உலகச் செய்திகள்


உலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்

உலகின் பல நாடுகளுக்கும் கொவிட்-19 வைரஸ் பரவல்

கொவிட்-19: மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

பாலியல் வழக்கில் ஹொலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி குற்றவாளி

மலேசிய பிரதமர் மஹதிர் இராஜினாமா

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் சான்டர்ஸ் முன்னேற்றம்



உலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்



சீனாவுக்கு வெளியில் வேகமாக பரவல்

புதிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் உலகளாவிய தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க அரசுகள் தயாராகி வருகின்றன. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் முதல் முறை சீனாவுக்கு வெளியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
அவுஸ்திரேலியா அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதோடு, இந்தத் தொற்றுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் அளவை தாய்லாந்து அதிகரித்துள்ளது. சர்வதேச சுகாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பாக நியமித்துள்ளார்.
கொவிட்–19 என உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உள்ள காட்டு விலங்கு சந்தை ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்த வைரஸ் மனிதர்களிடம் தொற்றியதாக நம்பப்படுகிறது.
உலகளாவிய தொற்றுநோய் என்ற அடிப்படையில் தமது நாடு இந்த வைரஸுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் 32 பேருக்கு புதிக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மருத்துவனைகளில் போதுமான மருத்துவ வசதிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோய் நிலையை விரைவில் ஏற்படுத்தும் என்ற சமிக்ஞைகளையே காட்டி வருகிறது” என்று கன்பர்ராவில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் மொரிசன் தெரிவித்தார்.
“இதற்கு ஏற்ப கொரோனா அவசரநிலை திட்டத்தை முன்னெடுக்க இன்று நாம் இணங்கியுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டு, எண்ணெய் விலை குறைந்துள்ளது.
3.6 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பை சந்தித்து உலக சந்தை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக சரிவை எதிர்கொண்டது.
கொரோனா வைரஸ் தற்போது 80,000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்றி இருப்பதோடு சுமார் 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சீனாவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து இன்றும் முழுமையான தெளிவு கிடைக்காதபோதும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா ஒரு மாதத்திற்கு மேலாக முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இந்த வைரஸ் மாறுபட்ட இடங்களுக்கு பரவியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரிய நாடுகளில் நிலைமை மோசமடைந்துள்ளது. அண்மைய தினங்களில் இது ஒரு உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுக்கும் ஆபத்து அதிகரித்திருக்கும் நிலையில் உசார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியில் 3,246 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 51 பேர் உயிரிழந்திருப்பதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டென்மார்க்கில் முதல் முறை வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இத்தாலியில் இருந்து வந்த ஒருவரிடமே வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. ஈரானில் இருந்து திரும்பிய ஒருவரிடம் இருந்து எஸ்தோனிய நாட்டிலும் முதல் முறை கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசிலில் வைரஸ் தொற்று சம்பவம் கடந்த புதன்கிழமை உறுதியானது. பாகிஸ்தான், ருமேனியா மற்றும் அல்ஜீரியா உட்பட மேலும் பல நாடுகளிலும் முதல் முறை புதிய கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நேற்று புதிதாக வைரஸ் தொற்றிய 433 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய தினத்தில் 406 வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் சீனாவில், இதுவரை இல்லாத வகையில் கொவிட்–19 வைரஸ் தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
அண்மை நிலவரப்படி வைரஸ் தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து சீன பெருநிலத்தில் மாண்டோர் எண்ணிக்கை மொத்தம் 2,744 உயர்ந்துள்ளது.
தென் கொரியாவில் புதிதாக 334 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு வெளியில் அதிகப்படியாக தென் கொரியாவில் மொத்தம் 1,595 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தென் கொரியாவுக்கான புதிய பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தென் கொரிய நகரான டெகுவுக்கு அருகில் நிலைகொண்டிருந்த 23 வயது வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய இராணுவ வீரர்கள் பலருக்கு வைரஸ் தொற்றி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே அடுத்த அறிவித்தல் வரை அமெரிக்க மற்றும் தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பயணத் தடைகள், பயணங்கள் ரத்து செய்யப்படுவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வைரஸ் சர்வதேச விமானப் போக்குவரத்துகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோல் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு இடையிலான விமானப் பயணத்தில் பணியாற்றும் விமான ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கொரோனா வைரஸ் பரவல் உலக அளவில் துரிதமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு வெளியே உலகளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் முதன் முறையாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கொவிட்–19 வைரஸ் பரவியுள்ளது. அதை முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் நிலைமையைச் சமாளிக்க ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தினார்.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று 25 வீதம் உயிர்ந்துள்ளது. இதுவரை இத்தாலியில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொழில் வளம் அதிகம் உள்ள இத்தாலியின் வடக்கு பகுதிகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மிலான் மற்றும் வெனிஸ் அருகே உள்ளே வெனிட்டா ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.
இதனை ஒட்டி பல ஐரோப்பிய நாடுகளிலும் புதிதாக வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மத்திய கிழக்கில் வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் ஈரான் நாட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்து 141 பேருக்கு தொற்று பதியாவிகியுள்ளது. எனினும் நகரங்களை தனிமைப்படுத்தும் எந்தத் திட்டமும் இல்லை என்று ஈரான் அரசு புதன்கிழமை குறிப்பிட்டிருந்தது.
வைரஸ் பாதிப்பின் மையமாக இருக்கும் குவாம் நகருக்கு செல்ல வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டபோதும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான ஷியா முஸ்லிம்கள் வருகை தரும் அந்த நகரில் உள்ள மதத்தலம் மூடப்படவில்லை.
இதேவேளை ஜப்பானின் ஒசாக்கா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் அவ்வாறு பாதிக்கப்பட்ட முதல் நபர் அவராவர்.
கடந்த மாதம் கடைசியில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சையில் குணமாகி இம்மாதம் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்தப் பெண் தொண்டை அழற்சி, நெஞ்சு வலி ஆகியவற்றால் சிரமப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
ஜப்பானில் இதுவரை 186 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் அச்சம் காரணமாக ஜப்பானில் தேசிய அளவில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“எல்லாவற்றையும் விட சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பையே அரசு கருத்தில்கொள்கிறது” என்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.
நன்றி தினகரன் 







உலகின் பல நாடுகளுக்கும் கொவிட்-19 வைரஸ் பரவல்



ஈரான், இத்தாலி, தென் கொரியாவில் தீவிரம்
புதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்னும் உலகம் தயாராக வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் தென் கொரியாவில் வைரஸ் தொற்றிய சம்பவங்கள் 1,000 ஐ தாண்டி இருப்பதோடு ஈரானில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் பல நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக இருக்கும் சீனாவில் அதன் பாதிப்பு குறைந்து வருகின்றபோதும் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இந்த வைரஸ் வேகமாக பர ஆரம்பித்துள்ளது.
வைரஸை தடுக்கும் வகையில் பல நாடுகளிலும் நகரங்கள், சிறு நகரங்கள் வெளித் தொடர்பு இன்றி மூடப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் பதிவானதை அடுத்து கனேரிய தீவுகள் மற்றும் ஆஸ்திரியாவில் ஹோட்டல்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஈரானில் சுமார் 100 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றியிருக்கும் நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் சுகாதார பிரதி அமைச்சர் இராஜ் ஹரிரிச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உண்மையில் இன்னும் அதிகம் என்றும், ஈரான் வைரஸ் தொற்று நிலவரத்தை மூடிமறைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதுபற்றி திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஹரிரிச்சி இந்தக் குச்சாட்டை மறுத்தார். எனினும் அந்த மாநாட்டில் தொன்றிய அவரது உடல் நிலை மோசமாக இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டியது நேரடி ஒளிபரப்பில் தெரிந்தது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பின் சீனாவுக்கான நிபுணரான ப்ரூஸ் அயில்வால்ட் பாராட்டி பேசினார்.
உலக சுகாதார அமைப்பின் தலைமையகமான ஜெனிவாவில் பேசிய அவர், ஏனைய நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு “தயார் நிலையில் இல்லை’ என்றார்.
“பெரிய அளவில் கையாள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அதனை விரைவாகச் செய்ய வேண்டும்” என்று அவர் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
இந்த வைரஸினால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்திருப்பதோடு 78,000க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. எனினும் கடந்த புதன்கிழமை 52 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த மூன்று வாரங்களில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பாக இது இருந்ததோடு வைரஸின் மையப் பகுதியாக இருக்கும் ஹுபெய் மாகாணத்திற்கு வெளியில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையும் 406 ஆக குறைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதற்கான நம்பிக்கைக்குரிய சம்பிக்ஞையாக இது உள்ளது.
சீனாவுக்கு வெளியில் 40 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதோடு 2,700 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நோய்த் தொற்று தற்போது பல டஜன் நாடுகளுக்கு பரவியுள்ளது. குறிப்பாக இத்தாலியில் வைரஸ் தொற்று தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் அதனை ஒட்டி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் முதல் முறை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்தாலியுடன் தொடர்புடையவர்களால் முதல் முறை புதிய கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவானதாக குரோஷியா, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் அறிவித்திருப்பதோடு ஆபிரிக்காவில் அல்ஜீரிய நாட்டிலும் முதல் முறை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து வந்த ஒருவரிடம் இருந்து லத்தீன் அமெரிக்காவில் முதல் முறையாக பிரேசிலில் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
அண்மைய நாட்களில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறி இருக்கும் இத்தாலியில் 300க்கும் அதிகமாவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் அண்டை நாடுகள் இத்தாலிக்கான எல்லையை மூடாமல் இருக்க தீர்மானித்தன.
ஐரோப்பா எங்கும் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளபோதும் எல்லைகளை திறந்தே வைப்பதற்கு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி சுகாதார அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை கூடியபோது தீர்மானித்தனர்.
எனினும் இத்தாலியின் லோம்பர்டி பிராந்தியத்தில் 10 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சிசிலி தீவில் ஒரு பெண், குரோஷியாவில் ஒரு ஆண், ஆஸ்திரியாவில் தம்பதியர் இருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் லோம்பர்டியிலிருந்து வந்தவர்களென தெரியவந்துள்ளது.
அதேபோன்று லோம்பர்டியின் எல்லையை ஒட்டியுள்ள ஸ்விட்சர்லாந்திலும் 70 வயது முதியவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் கேனேரி தீவில் மருத்துவர் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டு, அதிலுள்ள 1000 பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இத்தாலிக்கு சென்று திரும்பி வந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கொவிட்–19 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி பதிவானது. பயணக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதோடு பல முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
“உலகளாவிய தொற்று நோய் ஆபத்து ஒன்றுக்கு தயாராகும்படி” உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா சுகாதார நிறுவனம் உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளன. இதில் வறிய நாடுகளில் ஆபத்து அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தென் கொரியாவில் நேற்று புதிதாக 169 கொவிட்–19 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் அந்நாட்டில் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக உயர்ந்துள்ளது. இது சீனாவுக்கு அடுத்து அதிக வைரஸ் தொற்று சம்பவங்களாகும் இந்த வைரஸினால் தென் கொரியாவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் தென் கொரியாவின் நான்காவது பெரிய நகரான டெகு நகரிலேயே இந்த வைரஸ் தொற்றில் 90 வீதமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்து அண்டை மாகாணமான வடக்கு கியோசன் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
2.5 மில்லியன் மக்கள் வசிக்கும் டெகு நகர வீதிகள் கடந்த ஒரு சில தினங்களாக வெறிச்சோடி காணப்படுகின்றன. எனினும் முகக் கவசம் விற்கும் கடைகளுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
மக்கள் கூடுதல் அவதான செலுத்த தென் கொரிய நிர்வாகம் கோரி இருப்பதோடு காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 23 வயது சிப்பாய் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து நான்ஜிங்கை அடைந்த விமானம் ஒன்றில் இருந்த மூன்று சீன நாட்டவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் அந்த விமானத்தில் இருந்த 94 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் இந்த வைரஸின் மையப் புள்ளியாக ஈரான் மாறியுள்ளது. கொவிட்–19 வைரஸ் நோயினால் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானில் மேலும் மூவர் உயிரிழந்தனர்.
இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கடந்த வாரம் தொடக்கம் ஈரான் கடுமையாக போராடி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க பல வளைகுடா நாடுகளும் ஈரானுடனான தொடர்புகளை துண்டிக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
பாகிஸ்தான், ஈரானுடனான ஒரே ஓர் எல்லையைத் தவிர மற்ற அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.
நன்றி தினகரன் 











கொவிட்-19: மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்



உலகெங்கும் உயிரிழப்புகள் அதிகரிப்பு
உலகெங்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் 80,000ஐ தாண்டியிருக்கும் நிலையில் அதனால் மோசமாக பாதிப்புற்றிருக்கும் நாடுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
தென் கொரியாவில் தொற்று எண்ணிக்கை மேலும்் அதிகரித்து 977 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டுக்கு அவசியத் தேவையின்றி பயணம் மேற்கொள்வதற்கு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளும் அதனை கட்டுப்படுத்துவதற்கு போராடி வருகின்றன. வைரஸ் தொற்று அச்சத்தால் ஜப்பான் பங்குச் சந்தை நேற்று பெரும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் லண்டன் வர்த்தகமும் வீழ்ச்சி கண்டுள்ளன.
அமெரிக்காவின் டோவ் குறியீடு ஈராண்டு காணாத அளவு சரிந்துள்ளது. இழப்பு நேருமோ என்ற அச்சத்தால் பலர் பங்குகளை விற்கும் வேளையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது.
ஓர் அவுன்ஸ் தங்கம் விலை சுமார் 1,689 டொலருக்கு உயர்ந்துள்ளது. நிலையற்ற பொருளாதார சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாகத் தங்கத்தை வாங்குகின்றனர். இந்நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள வர்த்தக முடக்கம், மற்ற நாடுகளிலும் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறும் ஆபத்து இருக்கும் நிலையில் உலகம் அதற்கு மேலும் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த திங்கட்கிழமை அறிவுறுத்தியது. பல நாடுகளிலும் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இலகுவாக தொற்றும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
என்றாலும் உலகளாவிய தொற்று நோயாக இதனை இப்போதைக்கு அடையாளப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியது.
கொவிட்–19 என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் சுவாசத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இந்த வைரஸினால் அதிகம் பாதிப்புற்ற நாடாக சீனா தொடர்ந்து நீடிக்கிறது. இந்த வைரஸ் தொற்றியவர்களில் 1 தொடக்கம் 2 வீதமானவர்களே உயிரிழப்பாக கூறப்படுகின்றபோதும் இதன் இறப்பு வீதம் இன்னும் அறியப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
காட்டு விலங்குகளின் நுகர்வை தடை செய்திருக்கும் சீனா அவ்வாறான விலங்களை வேட்டையாடுவது, எடுத்துச்செல்வது மற்றும் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹுபெய் மாகாணத் தலைநகர் வூஹானில் இருக்கும் காட்டு விலக்குகளை விற்கின்ற சந்தை ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கையாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய மக்கள் கொங்கிரஸ் ஆண்டு மாநாட்டையும் சீனா ஒத்திவைத்துள்ளது. சீனாவின் ஆளும் கம்யூனிச கட்சியின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் இந்த அமைப்பு 1978 தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் கூடி வந்தது.
சீனாவில் கடந்த திங்கட்கிழமை புதிதாக 508 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறுக்கிழமை 409 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகி இருந்தது. வூஹான் நகரிலேயே அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சீனாவில் மேலும் 71 பேர் உயிரிழந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. 77,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்நாட்டில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
எந்த பக்க விளைவுகளும் இல்லாத நான்கு மருந்துகளுடன் வாய் வழியான மருந்தை மேம்படுத்துவதில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக சீனா அரசினால் நடத்தப்படும் கிளோபல் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
எனினும் மருத்துவ ரீதியான சோதனைகள் முன்னெடுக்கும் வரை மருந்துகளின் பாதுகாப்பு பற்றி உறுதி செய்ய முடியாதிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறான மருந்து ஒன்று புழக்கத்திற்கு வர பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹொங்கொங்கில் பாடசாலை விடுமுறை ஏப்ரல் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸினால் தென் கொரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு கிறிஸ்தவ மதப் பிரிவினருக்கே வைரஸ் தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கால் மில்லியன் மக்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லை என்ற விபரத்தை சுகாதார நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் டெகு நகருக்கு ஜனாதிபதி மூன் ஜே இன் விஜயம் மேற்கொண்டுள்ளார். வைரஸை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் குறித்த பிராந்தியத்திற்கு அதிக வசதிகளை வழங்குவதற்கும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். எனினும் முகக் கவசங்களை கெட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜப்பானிய அரசாங்கம், புதிய கொரோனா வைரஸை கையாள உதவும் புதிய கொள்கைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க தனிநபர்களும் வர்த்தகங்களும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
ஜப்பானில் 850 க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு, இவர்களில் பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட டயமன்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த கப்பல் பயணிகளில் நான்காவது ஒருவர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவில் அதிக வைரஸ் தொற்று பதிவான நாடாக இத்தாலி மாறியுள்ளது. அங்கு 231 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
லொம்பார்ட் மற்றும் வெனெடோ பிராந்தியங்கள் முடக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு 50,000 குடியிருப்பாளர்கள் சிறப்பு அனுமதி இன்றி வெளியேறுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக்கின் அடுத்த வாரத்தின் முக்கிய சில போட்டிகள் மூடிய அறையில் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இந்த வைரஸினால் இத்தாலியில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மறுபுறம் புதிய கொரோனா வைரஸினால் ஈரானில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தலைநகர் டெஹ்ரானின் சுரங்க ரயில் சேவைகள் நாளாந்தம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தனிமைப்படுத்தல்கள், மருந்து ஆராய்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதியுதவி அளிப்பது என 2.5 பில்லியன் டொலர்களை செலவிடுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் 53 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி தினகரன் 










பாலியல் வழக்கில் ஹொலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி குற்றவாளி



பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹொலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டைன் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பு பெண் உதவியாளரை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும், 2013இல் நடிகை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனையாக அவருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கு விசாரணை ஐந்து நாட்கள் நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஹார்வி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
‘மீ டூ’ புகார் முறையில் ஹார்வி வைன்ஸ்டைன் மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுகள் திரைத் துறையைச் சேர்ந்த சில பெண்களால் கடந்த 2017இல்் முன்வைக்கப்பட்டன. ஹார்வி வைன்ஸ்டைன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்குகளை தொடுத்த பெண்கள் தவிர்த்து மேலும் சிலரும் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன் 









மலேசிய பிரதமர் மஹதிர் இராஜினாமா



மலேசியாவில் புதிய அரசு ஒன்றை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் அந்நாட்டு பிரதமர் மஹதிர் மொஹமட் தனது இராஜினாமா அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
மஹதிர் வெளியிட்டிருக்கும் இரு வரி அறிவித்தலில், தனது இராஜினாமாவை நாட்டு மன்னருக்கு அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் பகதான் ஹரபான் கூட்டணியில் இருந்து மஹதிரின் ப்ரிபுனி பெர்சாது கட்சி விலகி இருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த பிரதமராக வாக்குறுதி அளிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமை நீக்கிவிட்டு புதிய அரசொன்றை அமைப்பதற்கு மஹதிரின் கட்சி திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் கூட்டணி அரசுக்குள் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஊகிக்க முடியாத சூழல் நீடித்து வருகிறது.
ஒருவேளை நடப்பு அரசியல் குழப்பங்களை மனதிற்கொண்டு மலேசிய மாமன்னர் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட காலம் எதிரிகளாக இருந்து நண்பர்களான மலேசியாவின் முக்கிய அரசியல் தலைவர்களான 94 வயது மஹதிருக்கும் 72 வயது அன்வருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அன்வர் மற்றும் மஹதிர் கூட்டணி மலேசியாவில் ஆறு தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த பரிசான் தேசிய கூட்டணியை தோற்கடித்து ஆட்சியை பிடித்தது.
எனினும் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு பிரதமர் பதவியை தமக்கு வழங்குவதற்கான காலம் குறித்து இந்த இரு தலைவர்களுக்கும் இடையே அண்மைக்காலத்தில் முறுகல் வெடித்தது.
இதனால் இந்தக் கூட்டணியின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டு அண்மையில் நடைபெற்ற ஐந்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது.
மலேசிய அரசியலில் செல்வாக்கு மிக்கவரான மஹதிர் இதற்கு முன்னர் 1981 தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்துள்ளார். ஆரம்பத்தில் மஹதிருக்கு இரண்டாமவராக இருந்த அன்வர் இப்ராஹிமுடன் பொருளாதார பிரச்சினையை கையாள்வது தொடர்பில் ஏற்பட்ட முறுகலால் 1998 ஆம் ஆண்டு அவர் பதவி நீக்கப்பட்டார்.
பின்னர் ஒருபாலுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அன்வர் இப்ராஹிம் சிறை வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன் 











அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் சான்டர்ஸ் முன்னேற்றம்



வரும் நம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிர்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அந்தஸ்தை பெறுவதில் பெர்னி சான்டர்ஸ் வலுவான முன்னிலையை பெற்றுள்ளார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் நவாடா உட்கட்சி வாக்கெடுப்பில் சான்டர்ஸ் பெரும் வெற்றி பெற்றிருப்பது ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன. எனினும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் அதற்கு தொடர்ந்து நீண்ட போட்டி இடம்பெற்று வருகிறது.
முன்னதாக நடைபெற்ற இரு மாநில வாக்கெடுப்புகளில் முன்தங்கி இருந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன.
நவாடாவில் 50 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் இடதுசாரி வெர்மொன்ட் செனட்டரான 78 வயது சான்டர்ஸ் 48 வீதமான வாக்குகளை வென்றுள்ளார். அதற்கு அடுத்து பைடன் 19 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.
இதில் 15 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்ற வேட்பாளர்களுக்கே பிரதிநிதிகள் வழங்கப்படுவதோடு, இந்தப் பிரதிநிதிகளே வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை வாக்கெடுப்பிற்கு முன்னர் சான்டர்ஸ் 21 பிரதிநிதிகளை வென்றிருந்தபோதும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அந்தஸ்தை பெறுவதற்கு தேவையான 1,990 பிரதிநிதிகளை கைப்பற்றுவதற்கு அவர் மேலும் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நவாடாவில் பெறும் வெற்றி இந்த எண்ணிக்கையில் சிறிய அளவு முன்னேற்றம் காண்பதாக அமையும்.
இந்நிலையில் டெக்சாஸில் சனிக்கிழமை வெற்றி உரை நிகழ்த்திய சான்டர்ஸ், தனது பன்முக தலைமுறை, இனக் கூட்டணி தமக்கு ஆதரவு அளித்ததாக தெரிவித்ததோடு “எப்போதும் பொய்களை கூறிவரும் ஜனாதிபதி டிரம்ப் பற்றி அமெரிக்க மக்கள் களைப்பு மற்றும் வெறுப்படைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தெற்கு கரோலினா மாநில உட்கட்சி வாக்கெடுப்பு அனைவரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னரான நான்கு மாநில வாக்கெடுப்புகளில் மிகப் பெரியதாக இது உள்ளது.
அதேபோன்று ஆபிரிக்க – அமெரிக்க வாக்காளர்கள் அதிகம் உள்ள மாநிலமாகவும் இது உள்ளது.
நன்றி தினகரன் 




No comments: