கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -05 பெற்றமனமும் பேணி வளர்த்த பாங்கும்


ப்பு, ஆச்சி, பெத்தாச்சி ஆகிய மூவருந்தான் எனது குடும்பத்தில் நான் அறிய உயிர்வாழ்ந்த முதியவர்கள். அவர்கள் பற்றிய சில கதைகளை இனி நினைவுபடுத்துவோம்.
தொழில் காரணமாக அப்பு தென்னிலங்கையிலே மாத்தறையில் ஆண்டிற் பெரும்பகுதியைக் கழிப்பார். ஆக, வீட்டிலே எம்மை வளர்த்து வழிப்படுத்தும் பொறுப்பு, ஆச்சியின் தலையாய பொறுப்பாக இருந்தது.  இங்கு ஆச்சி என நான் குறிப்பிடுவது எனது அம்மா.  பெத்தாச்சியும் ஆச்சிக்குத் தன்னாலான உதவி வழங்குவார்.
எமது குடும்பத்தில் நாம் ஏழு சகோதரர்கள். நாம் வாழ்ந்து வளர்ந்த காலம், இரண்டாவது உலக மகா யுத்தகாலம். உணவுத்தட்டுப்பாடும்  கட்டுப்பாடும் நிலவிய காலம். அரிசி, மா, சீனி போன்ற அத்தியாவசிய பண்டங்கள்  ‘ கூப்பன்  ‘ அடிப்படையில் கட்டுப்படுத்தி விநியோகிக்கப்பட்ட காலம். பல மணி நேரம் வரிசையில் நின்று தவம்செய்து  ‘ கூப்பன் ‘ பண்டங்களைப் பெறுவதற்கு  ‘சங்கக்கடை  ‘ என்னும்  கூட்டுறவுப் பண்டகசாலை முன் நின்று தவம் புரிந்த அனுபவம் பெத்தாச்சிக்கும் எனக்கும் உண்டு. அரிசி என்றால் அவர்கள் வழங்கிய  ‘கண்ணாடி ‘ ப் பச்சை அரிசியையும்  ‘ மா  ‘ என்றால் கோதுமை மாவையும் குறித்த காலம்.
ஏழு வளரும் பிள்ளைகள் – அவர்களுக்குச் சத்துள்ள உணவு அவசியந்தேவை. ஆச்சியும் பெத்தாச்சியும் அப்பொறுப்பைச் செவ்வனே நிறைவுசெய்தல் கடினம் என உணர்ந்த அப்பு, ஏலவே ஊர் நெல்லை வாங்கிச் சேமித்து வைப்பார். அதைப் பக்குவமாகப் பாகஞ் செய்து உணவளிப்பவர் ஆச்சி.
      பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா…?
         பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா…?
இவ்வேளையில் இப்பழைய பாடலடி நினைவுக்கு வருகிறது. திரைப்படப் பாடல்தான். ஆனாலும் உளவியல் அடிப்படையில், பொருள் செறிந்த பாடலடி அதுவாகும். பிள்ளைகளைப் பெற்றெடுத்தல் எளிது, ஆனால்  ‘பேணி  ‘ வளர்த்தல் அவ்வளவு எளிதல்ல. எல்லாப் பிள்ளைகளும் வளருதல் இயற்கை.  ஆனால், பிள்ளைகளை வளர்த்தல் என்பது பிறிதொன்று. பேணி வளர்த்தல் என்பது புனிதமானதொரு பணி எனலாம்.
         எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
                 மண்ணிற் பிறக்கையிலே – அது
        நல்லவன் ஆவதும் அல்லவ னாவதும்
                     அன்னை வளர்ப்பினிலே….

என்று  அன்னை தலையிலே அப்பொறுப்பை முழுமையாகச் சுமத்தியது எமது பழந்தமிழ்ச் சமுதாயம். அது மட்டுமல்ல, அதற்கும் மேலே ஒரு படி சென்று,  ‘ தாயைப் போல பிள்ளை, நூலைப் போலச் சேலை ‘  என்றும் மிக அழுத்தங் கொடுத்தது. ஆக, பிறக்கும்பொழுது நல்லவனாகப் பிறக்கும் குழந்தையொன்று நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் யாரால்..?  என்பதை முடிந்த முடிபாகச் சொல்லி வைத்துவிட்டது எமது சமுதாயம். எனவே, பிள்ளை வளரும் பருவத்திலே, தேவை யாதென அறிந்து அத்தேவையை நிறைவுறச் செய்யும் பொறுப்பைத் தாயின் தலையிலே சுமத்திவிட்டது தமிழ்ச் சமுதாயம். காலம் மாறும். ஆயினும் அக்கோலம் மாறுமா..?
காலா காலத்திற் பிள்ளையின் தேவைகளைச்  செவ்வனே நிறைவுசெய்து வளர்த்தல் என்பதன் பொருள் யாது..?  வளரும் சிறுவரின் தேவைகள் இருவகையின. ஒன்று உடலியல் தேவைகள். உணவு, உடை, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவை.
இவையெல்லாம் அன்றாட வாழ்விலே பெற்றோர் நிறைவுசெய்யவேண்டியவை. மற்றையது, உளவியல் தேவைகள். அன்பு, ஆதரவு, இன்மொழி, கல்வி, நம்பிக்கையளிக்கும் நடத்தை போன்றவை.  இவை இலை மறை காய் போன்ற தேவைகள். உளவியல் விருத்திக்கு அவசியமானவை. வளருஞ் சிறுவரின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிப்பவை.
உடலியல் தேவைகளை நிறைவு செய்வதற்குப் பணவசதி அவசியம். அதைத் தமது கடமையென ஏற்று ஆவனசெய்தவர் அப்பு.  ஆனால், பணம் மட்டும் போதுமா..? அன்றாட வாழ்க்கையில், நடைமுறையில், காலை முதல் மாலைவரை எத்தனை பணிவிடைகள் செய்தல் வேண்டும்..? அவற்றை எல்லாம் சினக்காமல் இனிய முகத்துடன் செய்தவர் ஆச்சி. தமது தள்ளாத வயசிலும் ஆச்சிக்குத் தினமும் உறுதுணை புரிந்து இன்புற்றவர் எனது பெத்தாச்சி.
ஒரு வீட்டிலுஞ்சரி, அன்றி நாட்டிலுஞ்சரி, சிறுவர்கள் செல்வம் எனவும் இயற்கை வளம் எனவும் மதிக்கப்படுபவர்கள்.  அவ்வண் செல்வம் எனவும் வளம் எனவும் மதிப்புப் பெறுதற்குச் சிறுவர் கல்வி அறிவுடையோராகவும் செயல்திறன் படைத்தவராகவும் உடல் நலனும் மன நலமும் உடையவராகவும் இருத்தல் அவசியம். அத்தகைய பிள்ளைகளாக நாம் வளர்வதிற் பெரும் அக்கறை காட்டி, அயராது உழைத்தவர்கள் எமது பெற்றோர். குறிப்பாக அன்றாட வாழ்க்கையிற் பல தியாகங்களைச் செய்து எமது தேவைகளை நிறைவு செய்தவர் ஆச்சி!
எமது வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்திலிருந்தது நாவற்குழி ரயில் நிலையம். பள்ளி நாள்களில், காலை ஏழுமணிக்கே நாம் தயாராகி ரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் துவங்குவோம். அதற்குமுன், காலை உணவு உண்ணத்தந்து, மதிய  போசனத்துக்கு என கட்டுச்சாதமும் தந்து அனுப்புவார் ஆச்சி.
 காலியிலிருந்து அப்பு காலத்துக்குக் காலம் வாங்கிவரும்               ‘ சிவப்பு பச்சை’ ‘அரிசியிற் சமைக்குஞ் சாதம். அதைப் பச்சை வாழை இலையிலே சுடச்சுடத் தக்காளிக் குழம்பு அல்லது இஞ்சிச் சம்பலுடன் கட்டிய கட்டுச்சாதம் அது. நல்ல பசியுடன் அதைப்பிரித்து நண்பகல் உண்ணும்போது பெற்ற அறுசுவை பற்றி இங்கு விவரித்தல் இயலாத காரியம். சொற்களிற் பிடித்துச் சிறைவைக்க முடியாத சுவை அது. அதை எமக்கு அளிப்பதற்காக…..
அதிகாலையிலே, அடுப்புப் புகை கண்களுட் புகுந்து எரிந்து வருத்தியதையும் பொருட்படுத்தாது தினமும் மனமுவந்து தன்பணி செய்து மகிழ்ந்தவர் ஆச்சி. தயிர்க்குழம்பு செய்யும்போது குவழை போன்ற கண்களுட் சென்ற புகையைப் பொருட்படுத்தாமற் சமையல் செய்த மனைவி, அக்குழம்பு  ‘ இனிதெனக் கணவன் உண்டபோது  ‘ மனநிறைவு பெற்றாள் என்று எமது சங்க இலக்கியங் கூறும்.  நாம் ஆச்சியின் கட்டுச்சாதத்தை மிக மகிழ்ந்துண்டோம் என என்றுமே நன்றி கூறியதாக நினைவில் இல்லை! கூறியிருந்தால், அப்பெற்றவள் நெஞ்சம் அன்று எத்துணை பூரித்திருக்கும் என்று வளர்ந்தபின் மௌனமாக மனம் வருந்திய நாள்கள் பல.
இவ்வேளையில்  ஒரு முக்கியமான தகவலையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது என நினைக்கின்றேன்.
இந்த 2020 ஆம் வருடத்தில் எனக்கு கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி எனக்கு  92 ஆவது பிறந்த தினம் வந்தவேளையில்  எதிர்பாராதவகையில்,  என்னைப்பார்த்து வாழ்த்துக் கூறுதற்கு  மெல்பனில் வதியும் நண்பர் முருகபூபதியும், சிட்னியில் வதியும் இளம் நண்பர் கானா. பிரபாவும் வந்தார்கள்.
அவ்வேளையில் இலங்கை கிளிநொச்சியிலிருந்து  எனக்கு முன் பின் தெரியாத ஒரு ஆசிரியை  முருகபூபதியூடாக தொடர்புகொண்டு, தனது பெயர்  யூடிற் அருள் சண்முகநாதன் என்று தன்னை  அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்.
சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர் நான் எழுதி, மறந்துபோயிருந்த இலக்கியப்பெண் என்ற கவிதையை நினைவூட்டினார். இக்கவிதையை அவர், எனது அம்பி கவிதைகள் நூலில் படித்திருக்கவேண்டும் என எண்ணுகிறேன்.
அக்கவிதையின் உள்ளார்ந்த அர்த்தம் பற்றி அந்த ஆசிரியை தொலைபேசி ஊடாக கேட்டதும் வியப்புற்றேன்.  இந்த எதிர்பாராத சம்பவமும்  வாசகருக்கு சொல்லாத கதையாகிவிடலாகாது என்பதற்காக சொல்கின்றேன்.
 “ உடலின்  அசைவு இயக்கத்தை ஒரு எக்ஸ்ரே கருவி எவ்வாறு படம் பிடித்து காண்பிக்கின்றதோ, அவ்வாறே  குறுந்தொகை, ஐங்குறு நூறு, புறநானூறு முதலானவற்றில் காண்பிக்கப்படும் பெண்களும் தாங்கள் உள்வாங்கும் காட்சிகளை வெளிப்படுத்தும்  உணர்வுகளை  அந்த இலக்கியப்பெண்ணூடாக  சித்திரித்திருந்தேன்.     
 இந்த இலக்கியப் பெண் கணவனுக்கு அறுசுவை உணவு தயாரித்து விருந்து படைக்கும்போது, அதில் பரிமாறப்படும் குழம்பின் சுவையறிந்து கணவன் கூறும் காதல்மொழிகளை அப்பெண் எவ்வாறு உள்வாங்கி சிலிர்த்துவிடுகிறாள் என்பதை குறுந்தொகை காட்சி விவரிக்கிறது.
இந்த இளம் கணவன் -  மனைவி குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்ததும், கணவனால் மனைவியும் குழந்தையும் அரவணைக்கப்படும்போது அந்தப்பெண் உணரும் இன்பத்தை ஐங்குறு நூறு சித்திரிக்கிறது.
தேசத்தை காக்கும் போரில் கணவன் மாண்டுவிட, தன் மைந்தனை அனுப்பி, அவனும் புறமுதுகிட்டு ஓடாமல் மார்பிலே வேல் தாங்கி உயிரை மாய்த்தபோது அந்த வீரத்தை உள்வாங்கி, தனது உணர்வை வெளிப்படுத்துவதை சித்திரிக்கிறது புறநானூறு.
ஒரு இலக்கியப்பெண்ணின் வாழ்வின் விழுமியங்களை கவிதையாக வடிப்பதற்காக இந்த முப்பெரும் காவியங்களை உள்ளடக்கி அரைநூற்றாண்டுக்கு முன்னரே எழுதிவிட்டேன்  “ என்று   அந்த ஆசிரியைக்கு விளக்கம் கூறினேன்.
சங்க இலக்கியங்களை இவ்வாறு போற்றி ஒரு பெண்ணின் – மனைவியின் – தாயின் இயல்புகளை பின்னாளில் எழுதியிருக்கும் யான், எனது ஆச்சியின் சமையல் பக்குவம் பற்றி அவவிடமே அன்று எடுத்துக்கூறமுடியாமல் போய்விட்டதே என்று இப்போது கவலையுறுகிறேன்.
அது மட்டுமல்ல,
தை, மாசி போன்ற பனிக்குளிர்க்காலத்திலும், கார்த்திகை, மார்கழி போன்ற கடும் மழைக்காலத்திலும் காலை ஏழுமணிக்கே தயாராகி ரயில் நிலையத்தை நோக்கிச் செல்வதற்குச் சில நாள்கள் எம்மால் முடிவதில்லை. தூரத்தே ரயில் சத்தம் கேட்டுவிட்டாற் பீதியும்  அடைவோம். அதனால், ஆச்சியின் சாதமும் தக்காளிக்குழம்பும் உள்ளடக்கிய கட்டுச்சாதத்தை விட்டு விட்டுச் செல்லவும் முயல்வதுண்டு. அவ்வேளைகளில் ஓட்டமும் நடையுமாக ஆச்சி பின்தொடர்ந்து பாதி வழிதூரம் வந்து கட்டுச்சாதத்தை தந்த நினைவுகளும் உண்டு. அந்த நினைவுகளை இன்று எழுதும் வேளையில்….
             ஊது குழற்சத்தம் கேட்டவதிப்பட்டு
                          ஓடி வருகையிலே
           பாதி வழிவந்து பாசத்துடன் தந்த
                      பச்சை அமுதம் அம்மா…
என்று அன்பர் பண்டிதர்  ‘ மாவை சச்சி  ‘தமது மனைவியின் கட்டுச்சாதம் பற்றி எழுதிய அருமையான பாடலடிகளும் மனசிற் கிணுகிணுக்கும்.
எமது உடல் நலத்தை பேணுவதற்கு எமதிளம் பருவத்தில் ஆச்சி செய்த இன்னொரு பணி, சனிக்கிழமைதோறும் தவறாமற் செய்த சனி நீராட்டுஞ் சடங்கு எனலாம். அதுதான் காலையிலே தலைக்கு நல்லெண்ணெய் வைத்துப் பின்பு நீராட்டும் வழக்கம். அரப்பு அல்லது அவித்து அரைத்த சீயக்காய் தேய்த்து நண்பகலளவில் நீராட்டிவிடுவார். ஈரம் உலர்த்தி, சாம்பிராணிப்புகை காட்டி, சுட்ட உள்ளியை உரித்து உண்ணத்தந்து, துவரம் பருப்பு ரசமும் பருகத்தருவார்.
உள்ளியின் மருத்துவ மகத்துவம் பற்றி அறிந்த பிற்காலத்தில், ஆச்சி அன்று செய்த சம்பிரதாயம் எமது எதிர்கால நல்வாழ்வில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார் என எண்ணி எண்ணி நன்றியுணர்வுடன் போற்றித் துதிக்கச்செய்கிறது.
( தொடரும் )




No comments: