மழைக்காற்று - தொடர்கதை - அங்கம் 25 --- முருகபூபதி


ற்பகம்  ரீச்சரின் குரல் கேட்டதும் அபிதா துள்ளிக்கொண்டு
ஓடிவந்தாள்.
 “ என்ன ரீச்சர்….?
 “ என்னுடைய அறையில் நீ வாங்கி வந்த அந்த இலுப்பெண்ணெய் போத்திலை எடுத்து வந்து, என்பாதங்களில் பூசி தேய்த்துவிடு… அதற்குத்தான் கூப்பிட்டேன்.
 சரி.. ரீச்சர் “
அபிதா, கற்பத்திற்கு முன்னால் இலுப்பெண்ணெய் போத்தலுடன்  தரையில் அமர்ந்தாள்.  பிறகு எழுந்தாள்.
 எங்கே… போகிறாய்…? “
  இல்லை ரீச்சர், முதலில் கையை கழுவிக்கொண்டு வாரன் 
தான் சொல்ல நினைத்தை அபிதா செய்வதில் கற்பகத்திற்கு திருப்தி.  குளியலறை குழாயில் தனது இரண்டு கைகளையும் சோப் போட்டு நன்றாக கழுவித்துடைத்து  , ஈரலிப்பை போக்கியவாறு வந்த அபிதா, மீண்டும் தரையில் அமர்ந்து, கற்பகத்தின் கால் பாதங்களை அடுத்தடுத்து, தூக்கி தனது மடியில் வைத்து, பக்குவமாக எண்ணெயை தேய்த்துவிட்டாள். கற்பகத்திற்கு சுகமாக இருந்தது. கண்களை மூடி அந்த சுகானுபவத்தை அனுபவித்தாள்.
 “ ரீச்சர். கொஞ்சநேரம் அப்படியே இருங்க. அவசரப்பட்டு கால்களை நனைத்துவிடவேண்டாம்.  இனிமேல் என்ன செய்யவேண்டும் தெரியுமா….? நீங்கள் இரவு சாப்பாடு எல்லாம் முடித்து, படுக்கைக்கு செல்லும் போது கூப்பிடுங்கள். கட்டிலுக்கே வந்து எண்ணெய் வைத்து தேய்த்துவிடுவேன். பிறகு பித்தவெடிப்பின்  கடுகடுப்பு இல்லாமலேயே நித்திரை சுகமாக வரும். “  என்றாள் அபிதா.
 “ இப்போதே வருகிறது.  பிறகு  இலுப்பை மரங்களும் அதில் வந்து தொங்கும் வௌவால்களும் கனவில் வரும்  “ என்று சொன்னவாறு கற்பகம்  கண்விழித்து  கலகலவென சிரித்தாள்.
 ‘ அடடா, இந்த சிடுமூஞ்சிக்கும் ஜோக் சொல்லத் தெரிகிறதே  ‘ என்று மனதில் நினைத்தவாறு அபிதாவும் சம்பிரதாயத்திற்கு சிரித்தாள்.
மஞ்சுளாவின் மன  அவஸ்தைக்கு தேறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போது, கற்பகம் திடீரென அழைத்தது சற்று கோபத்தை தந்திருந்தாலும், அப்போது அமைதியில் ஆழ்ந்தாள்.
தப்பித்தவறி மஞ்சுளாவின் தற்போதைய கவலைகள் இந்த கற்பகம் ரீச்சருக்கு தெரிந்துவிடக்கூடாது.
மஞ்சுளாவின் அறையிலிருந்து, அவளது மனக்குறைளைக்கேட்டதும் தெரியக்கூடாது.

 பின்னர்,   “ நீ… என்ன இங்கே வேலைக்காரியாக வந்தாயா..? மற்றவர்களின் மன அழுத்தம் போக்கும் மனநல மருத்துவராக வந்தாயா..?  “ என்று கேட்டாலும் கேட்டுவிடுவா.
இந்த வீட்டிலிருக்கும் தான் உட்பட  ஒவ்வொரு பெண்ணுமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறோம்..
எனது தீராத கொடுந்துயரில் இருந்து மீண்டு வருவதற்குத்தான்,  இவ்வளவு தூரம் கடந்து வந்து வேலைக்காரி வேடம் புனைந்திருக்கின்றேன். வந்தவிடத்தில் சொல்லும் வேலையை மாத்திரம் செய்யாமல்,   எதற்காக மற்றவர்களுக்கு தேறுதல் சொல்லும் வேலையில் இறங்குகின்றேன்.
இரவு  பத்து மணியும் கடந்துவிட்டது.  ஜீவிகாவின் வருகைக்காக வாசல் கதவையும் திறந்து வைத்துக்கொண்டு அபிதா காத்திருந்தாள்.
கற்பகம் உறக்கத்திற்கு சென்றுவிட்டதற்கான அறிகுறி, அந்த அறையிலிருந்து  எழுந்த குறட்டை ஒலியிலிருந்து தெரிகிறது.
சுபாஷினி தனது அறையிலிருந்து தனது தொழிலுக்குரிய சீருடைகளை அயர்ன் செய்து கொண்டிருக்கிறாள்.
மஞ்சுளா எழுந்து வந்து, குளித்துவிட்டு தலையை துவட்டிக்கொண்டு வந்தாள்.
   என்ன,  இன்னும் ஜீவிகாவை காணோம். பத்துமணியும் ஆகிவிட்டது “ என்றாள் அபிதா.
 “ ஏதும் பிரஸ் மீட்டிங், அல்லது நாடாளுமன்ற கூட்டம் இருந்திருக்கும்.  போயிருப்பாள். நீங்க கதவை சாத்திவிட்டு வந்து படுங்க.  “ என்றாள் மஞ்சுளா.
 “ ஒரே புழுக்கமாக இருக்கிறது.  நீங்க சாப்பிட்டு படுங்க. நான் கொஞ்ச நேரம் விறாந்தாவில் இருந்திட்டு வருகிறேன். “ எனச்சொன்ன அபிதா, விறாந்தா பக்கம் சென்று அரைத்திட்டில் ஏறி அமர்ந்தாள்.
மஞ்சுளாவும் தனது இரவு உணவை எடுத்துக்கொண்டு விறாந்தாவுக்கு வரும்போது, அபிதா அந்தத்  திட்டிலிருந்து மெதுவான குரலில் பாடத்  தொடங்கினாள்.
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
என் நெஞ்சை சொல்லிடுமே… “
அந்த இனிமையான பாடலை அபிதாவின் குரலில் முதல் முதலாக கேட்ட மஞ்சுளா, அந்த ராகத்தில் மெய்மறந்து கையில் எடுத்த இடியப்பத்தையும் வாயருகே வைக்காமல் இமைகள் துடிக்க கேட்டு ரசித்தாள்.
 “ அடடா… அழகாக பாடுறீங்க அபிதா. ம்… ம்…. பாடுங்க. நீங்க யாருடைய நெஞ்சை சொல்றீங்களோ தெரியவில்லை. இந்த அமைதியான இரவு நேரத்தில்,  புழுக்கம் மண்டிய இந்தப்பொழுதில் இப்படி விறாந்தாவிலிருந்து ஒரு இசைக்குயில் பாடுவதைக்கேட்க எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா.. பாடுங்க அபிதா… பாடுங்க…  “ என்றாள் மஞ்சுளா.
 மழை வரப்போகிறது. அதுதான் இந்தப்புழுக்கம். ரீச்சருக்கு  இந்தப்புழுக்கத்தில் எப்படித்தான் நித்திரை வருகிறது…? “
“ அவவுக்கு நித்திரை மட்டுமா…, குறட்டையும் அல்லவா வருகிறது. 
 “ இருங்க சுபாவையும் அழைத்து வருகிறேன். வந்ததும் மிச்சப்பாட்டையும் பாடவேண்டும்  “ மஞ்சுளா உள்ளே சென்று சுபாஷினியை அழைத்துவந்தாள்.
 “ சரிதான்.  இன்றைக்கு பாட்டுக்கு பாட்டா.. அல்லது சிவராத்திரியா..?  “ அபிதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
 “ சுபா, எங்கட அபிதாவுக்கு நன்றாக பாடவும் தெரியும். என்ன இராகத்தோடு பாடுறாங்க பார். பிளீஸ் அபிதா பாடுங்களேன், முதலில் இருந்து பாடுங்க… கமோன். 
அபிதா புன்னகை தவழ  குரலைச்செருமிக்கொண்டு மீண்டும் அந்தப்பாடலின் முதல் நான்கு வரிகளையும் பாடிவிட்டு தொடர்ந்தாள்.
  வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது

வாய் பூட்டு சட்டமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது


வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது


மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காதுஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது


ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது  “

மஞ்சுளா,  உணவுத்தட்டத்திலேயே தாளம் போட்டாள். சுபாஷினி தொடையில் தட்டி அபிதாவின் குரல் அசைவை ரசித்தாள்.
அபிதா மீண்டும் தொடக்கத்திலிருந்து பாடினாள்.
  என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
என் நெஞ்சை சொல்லிடுமே… “
  இந்தப்பாட்டு எந்தப்படத்தில் அபிதா. முன்பு கேட்டிருக்கிறேன். மறந்துவிட்டேன்  “ சுபாஷினி கேட்டாள்.
 “ ஜென்டில் மென் என்று ஒரு படம்.  பல வருடங்களுக்கு முன்னர் வந்தது. புலிகள் இயக்கம் வடபகுதியில் இந்திய திரைப்படங்களை காண்பிப்பதற்கு தடைவிதித்திருந்த காலத்தில் வந்தது. ஆனால், இந்தப்படத்தை அவர்கள் மாத்திரம் எப்படியோ  வீடியோ கஸட்டில் எடுத்து தங்களுக்கு மாத்திரம் பார்த்துக்கொண்டார்கள். என்ர அவர் சொல்லித்தான் தெரியும். 93 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கவேண்டும். புலிகள் மாத்திரம் இதனை தருவித்து பார்த்ததற்கும் ஒரு முக்கிய காரணம் இருந்தது.
இப்படத்திற்குப்   பின்னால், இலங்கை அரசியலும் இருந்தது. இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கொழும்பில் ஒரு மேதின ஊர்வலத்தில் தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார் இல்லையா….  அந்தச் சம்பவத்தையும் நினைவூட்டும் விதமாக இந்தப்படத்தின் இறுதியில் ஒரு காட்சி வரும்.  அரசினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தற்கொலைக்குண்டுதாரியாக மாறி ஒரு அரசியல் தலைவரை கொலைசெய்து தானும் செத்துப்போவான். ஒரு மனிதத் தலை அந்தக்காரின் மீது கிடக்கும். இந்தப்படத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரன்தான்  வசனம் எழுதியிருப்பார்.
இந்த எழுத்தாளர் முன்னர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு பற்றியும் ஒரு தொடர்கதை எழுதியிருக்கிறார். தெரியுமா…? 

 அபிதா சொல்லச்சொல்ல மஞ்சுளாவும் சுபாஷினியும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்.

 “ அது சரி, பாட்டுத்தான் தெரியும், பாடவும் தெரியும் என்று பார்த்தால், அபிதா உங்களுக்கு இவ்வளவு விஷயங்களும் தெரிந்திருக்கிறதே… பெரிய ஆச்சரியம் இல்லையா சுபா.. “ என்றாள் மஞ்சுளா.
 “ ஓமோம்…. அதுதான் நானும் யோசிக்கிறேன் மஞ்சு. சொல்லுங்க அபிதா, இவ்வளவு கதைகளும் உங்களுக்கு எப்படித் தெரியும்…?  நானும் மஞ்சுவும்  ஜீவிகாவும் கொழும்பு பக்கமே இருந்திட்டோம். கற்பகம் ரீச்சருக்கு அரசியலே தெரியாது. ஒரு நாளும் எங்களோடு பேசியதும் இல்லை. ஜீவிகாவும் நாட்டு நடப்புகளை எங்களோடு பேசி அலட்டிக்கொள்வதுமில்லை. ஆனால், நீங்க ஒரு அமுசடக்கியாக இருந்துகொண்டு இவ்வளவு விஷயங்களை நேரில் பார்த்த மாதிரியே சொல்றீங்களே… சொல்லுங்க… பங்கருக்குள் உறக்கத்திலிருந்த உங்கட  குழந்தை  ஷெல் வீச்சில்  கொல்லப்பட்டதாகச் சொன்னீங்க… சரி… உங்கட அவர் சரணடைந்தபின்னர் காணாமல் போனதாகச்சொன்னீங்க… சரி… ஆனால்….. “ சுபாஷினி வியப்புக்கலந்த பார்வையுடன் அபிதாவின் கண்களை ஊடுறுவினாள்.
அபிதா கலகலவென சிரித்தாள்.  “ பொழுது போகவில்லை என்று வீணாய்ப்போன என் குரலிலிருந்து இரண்டு மூன்று வரி எடுத்துப்  பாடினேன். அதற்காக , இப்படி என்னை ஒரு குற்றவாளிக்கூண்டில் நிறுத்திவைத்தா பேசுவது. 
 வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
வாய் பூட்டு சட்டமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது  என்றும் ஒரு வரி இந்தப்பாடலில் வருகிறது கவனிச்சீங்களா அபிதா. செல்லுங்க… நாங்க இரண்டுபேர்தானே இங்கே இருக்கிறோம். சொல்லுங்க… உங்களுக்கும் உங்கட அவர்போன்று அவர்களோடு ஏதும் தொடர்பு  இருந்ததா..?  “ எனக்கேட்டாள் மஞ்சுளா..
 “ இல்லை… இல்லை… சத்தியமாக இல்லை. எனது செல்லக்குழந்தை மீது சத்தியம்  “ என்று அபிதா சொல்லிக்கொண்டே  வெடித்து அழுதாள்.
அணிந்திருந்த இரவு உடையான, கற்பகம் தந்திருந்த பழைய சோர்ட்டியின் முனையை குனிந்து எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
   எனக்கு,  எனது  குழந்தை, அவரது ஞாபகங்கள் வரும்போது என்னை நானே தேற்றிக்கொள்வதற்கு பிடித்தமான, முக்கியமாக அவருக்கு பிடித்தமான பாடல்களை மனதுக்குள் பாடுவேன். இன்றைக்கு  தெரியாத்தனமாக உங்களிருவருக்கும் முன்னாலிருந்து பாடவேண்டியதாகிப்போய்விட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள். இனி இப்படி பாட மாட்டேன்.  “ எனச்சொல்லி அபிதா தலை கவிழ்ந்தாள்.
சுபாஷினி சடாரென எழுந்து,   “ அட  அசடே… சும்மா ஒரு வேடிக்கைக்கு கேட்டா, இப்படியா உடைந்துவிடுவது.  “ எனச்சொன்னவாறு அபிதாவை அணைத்துக்கொண்டாள்.
 “ அபி… நீங்கள் எங்கேயோ இருக்கவேண்டியவங்க… இங்கே வந்து பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கிறீங்க.. அவ்வளவுதான் என்னால், இப்போது சொல்லமுடியும். ஆனால், நீங்க மிகவும் நன்றாகத்தான் பாடுறீங்க.. வாழ்த்துக்கள். நாம் பேசியதை சீரியஸாக எடுக்காதீங்க.  நானும் சுபாவும் ரீச்சரும்  பல சீரியஸான  விஷயங்களை கடந்து வந்திருக்கிறோம். இனியும் கடப்போம். அதுதானே அப்போது  உங்களுக்குச் சொன்னேனே…! என்னைத் தேடிக்கொண்டிருக்கிற அம்மாவைப்பற்றி. சுபாவுக்கு நடந்ததும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் இங்கே ஒரு சேர்வன்ட்டாக வந்திருந்தாலும் இப்போது நீங்களும் எங்களில் ஒருத்திதான்.  “ மஞ்சுளா எழுந்து வந்து அபிதாவின் தலையை  இடது கையினால் தடவிவிட்டுச்சென்றாள்.
அவளது வலது கை உணவருந்தியதால்  காய்ந்திருந்தது.
திடீரென புழுக்கம் குறைந்து  இதமான குளிர்காற்று வீசியது. 
 “ நான் அப்போதே சொன்னேன்தானே… இந்தப்புழுக்கம் மழை வருவதற்கான அறிகுறி என்று, வாங்க உள்ளே போவோம். ஜீவிகா வரும்போது வரட்டும்.  “ எனச்சொன்னவாறு வாசல்  கதவை மூடுவதற்கு அபிதா தயரானாள்.
 “ மஞ்சு, எங்கட அபிதா பாடகி மட்டுமல்ல, வானிலை அவதானியும்தான்  “ என்றாள் சுபாஷினி.
அப்போது வீட்டுக்கு வெளியே ஒரு டாக்ஸி வந்து நின்றது.
 “ சுபா, மஞ்சு… வாங்க…  வாங்க… இங்க வந்து பாருங்க… யாரோ வாராங்க.. “ அபிதா குரல் கொடுத்தாள்.
அவர்கள் இருவரும் வந்து எட்டிப்பார்த்தனர்.
அந்த வாடகைக்காரிலிருந்து ஜீவிகாவும் மற்றும் ஒரு ஆணும் சூட்கேஸ் – பேக்குகளுடன் இறங்கினர்.
மழைக்காற்று புழுதியின் மணத்துடன் எழுந்தது.
-->
( தொடரும் ) 


No comments: