தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதில் ஏன் இந்த பாரபட்சம்?


28/08/2019 அமைச்சுக்கள் அதன் கீழ் இயங்கும் அரசாங்க திணைக்களங்களில் தமிழ் தகவல் வழங்கும் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் செய்திகளுக்குரிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் அதிக காலதாமதம் ஏற்படுகின்றது. ஏன் தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவில்லை என்று தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக கேள்வியெழுப்பினாலும் இதே நிலைமை தான். தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் , உத்தியோகத்தர்கள் இல்லாத காரணத்தினால் சிங்கள மொழியிலேயே எமக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 
இந்நிலையில் ஊடக அமைச்சின் தகவல் அறியும் பிரிவில் தமிழ் உத்தியோகத்தர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற விடயத்தை முன்வைத்து தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக நாம் ஊடக அமைச்சிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். 
அதற்கு பதில் வழங்கியிருந்த ஊடக அமைச்சு குறித்த உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கோரப்படவில்லை என்றும் அவர்களை தெரிவு செய்வது தொடர்பில் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி இதுவரை பெறப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது. இது குறித்த செய்தியை நாம் 07/07/ 2019 வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரம் செய்திருந்தோம். 
இதேவேளை மேற்படி தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதில் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஏன் திட்டங்களை வகுக்கவில்லை என்று தகவல் அறியும் சட்டமூலத்தின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளை முன்வைத்திருந்தோம்,

1) ஊடக அமைச்சின் தகவல் வழங்கும் பிரிவுக்கு உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதில் மேற்படி திணைக்களத்தின் பங்கு என்ன?
2) இப்பிரிவுக்கு தமிழ் உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்கு திணைக்களம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 
3) இப்பிரிவுக்கு தமிழ் உத்தியோகத்தர்கள் இவ்வருட இறுதிக்குள் தெரிவு செய்யப்படுவார்களா?
அதற்கு முகாமைத்துவ திணைக்களம் எமக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி பிரசுரிக்கப்படுகின்றது.
வெகுஜன ஊடக அமைச்சே பொறுப்பு கூறுதல் வேண்டும்
வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைகள் பற்றிய விசேட பிரிவுக்கான ஆளணிகளையும் (பதவி நிலைகள்) பணிகளையும் அனுமதிப்பது மாத்திரமே முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிகள் என மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளரும் தகவல் வழங்கும் அதிகாரியுமான ஏ.ஜே. எஸ்.எஸ். எதிரிசூரிய எமக்கு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் குறித்த பிரிவில் தமிழ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதிப்பதற்கான கோரிக்கை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கோரிக்கைக்கான பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார். வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அதோடு இயங்கும் தகவல் அறியும் பிரிவிற்கு தேவைப்படும் ஆளணியினர் மற்றும் எண்ணிக்கை குறித்த பட்டியல் ஒன்றும் எமக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் வெகுஜன ஊடக அமைச்சுக்கு மட்டும் பல்வேறு பதவி நிலைகளில் தேவைப்படும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 127 ஆகும் . இதில் தமிழ் மொழி தொடர்பான தேவைப்பாடுடைய உத்தியோகத்தர் ஒரே ஒருவரே இருக்கின்றார். அவர் மொழிபெயர்ப்பாளர் (சிங்களம்- தமிழ் ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பதவி நிலையும் நிரப்பப்பட்டதாகத்தெரியவில்லை. 
மேற்படி வெகுஜன ஊடக அமைச்சின் தகவல் வழங்கும் பிரிவிற்கு 18 உத்தியோகத்தர்களை முகாமைத்துவ திணைக்களம் சிபாரிசு செய்திருந்தாலும் அதில் தமிழ் உத்தியோகத்தர் எவருமே இல்லை. அப்படியானால் தமிழ் ஊடகங்கள் தமிழில் தகவல்களை பெறத்தேவையில்லை என வெகுஜன ஊடக அமைச்சு நினைக்கின்றதா ? இல்லாவிடின் தமிழ் ஊடகங்கள் தகவல் அறியும் சட்டமூலத்தை பயன்படுத்தக்கூடாது என்று அர்த்தமா? 
குறிப்பிட்ட பதவிகளுக்குத் தேவையான உத்தியோகத்தர்களை இணைப்பது வெகுஜன ஊடக அமைச்சுக்குரிய பணி என முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. அப்படியாயின் இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சரின் நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்த அமைச்சில் மட்டுமல்ல , அமைச்சுக்களின் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களிலும் தமிழ் உத்தியோகத்தர்களை மொழி விகிதாசாரத்திற்கு அமைய நியமிப்பதில் பாரபட்சமே காணப்படுகின்றது.
தமிழ் அமைச்சர்களின் மௌனம்
அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் தமிழ் அமைச்சர்கள், ஏனைய அமைச்சுக்களில் தமிழ் உத்தியோகத்தர்களின் பதவிகள் விகிதாசாரப்படி நிரப்பப்பட்டிருக்கின்றதா என்று ஆராய்வதில்லை. அது குறித்து அமைச்சரவையிலும் கதைப்பதில்லை. இவ்வாறு சகல அமைச்சுக்களிலும் மொழி ,இன அடிப்படையில் பதவி வெற்றிடங்கள் நியாயமாக நிரப்பப்பட்டிருக்கின்றனவா என தகவல் அறியும் சட்ட மூலம் ஊடாக கேள்வி எழுப்பலாம். ஆனால் அங்கு தமிழ் உத்தியோகத்தர்கள் இல்லை என்பதால் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலேயே கேள்விகளை அனுப்பும்படி நாம் கோரப்படுகின்றோம் என்பதே உண்மை. 
இதேவேளை வெகுஜன ஊடக அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான செயற்திறன் அறிக்கையில், 2018- 01-01 முதல் 2018-12-31 வரை வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் முதலாவது விடயமாக கூறப்பட்டிருப்பதே தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான விடயமே. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி முதல் அமுலாக்கப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதனை சமூக மயப்படுத்தும் பொறுப்பு வெகுசன ஊடக அமைச்சுக்குரியதாகும். 2017 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி முதல் இந்தச் சட்டம் செயற்பட ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக் கோட்பாடுகளை நன்றாக செயற்படுத்துவதும் அதனூடாக ஊழலற்ற சிறந்த பொறுப்புள்ள அரசாங்க சேவையை நிறுவுவதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்தச் சட்டத்தை சமூகமயப்படுத்தும் பொருட்டு 2018 ஆம் ஆண்டில் வெகுசன ஊடகப் பிரிவின் தகவல் அறியும் உரிமைக் கிளையினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பின்வருமாறு:
1.1 வெகுசன ஊடக அமைச்சின் தகவல் அறியும் பிரிவை வலுப்படுத்தல் 
*தற்போது அமைச்சில் தகவல் அறியும் விசேடப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு ஆளணி அங்கீகரிக்கப்பட்டு தேவையான அலுவலக உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
1.2 தகவல் அறியும் வள நிலையத்தை (RTI Resource Center) கட்டியெழுப்புதல். 
*இந்த வள நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான எண்ணக்கருப்பத்திரத்தை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனையை வழங்குவதற்கான நிதிப் பங்களிப்பு USAID நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 
*அதற்கமைய , 2019 ஆம் ஆண்டில் இந்த வள நிலையத்தை கட்டியெழுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள் ளது. 
இவ்வாறு தகவல் அறியும் சட்டமூலத்தை சமூகமயப்படுத்தும் 20 அம்சங்கள் பற்றி விரிவாக அச்செயற்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் பல 2019 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டிருந்தாலும் கூட இதுவரை மேற்படி அமைச்சின் தகவல் அறியும் பிரிவுக்குக்கூட ஒரு தமிழ் உத்தியோகத்தர் நியமிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியதே. 
ஊடக அமைச்சின் நிர்வாகப்பிரிவு மேலதிக செயலாளர் தனது பதிலில் அமைச்சின் தகவல் அறியும் பிரிவு இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை என்றும் அமைச்சில் தமிழ் உத்தியோகத்தர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 
அதே போன்று இப்பதவிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கோரிக்கை இது வரை தன்னிடம் சமர்ப்பிக்கப்படவில்லையென முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தகவல் வழங்கும் அதிகாரியுமான எதிரிசூரிய தெரிவித்துள்ளார். ஆகவே இது குறித்து அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு தமிழ் அமைச்சர்கள் முன்வருவார்களா?
சிவலிங்கம் சிவகுமாரன் - நன்றி வீரகேசரி 











No comments: