இலங்கைச் செய்திகள்


காரைக்கால் - இலங்கை இடையில் கப்பல் சேவை

MCC ஒப்பந்தத்தில் அரசு கைச்சாத்திடாது; அமைச்சரவை முடிவு!

வெள்ளை வேன் நபர்களின் குரல் மாதிரிகள் உறுதியானது

தீர்மானத்திலிருந்து வெளியேறினாலும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடரும்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை

காணாமல் போனோரின் உறவுகள் 1101 நாட்களாக போராட்டம்


காரைக்கால் - இலங்கை இடையில் கப்பல் சேவை



காரைக்கால்-இலங்கைக்குஇடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய இணை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் காரைக்கால்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (27) மாலை நடந்தது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். கூட்டத்தில், புதுச்சேரி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுல கிருஷ்ணன், அரசு தலைமை செயலர் அஸ்வனி குமார், காரைக்கால் கலெக்டர் அர்ஜுன் சம்பத் மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் மத்திய இணை மந்திரி மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம்கூறியதாவது:-
காரைக்கால்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்தும் அதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த தலைமை செயலர் தலைமையில் 2 செயலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. அவர்களது பரிந்துரையின் பேரில் கப்பல் போக்குவரத்து குறித்து விரைந்து முடிவு செய்யப்படும். இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் மத்திய-மாநில அரசுகளின் ஆதரவோடு செயல்படுத்தப்படும்என்றார்.
இதையடுத்து அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கூறுகையில்,
காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கினால் குறுகிய நேரத்தில் சென்றடையலாம். 4 ஆண்டு முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. கட்டணமாக 90 டொலர் முதல் 100 டொலர் வரை நிர்ணயிக்கப்படும். நிதிச்சுமை இல்லாத வகையில் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க புதுச்சேரி அரசு தயாராக உள்ளது. இதனால் இருநாட்டு மக்களும் பயனடைவார்கள். இந்த திட்டம் காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்’ என தெரிவித்தனர். (மாலைமலர்)
நன்றி தினகரன் 








MCC ஒப்பந்தத்தில் அரசு கைச்சாத்திடாது; அமைச்சரவை முடிவு!



அமெரிக்காவின் மில்லினியம் செலேஞ்ச் கோபரேஷன் (Millennium Challenge Corporation) ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லை என, அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
MCC ஒப்பந்தத்தில் அரசு கைச்சாத்திடாது; அமைச்சரவை முடிவு!-Cabinet Decided to Not to Sign MCC Agreementதற்போது (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
குறித்த உடன்படிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மிலேனியம் சவால்கள் திட்டம் (MCC-மிலேனியம் செலேஞ்ச் கோபரேஷன்) தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆரம்ப அறிக்கை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
மில்லினியம் சவால் ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு திருப்பிச் செலுத்தாத நிதியுதவியாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 85 பில்லியன்கள்) வழங்கப்படவிருந்ததோடு, இதில் திட்டத்திற்கான நிதியாக 447.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், வசதிகளை மேற்கொள்வதற்கா 32.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும் உள்ளடங்குகின்றன.
அதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் போக்குவரத்து கட்டமைப்பை விருத்தி செய்யவும், 67 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணி வேலைத்திட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த மானியம் போக்குவரத்து மற்றும் காணி ஆகிய இரண்டு பெரிய திட்டங்களை செயல்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டதாகும்.
போக்குவரத்து திட்டம்:
மத்திய சுற்றுவட்ட வலையமைப்பிலுள்ள (Central Ring Road Network) பகுதிகளில் வீதிகளை நவீனமயமாக்குதல், பொது பஸ் சேவைகளை நிர்வகித்தல், போக்குவரத்து நெரிசலை முகாமைத்துவம் செய்தல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான அலுவலகத்தை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காணி திட்டம்:
தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் அரசசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் தனியாருக்கு சொந்தமான காணிங்களை அளவிட்டு, காணி உறுதிப்பத்திரம் இல்லாதிருக்கின்ற, அனுமதிப்பத்திரம் மூலம் காணி உரிமை கொண்டுள்ளவர்களுக்கு உரிய காணிபத்திரத்தை வழங்குவதும், காணிகளை டிஜிற்றல் முறை மூலமான அறிக்கை மூலம் பராமரித்தல்.
இதில் பல்வேறு நீண்ட கால பிரச்சினைகள் காணப்படுவதாக பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இதில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன் 









வெள்ளை வேன் நபர்களின் குரல் மாதிரிகள் உறுதியானது



சி.ஐ.டி நீதிமன்றில் தெரிவிப்பு
வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய இரு சந்தேக நபர்களினதும் குரல் மாதிரிகள் ஒலிப்பதிவுகளுடன் ஒத்துப்போவதாக  அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.  இதனை சி.ஐ.டி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் கொழும்பு பிரதம நீதவேன் நீதிமன்றத்தில்  நேற்று தெரிவித்தார். 
கொழும்பு பிரதம நீதவேன் லங்கா ஜயரட்ண முன்னிலையில் நேற்று இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இவ்வாறு கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஊடகச் செயலாளரான மலிக் விஜேநாயக்க இச் செய்தியாளர் சந்திப்பை நடத்திய முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்களுக்காக 15ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சரின் ஊடகச் செயலாளரிடம் சி.ஐ.டி அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளபோதும் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் ஹசீம் மொஹமட் ரூமி மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை ஏப்ரல் 10 தொடக்கம் 25 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் நீக்குமாறும் அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார். மேலும் சந்தேக நபர்களான சகலவள்ளி ஆரச்சிகே சரத் குமார மற்றும் அத்துல சஞ்ஜீவ மதநாயக்க ஆகிய இருவரும் இன்னுமொரு வழக்கின் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சி.ஐ.டி.யினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு மார்ச் 03 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நன்றி தினகரன் 











தீர்மானத்திலிருந்து வெளியேறினாலும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடரும்



30/1 இலிருந்து வெளியேறுவதாக ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து இன்று வரை இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை விளக்கிக் கூறிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் வழங்கிய ஆணைக்கமைவாகவே இணை அனுசரணையிலிருந்து விலகி செல்வதாகவும் அவர் அறிவித்தார்.
அனுசரணையிலிருந்து விலகிச் சென்றாலும் நல்லிணக்கப் பொறிமுறை, பொறுப்புக்கூறல்களிலிருந்து விலகி செல்லப் போவதில்லை என்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவொன்று அமைக்கப்படுமெனவும் அமைச்சர் தினேஷ் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று உரையாற்றினார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மேலும் தெரித்ததாவது,
இலங்கையர்கள் 2019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மகத்தான ஆணை வழங்கியமை இந்த சபைக்குத் தெரிந்திருக்கும். சுபிட்சமான நடொன்றையும் நீதியான சமூகத்தையும் உருவாக்குவதற்கான கொள்கை வரைபுச்சட்டத்தை தொடர்வதற்காக இந்த ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலம் நிலையான அபிவிருத்தி, சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாண்டுகளுக்கு முன் 2009 மே 18 ஆம் திகதி புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் தோற்கடித்து முப்பதாண்டு கால மோதலை இலங்கை முடிவுக்கு கொண்டுவந்தது. மோசமான மோதலின் முடிவு அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்ததுடன் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் ஏனையவர்களின் ‘வாழ்வதற்கான உரிமை’யை வழங்கியது. 2009 மே மாதத்திலிருந்து இலங்கையில் பிரிவினைப் பயங்கரவாதத்தின் பேரில் ஒரு தோட்டா கூட வெடிக்கவில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலின் முடிவில் ஒரு இரவிலேயே நிரந்தர அமைதி வரும் என்ற மாயத் தோற்றம் இலங்கைக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த சபை கையாளும் பல்வேறு மோதல் நிலைகளைப் போலன்றி, இலங்கை தன்னை கட்டியெழுப்பும் நிலையில் இருக்கவில்லை. இலங்கைக்கு சில மீளாய்வுகள் மற்றும் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் என்பன ஏற்கனவே தேவையாக இருந்தன.எமது நிலையான சமாதானம், நல்லிணக்க திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததை நாம் உணர்ந்திருந்தோம்.
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தார். இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்ப நிலையான நல்லிணக்க நடைமுறையை மஹிந்த அரசாங்கம் ஆரம்பித்தது.
அப்போதிருந்த, கள நிலைமைகளை இனங்கண்டு அந்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. எம்மைவிட சிறந்த வளங்களுடன் கூடிய நாடுகள் இவ்வாறான செயற்பாடுகளை எடுக்க பல தசாப்தஙகள் சென்றன. இந்நிலையிலே நாம் இந்த நடைமுறையை செயற்படுத்தியிருந்தோம்.
2014 டிசம்பரில் நான் ஒரு அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தபோது, கீழ்வரும் பல குறிப்பிடத்தக்க துறைகளில் நாம் முன்னேற்றம் கண்டிருந்தோம்.
கண்ணி வெடி அகழ்வு,மீள் குடியேற்றம், படையினர் பயன்படுத்திய காணிகளை மக்களிடம் கையளித்தல், மோதல் இடம்பெற்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல், சிறுவர் போராளிகள் உள்ளிட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை புனர்வாழ்வு மற்றும் ஒருங்கிணைத்தல்,துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மோதலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்டல், உள்நாட்டு பொறிமுறைகளை ஸ்தாபித்து பொறுப்புக் கூறல், சட்ட ஆட்சி மற்றும் மனித உரிமைகள் பற்றி ஆராய்தல்.
உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாடுகளை இலங்கை மக்களுக்காக நடைமுறைப்படுத்திய போதும் ஒரு சில ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு அங்கத்தவர்கள் சிலர், இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாதத்தை தோற்கடித்த மற்றும் மனிதாபிமான நிவாரண மற்றும் நல்லிணக்க நடைமுறையை பாராட்டத் தவறியதை இங்கு குறிப்பிட வேண்டும்.
இலங்கையின் இந்த செயற்பாடுகள் இலங்கை மீதான ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளின் தீர்மானத்தில் இடம்பிடித்திருந்தன.
எவ்வாறெனினும் இலங்கையின் முன்னைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் உள்ளூர் நல்லிணக்க நடைமுறையை, அது பலனளிக்க ஆரம்பித்த நேரத்தில் திசை மாற்றிவிட்டனர். மனித உரிமைகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் மாறாக அப்போதைய இலங்கை அரசாங்கம் இலங்கை தொடர்பான ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 என்ற தீர்மானித்துக்கு இணை அனுசரணை வழங்கியது.
அதனையடுத்து இலங்கையின் முன்னைய அரசாங்கமானது மேற்படி 30/1 தீர்மானத்துக்கு, தவறுகளுடன் கூடிய இலங்கை தொடர்பான OISL அறிக்கையை பயன்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அண்மைய காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடித்த ஒரேயொரு தேசிய பாதுகாப்பு அம்சமான இலங்கை பாதுகாப்பு படையினரின் வீர மிகு செயற்பாடுகளை நியாயமற்ற முறையிலும் நிந்திக்கும் வகையிலும் பயன்படுத்தியது. இந்நிலையில் அச் செயற்பாடுகளுக்கு மாறாக பல்வேறு சாட்சியங்கள்,
கீழ் காண்பவைகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
- கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு போன்ற உள்ளூர் அறிக்கைகள்,
ஐக்கிய இராஜ்ஜியத்தின் லோர்ட்ஸ் சபையில் நசேபி பிரபு முன்னிலையில் வழங்கப்பட்ட தகவல்கள்,
அத்துடன் சவாலுக்குட்படுத்தப்பட்ட மற்றைய அம்சங்களின் அளவுக்கு அதிகமாக குறிப்பிடப்பட்ட சிவிலியன்களின் மரண எண்ணிக்கை
- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட ஐ. நா. மற்றும் இதர அறிக்கைகள்
இலங்கையானது அதன் அரசியலமைப்பு வரைபுச் சட்டத்துக்குள் செயற்படுத்தும் வகையிலான கடப்பாடுகள் மேற்படி தீர்மானத்தில் உள்ளடங்குகின்றன. இவை இலங்கை மக்களின் இறைமையை மீறுவதாக உள்ளதுடன் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகவும் அமைகின்றன. இணை அனுசாரணை தொடர்பாக தனது நிலைப்பாட்டை இலங்கையானது மீளவும் நினைத்துப் பார்ப்பதற்கு இது மற்றுமொரு காரணமாக உள்ளது.
நடைமுறையின்படி இலங்கையின் முன்னைய அரசாங்கமானது மேற்படி 30/1தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமை ஆளுமைக் கொள்கையின் அனைத்து ஜனநாயக கொள்கைகளையும் மீறுவதாக அமைகிறது.
தீர்மானத்தின் நகல் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கப்பட்டமை,
சர்வதேச அமைப்பொன்றின் நியமம் நாட்டுக்கு வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் பெறப்படாமை,
மேற்கூறிய இணை அனுசரணை தொடர்பான நடைமுறைகள் பற்றி பாராளுமன்றத்தில் எந்தவொரு குறிப்பும் இடம்பெறாதமை,
மிகவும் முக்கியமாக, தீர்மானத்தில் உள்ள ஏற்பாடுகள், நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பை மீறும் வகையில் இருப்பதால்,அதனை வெளியிட முடியாதிருந்தமை,
தொழில்சார்பான இராஜதந்திரிகள், கற்றோர், ஊடக மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் எல்லை மீறும் வகையில் அமைந்துள்ளமை.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவ்விடயம் தொடர்பாக தன்னுடன் ஆலோசிக்கப்படவில்லை என்று கூறியிருந்தமை
இலங்கையின் இறைமை மற்றும் கீர்த்திக்கு இன்றுவரை இவ்விடயம் ஒரு கறையாக அமைந்துள்ளன.
ஒரு சில நாடுகளை மட்டும் மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்மானத்தில் உள்ள ஏற்பாடுகளை, இலங்கையானது செயற்படுத்த முடியாத வகையிலும், அரசியலமைப்புக்கு ஒவ்வாத வகையிலும் இந்த இணை அனுசரணைத் தீர்மானம் அமைகிறது.
கௌரவமிக்க பாதிப்பு என்ற ரீதியில் மேற்படி செயற்பாடு சர்வதேச முறைமையில் இலங்கையின் நம்பிக்கையை பாழ்படுத்தியுள்ளது. அத்துடன் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கையின் நம்பகத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தியுமுள்ளது. மேற்படி பொறுப்பற்ற செயற்பாடு நீண்ட காலமாக நிலவிய,பிராந்திய உறவுகளிலும் மற்றும் அணி சாராமை மற்றும் தெற்காசிய ஒருமைப்பாடுகளையும் பாதித்துள்ளது. இவை இலங்கையின் வெளிநாட்டு கொள்கையை பூஜ்ய விளையாட்டுக்கு இட்டுச் சென்றதால் எனது நாடு சதுரங்க விளையாட்டில் மதிப்பற்ற காயாக மாற்றியுள்ளது.மேலும் இலங்கையை அதன் பாரம்பரிய நடுநிலைத் தன்மையிலிருந்து தேவையற்றவகையில் மாற்றியமைத்துள்ளது.
30/1 தீர்மானம் இலங்கையின் தேசிய புலனாய்வு செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பான நடைமுறைகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பையும் மிகவும் மோசமான வகையில்,குறைத்து மதிப்பிட்டுள்ளது.
2019 ஏப்ரல் மாத ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெறவும் இது காரணமாகியது.இந்தத் தாக்குதலில் தேவாலயங்களும் ஹோட்டல்களும் இலக்காகின. வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரும் இதில் உயிரிழந்தனர்.
அதனையடுத்து தேசிய பாதுகாப்பை மீண்டும் ஸ்திர நிலைக்கு கொண்டு வருவதில் அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
2015 அக்டோபரில் 30/1 தீர்மானத்தை இணை அனுசரணைக்குட்படுத்திய இலங்கையின் முன்னைய அரசாங்கத்தின் வெளிநாட்டமைச்சர் அது பற்றி 2019 மார்ச்சில் அறிக்கை விடுத்திருந்தார். அதில் அவர் வெளியிட்ட கருத்துகள் கேள்விக்குறியாக உள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற சுதந்திர தின விழாவில் உரையற்றிய போது ‘இலங்கையின் ஒவ்வொரு குடிமகனதும் உரிமையை நாம் பாதுகாப்போம்’ என்று குறிப்பிட்டார்.
இலங்கை மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப அணிசாரா, நடுநிலை வெளிநாட்டு கொள்கையை பின்பற்றுவதன் மூலம், விடயங்களைப் புதிதாக பரிசீலிக்கும் கடப்பாட்டுடன் எமது அரசாங்கம் உள்ளது. ‘பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மூலமான சுபிட்சமே’ எமது நிகழ்ச்சி நிரலாக அமைகிறது.
இந்த அடிப்படையின் கீழ் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவிக்கும் 40/1 தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகிக்கொள்ளும்தீர்மானத்தை நான் இன்று முன்வைக்க விரும்புகிறேன். அதேநேரம் அதன் முன்னைய 30/1 என்ற 2015 அக்டோபர் மாத தீர்மானம் மற்றும் 2017 மார்ச் மாத 34/1 ஆகிய தீர்மானங்களையும் இது உள்ளடக்குகிறது. அத்துடன் மேற்படி தீர்மானங்களின் இணை அனுசரணையில் இருந்து விலகிக்கொண்டாலும் இலங்கை மக்கள் தொடர்பான பேண்தகு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான இலக்குகளை எட்டுவதற்கு இலங்கை தொடர்ந்து கடப்பாட்டுடன் இருக்கும்.
பேண்தகு சமாதானத்தை எட்டுவதற்கு உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறை மூலம் இலங்கை கடப்பட்டுள்ளது. அதேநேரம் 2030 பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டுள்ளவாறு இலங்கையின் குறிக்ளேகளை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஐ.நா.வினதும் அதன் முகாமைகளினதும் உதவியை இலங்கை தொடர்ந்து பெற்றுக்கொள்ளும்.
நன்றி தினகரன் 










ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை



நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நுகேகொடை நீதவான் மொஹமட் மிஹாயில், அவருக்கு பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார். .  
5 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவித்துள்ள நீதவான், அவருக்கு  வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பேசியதாக வழங்கப்பட்ட தொலைபேசி உரையாடல் பதிவுகள் அவரது குரல் மாதிரிகளுடன் ஒத்துப் போவதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர், நுகேகொடை நீதவான் முன்னிலையில் இதன்போது  திறந்த நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.
நீதிபதிகளின் கடமைகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஜனவரி 14ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். 
நன்றி தினகரன் 











காணாமல் போனோரின் உறவுகள் 1101 நாட்களாக போராட்டம்



வவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டதையடுத்து ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்து அங்கிருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை இன அழிப்பே, தமிழ் தேசியவாதம் மற்றும் நிரந்தர பாதுகாக்கப்பட்ட தமிழ் தாயகத்தினை நம்பும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் சுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்.பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும் என்ற பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சுமந்திரன் காணாமல் போன தாய்மார்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று ஐ.நா மனித உரிமை அமைப்புக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
வவுனியா விசேட நிருபர் - நன்றி தினகரன் 








No comments: