திரும்பிப்பார்க்கின்றேன்: தேர்தல்களும் தமிழ் எழுத்தாளர்களும் அரசியல் அதிகாரம் என்பது மக்களின் நலன்களுக்காகவே மக்களினால் தேர்தலில் தரப்படுகிறது. முருகபூபதி


சங்ககாலத்திலிருந்து புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரசியல் பேசிவந்தவர்கள்தான். அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும் இவர்களில், சங்ககாலப் புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து பாடியே வாழ்க்கையை ஓட்டினர்.
விதிவிலக்காக ” மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ…” என்று தமது தர்மாவேசத்தை கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான் கம்பர் என்றும் சொல்லப்படுகிறது.
திருவள்ளுவரும் இளங்கோவும் அவருக்குப் பின்னர் வந்த பாரதியும் அரசியல், அறம் பற்றியெல்லாம் எழுதினார்கள்.
நவீனகாலத்து எழுத்தாளர்கள் அரசியல் பேசியதுடன் எழுதினார்கள், அரசியல்வாதிகளாக தேர்தல்களிலும் தோன்றினார்கள். அரசியல் தலைவர்களை நம்பி அவர்கள் பின்னாலும் சென்றார்கள்.

தமிழ்நாட்டில் காலத்தின் இடி முழக்கம் என கொண்டாடப்பட்ட ஜெயகாந்தனும் அரசியல் பேசினார், எழுதினார், ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களும் எழுதியவர். ஒரு கட்டத்தில் சென்னை தியாகராயர் நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு நாற்பதுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று, தமக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் அப்பழுக்கற்றவை என்றும் வசனம் பேசினார்.
மற்றுமொரு எழுத்தாளர் பரீக்ஷா ஞாநியும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையும் அனுபவத்தையும் புத்திக்கொள்முதலாக்கினார்.


இலங்கையிலும் பல எழுத்தாளர்கள் – ஊடகவியலாளர்கள் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் மூத்த நாவலாசிரியர் சுபைர் இளங்கீரன் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைத்தேர்தலில் போட்டியிட்டவர்தான்.

பின்னாளில் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவும் யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபைத்தேர்தலில் போட்டியிட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாணத்தில் மாத்திரம் எமக்கு நன்கு தெரிந்த நான்கு எழுத்தாளர்கள் போட்டியிட்டனர்.
அவர்கள் பெயர் பின்வருமாறு:-
எம். ஸ்ரீபதி, பேராசிரியர் சிவச்சந்திரன், செங்கை ஆழியான், கவிஞர் சோ. பத்மநாதன். எனினும் இவர்கள் வெற்றிபெறமுடியவில்லை. அதன் பின்னர் நடந்த தேர்தல்களிலும் போட்டியிடவில்லை.

முன்னர் பாராளுமன்றத்திற்கு கிழக்கிலிருந்து தெரிவான செல்வி தங்கேஸ்வரியும் ஒரு எழுத்தாளர்தான். அத்துடன் சமூக ஆய்வாளர்.

அரசியல்வாதியாவதற்கு முன்னர் — முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தொடங்குவதற்கு முன்னர் கவிஞராகத் திகழ்ந்தவர் சட்டத்தரணி அஷ்ரப். அவரது கட்சி அவர் காலத்தில் பலம்மிக்க இயக்கமாகவே இயங்கியது. அவர் சிறந்த இலக்கியவாதி. இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொள்வதும், அவற்றில் பேசுவதும் அவருக்கு உவப்பானது. அமைச்சரானதன் பின்னரும் தினமும் ஒரு கவிதை எழுதிப்பார்த்துவிட்டுத்தான் தமது அரசியல் கடமைக்குச்செல்பவர். நான் அறிந்தவரையில் மல்லிகைக்கு ஒழுங்காக சந்தாப்பணம் செலுத்தி, வரவழைத்து படித்தவர்.

அவரைப்போன்று மற்றும் ஒருவர் மாவை சேனாதிராஜா, மற்றவர் அஸ்வர். ஆனால், இவர்கள் இலக்கியவாதிகளோ இலக்கியப்பேச்சாளர்களோ அல்ல.

சில அரசியல்வாதிகளும் கட்சித்தலைவர்களும் இலக்கிய விழாக்களில் பேசுகையில் ” எழுத்தாளன் இந்நாட்டின் முதுகெலும்பு” – என்ற பாணியில் முழங்கி, கல்யாணப்பரிசு ( மன்னார் அன் கம்பனி - பைரவன்) தங்கவேல் போன்று காற்றிலே பேசிவிட்டுச் செல்பவர்கள்.
முடிந்தால் பொன்னாடை போர்த்துவார்கள். அல்லது பெற்றுச்செல்வார்கள்.

முன்னர் மட்டக்களப்பின் முடிசூடா மன்னர் என்றும் சொல்லின் செல்வர் எனவும் பெயர் பெற்றிருந்த செல்லையா இராஜதுரை ஒரு காலத்தில் சுதந்திரன் பத்திரிகையில் ஆசிரியப்பணியில் ஈடுபட்ட எழுத்தாளர். அத்துடன் நாடக நடிகர். தமது பேச்சாற்றலினால் தந்தை செல்வாவினால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தவர். நீண்ட காலம் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
இவர் தமது வாழ்க்கைத் தொழிலை எழுத்துலகத்திலிருந்து தொடக்கியிருந்தமையினால் அமைச்சரானதும் ஈழத்து எழுத்தாளர்களுக்கும் இலக்கிய உலகிற்கும் ஏதும் உருப்படியாக செய்வார் என்றுதான் எதிர்பார்த்தோம். அவர் தேர்தல்களில் இறங்கும் முன்னர் சொந்தமாக ஒரு அச்சகமும் நடத்தி ஒரு இலக்கிய இதழை வெளியிட்டவர்தான்.
ஆனால், அவர் அமைச்சரானதன் பின்னர் நடந்தது வேறு. அவர் தம்மை ஆன்மீகவாதியாக்கிக்கொண்டு, அஸ்வமேத யாகமும் இந்துக்கலாசார மாநாடும்தான் நடத்தினார்.

ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை விநியோகிப்பதற்கு சீரான செயல்திட்டத்தை அவர் உருவாக்கவேண்டும் என்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது வெள்ளிவிழாவின்பொழுது அவரை அழைத்து முன்வைத்த கோரிக்கையை மட்டுமல்ல, பல இலக்கியம் சார்ந்த வேண்டுகோள்களையும் அவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
ஒரு சமயம் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் நடந்த ஒரு இளம் கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு அவர்தான் தலைமைதாங்கினார். அதில் கலந்துகொண்ட ஒரு முஸ்லிம் கவிஞர் , அவரைப்புகழ்ந்து பேசும்பொழுது, “அமைச்சருக்கு இரண்டு மனைவிகள். அதில் ஒன்று தமிழ் ” எனச் சொல்லி கரகோஷம் பெற்றுச்சென்றார்.

அமைச்சரும் கரகோஷம் எதிர்பார்த்தோ என்னவோ,                  ” இன்று தமது கன்னிப்படைப்பான கவிதை நூலை வெளியிடும் கவிஞர் நாளையே தமது நூலில் 100 பிரதிகளை எனது அமைச்சில் கொடுத்துவிட்டு அதற்குரிய காசோலையை வாங்கிச்செல்லவும்.  “ என்றார்.
நாமெல்லோரும் புளகாங்கிதம் அடைந்தோம். ஆகா எமக்கு ஒரு விடிவெள்ளி தோன்றியிருக்கிறது என நினைத்தோம். அந்தக் கவிஞரும் அமைச்சர் சொன்னவாறு மறுநாளே தமது நூலின் பிரதிகளை அமைச்சில் சேர்ப்பித்தார். அதன்பின்னர் தமது கால் செருப்பு தேயத்தேய அலைந்தாரேயன்றி அந்தக்காசோலை கிடைக்கவில்லை.

தமிழ்த்தேசியம் , தமிழ் ஈழம், சமஷ்டி என்றெல்லாம் காலந்தோறும் பேசிவந்த தமிழரசுக்கட்சித் தலைவர்களும் தமிழ்க்காங்கிரஸ் கட்சித்தலைவர்களும் கூட ஈழத்து இலக்கிய உலகிற்கு உருப்படியாக ஏதும் செய்யவில்லை.

ஆனால், தெருத்தெருவாக மல்லிகையை சுமந்துகொண்டு அலைந்த மல்லிகை ஜீவா மாஸ்கோவிடம் பணம் வாங்கிக்கொண்டு இதழ் நடத்துகிறார் என்று கோவை மகேசன் சுதந்திரனில் விஷம் கக்கினார்.
சுதந்திரனும் பின்னாளில் சுடர்ஒளி என்ற இலக்கிய இதழை நடத்தியது. அதனையும் இந்த தமிழ்த்தேசியவாதிகள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் சுதந்திரனுக்கும் சுடரொளிக்கும் போட்டியாக உதயசூரியன் என்ற பத்திரிகையை நடத்தினார்கள்.

ஆனால், அது தொடர்ந்து வெளியாகவில்லை.

மலையகத்தில் நடந்ததும் தெரிந்தவிடயம்தான். மலையக தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தில் வாழ்ந்த இ.தொ.கா மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பனவும் ஈழத்து மலையக இலக்கிய வளர்ச்சிக்கு எதனையும் உருப்படியாகச்செய்யவில்லை.


அஸீஸ் தலைவராக இருந்த ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் தொண்டமான் தலைமை தாங்கிய இ.தொ.கா. ஆரம்பத்தில் யூ. என்.பி. யையும் ஆதரித்து தமக்கு அந்த கட்சிகள் பதவியில் அமரும் வேளைகளில் நியமன அங்கத்தவர் பதவியை தேர்தலில் போட்டியிடாமலேயே பெற்றுக்கொண்டனர். விகிதாசாரப் பிரநிதித்துவம் வரும் வரையில் இந்தக்காட்சிதான் தொடர்ந்தது.
1977 இல் ஜே.ஆர். தலைமையில் அரசு அமைந்தபொழுது சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சரானார். அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த மலையக இளைஞர்களின் ஆதர்சமாக விளங்கிய இர. சிவலிங்கம் மலையக மக்களுக்கான ஒரு அறிஞர்குலாம் அமைக்க அமைச்சர் முன்வரவேண்டும் என்று வீரகேசரியில் கட்டுரை எழுதினார்.

தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தில் நம்பிக்கை வைத்திருந்த அந்த மலையகத்தலைவர் இந்த அறிவுஜீவிகளை என்றைக்கும் அண்டியதில்லை. நம்பியதில்லை.
அவர் தோட்டத் தொழிலாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதற்காக இ.தொ.கா. வின் வருடாந்த மாநாட்டு விழாவுக்காக தமிழ்நாட்டிலிருந்து நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், நடிகை சுஜாதாவை வரவழைத்தார்.

தோட்ட மக்களின் சந்தாப்பணம் இந்நடிகர்கள் தங்கியிருந்த உல்லாசவிடுதிகளுக்கு கரைந்தது. அவர் காலத்தில் வாழ்ந்தவர்தான் ஒரு கூடைக்கொழுந்து புகழ் என்.எஸ்.எம். இராமையா என்ற மூத்த மலையக எழுத்தாளர்.
வறுமையில் மிகவும் சிரமப்பட்டார். 1983 இல் தமது இரண்டு குழந்தைகளை நோய் அரக்கனுக்கு ஒருவாரகாலத்தில் பறிகொடுத்தார். இத்தனைக்கும் அவரது தலைமையில் 1972 இல் அட்டனில் நடந்த மலையக எழுத்தாளர் மாநாட்டில் நியமன அங்கத்தவர்களாக இருந்த அஸீஸ் மற்றும்  அமைச்சர் குமாரசூரியரும், பின்னர் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் நடந்த ஒரு கூட்டத்தில் அமைச்சர்கள் தொண்டமானும் தேவராஜூம் பேசியிருக்கிறார்கள்.

வறுமையில் வாடிய அந்த மூத்த எழுத்தாளரின் நூல் கூடைக்கொழுந்து .
தற்பொழுது லண்டனில் வதியும் எழுத்தாளர் மு.நித்தியானந்தன் இல்லையென்றால் இந்நூல் வெளிவந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

இராமையா இறந்த பின்னர் அவர் வசித்த பகுதிக்கு மலையக அரசியல் பிரமுகர்கள் வந்து குவிந்தார்கள். அஞ்சலி செலுத்தினார்கள்.
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் அரசியலில் இறங்கி தேர்தலில் நின்றால் ஏதும் நன்மைகள் வாழ்வில் சிரமப்படும் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய உலகிற்கும் கிடைக்கும் என நம்புவது மோட்டுத்தனம்தான்.
இதுவிடயத்தில் இலங்கையில் நான் அறிந்தவரையில் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்பொழுதும் எழுத்தாளர்கள் பக்கம் நின்று அவர்களின் நலன்களை கவனித்தவர்கள் எனச்சொல்லமுடியும். ஒருவர் கொல்லப்பட்ட கவிஞர் அஷ்ரப். மற்றவர் அஸ்வர்.
இன்றைக்கும் இந்திய மத்திய அரசின் தமிழ் நூல் இறக்குமதிக்கொள்கை பற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் இலங்கை தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழக நூல்களை இலங்கையில் நூல் விற்பனையாளர்கள் இறக்குமதி செய்யமுடியும். ஆனால், தமிழக நூல் விற்பனையாளர்களினால் இலங்கையிலிருந்து அவ்வாறு நூல்களை கொள்வனவு செய்யமுடியாது.

இன்று பல பதிப்பகங்களே சென்னையில் வருடாந்தம் புத்தக சந்தையில் வெளியிட இலங்கையர்களின் நூல்களை அச்சிடுகின்றன. புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களும் இதுவிடயத்தில் தமிழக பதிப்பகங்களையும் புத்தக சந்தையையும் நம்பியிருக்கிறார்கள்.

இன்று இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதியும் கொழும்பிலிருந்து ஞானமும் மட்டக்களப்பிலிருந்து மகுடமும் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இலங்கை வடக்கு – கிழக்கில் இயங்கும் மாகாண சபைகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகரசபை நூல் நிலையங்களுக்கு இவற்றில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த இதழ்களை கொள்வனவு செய்வதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுப்பார்களா…?

அண்மையில் நடந்துள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் சில எழுத்தாளர்கள் – ஊடகவியலாளர்கள் போட்டியிட்டனர். மலையகத்தில் வீரகேசரி முன்னாள் ஆசிரியர் தேவராஜ், சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சி புகழ் ரங்கா, மற்றும் கலை, இலக்கியவாதி மல்லியப்பூ சந்தி திலகர் என அழைக்கப்படும் திலகராஜன், ஆகியோரும் யாழ்ப்பாணத்தில் வல்வை அனந்தராஜ் என்ற எழுத்தாளரும் போட்டியிட்டனர். அனந்தராஜ் ஆசிரியராகவும் பின்னர் நகரசபையில் மேயராகவும் இருந்தவர்.

இவர்களில் ரங்கா அரசியல் விமர்சகராக மின்னலை பரபரப்புக்காக நடத்தியவர். ஏற்கனவே பாராளுமன்றத்திற்கும் தெரிவானவர்.

இவர்கள் மத்தியில் மல்லியப்பு சந்தி திலகருக்கு இதுவே முதலாவது பாராளுமன்ற அரசியல் பிரவேசம். புதிய தலைமுறை. இவரிடமிருந்து ஈழத்து இலக்கிய உலகம் குறிப்பாக மலையக இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது.
மலையகத்தில் வட்டகொட பிரதேசத்தில் வடக்கு மெதகொம்பர தோட்டத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம் திலகராஜன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்ற முகாமைத்துவ பட்டதாரி.
மல்லியப்பு சந்தி என்பது இவரது கவிதைத் தொகுதியின் பெயர். தனியார் துறையில் முகாமைத்துவ ஆலோசகராக பணியாற்றியவாறு மலையகம் இணையத்தளம் நடத்திவருபவர். இதன் பூர்வாங்க தொடக்க நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடந்தது.
ஈழத்து எழுத்தாளர்களின் நண்பர். அவருக்கு ஈழத்து இலக்கிய வரலாறு புதியதல்ல.

மலையக மக்களின் இழப்புகளும் ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் தெரியாத செய்திகள் அல்ல. இந்தப்பத்தி எழுதும்பொழுது அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் தெரிவானதற்கு வாழ்த்துக்கூறுகையில், தான் தனது கடமைகளை தொடர்ந்தும் தமது மக்களுக்கு மேற்கொள்ளவிருப்பதாகவே உறுதியளித்தார்.

அரசியல் அதிகாரம் என்பது மக்களின் நலன்களுக்காகவே மக்களினால் தேர்தலில் தரப்படுகிறது. அத்தகைய ஜனநாயக உலகில் நாம் வாழ்கின்றோம்.
இம்மக்களினதும் அரசியல் தலைவர்களினதும் தேசங்களினதும் வரலாறுகளையும் பதிவுசெய்துகொண்டிருப்பவர்கள் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும்தான்.

( பிற்குறிப்பு:   கடந்த இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முடிவின் பின்னர் எழுதப்பட்ட கட்டுரை.  இந்தப்பதிவின் இறுதியில் இடம்பெறும் மல்லியப்பு திலகர் என்ற மயில்வாகனம் திலகராஜனுக்கு அடுத்துவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாமல், தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.  அதற்கான விளக்கத்தை இத்துடன் இணைத்துள்ள காணோளி நேர்காணலில் தெரிவிக்கின்றார். )



letchumananm@gmail.com










No comments: