இனிய கானங்கள் 2020 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.


கடந்த February 22  ம் திகதி Recover இசைக் குழுவினரால் மீண்டும் இனிய கானங்கள் நிகழ்வு
Bowman Hall, Blacktown மண்டபத்தில் நடந்தேறியது. இருபதுக்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் பங்கேற்ற அற்புதமான நிகழ்ச்சி.
மங்கள விளக்கை Dr. பரன் தம்பதியினரும் Dr கௌரிபாலனும், சட்டத்தரணி சந்திரிகாவும் ஏற்றி மங்களகரமாக ஆரம்பித்து வைத்தனர். நிகழ்ச்சி குறிப்பிட்டபடி 6.30 மணிக்கு ஆரம்பமானது. மகிழ்விற்குரிய விடயம் என்னவென்றால் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளரும் இவர்கள் தமிழ் பாடல்களை அட்சர சுத்தமாகப பாடி மகிழ்வித்தனர். புலம் பெயர்ந்த நாடுகளிலே தமிழ் இனி மெல்லச் சாகும் என பலர் கூறுவது எமக்குத் தெரியும். அத்தகையோர் அன்று அங்கு வந்திருந்தால் தமது கருத்தை மாற்றி இருப்பார்கள்.
இக்குழு தாய் மொழி தமிழில் நிகழ்ச்சி நடாத்தியது மட்டுமல்லாது அதில் சேரும் பணத்தில் பாதியை தாயகத்தில் வாழும் அல்லல்படும் உறவுகட்கு அனுப்பியும் வைத்துள்ளார்கள்.
முருகர் தங்கம்மா நடராசா நினைவு முற்றம் என்ற பலநோக்கு இலவச சமூக சேவையாளர்களுக்கு $ 6280 ம் புற்று நோய் மையத்திற்கு $ 4,853 இவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவை கடந்த இரு வருட நிகழ்வில் பெற்ற பணத்தில் வழங்கபட்டது. இவ்வருடம் சிட்னி தமிழ் நூலகத்திற்கும், சொந்த பிரதேசத்திற்கும் வழங்க உள்ளார்கள். இந்த இளம் உள்ளங்களை போற்றாமல் இருக்க முடியுமா?
இத்தனைக்கும் முற்று முழுதாக உழைப்பவர்கள் பானு போல், கவிதா போல் சகோதரிகளே. இசையிலும் பாடலிலும் அபார திறமை படைத்தவர்கள். சேர்ந்து பாடியும் தனித்துப் பாடியும் மகிழ்வித்தனர். அன்று பாடிய இளம் கலைஞர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்களின் கூட்டு முயற்சியும் கடின உழைப்பும் போற்றவேண்டியதே.
இது தவிர பானு பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் அன்று நடந்த ஆடல்களையும் நெறியாள்கை செய்திருந்தார். ஆடல்கள் அருமையாக அமைந்திருந்தன. ஆடிய அத்தனை கலைஞர்களும் உணர்ந்து ஆடியிருந்தனர்.
பரதத்தை கற்றதுடன் நில்லாது மேலும் அந்தக் கலையில் ஈடுபட்டு வளர்க்கும் பானுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
வருடாவருடம் Recover இசை ஆடல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடாத்த வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

No comments: