19/11/2019 இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதவியேற்றுக்கொண்டார். நடந்து முடிந்த 8ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 6924255 வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 52.25 வீதத்துடன் வெற்றிவாகை சூடியிருக்கிறார். மிகவும் பரபரப்பாகவும் கடுமையான போட்டிக்கு மத்தியிலும் நடைபெற்ற இந்த தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் மிக அமோகமாக ஆதரவளித்து வாக்குகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.
தேர்தலில் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எனக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக பாரபட்சமின்றி சிறந்த சேவையாற்றுவேன் என்று தெரிவித்திருக்கின்றார். மக்கள் என் மீது கொண்ட நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவேன். நான் தேர்தல் பிரகடனத்தில் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் எவ்வித பாரபட்சமுமின்றி நடத்தப்படுவார்கள் என்றும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்ட இந்த கருத்துக்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன. ஜனாதிபதி அதற்கேற்றவகையில் அவர்மீது வைத்துள்ள எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் நிறைவேற்றுவார் என மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனாலேயே இந்தளவு பாரிய வெற்றியை வழங்கியுள்ளனர்.
நடந்து முடிந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் பல்வேறு செய்திகளை வழங்குவதாகவே அமைந்திருக்கின்றன. தென்னிலங்கை முழுவதும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு முழு அளவில் மக்கள் ஆதரவு வழங்கியிருக்கின்றனர். அதேபோன்று வடக்கு, கிழக்கில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் ஆதரவு வழங்கியிருக்கின்றனர்.
எனினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை என்ற போதிலும் அங்கும் மக்களின் ஆதரவு அவருக்கு இருந்திருக்கிறது. இரண்டு மாகாணங்களிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வுக்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பினும் குறிப்பிடத்தக்களவில் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. யாழ். மாவட்டத்தில் 23261 வாக்குகளையும் வன்னி மாவட்டத்தில் 26105 வாக்குகளையும் ஜனாதிபதி பெற்றிருக்கின்றார்.
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் 135058 வாக்குகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 38460 வாக்குகளையும் திருகோணமலை மாவட்டத்தில் 54135 வாக்குகளையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷபெற்றிருக்கின்றார்.
அதேபோன்று மலையகத்திலும் தமிழ் மக்களின் ஆதரவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கணிசமாக கிடைத்திருக்கின்றது. நுவரெலியா மஸ்கெலிய தொகுதியில் 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் ஜனாதிபதிக்கு கிடைத்திருக்கின்றன. இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வடக்கு, கிழக்கில் ஒப்பீட்டு ரீதியில் அதிகளவான வாக்குகள் கிடைக்காவிடினும்கூட அப்பகுதிகளின் மக்களின் ஆதரவு அவருக்கு இருந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
இந்த சூழலில் புதிய ஜனாதிபதிக்கு நாட்டை முன்கொண்டு செல்வதில் பல சவால்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். புதிதாக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இதற்கு முன்னர் சுமார் ஒன்பது வருடங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். யுத்தத்தை முடிப்பதற்கு பாரிய பங்களிப்பை வழங்கியவர். எனவே அவர் இந்த நாட்டை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டுசெல்வார் என்ற எதிபார்ப்பு நாட்டு மக்களினால் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.
உண்மையில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை மக்கள் நிராகரித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பாரியளவில் ஆதரித்தமைக்கு என்ன காரணங்கள் என்பது தொடர்பில் ஆராயவேண்டியிருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. மிக முக்கியமாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இந்த நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலினால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட ஒரு அச்ச உணர்வைக் குறிப்பிடலாம். முழு உலகையே உலுக்கிய இந்த தாக்குதலின் தாக்கம் மக்களை பாரியளவில் பாதித்துள்ளது. இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் சில வாரங்கள் மக்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருந்தனர். அந்தளவிற்கு பாதுகாப்பு தொடர்பாக ஒரு அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரண்டு பிரதான வேட்பாளர்கள் தொடர்பிலும் பல்வேறு அனுமானங்களை செய்திருக்கலாம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷஇந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் பாரியதொரு நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை அளித்திருக்கலாம். அதுமட்டுமன்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷதமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறான குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு தனது ஆட்சியில் இடமளிக்கப்படமாட்டாது என்ற உறுதியை வழங்கியிருந்தார். அதேபோன்று கடந்த காலத்தில் பாதுகாப்பு பலவீனமாக காணப்பட்டதாகவும் அது மீண்டும் பலப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் எடுத்துக்கூறியிருந்தார். அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரித்து பொறுப்பை தட்டிக்கழித்தவர்கள் தொடர்பாக ஆராய சகல அதிகாரங்களும் கொண்ட ஒரு சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தார்.
எனவே நாட்டு மக்கள் மத்தியில் இந்த விடயம் ஒரு பெரும் செல்வாக்கை செலுத்தியிருக்கிறது. பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய அதனை கடந்த காலத்தில் செய்துகாட்டிய ஒருவரை நாட்டின் தலைவராக தெரிவு செய்யவேண்டும் என்ற தீர்மானத்தை மக்கள் பெருவாரியாக எடுத்திருப்பதை காணமுடிகின்றது. அதேபோன்று கடந்த நான்கரை வருடகாலமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய கெடுபிடிகளை சந்தித்திருக்கின்றது. பொருளாதார வளர்ச்சிவீதமானது குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. ஏப்ரல் குண்டுத்தாக்குதலை யடுத்து வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன பாரிய நெருக்கடிகளை சந்தித்தன. எனவே இந்த அனைத்து விடயங்களும் மக்களின் புதிய ஜனாதிபதி தெரிவில் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன என்பது மிக முக்கியமாகும்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மக்கள் செல்வாக்கும் முக்கிய காரணமாகும். மஹிந்த ராஜபக்ஷ பெரும்பாலும் அனைத்து பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றினார். அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக் ஷவின் ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல்கள் என்பனவும் ஜனாதிபதியின் வெற்றியில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளன.
இதேவேளை புதிய ஜனாதிபதி மீது மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் பல்வேறு விடயங்களில் காணப்படுகின்றன. கல்வித்துறை தொடர்பாக கோத்தாபய ராஜபக்ஷ பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். உயர்தரப்பரீட்சையில் பல்கலைக்கழக தகுதிபெறும் அனைவருக்கும் அந்த சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியிருக்கிறார். எனவே அது தொடர்பான நடவடிக்கைகள் புதிய ஜனாதிபதியினால் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் இளைஞர், யுவதிகள் ஜனாதிபதி கோத்தபாய மீது பாரிய நம்பிக்கை வைத்திருப்பதை காண முடிகின்றது. அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்து சரியான நேர்த்தியான தீர்க்கமான கொள்கைகளை உருவாக்க புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் வேலையின்மையை குறைப்பதற்கும் இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு வகையிலான தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கும் புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவை தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷமுன்வைத்துள்ள யோசனைகள் வாக்குறுதிகள் மக்களை கவர்ந்துள்ளன. அதனாலேயே இவ்வாறு ஒரு பாரிய மகத்தான மக்கள் ஆணை அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த வாக்குறுதி விரைவாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அதேபோன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 32 கொள்கைத்திட்டங்களை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தது. அவற்றை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். இதனால் மலையக மக்களின் கணிசமான ஆதரவு புதிய ஜனாதிபதிக்கு கிடைத்திருக்கின்றது.
இந்நிலையில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகளை புதிய ஜனாதிபதி வழங்குவார் என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இது இவ்வாறிருக்க வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டியிருக்கிறது. தனது விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். எனவே அந்த புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் புதிய ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமன்றி காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் தீர்வு என பல விடயங்கள் குறித்து புதிய ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது.
மேலும் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்கள் தொடர்பாகவும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டும். விசேடமாக கணவனை இழந்த பெண் குடும்பத் தலைவிகள் தமது குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கான வாழ்வாதார ஏற்பாடு செய்து கொடுப்பது அவசியமாகும்.
இவ்வாறு பல்வேறு விடயங்கள் குறித்து புதிய ஜனாதிபதி அவசரமாக கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாண்பது என்பது இலகுவான விடயமல்ல. பல்வேறு சவால்களை புதிய ஜனாதிபதி எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அந்த சவால்களை முறியடித்து அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் புதிய ஜனாதிபதி வெற்றிகாண்பார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை ஜனாதிபதி பூர்த்தி செய்யவேண்டும்.
கடந்த காலத்தில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை குழப்பவும் தேசிய ஒற்றுமையை குழப்பவும் சில விஷமிகள் முயற்சித்திருந்தன. அவ்வாறான முயற்சிகள் எதுவும் இனிவரும் காலங்களில் எந்தத்தரப்பினராலும் முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. இந்த விடயத்தில் புதிய ஜனாதிபதி முன் பாரியதொரு பொறுப்பு உள்ளது என்பதே யதார்த்தமாகும்.
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு பிரச்சினைகளினால் விரக்தி அடைந்த மக்கள் தற்போது புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை மற்றும் மக்கள் ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அந்த மக்களின் ஆணையை ஜனாதிபதி சரியாக பயன்படுத்தி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வறுமையை ஒழித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக தனது தேர்தல் பிரசார காலத்தில் மிக அதிகளவில் பேசியிருக்கிறார். அந்த வகையில் நாட்டில் வறுமையை ஒழித்து மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். அதேபோன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் எமது நாட்டை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான செயற்றிட்டங்கள் இடம்பெறவேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனூடாக மக்கள் ஆணையுடன் அரசாங்கமொன்று அமைக்கப்பட்டு நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும்.
சட்டம் ஒழுங்கு சரியான முறையில் நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரசாரக் காலத்தில் மிக அதிகமாக பேசியிருக்கிறார். எனவே நாட்டில் குற்றச்செயல்கள் இடம்பெறாதவகையில் சட்டம் ஒழுங்கை சரியான முறையில் நிலைநாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் புதிய ஜனாதிபதியின் கீழ் முறையாக இடம்பெறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த இரண்டு மாதகாலமாக நாட்டின் அனைத்து தரப்பினரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அனல் பறக்கும் பிரசாரங்கள் இடம்பெற்றன. தற்போது அனைத்து விடயங்களும் முடிவுக்கு வந்திருப்பதுடன் புதிய ஜனாதிபதியும் நாட்டுக்கு தலைமை ஏற்றிருக்கின்றார். எனவே புதிய ஜனாதிபதியின் தலைமையில் இந்த நாடு செழிப்பாக முன்னேறுவதற்கும் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கும் ஜனாதிபதிக்கு பலம் கிடைக்கவேண்டும் என நாமும் வாழ்த்துகிறோம்.
ரொபட் அன்டனி - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment