21/11/2019 அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கை ஜனநாயகக் குடியரசான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்தலின் மூலம் நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்து பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலும், மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கான எதிர்பார்ப்பும் உள்ளது.
இவ்வாறுள்ள நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் தெரிவாகியுள்ள ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டங்கள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பை நாட்டு மக்களிடம் குறிப்பாக சிறுபான்மை மக்களிடம் மட்டுமல்ல உலக அரங்கிலும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நோக்க முடிகின்றது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு, தொழிலற்றோர் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது என்று கூறப்பட்டாலும், அதற்கும் அப்பால் நாட்டின் சகல இன, மத மொழி மக்களுக்கு மத்தியிலே புரிந்துணர்வும், நல்லுறவும் ஏற்படுத்தும் பாரிய பொறுப்பும் அவருக்குள்ளது.
யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாடும், நாட்டு மக்களும் எதிர்நோக்கியுள்ள முதன்மைப் பிரச்சினை அதுவாகவேயுள்ளது.
பெரும்பான்மை வெற்றியின் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை இல்லையென்றாகி விடாது. இந்த நாட்டில் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியீட்டிய அரசாங்கங்களே இனப்பிரச்சினைக்கு அடித்தளமிட்டன என்ற உண்மையை மறைக்க முடியாது.
பல்லின, பலமொழி, பல இன மக்களைக் கொண்ட இலங்கையில் பல்லினத் தன்மைக்கு மதிப்பளிக்காது, பேணாது பெரும்பான்மை என்ற மாயையில் சிக்கி பல சீரழிவுகளுக்கு அடிகோலிய வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்காத வரை நாட்டின் பெருமைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்ற யதார்த்த நிலைமையைத் தடுக்க முடியாது. தேர்தல்காலப் பரப்புரைகள் எவ்வாறிருந்த போதிலும் தான் நாட்டின் அனைத்து மக்களின் ஜனாதிபதி என்பதையும் அனைவருக்கும் சேவையாற்றுவதன் பொறுப்பை தான் தெரிந்து வைத்திருப்பதாகவும் புதிய ஜனாதிபதி கூறியிருப்பது யதார்த்தமானால் நாடு நிச்சயம் பெருமையடையும்.
கடந்த கால நிகழ்வுகளையும், செயற்பாடுகளையும் சரியாக, முறையாக எடைபோட்டு விட்ட தவறுகள் மேலும் தொடராது தடுக்கும் வழியை அவர் காண்பார் என்று நம்புவோம். பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்த டீ.எஸ்.சேனாநாயக்கவின் அரசாங்கத்தால் இந்நாட்டின் குடிமக்களாயிருந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். அதேபோல் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தால் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டு இந்நாட்டின் பாரம்பரிய தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது.
அதேபோல் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்த ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் பல தமிழருக்கெதிரான இனக்கலவரங்கள் கட்டவிழ்க்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து பெரும்பான்மையினரின் ஆதரவுடன் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களாலும் சிறுபான்மையினர் பாதிப்புகளையே எதிர்கொண்டனர் என்பது வரலாறு. அவ்வாறுள்ள நிலையில் சிறுபான்மையினத்தவருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து அவர்கள் விடுபடக்கூடியதாகவும் புதிய ஆட்சி அமைந்தால் அது வரவேற்கப்படும். உலக அரங்கில் நாட்டின் கௌரவம் காக்கப்படும்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், அதேபோல் தமிழர்கள் அறுதிப் பெரும்பான்மையினராக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் தனித்துவமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. அது மக்களின் தீர்ப்பு. அது ஜனநாயகத்தின் பாற்பட்டது. மாறான கருத்துள்ளவர்கள் ஏன், எதற்காக மாற்றுக்கருத்துக் கொண்டுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து முடிவுகள் எடுத்து அம்மக்களையும் தம்பால் ஈர்த்துக் கொள்வதே பண்பட்ட ஜனநாயக வழிமுறை.
சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களில் கணிசமானோர் மாற்றுக் கருத்துள்ளவர்களாகத் தமது வாக்குகளைப் பிரயோகித்துள்ளனர் என்பதை எவரும் கவனத்தில் கொள்ளாது சிறுபான்மையினத்தவர் மட்டுமே எதிராகச் செயற்பட்டனர் என்று கூறுவது பொறுப்பற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றாகும்.
1980 களின் முற்பகுதியில் ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அன்றைய பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலத்தை அதற்குரிய காலம் முடிவடைந்த பின் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்காக கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டது. உரிய காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று முழு வடமாகாணமும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டமும் வாக்களித்தது. அதாவது தமிழ் மக்கள் ஏகோபித்து வாக்களித்தனர். ஆனால் நாட்டின் ஏனைய பிரதேசத்தவர்கள் பாராளுமன்ற ஆட்சி நீடிப்புக்கே வாக்களித்தனர்.
தென்னிலங்கையில் பாராளுமன்ற கால நீடிப்புக்கு எதிராகப் போராடிய பெரும்பான்மையினரைக் கொண்ட சிங்களவர்களைத் தலைமையாகக் கொண்ட அரசியல்வாதிகளால் ஜனநாயகத்திற்கு மாறானதென்ற ஆட்சி நீடிப்பை, அதற்கெதிரான தீர்மானத்தை தமது மக்களை அணி திரட்டி நிறைவேற்ற முடியாது போனது. முன்னாள் பிரதமரும் அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியுமான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்களின் ஜனநாயகப் பற்றுறுதியைப் பாராட்டினார் என்பதும் வரலாறு. மனச்சாட்சியின் படி ஜனநாயக முறையில் தமது கருத்தை அன்று வெளியிட்ட தமிழ் மக்களது முடிவைத் தாங்க மாட்டாத அன்றைய ஆட்சியில் இனக்கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமையும் வரலாற்றிலுள்ளது.
இவையெல்லாம் இலங்கைக்கேயுரிய தனித்துவமான அரசியல் வரலாற்றுப் பாடங்கள். கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்து அதில் விடப்பட்ட குறைகள், தவறுகளைத் திருத்திச் செயற்படுவது எதிர்காலத்திற்கு நல்லது. அவ்வாறின்றேல் நாட்டின் மீட்சி, இனங்களுக்கிடையேயான நல்லுறவு என்பன பகற் கனவாகவே முடியும்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள், தலைவர்கள் என்போர் இரு தரப்பினருக்கும் பிரிந்து நின்று ஆதரவு வழங்கினர். ஒரு தரப்பு ஆதரவு வழங்கியவர் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பனவும் வேறு சில தமிழர் அமைப்புகளும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கின. இரா.சம்பந்தன், மனோ கணேசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் ஆதரவு வழங்கிய தரப்பின் வேட்பாளர் தோல்வியடைந்தார்.
மறுபுறம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்களுடன் சில தமிழ்த் தரப்பினர் ஆதரவு வழங்கியவர் ஜனாதிபதியாகியுள்ளார். தமிழர் தரப்பின் அதிகரித்த ஆதரவு கிட்டவில்லையென்பதால் தமிழ் மக்கள் எதுவித புறக்கணிப்புக்குள் உள்ளாகாமல் தடுப்பதும், பாதுகாப்பதும் புதிய ஜனாதிபதியின் வெற்றிக்கு உழைத்த தமிழ்த் தலைவர்களின் பொறுப்பாகும்.
அவர்கள் தமக்குரிய கடமையில், பொறுப்பில் பின்னிற்கக் கூடாது, மாட்டார்கள் என்று நம்பலாம். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழும் வாழ்வையே எதிர்பார்க்கின்றனர். நிம்மதியாக வீட்டில் தூங்கியெழும் நிலைக்குப் பங்கம் ஏற்படக்கூடாது. இன, மொழி, மத ரீதியில் நாட்டில் எப்பாகத்திலும் வேற்றுமை பாராட்டவோ, பாதிக்கவோ கூடாது.
அரசியலமைப்பில் தமிழ்மொழிக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய மற்றும் ஆட்சி மொழிக்கான உரிமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் தமிழ்மொழிக்கு மேற்படி உரிமைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படாதுள்ள இன்றைய நிலை நீக்கப்படவேண்டும்.
கல்வி, தொழில் உட்பட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க முன்வந்து செயற்பட்ட, அவருக்கு தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தலைவர்கள் தமக்குரிய மேற்படி பொறுப்புகளை நிறை வேற்ற முன்வர வேண்டும்.
இந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான தமிழர்களும் இந்நாட்டின் உரிமையுள்ள குடிமக்கள் என்று உறுதியாக நம்பப்படு மானால் அவர்களுக்கு பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளும் அனுபவிக்க வழி செய்ய வேண்டும். அப்போது இனங்களுக்கிடையே பிளவுகள், பிரச்சினைகளுக்கு நிரந்தர முடிவு கட்டலாம். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ வழி கிட்டும். வரலாற்றில் புதிய திருப்பமொன்று ஏற்படத்தான் போகின்றது. அது எவ்வாறமையும் என்பதை நாடாளும், நாடாளத் துடிக்கும் அரசியல்வாதிகளே தீர்மானிக்க வேண்டும்.
த.மனோகரன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment