கடவுளது பிரார்த்தனையை கருத்துடனே செய்திடுவோம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


           அறிவித்தல் வரும்வரைக்கும் 
           அணைத்துமுத்தம் தடுத்திடுவோம் 
           ஆரையுமே  தலைதொட்டு
           ஆசிகூறல் தவிர்த்திடுவோம் 
           கைகொடுத்து நிற்காமல்
           கைகூப்பி நின்றிடுவோம் 
           காலனான கொரனோவை
           காணுவதைத் தவிர்த்திடுவோம்  !

           கூழைக்  குடித்தாலும் 
           குளித்துவிட்டு குடியென்போம் 
           கந்தையே ஆனாலும்
           கசக்கியே கட்டுவென்போம்
           சுத்தமதை வாழ்வாக்கி
           வாழ்ந்துவரல் யாவருக்கும் 
           நித்தமுமே தேவையென
           மொத்தமுமே எண்ணுகிறார்  ! 

           வெளியிடத்தில் உண்ணுவதை 
            விரும்புவதை ஒதுக்கிடுவோம் 
            உளமகிழ நண்பருடன் 
            உலாபோதல் தவிர்த்திடுவோம் 
            வெறுமையென நினைத்தாலும்
            தனிமைதனை தேர்ந்தெடுப்போம்
            கொரனோவை விரட்டுவென
            முறையிடுவோம் இறையிடமே  ! 


            இனங்கடந்து மொழிகடந்து 
            இடர்கொடுத்து நிற்கிறது
            புலனெல்லாம் கொரனோவை
            நினைப்பதிலே செல்கிறது 
           மதமனைத்தும் மதமிழந்து
           மன்றாடி இறைவனிடம்
           கொரனோவை போக்குவென
           வரம்வேண்டி நிற்கிறது  !

             கைகழுவி கால்கழுவி 
             வீட்டுக்குள் நுழைந்திடுவோம் 
             களியாட்ட விழாவனைத்தும்
             கட்டாயம் நிறுத்திடுவோம் 
             கடுந்துயராம் கொரனோவை
             காணாமல் செய்கவென 
             கடவுளது பிரார்த்தனையை
             கருத்துடனே செய்திடுவோம்  ! 




No comments: