பிளவடைந்துள்ள அரசியலை மீள ஐக்கியப்படுத்துவதில் உள்ள சவால்கள்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதியை தெரிந்தெடுப்பதில் தமக்கும் ஒரு பங்கு இருப்பதன் காரணமாக, ஜனாதிபதிக்கு சிறுபான்மையினத்தவர்களது நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் இருக்கும் என்ற நம்பிக்கையே சிறுபான்மையினத்தினர் இம்முறை தேர்தலில் பெரிதும் அக்கறையும் ஆதரவும் காட்டுவதற்கான காரணமாக இருந்துள்ளது.
ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் முடிவுகளும் பெரும்பான்மையின மக்களையே ஒன்றிணைத்ததாக அமைந்துள்ளமை சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தக் கூடியதாகியுள்ளது. மேலும் பொதுவாகவே எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறப் போவதில்லை என்ற அனுமானம் இருந்திருந்த நிலையில் இரண்டாவது விருப்பு வாக்குகளையும் கவனித்து பார்க்க வேண்டி வரலாம் என்ற அபிப்பிராயங்கள் நிலவிய சூழ்நிலையில் கோத்தாபய அவர்கள் 52.5 வீத வாக்குகளை பெற்றுள்ளமை மனதில்  பதிய வைப்பதாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்கு சிறுபான்மை இனத்தவர்களதும், சமயத்தவர்களதும் ஆதரவு அத்தியாவசியமாக தேவைப்படும் என்ற சிந்தனைவாதம் மாத்திரமே இப்போது அழிந்து விட்டதாக கூற முடியாது. மனதிலும் அரசியலிலும் ஏற்பட்டுள்ள வேதனைகள் காரணமாக தெளிவாக இனங்காணக்கூடிய வகையில் அரசியலில் முனைவாக்கம் நிலவுகின்றது என்பதனை தெளிவாக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன மற்றும் சமய சிறுபான்மையினர் புதிய ஜனாதிபதிக்கு எதிராக பெருமளவிலான விகிதாசாரத்தில் வாக்களித்துள்ளமையினையும் அது பெரும்பான்மையினத்தவர் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ள விகிதாசாரத்தைவிட அதிகமானது என்பதனையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆறு மாதங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களினால் ஏற்பட்ட இனங்களிடையேயான வேறுபாடுகளை சமப்படுத்தும் பணி ஜனாதிபதியை எதிர்கொள்ளும் பெரும் சவாலாகும். ஆனாலும் நாட்டில் நிலவும் இன, சமய வேறுபாட்டு உணர்வுகள் ஒரு புதிய அல்லது அண்மைக்காலத்திலேயே ஏற்பட்ட ஒரு அம்சம் என்றும் கூறுவதற்கில்லை. வட அயர்லாந்து, சேர்பியா, இஸ்ரேல் போன்ற நாடுகளை ஒத்த வகையில் இலங்கையிலும் இவ்வேறுபாடுகள் பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டதாக காணப்படுகின்றது.
சிங்களவர்களது வரலாற்றிற்கான பிரதான ஆதாரமான மகாவம்சம் என்னும் நூல், தென்னிந்தியாவிலிருந்து ஏற்பட்ட தமிழர்களுடைய படையெடுப்பில் இருந்து பௌத்த மதத்தையும், சிங்கள இனத்தையும் பாதுகாத்தமை பற்றிய மையக் கருத்துக்களைக் கொண்டதாகும். ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அரசன் துட்டகைமுனு தமிழரசனான எல்லாளன் என்பவரை போரில் வென்று நிர்மாணித்த அநுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாய என்னும் புனித பௌத்த கோவிலில் வைத்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ பதவியேற்றமை பழைய வரலாற்று சம்பவங்களை மீள நினைவுப்படுத்துவதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளை 2009 ஆம் ஆண்டு வெற்றி கொண்டபோது பாதுகாப்பு செயலாளராயிருந்தவர், இந்த சமயம் சார்ந்த இடத்தில் சனாதிபதியாகப் பதவி ஏற்றுள்ளமை தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலான கடந்த காலத்தின் ஒலியலையெதிர்வாக காணப்படலாம். யுத்தத்தில் வெற்றியடைந்த துட்டகைமுனு போரில் கொல்லப்பட்ட தனது எதிரியின் உடலை தகனம் செய்து, அந்த இடத்தில் சமாதிக் கட்டி அதனைக் கடந்து செல்பவர்கள் நடந்து மட்டுமே செல்லலாம் என்று நிபந்தனை விதித்து கௌரவித்தமை பற்றி மகாவம்ச செய்திகளை கூறுகிறது.
அவசரப் பணிகள்
ஜனாதிபதி ராஜபக் ஷவின் தேர்தல் பிரசாரம் தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை வழங்கியிருந்தது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு முன்னைய அரசாங்க தலைமைத்துவம் பாதுகாப்பு ஏற்பாடுகளின் தோல்வியினை அடைந்தமை புதிய ஜனாதிபதிக்கு பெரும் ஆதரவினைக் கொண்டு வந்தது. இக்குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் இஸ்லாமிய தீவிரவாதம் மீதான நாட்டின் பெரும்பான்மையினத்தவரது பேரச்சத்தினை மீண்டும் புதுப்பித்துள்ளதோடு, அது இலங்கையின் எல்லைகளைத் தாண்டிய பகுதிகளிலிருந்து வரும் சர்வதேச மற்றும் உள்ளூர் சிறுபான்மையினரது தீவிரவாத வன்முறைகள் என்ற திகிலையும் ஏற்படுத்தியிருந்தது. பாதுகாப்பின்மையினால் அச்சமுற்றிருந்த சிங்கள பெரும்பான்மையினருக்கு ஜனாதிபதி ராஜபக் ஷ அளித்த தேர்தல் பிரசாரத்தில் பாதுகாப்பு பற்றிய உறுதிமொழிகள் தம்மை அவர் காப்பாற்றுவார் என்ற மீளுறுதியைத் தந்துள்ளது. ஆனால் மறுபுறத்தில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முன்னுரிமையால் சிறுபான்மை இன மற்றும் சமயத்தவர்களால் அது தம்மை மீண்டும் நசுக்குவதற்கான முன்னேற்பாடு என்று அச்சமுற்றனர்.
ஜனாதிபதி ராஜபக் ஷவுக்கு தற்போது அவசரமாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் பல உள்ளன. சிறுபான்மை இனத்தவர்களையும் சமயத்தவர்களையும் இவர் எதுவித பாரபட்சமுமின்றி சமத்துவமாக நடத்துவார், அதுபோன்றே பாதுகாப்பும் அளிப்பார் என்ற நம்பிக்கைகளை பெருக்கும் வகையிலான கொள்கைகளை அவர் உருவாக்கி நடைமுறைப்படுத்துவது அவற்றில் முன்னுரிமை கொண்டதோர் தேவையாகும். கடந்த காலத்தில் தேசிய பாதுகாப்பு பற்றிய கரிசனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளினது தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மட்டுப்படுத்திய பின்னணியில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களால் பாதிப்புக்குள்ளாகிய தமிழ் மக்கள் இன்னமும் அவற்றின் தாக்கங்களின் வேதனைகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தின் பின்னர் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக பல தாக்குதல்கள் இடம்பெற்ற போது மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் அவற்றை கட்டுப்படுத்த தவறியிருந்தது. குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தவறியிருந்தது. வன்முறையுடன் செயற்பட்ட சிங்கள தீவிரவாத குழுக்களுக்கும் அவர்கள் ஆதரவளித்ததாகவும் நம்பப்பட்டது. தேர்தல் பிரசாரங்களின்போது அரசியலில் நன்கு பிளவுபட்டிருந்த சக்திகளினால் இத்தகைய வன்செயல்கள் பற்றிய நினைவுகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
தனது தேர்தல் வெற்றியினை அடுத்து ஜனாதிபதி ராஜபக் ஷ (கோ) ஆற்றிய உரையில் அவர்தான் தனக்கு வாக்களித்தவர்களுக்கு மாத்திரமன்றி வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் உட்பட இன, சமய வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து பிரஜைகளுக்கும் தானே ஜனாதிபதி என்று குறிப்பிட்டமை பாராட்டிற்குரிய கருத்தாகும்.
சிறுபான்மையினரைப் பொறுத்து இரண்டு பிரதான விடயங்கள் கரிசனத்திற்குரியனவாகும். முதலாவது தனிநபர் மற்றும் முழு சமூகத்தினதும் பாதுகாப்பு ஏற்பாடுகளாகும். புதிய ஜனாதிபதிக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அனுப்பி வைத்துள்ள பாராட்டுச் செய்தியிலிருந்து இது தெளிவாக தெரிகிறது. அவருடைய செய்தியில் “அவசரமான முன்னுரிமை கொண்ட தேவை சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், அவற்றை மதித்து நடத்தல் மற்றும் நாட்டின் பன்மைவாத சனநாயக பெறுமானங்களை பேணிப் பாதுகாத்தல் என்பனவாகும்” என்று கூறப்பட்டிருந்தது. இவற்றோடு தமது சனநாயக உரிமைகளை வெளிப்படுத்தி பின்பற்ற சிறுபான்மை மக்களுக்கு இடமளிப்பதும் அத்தியாவசியமானதாகும். குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரான ஏழு தசாப்தங்களாக தமிழ் மக்கள் இதனைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய தொலைநோக்கு
தனியாரதும் சமூகத்தினதும் பாதுகாப்பினை உறுதி செய்வது கடந்த காலங்களைவிட இப்போது இலகுவாக இருக்கும். யுத்தம் முடிவுற்று பத்து வருடங்கள் கழிந்துவிட்டன. கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் மக்கள் தமது அச்சங்களிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக இருந்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது அரசாங்கமும் பேணிய கட்டுப்பாட்டு செய்முறைகள் பயனுள்ளவையாக இருந்தன. அவற்றோடு பொலிஸ், மனித உரிமைகள், நீதித்துறை ஆகிய நிறுவனங்களும் அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக இயங்கக் கூடியதாக இருந்தன. உயர் மட்டத்திலான இத்தகைய செயல் நடவடிக்கைகள் காரணமாக பின்னர் மாவட்ட, உள்ளூர் மட்டங்களிலும் உள்ளூர் சமயங்களுக்கிடையிலான பேரவைகள் போன்றவை உள்ளூராட்சி அரசாங்க அதிகாரிகள் சமூக மட்ட தலைவர்கள் என்பவர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட செயல் நடவடிக்கைகளால் வலுவடைந்திருந்தன.
அரசியல் உரிமைகள், கடந்தகால அத்துமீறல்கள் தொடர்பான நீதி தொடர்பில் புதிய ஜனாதிபதிக்கு இன மற்றும் சமயங்கள் சார்ந்த சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை பிரிவினரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகளைக் கொண்டுவர தேவையான கலந்தாலோசனைகளைச் செய்ய போதிய கால அவகாசம் தேவைப்படும். இத்தகைய பிரச்சினைகளை இப்போதைய அரசாங்கத்தினால் தீர்த்து வைக்க முடியாமல் போனமைக்கு இன, சமய பெரும்பான்மையினரை தன்னுடன் அது இணைந்து செல்ல முடியாது போனமை பிரதான காரணமாகும். அது இறுதியில் ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கும் காரணமாயிற்று. இன பெரும்பான்மையினரது பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ள ஜனாதிபதி ராஜபக் ஷவுக்கு இப்போது தெளிவான முறையில் வேறுபாடுகளுக்கான மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது.
ஜனாதிபதி ராஜபக் ஷ நாட்டு மக்களிடம் தனது உறுதி மொழிகளை மீளக்கூறியமை முதலாவது உரையாகும். அவர் அரசாங்க அதிகாரிகளிடம் அரச அலுவலகங்களில் தனது புகைப்படங்களை தொங்கவிட வேண்டாம், அரசின் குடியரசு இலச்சினையையே படமாக தொங்கவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது வளர்ச்சியுற்றுள்ள நாடுகளில் நிலவும் புதிய சம்பிரதாயமாகும். இதுவரை இலங்கையில் அத்தகைய சம்பிரதாயம் பின்பற்றப்படாமலே இருந்தது.
இவ்வாறான ஒரு சம்பிரதாயம் அரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு வேறுபாட்டினை தெளிவாக அடையாளம் காட்டுவதாக தென்படுகிறது. அதனை புதிய ஜனாதிபதி கொண்டு வந்து நாட்டின் ஆட்சி பற்றிய சிந்தனையில் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அரசியலின் அனைத்து மட்டங்களிலும் இவ்வாறு சட்டத்தின் அடிப்படையிலான அணுகுமுறையினை அறிமுகப்படுத்துவது ஒரு பெரும் சவாலாக இருக்கும். அத்துடன் ஜனாதிபதி ராஜபக் ஷ தேர்தல் வெற்றியைத் தனது ஆதரவாளர்கள் அமைதியான முறையில் கொண்டாகும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். வன்முறை என்பது பௌதிக ரீதியாக ஊறுவிளைவிப்பது மாத்திரமாகாது. ஜனாதிபதியை தேர்தலில் ஆதரித்த தரப்பினர் சிறுபான்மை இனத்தவர்களையும், சமயத்தவர்களையும் தேசத்துரோகிகள் என்று வகையிலான வெறுப்பேற்படுத்தும் உரைகளை ஆற்றுகின்றனர். எனவே சிறுபான்மை இன, சமய பிரிவினரிடமும் நல்லிணக்கச் சிந்தனைகளை மீள உறுதி பெறும் வகையில் இவ்வாறான பேச்சுகளை ஒரு முடிவுக்கு கொண்டுவர ஆவண செய்து பிளவுபட்டுள்ள அரசியலை மீள ஐக்கியமுற ஆவண செய்யும் தேவையும் ஜனாதிபதிக்கு உண்டு.   
ஜெஹான் பெரேரா - நன்றி வீரகேசரி 


No comments: