சாதியக் கொடுமைகளும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களும் சினிமா படங்களில் அவ்வப்போது பிரதிபலிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பல இடங்களில் காதல் திருமணத்திற்கு எதிராக ஆணவக்கொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அப்படியான பிரச்சனைகளை பேசும் படங்கள் சர்ச்சையாகியும் வருகின்றன. அதில் ஒன்றாக திரௌபதி படம் வெளியாகியுள்ளது. திரௌபதி யார்? அவளின் பின்னணி என்ன? நோக்கம் என பார்க்கலாம்.
கதைக்களம்
படத்தின் நாயகன் ரிச்சர்டு ஊரில் சிலம்ப கலைஞர். அவர் தன் மாமன் மகளான திரௌபதியை மணமுடித்துக்கொள்கிறார். இவரின் சித்தப்பா கிராமத்தில் மரியாதைக்குரிய தலைவராக இருக்கிறார். இவருக்கும் ஒரு மகள்.
கிராமத்தில் அழகாக இவர்களின் வாழ்க்கை செல்கிறது. திரௌபதி கிராம மக்களின் நலத்திற்காக பல விசயங்களை செய்து வருகிறார்.
ஊரில் குளிர்பான கம்பெனிக்காக ஒரு கும்பல் பித்தலாட்டத்தில் ஈடுபடுகிறது. கிராம நலனை பாதிக்கும் இந்த விசயத்தை ஊரும் திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது.
இதற்கிடையில் கிராமத்தலைவரின் மகள் பதிவு திருமணம் செய்துகொண்டதாக செய்தி வர அவர் உயிர் விடுகிறார். மற்றொரு நாள் எதிர்பாராத விதமாக திரௌபதியையும் அவரின் தங்கையையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்படுகிறது.
சிறைக்கு சென்ற ரிச்சர்டு என்ன ஆனார், திரௌபதி ஆபத்திலிருந்து உயிர் தப்பினாரா, அவரின் தங்கைக்கு என்ன நேர்ந்தது என்பதை பேசுகிறாள் இந்த திரௌபதி.
படத்தை பற்றிய அலசல்
ரிச்சர்டு அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஷாலினியின் தம்பி அஜித்தின் மைத்துனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஏற்கனவே மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இப்படத்தின் மூலம் அவரின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. ஒரு கலைஞராகவும், மனைவியின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவராகவும் அவர் நடித்திருக்கிறார். சாதிக்க அவருக்கு இப்படம் ஒரு சரியான கதைக்களம்.
ஷீலா ராஜ்குமாரை அழகிய தமிழ் மகள் சீரியலில் நீங்கள் பார்த்திருக்கலாம். பின் டூ லெட், அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்திருந்தார். திரௌபதியாக இப்படத்தில் அவர் பேச்சு, செய்கை மூலம் சமூக விரோதிகளை விளாசி எடுக்கிறார். கேரக்டருக்கேற்ற நடிப்பு.
கருணாஸ் ஒரு பொது நல வழக்கறிஞராக சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும், திரௌபதியின் நியாயத்திற்காக போராடுவதும் என விடாமல் வசனம் பேசுகிறார். இந்த கதாபாத்திரம் அவரின் அரசியல் முயற்சிகளுக்கு கைகொடுக்கும்.
காதல் விசயத்தில் ஆணவக்கொலை என்னும் சமூக அவலத்தை தைரியமாக பேசியதற்கு இயக்குனர் மோகனுக்கு ஒரு வாழ்த்து. அதே வேளையில் படத்தில் சில விஷயங்கள் ஒட்டாதது போல் இருந்ததாக ஒரு உணர்வு எழுகிறது. இன்னும் பட ஆக்கத்தை முறைப்படுத்தியிருக்கலாம்.
மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு, தேவராஜின் எடிட், ஜுபின் இசை என எல்லாம் ஓகே. இன்னும் நல்ல படைப்பை எதிர்பார்க்கிறோம்.
கிளாப்ஸ்
போலி பதிவு திருமண முறைகேடுகளுக்கு துணை போபவர்கள் இனி மனம் மாறினால் மகிழ்ச்சி.
காதல் வலை விரித்து பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடும் கயவர்களுக்கு சாட்டையடி கொடுத்தது.
ரிச்சர்டு, ஷீலா, கருணாஸ் ஆகியோரின் ரியலான நடிப்பு.
பல்பஸ்
படத்தின் மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் திரௌபதி சாதியக்கொலைகளுக்கு எதிரான சமூக விழிப்புணர்வு.
No comments:
Post a Comment