கோயிலுங்
குளமும்
எமது படலைக் கொட்டிலில் இருந்து பார்க்கும்போது வயல்வெளியிடையே
கம்பீரமாக எழுந்து நின்றது எங்கள் கோயில் – சித்திரவேலாயுதர் கோயில். எம்மூரில் வேறு
சில கோயில்களும் இருந்தன. ஆயினும் வீட்டிற்கு அருகே இருந்தபடியால் சித்திரவேலாயுதர் கோயிலை, “ எங்கள் கோயில் “ என்று உரிமை பாராட்டி வந்தோம்.
அன்றாட
வாழ்க்கையிற் பெரும் பங்கு வகித்து எனது அறிவு வளர்ச்சியிலும் மனப்பாங்கு விருத்தியிலும்
விரும்பத்தக்க மாற்றத்தை இளமைமுதல் ஏற்படுத்திய கோயில் அது.
கோயிலின்
வீதியிலே, குழு குழுவென்று செழித்து வளர்ந்து, பொன் பூச்செரிந்து நின்றது ஒரு தன்னந்தனியான
கொன்றை மரம். அதன் அழகுக்கோலம் இன்றும் அகக் காட்சியில் பசுமை தருகிறது. அது தன் கிளைகளிலே
கட்டித் தொங்கவிட்டுப் புதுப்பொலிவு தருகிறது. அது தன் கிளைகளிலே கட்டித் தொங்கவிட்டுப்
புதுப்பொலிவு தந்த பொற்றோரணம் அக்கொன்றையின் நினைவை மீட்டு வருகிறது.
கோயிலின்
மேற்குப் புறத்தில், ஒரு குளம், தாமரைக்குளம். அக்குளத்திலே மலர்ந்து நின்று ஆடல் பயிலும்
செங்கமலமும் வெண்கமலமும், திருமகளும் கலைமகளும்
ஊரை அழகுசெய்து ஆசிபுரிதல் போன்று அமைந்த அகங்கொள் காட்சி. அக்காட்சியாற் கவரப்பட்டவர்
நம்மூர்க் கவிஞர் நாவற்குழியூர் நடராசன்.
‘ ஆருக்கும்
எட்டாத வாவியில் – நீர்
ஆடிக் குதிக்கிறாள்
தாமரை ‘
என்று
பாடல் அடிகளைத் துவங்கி, அவள் நடனத்தைத் தமிழ் செய்து ரசித்த பின்னர், அவளை விளித்து,
‘ ஏனடி இத்தனை
நாட்டியம் – இதில்
எத்தனை பேரை
நீ வாட்டுறாய்..? ‘
என்று
கேட்டு முடிக்கிறார். ஆம், தாமரையாள் நாட்டியமாடிக் குதித்து நின்று வாட்டிய ஊர் வாசிகளுள் நானும் ஒருவன்.
இளமைப்பருவத்திலே,
அந்தக்கோயிலும் குளமும் தந்த இனிமையான அனுபவங்கள் பல. குளத்திலே நீராடுவதும் கோயிலுக்குச்சென்று
வழிபாடு செய்வதும் வழக்கமாகியது.
வீட்டுக்கிணற்றில்
வாளியால் நீர் அள்ளிக் குளிப்பதைவிட, குளத்திலே குளிப்பதையே அன்று பெரிதும் விரும்பினேன்.
குளத்து நீரிலே துள்ளிக்குதித்து விளையாடலாம். நீந்தி விளையாடலாம். இளைஞர் நாம் நீர்
எற்றி விளையாடலாம். ஆதலால் , அக்குளம் நல்லதோர் இயற்கை வளமாக அமைந்தது. ஆக, பள்ளிவிடுமுறை
நாட்களில் பல மணிநேரம் குளக்கரையிலும் குளத்திலும் செலவாகும்.
குளத்திலே
நீராடும் வேளையில், நீந்திச் சென்று தாமரை இலை எடுத்தல், தாமரைப் பூ எடுத்தல், தாமரைக்காய்
பறித்து உண்ணல் ஆகியவை சுவையான அனுபவங்கள். தாமரைக்கொடிகள் செறிந்த இடங்களிலே, கொடிகள்
வெட்டி, எரிவுதரும் காயங்கள் பெற்ற அனுபவங்களும்
பல.
மாரிகாலத்தில்,
குளம் நீர் முட்டிவழியும். அப்பொழுது நான் நீந்துகின்ற துணிவுபெறுவது குறைவு. துணிவு
பெறுதற்கு எனக்கு உதவுவன ஒல்லித்தேங்காய்கள்!
இரண்டு
அல்லது நான்கு ஒல்லித் தேங்காய்களை இணைத்து அவற்றின் உதவியுடன் முட்டிய குளத்தில் நீந்தியதே
ஒரு தனி அனுபவம். அதே முறையில் நீச்சற் போட்டிகள்
அமைத்து விளையாடிய நினைவுகளும் அவ்வொல்லித் தேங்காய்கள் போல இன்றும் நினைவில் நீந்தி
மிதக்கின்றன.
எமது
குளத்தடிக்காட்சிகளுள் அன்று என்னை மிகவும் கவர்ந்தது என் மாமா “ காய் கட்டி கந்தையர் “ சனி நீராடும் சம்பிரதாயம். காலை பதினொரு மணியளவில் அவர் குளத்தடிக்கு வருவார். வேட்டியைத் தோய்த்துப்பிழிந்து வெய்யிலில் உலரவிடுவார். தாம்
கொணர்ந்த நல்லெண்ணையை தலைமுதல் உடல் முழுதும் தடவுவார்.
வாயிலும்
எண்ணெய் விட்டு பல நிமிடநேரம் அலசுவார். ஏன் என்று கேட்டால், “ உடம்பு குளிர்மை பெறும் “ என்பார்.
“இங்கே பார், இன்னும் அசையவில்லை. “ என்று மிகப்பெருமையுடன்
பல்லை எல்லாம் காட்டி பெருமிதம் அடைவார். அயலில் உள்ள கள்ளுக்கொட்டிற் பக்கம் போய்
வந்ததை மட்டும் சொல்ல மாட்டார்.
எனினும்
அரைப்புத் தேய்த்து சனிநீராடி, தோய்த்துலர்ந்த வேட்டி உடுத்து வீடு செல்லும் அவர் பற்றிய
நினைவு, இன்றும் தூர்ந்துவிடவில்லை.
குளத்தைச்சுற்றிவர
குளக்கட்டிலே ஓங்கி வளர்ந்து நின்று அலங்கரித்தன சாயல் அலரிகள். அவை தாங்கி நின்ற செம்மலர்க்கொத்துகள்
பொற் குஞ்சம் அணிந்து பொன் பூச்சொறிந்த அந்த
கொன்றை மரத்துடன் போட்டியிடுவது போல வீசும் காற்றிலே, ஆடி அசைந்து சாகசம் புரிந்தன.
அந்த
அழகுக்கோலங்களை சுவைத்தவாறு குளக்கட்டிலே நடந்து செல்கையில் குளத்திலிருந்து வெளியே
வந்து கரையில் வெயில் காய்ந்த முதலைகளின் அசைவைக்கண்டு துள்ளிப்பாய்ந்தோடிய நாள்களையும்
அனுபவங்களையும் நான் மறந்துவிடவியலாது.
இனி
எமது கோயில் அனுபவங்கள் : வளரிளம் பருவத்திலே
சமய சன்மார்க்க அறிவு வளரவும் சாதகமான மனப்பாங்கு விருத்தி பெறவும் அவை எத்துணை பங்கு
புரிந்தன. அன்றாடம் சமய அனுபவம் பெற எத்தனை வாய்ப்புகள் அளித்தன. அவை பற்றிக் கூறினால்தான்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று ஏன் கூறிவைத்தனர் ஆன்றோர் என்பது புலனாகும்.
நித்திய
பூசைகளும் விசேட கால விழாக்களும் கிரமமாக நடைபெற்ற கோயில் எமது சித்திர வேலவன் கோயில்.
வீட்டுக்கு மிக அண்மையில் அக்கோயில் இருந்த காரணத்தால் பூசைகளிலும் விழாக்களிலும் இளம்
பருவம் முதலாக கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது. என் கல்விப்பருவம் முழுமையாகக்
கிறிஸ்தவ பாடசாலையிலேதான் கழிந்தது. ஆதனால் சைவநெறி பற்றியோ, சமய அறிவு அனுட்டானங்கள்
பற்றியோ பாடசாலையில் அறியும் வாய்ப்பு எனக்கு இருக்கவில்லை. அந்தக் குறையை நிறைவுசெய்து
சமயப்பின்னணியை அமைத்துத் தந்தது எங்கள் கோயில்தான்.
மகா
சிவராத்திரி மகிமை பற்றிக் கோயில் அனுபவம் மூலமே நான் அறிந்துகொண்டேன். நவராத்திரி,
சக்தி வழிபாடு, விஜயதசமி ஆகியன பற்றியும் கோயிலில் நடைபெற்ற விழாக்கள் மூலமே தெளிவுபெற்றேன்.
கந்தப்புராணம், திருவாதவுரடிகள் புராணம், திருவெம்பாவை – இவை பற்றிய முழு அறிவையும்
எமது கோயில் வைபவங்களின் மூலம்தான் நான் அறிந்தேன். அதற்கெல்லாம் காலாக அமைந்தவர் என்
பாட்டி – பெத்தாச்சி.
கந்தசஷ்டி
காலம் விசேட விரதகாலம். எம்மவர் பலர் உபவாசம் அனுஷ்டித்து விரதம் மேற்கொள்ளும் காலம்.
எமது கோயிலில் மூன்றுகாலப் பூசையும், பிற்பகலில்
கந்தபுராணப் படிப்பும், இரவு திருவிழாவும் தினமும் நிகழும். என் பெத்தாச்சி
விரதம் அனுஷ்டித்து, பிற்பகலிற் புராணப்படிப்புக் கேட்கவும் செல்வார். தன்னுடன் என்னையும்
கூட்டிச்செல்வார். அவருடன் சென்று புராணக்கதைகளைக் கிரமமாக கேட்பேன்.
சூரன்
கதையும் அவன் கர்வமும் கொடுமைகளும் இளம் உள்ளங்களைக் கவரும் மர்மக் கதைகள் போலச் சுவையானவை.
தன் கர்வத்துக்காக அவன் தாரகாசுரன், சிங்காசுரன் ஆகியோரைப் பலிகொடுத்ததும், முருகனின்
தாக்குதலை முறியடிப்பதற்கு அவன் செய்த மாயங்களும், இறுதியில் மாமர உருவத்திற் காட்சி
அளித்ததும், மாமரத்தை முருகனின் வேல் பிளந்தவுடன் சூரன், சேவலும் மயிலுமாகிய மர்மமும் எமது கோயில் மண்டபத்தில்
அமர்ந்திருந்து கேட்டுச் சுவைத்து அறிந்த கதைகள்!
இன்னொரு
சுவையான அனுபவம் பெற்ற காலம், திருவெம்பாவைக் காலமாகும். அதிகாலை நாலுமணியளவிற் கோயில்
மணி ஒலிக்கும். அப்பொழுதே நித்திரைவிட்டு எழுந்து பெத்தாச்சியைத் தொடர்வேன். மார்கழி
மாத நிறைகுளத்துக் குளிர் நீரிலே நிராடி, உடல் நடுநடுங்க,, பற்கள் படபடவென அடிக்க,
கோயிலில் உதய பூசையிற் கலந்துகொள்வேன். மிகவும் புனிதமான அனுபவம் அது!
பூசை
முடிந்ததும், ‘புராணப் படிப்பு ‘ நடைபெறும்.
திருவாதவூரடிகள் புராணப்படிப்பும் பயன் சொல்லும் பாங்கும் தனி இனிமை தந்தவை. செம்மனச்செல்வியின்
கதையும், சிவனார் பிட்டுக்கு மண்சுமந்து ஆடிப்பாடிப் பிரம்படி பெற்ற வரலாறும் திருவெம்பாவைக் காலத்திலே அதிகாலையிற் கேட்டுச் சுவைத்த கதைகள். “ கட்டிய
செஞ்சடையாய் உன் கண் அருள்கொண்டு எப்பொழுதும் பிட்டிணை விற்று உண்போர்க்கும் பேரிடும்பை
உளதாமோ..?” என்று செம்மனச்செல்வி மனமுருகக்
கேட்டதும், அதற்கு அருளும் வகையில் சிவபிரான் மண்சுமந்த கதையும் அன்று கோயிலிற் சுவைத்த
சர்க்கரைப்பிட்டுப்போல இன்றும் இனிக்கின்றன. சிறுவயசில் ‘ சிறுவர் கதை நேரக் கதைகள் ‘ போலக்
கேட்டுச் சுவைத்த கதைகள் அவை!
கோயில்
தந்த இன்னொரு அனுபவம் பற்றி இங்கு குறிப்பிடத் தவறின், கோயில் தந்த அனுபவம் பூரணமெய்தாது.
அதற்குக் காரணகர்த்தா கோயில் ‘ ஓதுவார் ‘என அழைக்கப்பட்ட பெரியார் தம்பியையா.
கோயில்களிலே
தேவாரம் திருவாசகம் முதலிய திருமுறைப்பாடல்களை முறையாக பாடும் பொறுப்பு ‘ஓதுவார்
‘ உடையது. அக்காலத்திலே எமது கோயில் ஓதுவாரகப் பணிபுரிந்தவர், ‘ ஓதுவார்
‘ தம்பியையா. எனது இளம் பருவத்தில் அவர் அமைத்து வளர்த்த சிவநாமப் பாடற்குழுவில்
நானும் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அந்த அனுபவம் இன்றுவரை பயனுள்ளதாக அமைகிறது.
அக்கறையுள்ள
இளைஞர்களை ஒன்றுகூட்டி, வாரந்தோறும் தேவாரம் பாடப் பழக்கி, தாளம் போட்டுச் சிவநாமப்
பாடல்களைப் பாடுதற்கு அவர் பயிற்சி அளித்தார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை வேளையில்,
எமது கோயிலிலே அப்பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் பின் பொங்கல், வடை, சுண்டல் போன்ற
சிற்றுண்டிகளும் வழங்குவார்கள். சிவநாமப் பாடற்
பயிற்சிக்குத் தவறாது செல்வதற்கு அச்சிற்றுண்டிகளும் தூண்டுகோளாக அமைந்தன.
சுருக்கமாக,
சமய சன்மார்க்க அறிவு வளரவும் சாதகமான மனப்பாங்கு விருத்தி அடையவும் களம் அமைத்த அக்கோயில்
நினைவுகள் காலத்தால் தூர்ந்துவிடமாட்டா. ஈழத்தமிழகம் முழுவதுமே உரிமைப்போரின் தழும்புகளைப்
பலப்படப்பெற்றது. எமது கிராமமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆயினும், மனசிலே ஒரே ஒரு துடிப்பு,
எனது வாழ் நாளிலே இனி என்றோ – ஒருநாளாவது –
“ சொந்த நிலத்திலே
வேலன் குளத்திலே
மூழ்கிக்
குளிப்பேனா..?
எந்தை தலத்திலே இன்னும் ஒரு முறை
சென்று துதிப்பேனா..?
( தொடரும் )
No comments:
Post a Comment