தனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் - ஞானசார
ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்பது இந்தியாவிற்கு முன்னரே தெரிந்திருந்தது- இந்திய ஊடகம்
பொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள் மைக்பொம்பியோ கோத்தாபய ராஜபக்சவிற்கு வேண்டுகோள்
காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தீவிர விசாரணை
யாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு யட்டியாந்தோட்டையில் தமிழர்கள் மீது தாக்குதல்
தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்
ஜனாதிபதி விமர்சித்தமை குறித்து செய்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரித்தானிய தூதரகத்தில் மகஜர்
சிங்கள பெளத்த அரசு உருவானால் சிறுபான்மை மக்களை பாதிக்கும்: ஜே.வி.பி.
லசந்த கொலை உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்த அதிகாரி இடமாற்றம் - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
அமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
தேர்தலை தொடர்ந்து விசமிகளால் அழிக்கப்படும் தமிழ் பெயர் பலகைகள்!
உலகில் இரண்டாவது முறையாக அதியுயர் இருபதவிகளை வகிக்கும் சகோதரர்கள்
நாட்டை அதிர வைத்த குற்றங்கள் தொடர்பில் துப்புத் துலக்கிய சி.ஐ.டி. சிறப்பு விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறினார்
தனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் - ஞானசார
(செ.தேன்மொழி)
19/11/2019 ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
சிங்களதீவின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியோக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நாங்கள் வாழ்த்து தெரிவிப்பதுடன், நாங்கள் இவ்வளவு காலமும் எதிர்பார்த்த சிறந்த தலைவர் எமக்கு தற்போது கிடைத்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்று எண்ணியிருந்தனர். ஆனால் நாங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டே தனிச்சிங்கள தலைவரொருவரை உருவாக்க முடியும் என்று தெரிவித்தோம். அது இன்று நிறைவேற்றப் பட்டுள்ளது.
அரசியல் வாதிகள் சிறுபான்மையினரின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் அவர்களுடன் அரசியல் மேடைகளில் ஏறுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் மேடைகளில் ஏறாவிட்டாலும் சிங்கள தலைவரொருவரை உருவாக்க வேண்டும் என்பதற்காக விகாரைகள் தோறும் எமது பிரசார செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதற்கான பலன் எங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. தேரர்கள் இணைந்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை தற்போது நிரூபித்துள்ளோம்.
வெற்றி ஆரவாரத்தில் இனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படாமல் ஒருமித்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தோல்வியடைந்துள்ள தரப்பினர் நாட்டில் பேதங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். நாம் அவர்களின் வலையில் சிக்காமல் நாட்டை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டும்.
பிக்குகள் என்ற வகையில் எமது இனத்திற்கும் , நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தமையினால் அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் எங்களுக்கென்று சங்கங்களை அமைத்துக் கொண்டு இதுவரையும் செயற்பட்டோம். ஆனால் தற்போது சிறந்த ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எமது புதிய ஜனாதிபதி அவரது பதவியை பொறுப்பேற்றதை அடுத்து கருத்து தெரிவித்தபோது , பௌத்த சாசனத்தை பாதுகாப்பதாகவும், மாநாயக்க தேரர்களின் ஆசிர்வாத்தினாலேயே தாம் வெற்றிப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இதுவே எமக்கு கிடைத்த பெரும் வெற்றி.இவ்வாறான தலைவர் ஒருவர் எமக்கு கிடைத்துள்ள நிலையில் நாங்கள் இனியும் சங்கங்களை அமைத்துக் கொண்டு செயற்பட வேண்டிய அவசியமில்லை. எமது புதிய தலைவர் நாட்டை பாதுகாப்பார் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. அதனால் எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் நாங்கள் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இனிவரும் காலங்களில் தேரர்களாகிய நாங்கள் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக செயற்பட வேண்டும். அதேவேளைசிறந்த ஆட்சியாளன் நாட்டுக்கு கிடைத்துள்ளதை போன்று பாராளுமன்றத்திலும் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். விரைவில் பொது தேர்தலை நடத்தி சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சிசெய்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும்.
இனப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி தீர்வு காணுவதற்காக சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும். இதன்போது இந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி சிறந்த தீர்வினை பெற்று நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அதேவேளை ஆகம விவகாரங்கள் தொடர்பில் ஒரு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டு அதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தனித்தனி மதம் என்ற பிரிவினை ஏற்படாது என்றார். நன்றி வீரகேசரி
ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்பது இந்தியாவிற்கு முன்னரே தெரிந்திருந்தது- இந்திய ஊடகம்
19/11/2019 இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கவுள்ளது என ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை பின்பற்றும் என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனாவின் கடற்கலங்கள் எதனையும் கோத்தபாய ராஜபக்ச தனது நாட்டிற்குள்அனுமதிக்கமாட்டார் என புதுடில்லி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியாகயிருந்தவேளை மூத்த ராஜபக்ச சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தமை குறித்து இந்தியா கடும் சீற்றமடைந்தது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலை தொடர்ந்து இலங்கை ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்கின்றது ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடும் என்பது குறித்து புதுடில்லி கடந்த சில மாதங்களாக உறுதியாக நம்பதொடங்கியது என ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக தாங்கள் ராஜபக்சவிற்கு எதிரானவர்கள் என்ற கருத்தினை அகற்றுவதற்கு புதுடில்லி முயன்று வந்தது எனவும் ஸ்டேட்ஸ்மன் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ச கடந்த செப்டம்பரில் இந்தியா விஜயம் மேற்கொண்டவேளை நரேந்திரமோடி அவரை சந்தித்தார் எனவும் இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
பொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள் மைக்பொம்பியோ கோத்தாபய ராஜபக்சவிற்கு வேண்டுகோள்
19/11/2019 பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா இலங்கை மக்களை அவர்களின் ஜனநாயக தேர்தலிற்காக பாராட்டுகின்றது என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறை சீர்திருத்தம்,பொறுப்புக்கூறப்படுதல், மனித உரிமைகளிற்கு மதிப்பளித்தல்,மீண்டும் வன்முறை நிகழாமை ஆகிய இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை மதிக்குமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான நேர்மையான வெளிப்படையான ஜனாதிபதி தேர்தல் மூலம் இலங்கை தொடர்ந்தும் தனது ஜனநாயகத்தின் வலுவை வெளிப்படுத்தியுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
அமைதியான தேர்தலை ஊக்குவித்தமைக்காக தேர்தல் ஆணையாளர் சிவில்சமுகம் வேட்பாளர்களை பாராட்டுகின்றோம் என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அமெரிக்காவின் பெறுமதி மிக்க சகா என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இருதரப்பு மற்றும் பிராந்திய விடயங்களிலும் சுதந்திரமான வெளிப்படையான இந்து சமுத்திரத்தை உறுதிசெய்வதிலும் இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து செயற்படவிரும்புகின்றது என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தீவிர விசாரணை
(எம்.எப்.எம்.பஸீர்)
19/11/2019 காலி மாவட்டம் தலாபிட்டிய பள்ளிவாசல் மற்றும் இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல - கெட்டனிகேவத்த பள்ளிவாசல் ஆகியவற்றின் மீது நேற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த இரு பள்ளிவாசல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறித்த பள்ளிவாசல்களின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில், காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாபிட்டிய பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு காலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மாலைவரை சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் அல்லது நபர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் இந்த தாக்குதலில் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நடவடிக்கை அவசியமில்லை என பள்ளிவாசல் தரப்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே நேற்று இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டனிகேவத்த பகுதியில் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதன்போது பள்ளிவாசலின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து நிவித்திகல பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் நேற்று சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளனர். பிரதேசத்தின் சி.சி.ரி.வி. காணொளிகளை மையப்படுத்தி முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் முச்சக்கர வண்டியில் அவ்விருவரும் வந்து தாக்குதல் நடாத்துவது வெளிப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
நிவித்திகல, கலவான வீதியிலுள்ள குறித்த கெட்டனிகேவத்த பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவரில் ஒருவர் நிவித்திகல பகுதியில் மோட்டார் வாகன திருத்துநர் எனவும் சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
யாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு யட்டியாந்தோட்டையில் தமிழர்கள் மீது தாக்குதல்
19/11/2019 ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கேகாலை, யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர்.
மதுபோதையினால் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ' நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை" என்றார்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது நிலமை சுமுகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்
21/11/2019 தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது.
கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக புதுடில்லியில் இன்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானமாகவும் , கண்ணியமாகவும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங்கை ஜனாதிபதியிடம் ஜெய்ஷங்கர் பேச்சுவார்த்தையின் போது தெரியப்படுத்தினார் என்று கூறிய பேச்சாளர் குமார், இனத்துவ அடையாள பாகுபாடு இன்றி சகல இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் இருப்பேன் என்று கோத்தாபய ராஜபக்ஷ ஜெய்ஷங்கரிடம் கூறியதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் பேச்சாளர் கூறினார். நன்றி வீரகேசரி
ஜனாதிபதி விமர்சித்தமை குறித்து செய்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரித்தானிய தூதரகத்தில் மகஜர்
21/11/2019 சர்வதேச செய்தி நிறுவனம் இலங்கை ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை ' தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவர் ' என விபரித்தமைக்கு நடவடிக்கை எடுக்க கோரி சுரகிமு ஸ்ரீலங்கா மற்றும் சிங்களே அபி அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
அத்தோடு இன்று வியாழக்கிழமை கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிய கடிதம் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கை ஆயுத படைகளுக்கும் LTTE பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் இன ஒழிப்புக்கு கடந்த 17 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ பொறுப்பு கூறக் கூடிய இராணுவத்தலைவர் என குறித்த செய்திச்சேவை விமர்சித்தமைக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.
உண்மையில் இறுதி யுத்தத்தின் போது தமது கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி தாக்கினார்கள்.
இதே போல் இலங்கை ஆயுத படைகளின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பி.பி;.சி பல தடவைகள் வெளியிட்டு வந்துள்ளது.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இரு தரப்பு நல்லுறவை பாதுகாக்கும் வகையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கின்றோம்
(எம்.மனோசித்ரா)
நன்றி வீரகேசரி
சிங்கள பெளத்த அரசு உருவானால் சிறுபான்மை மக்களை பாதிக்கும்: ஜே.வி.பி.
(ஆர்.யசி)
23/11/2019 சிங்கள பெளத்த அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்கத்தில் ராஜபக் ஷக்கள் செயற்பட்டால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே அதிக தாக்கத்தை செலுத்தும். ஜனாதிபதி கோத்தபாய தான் சிங்கள பெளத்த வாக்குகளில் வெற்றி பெற்றவன் என்ற அடையாளத்தை காட்டி சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் நோக்கங்கள் தவறானவை என்பதை மக்கள் இன்னமும் உணரவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உருவாகவே முயற்சிக்கின்றோம் எனவும் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னராக அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்ற நகர்வுகள் குறித்தும் பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு செயற்படும் என்ற காரணிகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்த அளவிற்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கு சில காரணிகள் உள்ளன. பிரதான இரண்டு வேட்பாளர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகின்ற நிலையில் மூன்றாம் நபருக்கு மக்கள் ஆதரவு கிடைப்பது கடினமான ஒன்றாகும். அதேபோல் ஊடகங்களும் பிரதான இரு வேட்பாளர்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தின. எவ்வாறு இருப்பினும் தேர்தலில் மக்கள் ஒரு ஆணையை கொடுத்துள்ளனர். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும். அடுத்த மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறும். இதில் ராஜபக் ஷ அரசாங்கம் சகல விதத்திலும் அதிகாரத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் அரைவாசி பேரையாவது விலைகொடுத்து வாங்கி தமது அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பார்கள். ஆகவே பலமான எதிர்க்கட்சி யார் என்பதே கேள்வியாக அமையும். ஐக்கிய தேசிய கட்சியினால் பலமான எதிர்கட்சியாக செயற்பட முடியுமா என்ற கேள்வி எழும். ஆகவே தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்ற கட்சியாக அடையாளபடுத்த சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.
மூன்று மாதகால இடைகால அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் யார் என்று பார்த்தால் இந்த அரசாங்கம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முடியும். கடந்த காலங்களில் ஊழல் வாதிகள், பாராளுமன்றத்தில் அராஜகமாக செயற்பட்டவர்கள், பல குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள், வழக்குகள் உள்ளவர்களை ஜனாதிபதி அமைச்சர்களாக நியமித்துள்ளார். இவர்களை கொண்டு ஊழலில்லா அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுகின்றது.
மறுபுறம் இனவாத மதவாத அமைப்புக்கள் அனைத்துமே இன்று அமைதியாகியுள்ளன. ஆகவே இவர்கள் அனைவரும் யாருடைய தேவைக்காக செயற்பட்டனர் என்பதும் தெளிவாகியுள்ளது. எனவே மக்கள் இப்போதாவது உண்மைகளை உணர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் மக்கள் இன்றும் அவற்றை அறிந்துகொள்ள தயாரில்லாத நிலையில் உள்ளனர்.
ஜனாதிபதி தனது பதவிப்பிரமாண நிகழ்வின் போதே தான் சிங்கள பெளத்த வாக்குகளில் வெற்றி பெற்றவன் என்ற அடையாளத்தை காட்டி சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தியுள்ளார். இவர்களின் அரசாங்கத்தையும் பெளத்த சிங்களவாத அரசாங்கமாக அமைக்கவே முயற்சிகளை எடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணித்த அரசாங்கம் உருவாகினால் அதில் அதிக பாதிப்பு சிறுபான்மை மக்களையே சென்றடையும். அதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம். எனவே எதிர்க்கட்சியாக நாம் பலமடையவே சகல மக்களையும் சந்தித்து எமக்கான ஆதரவை கேட்போம் என்றார். நன்றி வீரகேசரி
லசந்த கொலை உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்த அதிகாரி இடமாற்றம் - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
23/11/2019 முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைளை மேற்கொண்டுவந்த சிஐடியின் இயக்குநர் ஸானி அபயசேகர புதிய அரசாங்கத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உடனடியாக தலையிட்டு இந்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை ஜனாதிபதியின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகச்சிறப்பாக செயற்பட்டபோதிலும் சிஐடியின் இயக்குநர் ஏன் இடமாற்றம்செய்யப்பட்டார் என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் நோக்கம் கொண்ட இடமாற்றம், அவர் மிக முக்கியமான மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளிற்கு தலைமைவகித்த வேளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பதில் காவல்துறை-மா-அதிபர் ஏன் இவ்வாறான அழுத்தங்களிற்கு அடிபணிகின்றார் என கேள்வி எழுப்பியுள்ள சுமந்திரன் சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவிற்கு என்ன நடந்தது? முக்கிய எதிர்கட்சியான ஐக்கியதேசிய கட்சி என்ன செய்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை 11 மாணவர்கள் காணாமல்போகச்செய்யப்பட்டமை உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த அதிகாரியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிக முக்கிய சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களை கைதுசெய்தமைக்காக இவர் விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தார்.
குருநாகல் மருத்துவர் சாபி சிகாப்தீன் குற்றமிழைக்கவில்லை என்ற உறுதி செய்ததும் இந்த அதிகாரியே என்பது குறிப்பிடத்தக்ககது. நன்றி வீரகேசரி
அமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
(எம்.மனோசித்ரா)
22/11/2019 இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் , அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா , இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் டொஷிஹிரோ கிதமுரா மற்றும் பிரதி செயலாளர் தகேஷி ஒஷகி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி
தேர்தலை தொடர்ந்து விசமிகளால் அழிக்கப்படும் தமிழ் பெயர் பலகைகள்!
24/11/2019 ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துரை மற்றும் கேரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் அடையாளம் தெரியாத விசமிகளால் அழிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களும் பெற்றுக்கொண்ட வாக்குகளை பிரதேசவாரியாக நோக்கும் போது சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களில் பெருமளவானோர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கே வாக்களித்திருந்தனர்.
எனினும் பெரும்பான்மையினத்தவர்களின் பெருமளவான வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதனையடுத்து சில பிரதேசங்களிலும், குறிப்பாக சமூகவலைத்தளங்களிலும் சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தும் வகையிலான சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
அவற்றின் தொடர்ச்சியாக பிரதேசமொன்றில் பாணந்துரை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலப் பெயர்ப்பலகைகளில் தமிழ் பெயர்ப்பலகை மாத்திரம் அகற்றப்பட்டிருக்கிறது.
இந் நிலையில் தமிழ் பெயர்ப்பலகை அகற்றப்பட்டிருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர பதிவேற்றம் செய்திருக்கின்றார்.
அத்தோடு, 'தேர்தல் முடிவடைந்து ஒருவாரம் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் பெரும்பான்மை வாதத்தின் அழுக்கான முகம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. தமிழில் காணப்பட்ட வீதிகளின் பெயர்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி அவர்களே, இதுகுறித்த உங்களுடைய பிரதிபலிப்பிற்காக நாடு காத்துக் கொண்டிருக்கிறது என்றும் பதிவிட்டிருக்கிறார்.
நன்றி வீரகேசரி
உலகில் இரண்டாவது முறையாக அதியுயர் இருபதவிகளை வகிக்கும் சகோதரர்கள்
24/11/2019 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கடந்த வாரம் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்ததன் மூலம் இலங்கையின் ஆட்சியதிகாரத்தின் அதியுயர் இரு பதவிகளை வகிக்கின்ற சகோதரர்கள் என்ற வரலாற்றுச் சாதனையை இலங்கையில் படைத்திருக்கிறார்கள். ஆனால், உலகில் சகோதரர்கள் இருவர் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பதவி வகிக்கின்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்தில் 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவி வகித்த லெச் காசின்ஸ்கி, ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்ட தனது இரட்டைச் சகோதரரான யாரோஸ்லோ காசின்ஸ்கியை பிரதமராக நியமித்திருந்தார்.
2005 டிசம்பர் மாதம் தொடக்கம் 2010 ஏப்ரல் மாதம் வரை ஜனாதிபதி லெச் காசின்ஸ்கி அப்பதவியை வகித்தார். பதவியிலிருந்த போதே அவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நாட்டை அதிர வைத்த குற்றங்கள் தொடர்பில் துப்புத் துலக்கிய சி.ஐ.டி. சிறப்பு விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறினார்
(எம்.எப்.எம்.பஸீர்)
24/11/2019 குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனப்படும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறையின் பொறுப்பதிகாரியும், நாட்டை அதிர வைத்த பல முக்கிய குற்றங்கள் குறித்து துப்புத் துலக்கி சந்தேக நபர்களைக் கைது செய்தவருமான சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தான் முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பில் மேற்பார்வை செய்த தனது மேலதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட செயலராக இடமாற்றப்பட்டதை அடுத்தும், புதிய அரசாங்க மாற்றத்தின் பின்னரும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக அவர் இவ்வாறு நாட்டை விட்டு அடைக்களம் தேடி சுவிட்சர்லாந்து நோக்கி நிசாந்த சில்வா சென்றுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல், 12.50 மணிக்கு சுவிட்சர்லாந்தை நோக்கி அவரும் அவரது மனைவி, மூன்று மகள்மாரும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல், த நேஷன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தமை, ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் பல தொடர்பிலான விசாரணைகள் சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வவா தலைமையிலான குழுவினராலேயே முன்னெடுக்கப்ப்ட்டிருந்தது.
அத்துடன் கடற்படை புலனாய்வு பிரிவு தொடர்புபட்ட கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கீயமை தொடர்பிலான விசாரணைகள் அவர் முன்னெடுத்த மிக முக்கியமான விசாரணை என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment