திருமுறை விழா


 விஷ்ணு  சிவா  கோயில்,  மோசன்,  கன்பராவில் 15.02.2020,  சனிக்கிழமை   பி.ப. 5.00 மணிக்கு , சித்தாந்தரத்தினம்   கலாநிதி க. கணேசலிங்கம் தலைமையின் கீழ் 10-வது திருமுறை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இசை ஆசிரியை தமிழ்ச் செல்வியின் பஞ்ச புராணத்தைத் தொடர்ந்து, சபையிலிருந்த அனைவருமாக மாணிக்க சுவாமிகள் அருளிச் செய்த சிவபுராணத்தை பக்தியுடன் ஓதினார். தொடர்ந்து பன்னிரு திருமுறைகள், “பெரிய புராணம் என்ற தலைப்புகளில்  மாணவர்களின் பேச்சு  இடம்பெற்றது. அதன் பின்னர்   கானாமிர்த இசைப்பள்ளி மாணவர்களின் திருமுறை இசை இடம்பெற்றது. மாணவர்கள் தேவாரம் பாடியவர், பாடப்பெற்ற தலம், பண், தாளம், இராகம் என்பவற்றை கூறி அருமையாகப் பாடினார்கள். மாணவர்கள் அனைவரும் தேவாரங்களை மனப்பாடம் செய்திருந்தமை பாராட்டப் பட வேண்டிய விடயம்.
தொடர்ந்து தலைமை  உரையில், விழாத்தலைவர் சித்தாந்தரத்தினம்   கலாநிதி க. கணேசலிங்கம் அவர்கள் மூலன் சொன்ன கதை என்ற தலைப்பில் திருமந்திரத்தின் சிறப்புகளையும் "இருட்டறை மூலை யிருந்த கிழவி" என்ற பாடலுக்கு விளக்கமும் கூறினார். தொடர்ந்து பல் வைத்திய கலாநிதி திருமதி அபிராமி அவர்களின் மாணவர்கள் ஆனந்தத்தாண்டவம் என்ற தலைப்பில்  நடனம் வழங்கினார்கள். திருமறைக் காட்டில் திருநாவுக்கரசு நாயனார் கதவு திறக்கப் பாடியதையும், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் கதவு மூடப் பாடியதையும் கருப்பொருளாகக் கொண்டு இந்நடனம் அமைந்திருந்தது.

சித்தாந்தரத்தினம் திருமதி கேசினி கோணேஸ்வரன் அவர்களின்   'திருமுறையே சைவநெறிக் கருவூலம்' என்ற சிறப்புரை அடுத்த நிகழ்வாக அமைந்தது. ஆன்மாக்கள் துன்பம் அனுவிப்பதன் காரணங்களை சித்தாந்த அடிப்படையில் விளக்கி, துன்பங்கள் விலக பன்னிரு திருமுறைகளை பக்தி சிரத்தையுடன் ஓத வேண்டும்   என   ஆதாரங்களுடனும், அகச் சான்றுகளுடனும் விளக்கினார்.
தொடர்ந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற   ‘நாமார்க்கும்  குடியல்லோம்’ என்ற தலைப்பிலான நாடகம் இடம்பெற்றது. திருநாவுக்கரசு நாயனார் சமண சமயம் சென்று சூலை நோய் பெற்றது முதல் சமண அரசன் கொடுத்த தண்டனைகள் ஈறாக எல்லா நிகழ்வுகளையும் மிக அழகாக தத்ரூபமாக மாணவர்கள் நடித்திருந்தனர். தொடர்ந்து  சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சைவ  நாற்பாதங்கள்  பற்றிய கருத்துக் களம் சேந்தன் தலைமையில் நிகழ்ந்தது. நன்றியுரையை வைத்திய கலாநிதி பிரணவன் கூறினார். தேவார புராணத்துடன் விழா இனிதே நிறைந்தது. நிகழ்ச்சிகளை அருமையாக திரு ஜெயசிங்கம் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். புலன்களுக்கு நிறைய விருந்துகள் பெற்ற சபையோர்க்கு, வயிற்றுக்கும்  அருமையான விருந்து வழங்கப் பட்டது.
10 ஆண்டுகளாக திருமுறைக்கு விழா எடுத்து வரும் சித்தாந்தரத்தினம்   கலாநிதி க. கணேசலிங்கம் அவர்களுக்கும் , துணைவியார் திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம் அவர்களுக்கும் , அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்பவர்கட்கும், எல்லாம் வல்ல சிவனின் திருவருள் கிடைக்கப் பிரார்த்திப்போம். 

https://photos.app.goo.gl/zesRcTvY4VsXXy2NA                                       


-->
                                        








No comments: