யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சிட்னிக் கிளையின் வருடாந்தக் கொண்டாட்டம் 2019 - கானா பிரபா


.

கற்ற தொழுகு” எனும் தாரக மந்திரத்தோடு கல்விச் சிறப்பிலும், உடல் வலுப் பெறும் விளையாட்டிலும் மேன்மையும், புகழும் கொண்டு விளங்கும் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்ற மாணவர்கள் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் கிளை பரப்பித் தம் கல்லூரித் தாயைப் போற்றிச் சிறப்பிக்கிறார்கள். அவ்வண்ணம் சிட்னியிலும் தசாப்தங்கள் கடந்து கொக்குவில் இந்துவின் மைந்தர்கள் சங்கம் அமைத்து கல்லூரியின் புகழ் பாடும் ஆண்டுக் கொண்டாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி, சிட்னியின் மேற்குப் பாகத்தில் அமைந்துள்ள Redgum Function Centre, Wentworthville இல் வெகு சிறப்பானதொரு நிகழ்வை வழங்கியிருந்தார்கள்.
போராலும், இயற்கை அநர்த்தத்தாலும் நாம் இழந்த உறவுகள், மற்றும் சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் பரவிய காட்டுத்தீயால் இழந்த நம் சக உறவுகளுக்காக மெளன அஞ்சலியோடு கொக்குவில் இந்துக் கல்லூரியின் நிகழ்வு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கவிடப்பட்டும், கொக்குவில் இந்துவின் பழைய மாணவர்கள் குழுமி நின்று கொக்குவில் கீதம் பாடியும் மரியாதை செலுத்தினர்.மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து கலையரங்குக்கு நிகழ்வு மாறியது.

பத்மாலயா நுண்கலைக் கல்லூரி எனும் நடனப் பள்ளியை சிட்னியில் அமைத்துக் கலைப் பணி ஆற்றி வரும் யாழ் பல்கலைகழக மாணவி, நாட்டிய கலாமணி திருமதி பத்மரஞ்சனி உமாசங்கர் அவர்களும், அவர்களது புதல்வியர் சக நடன ஆசிரியைகள் திருமதி சைலஜா முரளிதரன், திருமதி சிவானுஜா உதயஷங்கர், செல்வி வைஷ்ணவி உமாசங்கர் ஆகியோர் நெறியாள்கையில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவியர் கண் கவர் நாட்டிய நடனங்களை, தமிழிசைப் பாடல்கள் தொட்டு வெகு சிறப்பாக அரங்கேற்றி சபையோர் அனைவரையும் கவர்ந்தனர். நாட்டிய நிகழ்வியின் முடிவில் நடன ஆசிரியர்களைக் கொக்குவில் இந்துவின் முன்னை நாள் ஆசிரியை திருமதி ஜீவரட்ணம் அவர்கள் பொன்னாடை போர்த்தி, சிறப்புக் கெளரவம் வழங்கிக் கெளரவித்தார்.

இந்த நிகழ்வின் அடுத்த அம்சமாக, கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் திரு பற்குணன் அவர்கள் நடப்பாண்டின் பிரதம விருந்தினராக அமைந்து சிறப்புரையாற்றினார். கொக்குவில் இந்துவின் மாணவராக, பின்னர் ஆசிரியராகவும் கடமையாற்றிய திரு ஜெகநாதன் அவர்கள் 
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்லூரியின் பழைய பாரம்பரியத்தையும், மேன்மையையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நடப்பாண்டின் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க சிட்னிக் கிளையின் தலைவர் திரு தணிகைராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அரங்கின் சிறப்பான ஒலி அமைப்பை திரு ரஞ்சித் மற்றும் திரு அமல்ராஜ் ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.

இலங்கையில் வளர்ந்து வரும் தாயகக் கலைஞர்களை ஒன்றிணைத்து உருவாக்கிய குக்கூ இசைக்குழு என்ற இசைக் குழுமத்தின் புலம் பெயர் மண்ணின் முதல் மேடையேற்றமாக இன்னிசை விருந்து படைத்தனர். வெறுமனே பாடல்களின் தொகுப்பாக அன்றி ஒத்த ராகங்களில் இசைவாக வந்த பாடல்கள், அன்றும் இன்றும் என்று புதுமை படைத்த நிகழ்வாக இந்த இன்னிசை நிகழ்ச்சி அமைந்திருந்தது. குக்கூ இசைக் குழுவின் நிறுவனர் செல்வன் இரோஷன், மற்றும் திரு ஜெகேந்திரா ஆகியோர் ஒருங்கிணைப்பில் 
பாடகர்கள் திருமதி சித்ரா, திரு தனஞ்செயன், திரு தவபாலன், செல்வன் விஷ்ணு, மழலை தமிழ்ச் செல்வி ஆகியோரோடு கிட்டார் வாத்திய வகையறாக்களை திரு ரமணன் மற்றும் திரு ஜெகேந்திரா, கீபோர்ட் திரு ஆகாஷ், தபேலா & மிருதங்கம் செல்வன் தாயகம், Cajon வாத்தியம் திரு அன்ரனி ஆகியோர் இணைந்து செவிக்குணவு படைத்த இன்னிசை மழையாக விளங்கியது.

கொக்குவில் இந்துவின் சார்பில் முதலில் சிற்றுண்டியும் பின்னர் அறுசுவை உணவோடு இராப்போசனம் வழங்கப்பட்டது. 

நன்றியுரையை நடப்பாண்டின் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க சிட்னிக் கிளையின் செயலாளர் திரு சத்தியஜித் அவர்கள் வழங்க இரவுணவுக்குப் பின் அடுத்த நிகழ்வாக “பாட்டுக்குப் பாட்டு”
என்ற பாடல் போட்டி சபையோர் பங்களிப்போடு கலகலப்பாக நிகழ்ந்தது.
85 வயதுப் பாட்டி முதல் பள்ளிக் குழந்தை வரை வயது வேறுபாடின்றிப் போட்டியில் கலந்து கலகலப்பாக்கினர்.

கொக்குவில் இந்துக் கல்லூரி நமக்கு முதலில் கற்றுக் கொடுத்த பாடம் நேர முகாமைத்துவம். காலை எட்டு மணிக்கு முன்பதாகப் பள்ளிக்குள் நுழைந்து விட வேண்டும் என்ற அந்த நெறிமுறை தான் தொடர்ந்து பல படிகளைக் கடக்க நமக்கு உதவியது என்று இந்த நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அமைந்து விழா முழுவதையும் தொகுத்து வழங்கிய, கல்லூரியின் பழைய மாணவன் திரு கானா பிரபா குறிப்பிட்டது போல யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சிட்னிக் கிளையின் வருடாந்தக் கொண்டாட்டம் 2019 சரியாக மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 மணியோடு நிறைவெய்தி நிறைவானதொரு விழாவாக நடந்து முடிந்தது.
கானா பிரபா

No comments: