின் தாய் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். “ஏதாவது செய்வதற்கு எனக்கு இது அற்புதமான சந்தர்ப்பமாக இருந்தது” என்று ஜெனிபர் சலர் ஏ.பீ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
வைரஸ் தொற்றை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் வேகமாக இயங்கி வருகின்றனர்.
விலங்குகளுக்கு நோய் குணமடையும் வாய்ப்பு பற்றி சோதிக்கப்பட்ட பின்னரே முதல் முறை தடுப்பு மருந்து மனிதனிடம் சோதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 18 முதல் 55 வயதுள்ள மொத்தம் 45 பேருக்கு தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. 45 பேரிடமும் மொத்தம் 6 வாரங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படவுள்ளது.   நன்றி தினகரன் 








இரு வார காலமாக முடக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாலி






உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 158 நாடுகளில் பரவி உள்ளது. 2,18,815 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8810 பேர் மரணித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 84,114ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) ஒரே நாளில் இத்தாலியில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்த் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இத்தாலியில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுதான். இதன் மூலம் இத்தாலியில் மட்டும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கியுள்ளது.
மேலும், இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 35,713ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸின் மையமாக விளங்கும் லொம்பார்டி பிராந்தியத்தில் மட்டும் நேற்றுமுன்தினம் இந்த நோய்த் தொற்றால் 319 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவுக்கு வெளியே இந்த நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி விளங்குகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 8,758 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, தங்கள் நாட்டில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று எதுவும் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) பதிவாகவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கடந்தாண்டு சீனாவில் தொடங்கிய நிலையில், இது பெரும் மைல்கல்லாக கருதப்படுகிறது.
பல நாடுகள் சமூக கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. முக்கிய நிகழ்வுகளை ரத்து செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதுடன் சுகாதார அமைப்புகளின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.
"கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உலக நாடுகள் தங்களது குடிமக்களை தனிமைப்படுத்தி, சோதித்து, தக்க சிகிச்சையளிக்க வேண்டும்" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஒரு 'நம்ப முடியாத சாதனை' என்று டெட்ரோஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, கவர்ச்சிப் பத்திரிகையான 'ப்ளே​ேபாயும்' கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் தங்களின் விநியோகம் கொரோனா வைரஸால் பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில், தங்களின் பதிப்புகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தங்களின் பதிப்புகளை அச்சிடுவதை தற்போதைய நிலையில் நிறுத்துவதாகவும் 'ப்ளே​ேபாய்' அறிவித்துள்ளது.
66 ஆண்டுகளாக தங்களின் இதழ்களை அச்சிட்டு வரும் ப்ளே​ேபாய், ஒரு கட்டத்தில் மாதத்துக்கு 7 மில்லியன் இதழ்கள் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதேசமயம் வடகொரியாவில் பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் சிறுவர் பாடசாலைகள் மற்றும் அனைத்து பாடசாலைகளும் பெப்ரவரி முதல் பொதுவான விடுமுறையில் இருந்துவரும் சூழலில், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகமான 'யோன்ஹாப்' தெரிவித்துள்ளது.
மீண்டும் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறிருக்க, ஐரோப்பிய நாடுகளின் நிலைமைதான் நெருக்கடியாக உள்ளது. ஒட்டுமொத்த இத்தாலியும் சுமார் இரண்டு வார காலமாக முடக்கப்பட்டிருந்தாலும், கொரோனா வைரஸ் பரவலும், அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்பும் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இத்தாலியை போன்று மற்ற ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக, ஸ்பெயினில் இதுவரை 13,716 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 598ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை வரை 175 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104ஆக அதிகரித்துள்ளது.
ஜெர்மனிய பொறுத்தவரை, 8,198 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உள்ளது.
அதே போன்று, பெல்ஜியத்தில் இந்த நோய்த்தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வரை 237 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 302 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 









கொரோனா மரணம் 10,000ஐ தாண்டியுள்ளது



கடந்த 24 மணியத்தியாலத்தில் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 1,079 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலகம் பூராகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,041 ஆகுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  உலகம் பூராகவும் 244,779 பேர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 








இத்தாலியில் 2,600க்கும் அதிக மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று



இத்தாலியில் 2,600க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 8.3 வீதமாகும்.
சுகாதார ஸ்தாபனம் ஒன்றினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தகவலின்படி, மருத்துவர்களுக்கான பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பது உறுதியாவதாக அது குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை சீனாவை விடவும் மோசமாக உள்ளது. 8.3 வீதம் என்பது சீனாவை விடவும் இரட்டிப்பான மருத்துவ ஊழியர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கிம்பே ஸ்தாபனத்தின் தலைவர் நினோ கார்டபெலோட்டா இத்தாலி ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ தரவுகள் அடிப்படையில் பெறப்பட்டிருக்கும் இந்த எண்ணிக்கையில் கடந்த எட்டு நாட்களுக்குள் நோய்ப் பாதிப்புக்கு உள்ளான மருத்துவர்கள் எண்ணிக்கை 1,500 இனால் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில் மருத்துவர் பற்றாக்குறையினால் மருத்துவ கல்லுௗரிகளின் இறுதி ஆண்டு மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 







No comments: