பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 21


மன்னிப்பு

ஏவி. எம். ராஜன், ஜெய்சங்கர் இருவரும் முன்னணி நடிகர்களாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தார்கள்.  அந்தப் படம் தான் மன்னிப்பு.

ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் ஜோடியாக நடிக்க வைத்து படங்களை தயாரித்தவர் மோகன்ராம்.  இவர் தயாரித்த ராஜா வீட்டுப் பிள்ளை முத்துச் சிப்பி படங்களில் இவர்கள் இருவரும் நடித்தார்கள். ஆனால் மூன்றாவது படத்தில் இணைந்து நடிப்பதில் ஒரு பெரிய நடிகரின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் ஜெயலலிதா ஒதுங்கிக் கொள்ள லஷ்மி நடித்தார்.  இரண்டாவது நாயகியாக வெண்ணிற ஆடை நிர்மலாவும் தோன்றினார்.  இவர்களுடன் சுந்தரராஜன் நாகேஷ் மனோகர் பி. கே. சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர்.  
கிராமத்து அருவியில் குளிக்கச் செல்லும் இளம் பெண்ணை பணக்கார வாலிபன் ஒருவன் பலாத்காரம் செய்ய முனைகிறான்.  அதனை தடுக்க முனையும் ஒருவர் தாக்கியதில் வாலிபன் இறக்கிறான்.  தடுக்க முனைந்தவன் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்படுகிறது.

அவனுக்காக வாதிடும் இளம் வக்கீல் பெண்ணின் கற்பு உயிரைவிட மேலானது அதைக் காக்க செய்த கொலை தண்டனைக்குரியதல்ல என்று வாதிட்டு வெற்றி காண்கிறார்.  ஆனால் சில காலம் கழித்து கற்புக்காக குரல் கொடுத்த வக்கிலே ஒரு இளம் பெண்ணை பலாத்காரம் செய்யும் நிலைக்கு உள்ளாகிறான்.  குண நேரசபலம் ஒரு பெண்ணின் உயிரையே பறித்து விடுகிறது.

இதுதான் மன்னிப்பு படத்தின் கதைச்சாரம்.  இளம் வக்கீலாக ஏவி. எம். ராஜன் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருந்தார்.  அவரின் தங்கையாக லஷ்மி தோன்றி ஜெய்சங்கரை ஒரு தலையாகக் காதலிக்கிறார்.  ஆனால் ஒவியராக வரும் ஜெய்சங்கரும் பாட்டு டீச்சராக வரும் நிர்மலாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.

மன்னிப்பு படத்தின் கதை வசனத்தை பிரபல கதாசிரியர் துறையூர் கே. மூர்த்தி எழுதியிருந்தார்.  படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றியிருந்தார்.  டி. எம். எஸ். சுசிலா, சீர்காழி இவர்களுடன் நீண்ட காலத்திற்கு முன்னர் ஏ. டி. கோமளாவும் ஒரு பாடலை பாடியிருந்தார்.
அனுபவமிக்க இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையாநாயுடு படத்திற்கு இசையமைத்திருந்தார்.  

நீ எங்கே என் நினைவுகள் அங்கே வெண்ணிலா வானில் வரும் வேளையில் குயிலோசையை வெல்லும் ஆகிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் காதுகளில் ரீங்காரமிடுகின்றன.

நாவிதனாகவும், நாயனக்காரராகவும் வரும் நாகேஷீக்கும் படத்தில் முக்கிய வேடம் வழங்கப்பட்டிருந்தது.  லஷ்மி ராஜனின் தாயார் வேடத்தில் பி. கே. சரஸ்வதி இயல்பாக நடித்து படத்தின் திருப்பத்திற்கும் உதவுகிறார்.

69ல் வந்த மன்னிப்பில் பாலியல் பலாத்தாரத்தினால் கொலைச் செயலுக்கு உள்ளாகும் கதாநாயகன் இறுதியில் மன்னிப்பு கேட்டு தன் உயிரையும் துறக்கிறான்.

ஆனால் 19ம் ஆண்டில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துp கொலை செய்த ஒருவனுக்கு இலங்கையில் முன்னாள் ஜனாபதியினால் மன்னிப்பு வழங்கப்படுகிறது.  சுpனிமாவில் தண்டனை.  நிஜ வாழ்வில் மன்னிப்பு!
No comments: