மழைக்காற்று தொடர்கதை - அங்கம் 11 - முருகபூபதி


சுபாஷினியின் அறைக்குள் அபிதா பிரவேசித்தபோது, ஜீவிகாவும் மஞ்சுளாவும் சமையலறையிலிருந்தனர்.
அந்த வீட்டுக்கு  வந்த நாளன்று காலையில்,  தனது கைபற்றி வரவேற்றவள் சுபாஷினி மாத்திரம்தான்  என்பதை அபிதா மறக்கவில்லை. அக்கணத்தில் சுபாஷினியிடமிருந்து கிடைக்கப்பெற்ற கனிவான வார்த்தைகள் இன்னமும் அபிதாவின் செவிகளில் ரீங்காரமிடுகின்றன.   
அங்கிருக்கும் ஒவ்வொருவரதும் குணஇயல்புகளை நன்கு தெரிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்துகொள்வதற்கு அபிதா தன்னை தயார்படுத்தியிருந்தாள்.
ஜீவிகா,   இந்த மழைக்காலத்தில் எடுத்துச்சென்ற குடையை மறக்காமல் பத்திரமாக எடுத்துவரவில்லை என்பதை சுபாஷினி சுட்டிக்காண்பித்தமையால் எழுந்த  சாதாரணமான வாய்த்தர்க்கம் விபரீதமாகிவிட்டதனால், அடுத்து என்ன நிகழுமோ என்ற பயம் அபிதாவை பற்றிக்கொண்டாலும், வெளியே காண்பிக்கவில்லை.  மஞ்சுளாவுக்கும் ஜீவிகாவுக்கும் அன்றைய பொழுதும் வழக்கம்போலவே கழிந்துகொண்டிருக்கிறது.
அடிக்கடி இங்கு இவர்களுக்குள் நடக்கும் வாதங்கள், சூரியனைக்கண்ட பனிபோன்று மறைந்துவிடுமா..? ஆனால், ஜீவிகா, எய்த அம்பினால், அடிபட்ட மான்போன்று துள்ளிக்கொண்டு சுபாஷினி ஓடி தனது அறைக்குள் மறைந்துகொண்டதுதான் அபிதாவின் மனதை வாட்டிக்கொண்டிருக்கிறது.
அந்த ஓட்டோகாரன் குடையை கொண்டுவந்து கொடுத்துவிட்டான். பிரச்சினை அத்தோடு முடிந்துவிட்டது. கொட்டிய அரசியை பொறுக்கி எடுத்துவிடலாம், கொட்டிவிடும் வார்த்தைகளை  அவ்வாறு பொறுக்கிவிடமுடியுமா..?
சுபாஷினி,  எதனை பத்திரப்படுத்தி பாதுகாக்கத்தவறினாள்..? அதனை ஏன் ஜீவிகா குத்திக்காண்பித்து இடித்துரைத்தாள்..?
சுபாஷினி முகம்குப்புறப்படுத்துக்கிடக்கிறாள். அபிதா கட்டிலருகில் சென்று அமர்ந்து, அவளது நீண்ட கூந்தலை தடவி வருடிவிட்டாள். அந்த ஸ்பரிசம் அபிதாவுடையதாகத்தான் இருக்கும் என்பது சுபாஷினிக்குத் தெரியும்.
முகத்தை திருப்பாமலேயே,   “ அபிதா, நீங்க போங்க. நான் பிறகு வாரன். கொஞ்சநேரம் தனியே இருக்கவிரும்புறன்.   
அபிதா,  குனிந்து அவளது முகத்தைத்திருப்பினாள். அவளது கண்கள் சிவந்திருப்பதைப்பார்த்து அபிதா கலவரமுற்றாள்.
 “ ஏன்… ஏன்… எதற்காக அழுதீங்க..?   “அபிதா கேட்டதும் சுபாஷினியிடமிருந்து விம்மல் வெடித்தது.
சமையலறையிலிருக்கும் ஜீவிகாவும் மஞ்சுளாவும் இங்கே வந்துவிடக்கூடாது என்பதில் இவர்கள்  இருவரும்  எச்சரிக்கையாக இருந்தனர்.
 “ என்ன நடந்தது…? ஜீவிகா, அப்படி என்ன சொன்னாங்க…?  “ சுபாஷினியின் கூந்தலை வருடியவாறு அபிதா கேட்கிறாள்.
 “ இப்ப… நீங்க போங்க… பிறகு சொல்கிறேன். நாளைக்கு லீவு எடுக்கிறேன். அப்போது எல்லாம் சொல்வேன். நீங்க போய் சமையலைக்கவனியுங்க… அந்த ஸ்கூல் பிள்ளைகளுக்கு நீங்கள் பேச்சும் எழுதிக்கொடுக்கவேண்டும் இல்லையா…. “ சுபாஷினி முகத்தை துடைத்துக்கொண்டு அபிதாவை அங்கிருந்து போகுமாறு கெஞ்சினாள்.
அபிதா அங்கிருந்து அகன்றபின்னர், வீட்டு வேலைக்குவந்த பெண்ணிடம் தனது தனிப்பட்ட விவகாரங்களையெல்லாம் பகிர்ந்துகொள்ளலாமா…? என்ற யோசனையும் சுபாஷினிக்கு  வந்தது.
சமையலறைக்குத் திரும்பிய அபிதா, இரவுச்சாப்பாட்டை துரித கதியில் தயாரித்து முடித்துவிட்டு, கைககளை உயர்த்தி சோம்பல் முறித்தாள்.
ஜீவிகா, உணவருந்தும் மேசையில், கணினியில் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருந்தாள். அதனைப்பார்க்கும் அபிதாவுக்கு, தானும் கணினியில் எழுதிப்பழகவேண்டும் என்ற விருப்பம் வந்தது. யாரிடம் கேட்டுப்படிப்பது. இந்த வீட்டில் தன்னோடு மிகவும்  நெருக்கமாக இருப்பவள் சுபாஷினிதான். அவளும் இப்போது மூட் அவுட்டாகியிருக்கிறாள்.
கணினியில் எழுதிப்பழகுவதற்கு முதலில் ஒரு மடிக்கணினியும் வேண்டும்.  சுபாஷினியிடமும் இருக்கிறது.  கடைத்தெருவுக்கு செல்லும் வழியில் தென்படும்  கொமியுனிகேஷனுக்குச்  சென்றாலும் படிக்கமுடியும். யார் சொல்லித்தருவார்…? அதற்கும் நேரம் தேடவேண்டும்.
அபிதா, சமைத்த உணவுகளை பாத்திரங்களில் எடுத்து மேசையில் வைத்தாள். கேஸ் அடுப்பை துடைத்து அவ்விடத்தை சுத்தம்செய்துவிட்டு,   “ சாப்பாடு ரெடி. சாப்பிட வரலாம்  “ என்று உரத்து குரல்கொடுத்துவிட்டு, குளியலறைக்குள் சென்றாள்.
குளித்துவிட்டு திரும்பிவரும்போது,  ஜீவிகாவும் மஞ்சுளாவும்  உணவருந்திக்கொண்டிருந்தனர். மேசையில் ஜீவிகாவின் கணினி இல்லை.
சுபாஷினி, இன்னமும் மேசைக்கு வரவில்லை. அபிதா, மீண்டும் அவளது அறைக்குச்சென்றாள். இப்போது அவளிடமிருந்து மென்மையான குறட்டை ஒலிகேட்கிறது. உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
அவள் இரவுணவு சாப்பிடாமல் உறங்கியது அபிதாவை வருத்தியது. ஜீவிகாவும், மஞ்சுளாவும் மேசையிலிருந்து அகலும் வரையில் அபிதா பொறுமை காத்தாள்.
 “ நாளைக்கு காலையில் என்ன செய்யவேண்டும்..?  “ ஜீவிகாவைப்பார்த்து அபிதா கேட்டாள்.
 கேட்டதும், ஜீவிகாவுக்கு, கி. ராஜநாராயணன் எழுதிய வேலை… வேலையே வாழ்க்கை என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது.
அதில்வரும் பெண், காலை முதல் இரவு உறங்கச்செல்லும் வரையில்  அயராமல், தொடர்ந்து வீட்டுக்காகவே உழைத்துக்கொண்டிருப்பாள். அந்த வாழ்க்கைக்கே பழக்கமாகிவிட்டிருப்பாள்.
இவள் அபிதாவும் இங்கு வந்ததுமுதல் அப்படித்தான் இருக்கிறாள். சில நிமிடங்களுக்கு முன்னர்தான், எமக்கெல்லாம் புட்டும் அவித்துத்  தந்து, அதற்கேற்றவாறு கறிவகைகளும் செய்து கொடுத்தவள். இத்தனைக்கும் இன்னமும் இரவு உணவு சாப்பிடாதவள்.  இன்னும் பல மணிநேரங்களின் பின்னர் உதயமாகவிருக்கும் மறுநாள் காலையில் என்ன வேண்டும்..? எனக்கேட்கிறாளே…!
ஜீவிகா, அபிதாவை வியப்புக்குறியோடு பார்த்துவிட்டு,                        “ முதலில் நீங்க சாப்பிடுங்க. என்ன… அந்த ரோஷக்காரி இன்னமும் அறையை விட்டு வெளியே வரவில்லையா..?  “ எனக்கேட்டாள்.
 “ அவுங்க தூங்கிட்டாங்க. சொல்லுங்க… நீங்கள் இரண்டுபேரும் காலையில் என்ன சாப்பிடப்போறீங்க…? வேலைக்கு எடுத்துச்செல்ல என்ன செய்யவேண்டும்…? “ அபிதா கருமமே கண்ணாயிருந்தாள்.
சுபாஷினி, நாளை வேலைக்குப்போகமாட்டாள் என்பதை தெரிந்துவைத்திருக்கும் அபிதா, அதுபற்றி இவர்கள் இருவரிடமும் சொல்லவில்லை.
இவளுக்கு முன்னால் இப்போது மூன்று நான்கு வேலைகள் காத்திருந்தன. இரவுணவின் பின்னர் சமையலறையை கூட்டிச்சுத்தம்  செய்யவேண்டும். நாளை காலை உணவு, வேலைக்குச்செல்பவர்களுக்குத் தேவைப்படும் மதிய உணவு பற்றி யோசிக்கவேண்டும். இவற்றுக்கிடையில் அறையிலே விம்மி விம்மி முகம் சிவந்து, உறங்கிவிட்ட சுபாஷினியை துயில் எழுப்பி, உணவருந்தச்செய்து, அமைதிப்படுத்தவேண்டும். மறுநாள் காலையில் பாடசாலை செல்லும் வழியில் தன்னை நம்பி வரவிருக்கும் அந்த இரண்டு மாணவர்களினதும் நாவன்மைப்போட்டிக்கான உரையை எழுதி வைத்துவிடவேண்டும்.
அபிதா, தனது உணவுத்தட்டத்தை எடுத்து புட்டும் கறியும் முட்டைப்பொறியலும் பரிமாறிக்கொண்டு  அமர்ந்தாள்.
மறுநாள் காலையில் பாணும், இரவில் செய்த கறிவகைகளும் போதும் என்றும்  வேலைக்கு எடுத்துச்செல்ல நூடில்ஸ் செய்து தருமாறும் ஜீவிகாவும் மஞ்சுளாவும் ஒருமித்து சொன்னதனால் அபிதா  சற்று ஆறுதலடைந்தாள்.
எஞ்சியிருக்கும் காலத்தில் இந்தப்பெண்களுக்கு ஆக்கிப்போடுவதிலேயே எனது பொழுதுகள் கரைந்துபோய்விடுமோ என்றும் அபிதா தனக்குத்தானே கழிவிரக்கப்பட்டுக்கொண்டாள்.
ஏற்கனவே எடுத்துவைத்திருந்த வெள்ளைக்காகிதங்களில் மாணவர்கள் இருவருக்குமான நாவன்மைப்போட்டிக்குரிய பேச்சை எழுதத் தொடங்கினாள்.
நேரம் கடப்பதும் தெரியாமல் எழுதிக்கொண்டே இருந்தாள். வயதால் பெரியவனான மாணவனுக்கென எழுதியதை, முதலிலிருந்து படித்துப்பார்த்து, சிறிய திருத்தங்கள் செய்தாள்.
அடுத்த மாணவனுக்குரிய பேச்சை எழுதத் தொடங்கியபோது, சுபாஷினி, குளியலறையிலிருந்து வெளிப்பட்டதை பார்த்துவிட்டு, ஆசனத்தை தள்ளிவிட்டு எழுந்து,  விரைந்து வந்து எட்டிப்பிடித்து அணைத்துக்கொண்டாள்.
இப்போது சுபாஷினியின் முகம் தெளிவாக இருந்தது.
 “ வாங்க சாப்பிடலாம். எங்கே, இன்றைக்கு சாப்பிடாமலேயே நித்திரையாகிப்போவீங்களோ என்று நினைத்தேன்.  “ சுபாஷினியின் கைபற்றி அழைத்துவந்து, தான் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமரவைத்துவிட்டு, அதுவரையில் எழுதியிருந்த காகிதங்களை எடுத்து, ஓரமாக வைத்துவிட்டு, சுபாஷினியின் உணவருந்தும் எவர்சில்வர் தட்டத்தை எடுத்துக்கழுவி, அதில் உணவைப்பரிமாறினாள்.
அவ்வாறெல்லாம், அபிதா, ஏனைய மூவருக்கும் செய்வதில்லை.
“ உங்களுக்கு என்மீதிருக்கும் இரக்கத்திற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேனோ தெரியவில்லை. அவுங்க இரண்டுபேரும் சாப்பிட்டாங்களா அபிதா..? 
 “ ஓம்… நீங்க சாப்பிடுங்க.” 
அபிதா, மாணவர்களுக்காக அதுவரையில் எழுதிவைத்திருந்த உரையை எடுத்து வாசித்துக்கொண்டே உணவருந்திய சுபாஷினியின் கண்கள் வியப்பால் விரிந்தன.
அடிக்கடி கடைக்கண்ணால் அபிதாவை பார்த்தவாறே அந்த பக்கங்களை சுபாஷினி மனதிற்குள் படிக்கிறாள்.
அபிதா, மற்றும் ஒரு உரையை எழுதத்தொடங்கிவிட்டாள்.
 “ நடுவர் பெருமக்களே, ஆசிரியர்களே, பெரியோர்களே வணக்கம். இன்று உங்கள் முன்னிலையில் நட்பின் பெருமை பற்றி உரையாற்றுவதற்கு முன்வந்துள்ளேன்.
பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் நியதி. இந்த இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் எவ்வாறு வாழ்கின்றோம் என்பதுதான்  முக்கியம். அந்த வாழ்வில் நமக்கு கிடைக்கும் நல்ல வரப்பிரசாதமே நல்ல நட்பாகும்.
நட்பு அன்பின் மேலீட்டால் வருவது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, முரண்பாடுகள் தோன்றும்போது பரஸ்பரம் சகித்துக்கொண்டு, உளமாற நேசிப்பதற்கு நம்மை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.
நல்ல நட்பின் மகத்துவம் பற்றி எமது பொய்யாமொழிப்புலவர் சொல்வதை பாருங்கள்.
  நவில்தோறும் நூல் நயம்போலும், பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு என்றும் உடுக்கை இழந்தவன்  கைபோல் ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு என்றும், முகம் நக நட்பது நட்பன்று நெஞ்சத்து – அகம் நக நட்பது நட்பு என்றும் சொல்லியிருக்கிறார்.
நல்ல நட்பு கிடைப்பது பாக்கியம்தான். நமக்கு வரும் துன்பங்களை உடனிருந்து களைந்து நல்வழிகாட்டி துன்பத்திலேயே தோய்ந்துவிடாமல் தடுத்தாட்கொள்வதும் சிறந்த நட்பின் அடையாளம்தான்.
சாதி, சமயம், குலம், கோத்திரம், ஏழை, பணக்காரன்  முதலான பேதங்கள் பார்க்காது,  “ அற்றகுளத்தில் அறுநீர்ப்பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் – அக்குளத்தில் கொட்டியும்  ஆம்பலும் நெய்தலும்போலவே ஒட்டி உறுவார் உறவு  என்கிறார் அவ்வைப்பாட்டி.  
 வாய்க்கு ருசியாக சமைக்கும் சமையல்காரியாக வந்திருப்பவளிடத்தில்  இத்தகைய எழுத்தாற்றல் எங்கிருந்து வருகிறது…?  இந்த உரையை  ஏற்கனவே யோசித்துவைத்து எழுதியிருப்பதாகவும் தெரியவில்லை.  இந்த வீட்டில் இன்று நடந்த சின்னஞ் சிறிய சம்பவம்தான்,   அபிதாவை இவ்வாறெல்லாம் எழுதத்தூண்டியிருக்குமோ….?  அன்றைய அனைத்து நிகழ்ச்சிகளும் சங்கிலித்தொடராக நீண்டிருப்பதும் பெரும்  புதிராகிவிட்டதே!
 “ அபிதா,  நீங்கள் ஏன் இந்த வேலைக்கு வந்தீங்க…?  உங்களைப்பார்க்க மிகவும் புதிராக இருக்கிறது.  அன்று பொலிஸ் காரில் அப்பாவிப்பெண்ணாக வந்து இறங்கினீங்க. ஆனால், நீங்கள் அப்பாவி இல்லை என்பதை அவதானிக்கத் தொடங்கிவிட்டோம்.   இப்படியெல்லாம்  எழுதக்கூடிய ஆற்றல் உங்களுக்கு எங்கேயிருந்து வந்தது என்பதுதான் அதிசயமாக இருக்கிறது.  நீங்கள் எழுதியிருக்கும் அவ்வைப்பாட்டியின் பாடல் வரிகள் எனக்கே புரியவில்லை. அந்த பிள்ளைகளுக்கு புரியுமா..? எனக்கேட்டாள் சுபாஷினி.
 “ நாளை வந்ததும் சொல்லிக்கொடுப்பேன்.  அந்த மாணவர்களிடத்தில் இதனைக்காண்பிப்பதற்கு முன்னர் உங்களிடம்தான் வாசித்துக்காட்டுவதற்கு  இருந்தேன். அதற்கிடையில் நீங்களே படிக்கத்தொடங்கிட்டீங்க. நல்லதுதான்.
ஒரு குளம் இருக்கிறது. மழைக்காலத்தில் அங்கு நீர் நிரம்பியிருக்கிறது. கொட்டி, ஆம்பல், நெய்தல் முதலான மலர்கள் அங்கு முளைத்தன. நீர்ப்பறவைகளும் வந்தன. கோடை காலம் வந்தது. குளத்தில் நீர் வற்றியது. நீர்ப்பறவைகள் பறந்து சென்றுவிட்டன. ஆனால், அவ்வாறு பறக்கமுடியாத மலர்கள் அங்கேயே ஒற்றுமையாக வாடிக்கிடந்தன. மீண்டும்  மழை வரும் என்ற நம்பிக்கையோடு. இதுதான் அவ்வைப்பாட்டி சொன்னதன் விளக்கம்.  அது சரி,  நாளைக்கு நீங்க ஏன் லீவு எடுத்து நிற்கப்போறீங்க…?  ஏன் என்பது எனக்குத் தெரியும்.  நாளைக்கு வேலைக்குப்போங்க…. எல்லாம் சரியாப்போய்விடும். நீங்க நாளைக்கு என்ன செய்யப்போறீங்க என்பதும் எனக்குத் தெரியும்.  எதற்காக உங்கள் உடுப்புகளை சூட்கேஸில் அடுக்கிவைத்திருக்கிறீங்க..? வீட்டை விட்டுப்போவதற்குத்தானே…? அதெல்லாம் நடக்காது. நாளைக்கும் வேலைக்குப்போறீங்க.  வாரீங்க. உங்களுக்காக காத்திருப்பேன்.  “ எனச்சொன்ன, அபிதா தொடர்ந்தும்  தலையை உயர்த்தாமல் எழுதிக்கொண்டே இருந்தாள்.
பெட்டியில் உடைமைகளை அடுக்கிவைத்திருப்பதை இவள் எப்போது கண்டாள்.  இவளுக்கு எத்தனை கண்கள்..? எத்தனை பார்வைகள்..?
அபிதாவைப்பற்றிய ஆச்சரியங்கள் சுபாஷினியிடம் விரிந்துகொண்டேயிருந்தன.
தனது வலிகளை இவளிடம் நம்பிச்சொல்லமுடியும். ஆனால், அவ்வேளையில் இங்கு ஜீவிகாவோ, மஞ்சுளாவோ இருக்கக்கூடாது.  நாளைக்கு லீவுபோட்டுவிட்டு, தனக்கு நேர்ந்த அவலத்தை இவளிடம் சொல்லத்தான் வேண்டும்.
சுபாஷினி நேரத்தைப்பார்த்தாள்.  இரவு பதினொரு மணியும் கடந்துவிட்டிருந்தது.  அபிதா  இரண்டாவது பேச்சை எழுதிக்கொண்டிருக்கிறாள்.
( தொடரும்)-->

No comments: