நிலைமாறுகால நீதி நிலைநாட்டப்படுமா?


28/08/2019 பாது­காப்புப் படைத்­த­ரப்பைச் சேர்ந்­த­வர்­களிள் தண்­டனை விலக்­கீட்டுக் கலா­சாரம் உச்ச நிலையைத் தொட்­டி­ருக்­கின்­றது. இதனைத் தெளி­வாகக் கோடிட்டு காட்­டு­வ­தாக இரண்டு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. 
ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வாகி இருப்­பது ஒரு விடயம். லெப்­டினன் ஜெனரல் பதவி உயர்த்­தப்­பட்டு, சவேந்­திர சில்வா நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மனம் பெற்­றி­ருப்­பது இரண்­டா­வது விடயம். 
இரு­வ­ருமே பாது­காப்புப் படைத்­த­ரப்பைச் சேர்ந்­த­வர்கள். ஒருவர் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­தவர். மற்­றவர் இரா­ணு­வத்தின் பிர­தா­னி­யாக மேஜர் ஜெனரல் பதவி அந்­தஸ்து பணியில் இருந்­தவர். 
இவர்கள் இரு­வ­ருமே யுத்­த­கால மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்று குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள். மனித உரி­மை­க­ளையும், சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்­டங்­க­ளையும் மீறிச் செயற்­பட்­டார்கள் என்று இவர்­கள மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 
பாதிக்­கப்­பட்ட மக்­களும் உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­கள் முன் வைத்­தி­ருக்­கின்­றன. சனல் 4 வெளி­யிட்ட ஊடக ஆவணப் பதிவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்கள் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு, குற்றம் சுமத்­தி­ய­வர்கள் தரப்பில் வலிமை சேர்த்­துள்­ளன. 

அதே­போன்று யுத்தம் முடி­வு­றுத்­தப்­பட்­டதைத் தொடர்ந்து, முள்­ளி­வாய்க்­காலில் இருந்து போரா­ளி­களும் பொது­மக்­களும் இரா­ணு­வத்­தி­னரால் வெளி­யேற்­றப்­பட்­ட­போது, பாது­காப்பு உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டையில் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஆட்­கொ­ணர்வு மனுக்கள் மீதான விசா­ர­ணை­க­ளின்­போது கண்­கண்ட சாட்­சிகள் தெரி­வித்­துள்ள சாட்­சி­யங்­களும் மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு வலு சேர்த்­துள்­ளன. 
பொருத்­த­மற்­றது
ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய ஒரு விசா­ரணை அறிக்­கையில் இலங்­கையில் யுத்த மோதல்­க­ளின்­போது மனித உரி­மை­களும் சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்­டங்­களும் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. கண்­ட­றி­யப்­பட்டு, உரிமை மீறல் குற்­றச்­சாட்டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் வெறும் பிர­சா­ரத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக முன்­வைக்­கப்­பட்ட சுய­லாப அர­சியல் நோக்­கி­லான குற்­றச்­சாட்­டுக்கள் அல்ல. அனைத்­து­லக மட்­டத்தில் மனித உரி­மை­களைப் பேணு­கின்ற – அந்த உரி­மை­க­ளுக்­காகக் குரல் கொடுத்து அவற்றை உலக நாடுகள் பேண வேண்டும் என்­ப­தற்­காகச் செயற்­ப­டு­கின்ற ஐ.நா. மன்­றத்­தினால் பொறுப்­போடு முன் வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளாகும். 
சர்­வ­தேசப் பொது வெளியில் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­வர்கள் தாங்கள் குற்­ற­மற்­ற­வர்கள் என்­பதை வெறு­மனே வெளிப்­ப­டுத்­தினால் மட்டும் போதாது. தங்­களின் குற்­ற­மற்ற தன்­மையை அவர்­களும் ஆதா­ர­பூர்­வ­மாக முன்­வைக்க வேண்­டி­யது அவ­சியம். ஏனெனில் குற்றச் செயல்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்­பதை அவர்­களும் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை அவர்­க­ளு­டைய அறிக்­கை­களும், குற்­றச்சாட்டுக்­களை மறு­த­லிக்கும் வகையில் முன்­னெ­டுத்­துள்ள செயற்­பா­டு­களும் தெளி­வாக வெளிப்­ப­டுத்தி இருக்­கின்­றன. 
அந்த வகையில் போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்றால், அதற்குப் பொறுப்பு கூறு­கின்ற தளத்தில்  - அதி­கா­ரத்தில் இருந்­த­வர்கள் அவற்றை ஒப்­புக்­கொள்ள வேண்டும். அவைகள் எத்­த­கைய சூழலில் இடம்­பெற்றன என்­பதைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும். அல்­லது அந்தக் குற்­றச்­செ­யல்­களைப் புரிந்­த­வர்கள் யார் என்­ப­தை­யா­வது வெளிப்­ப­டுத்த வேண்டும். 
இத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கு மாறாக தாங்கள் குற்­ற­மற்­ற­வர்கள் என்றும், தங்கள் மீது அபாண்­ட­மாகக் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது என்றும் கூறி குற்றச் செயல்­க­ளுக்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்பில் இருந்து விலகி இருக்க முடி­யாது. அத்­துடன் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்­பெற்­ற­போது வகித்­தி­ருந்த பொறுப்­புக்கள் நிறைந்த பத­வி­க­ளை­விட உயர்­வான பொறுப்­பு­டைய பத­வி­களை வகிப்­பதும், வகிக்க முற்­ப­டு­வதும் நகை முர­ணாகும். 
சட்­டத்தின் முன் யாவரும் சமம்
நாடு­களில் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்ற சட்­டங்கள் நீதி நியா­யத்தின் அடிப்­ப­டையில் மக்­க­ளு­டைய வாழ்க்கை முன்­னெ­டுத்துச் செல்­லப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­கின்­றன. நடத்­தைகள், செயற்­பா­டுகள் என்­ப­வற்றைப் பொது வரை­ய­றை­களின் சட்­டங்கள் நெறிப்­ப­டுத்­து­கின்­றன. தனி மனி­த­னதும் அதே­போன்று பொது­மக்­க­ளி­னதும் தனித்­து­வத்­தையும், கௌர­வத்­தையும், பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. 
இந்த வகை­யி­லேயே சட்­டங்கள் அனை­வ­ருக்கும் பொது­வான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அதனால் சட்­டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றார்கள். அதனை மீறிச் செயற்­ப­டு­ப­வர்கள் சட்ட விதி­களைப் பயன்­ப­டுத்தி தண்­டிக்­கப்­ப­டு­கின்­றார்கள். இந்தத் தண்­ட­னைகள் அவர்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே வழங்­கப்­ப­டு­கின்­றன. இதுவே சட்­டத்தின் முன் அனை­வரும் சமம் என்று கூறப்­ப­டு­வதன் தாற்­ப­ரியம். 
பயங்­க­ர­வாதம் என அர்த்­தப்­ப­டுத்­தப்­பட்ட தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை அரசு பயங்­க­ர­வா­திகள் என அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது. இந்த நாட்டின் குடி­மக்கள் என்ற வகையில் இறை­மையின் அடிப்­ப­டையில் அவர்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­டன. மறுக்­கப்­பட்ட உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காகப் பல வழி­களில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அர­சியல் ரீதி­யாகப் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.  ஒப்­பந்­தங்­களும் செய்து கொள்­ளப்­பட்­டன. 
ஆனால் அந்தப் பேச்­சு­வார்த்­தைகள் மதிக்­கப்­ப­ட­வில்லை. செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. கிழித்­தெ­றி­யப்­பட்­டன. சாத்­வீக வழி­களில் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்கள் அரச அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி ஆயுத முனையில் அடக்கி ஒடுக்­கப்­பட்­டன. இத்­த­கைய பின்­பு­லத்­தில்தான் ஆயுதப் போராட்டம் உத­ய­மா­னது.
விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்லை
அர­சியல் உரி­மைக்­காக நடத்­தப்­பட்ட ஆயுதப் போராட்டம் பயங்­க­ர­வா­த­மாக சித்­த­ரிக்­கப்­பட்­டது. எதனை பயங்­க­ர­வாதம் என குறிப்­பிட்­டார்­களோ அதே வழி­மு­றையைப் பயன்­ப­டுத்தி ஆயுதப் போராட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்­கான பலப்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டது. இந்தப் பலப் பிர­யோ­கத்தில் ஆயு­த­மேந்­தி­ய­வர்கள் மட்டும் பாதிக்­கப்­ப­ட­வில்லை. பொது­மக்­களும் பாதிக்­கப்­பட்­டார்கள். 
இறுதி யுத்­தத்­தின்­போது விடு­த­லைப்­பு­லிகள் பொது­மக்­களைக் கேட­ய­மாகப் பயன்­ப­டுத்­தி­ய­தாகக் குற்றம் சாட்­டப்­பட்ட அதே வழி­மு­றையில் ஆயு­த­மேந்­தி­ய­வர்­களை அடக்கி ஒடுக்­கு­வ­தற்­காக அப்­பாவிப் பொது­மக்­களை வருத்­தி­னார்கள். விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்­தார்கள், அப­ய­ம­ளித்­தார்கள் என்­பது போன்ற குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து சிவி­லி­யன்கள் மீது அரச அதி­காரம் ஆயுத ரீதி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. 
பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் அப்­பா­வி­க­ளான பொது­மக்கள் பலிக்­க­டாக்­க­ளாக்­கப்­பட்ட நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன. சூழ்­நிலைக் கைதி நிலையில் இருந்த தமிழ் இளை­ஞர்கள் அடித்து நொருக்­கப்­பட்­டார்கள். தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்ற இடங்­களில் அந்த சம்­ப­வங்­க­ளுடன் சம்­பந்­த­மில்­லா­த­வர்கள் உயிர்ப்­ப­லி­யா­னார்கள். பலர் காய­ம­டைந்­தார்கள். பலர் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டார்கள். 
இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது பொது­மக்­களின் பாது­காப்பு இரு தரப்­பி­ன­ராலும் கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. இரு தரப்­பி­ன­ருமே மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்று மனித உரிமை அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன. எனினும், பொது­மக்­களைப் பாது­காத்­தி­ருக்க வேண்­டி­யது, அதி­கா­ர­முள்ள ஓர் அர­சாங்கம் என்ற வகையில் இரா­ணு­வத்­தி­னரின் கடமை என்று அந்த அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன. பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தாகக் கூறி பொது­மக்கள் மீது தாக்­குதல் நடத்­து­வ­தையும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் மீறப்­ப­டு­வ­தையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதனை நியா­யப்­ப­டுத்­தவும் முடி­யாது என்றும் அந்த அமைப்­புக்கள் கூறி­யுள்­ளன.  
இத்­த­கைய ஒரு நிலைப்­பாட்­டி­லேயே மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என்று யுத்தம் முடி­வ­டைந்த கையோடு இலங்­கைக்கு விஜயம் செய்து யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களை உலங்குவானூர்தியில் இருந்து
பார்வை­யிட்ட முன்னாள் ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவிடம் நேர­டி­யாகக் கூறி­யி­ருந்தார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­களை நடத்தி அர­சாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐ.நா. செய­லாளர் நாய­கத்தின் கோரிக்­கையை ஏற்று இரு தரப்­பி­னரும் கூட்­ட­றிக்கை ஒன்­றையும் வெளி­யிட்­டி­ருந்­தனர். ஆனாலும் ஒப்­புக்­கொண்ட வகையில் சர்­வ­தேச விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்லை. விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­மாட்­டாது என்று அரசு அறி­வித்­து­விட்­டது.

விலக்­கு­ரிமை கோரிக்கை
ஆட்சி மாற்­றத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அரா­சங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ராகக் கொண்டு வந்த பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்­டு­வ­தாக ஒன்­றுக்கும் மேற்­பட்ட தட­வை­களில் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.  
பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கி, அவர்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­தி­ருந்த அர­சாங்கம், இதற்­காக ஐ.நா. முன் வைத்த சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை நிரா­க­ரித்து, கலப்பு முறை­யி­லான விசா­ர­ணைக்கும் இட­மில்லை. உள்ளூர் நீதிப்­பொறி முறைக்கு அமை­வா­கவே விசா­ர­ணைகள் இடம்­பெறும் என்று திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­து­விட்­டது.
இத்­த­கைய பின்­பு­லத்­தில்தான் மனித உரிமை மீறல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர்­ளையும், மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர் என குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­க­ளையும் பாது­காக்­கின்ற நட­வ­டிக்­கை­களில் அரசு வெளிப்­ப­டை­யா­கவே ஈடு­ப­டு­கின்ற தன்மை வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் அர­சியல் செல­்வாக்கைப் பயன்­ப­டுத்தி தேர்­தலில் பங்­கு­பெறச் செய்­வ­தற்­கான முயற்­சி­களும் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றன. 
பொது­ஜன பெர­முன கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் பெய­ரி­டப்­பட்­டுள்ள முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் சகோ­த­ர­ரு­மா­கிய கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ தனக்கு எதி­ரான குற்றச் செயல் வழக்கு ஒன்றில் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற குற்ற விலக்கு உரிமை வழங்­கப்­பட வேண்டும் என்று கோரி­யுள்ளார். 
ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் அவ­ரு­டைய புதல்வி அஹிம்ஷா விக்­கி­ர­ம­துங்க அமெ­ரிக்­காவில் கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வுக்கு எதி­ராகத் தாக்கல் செய்­துள்ள வழக்­கி­லேயே நீதி­மன்­றத்தில் அவ­ரு­டைய சட்­டத்­த­ர­ணிகள் இந்தக் கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளனர். 
பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய அந்த உயர் பதவி மட்­டத்­தி­லேயே இந்தக் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக இந்த வழக்கில் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் இந்தக் குற்­றச்­சாட்டு ஆதா­ர­மற்­றது என மறுத்து, இந்தக் குற்­றச்­சாட்டு உண்­மை­யாக இருப்­பி­னும்­கூட, இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் வெளி­நாட்டு அலு­வ­ல­கர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற விலக்கு உரிமை சலு­கை­களின் அடிப்­ப­டையில் இந்த வழக்கை கவ­னத்திற் கொண்டு அதனைத் தள்­ளு­படி செய்ய வேண்டும் என்று அவ­ரு­டைய சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றத்தில் கோரி­யுள்­ளனர்.
பதவி உயர்வும் நிய­ம­னமும் 
விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இறுதி யுத்­த­க­ளத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் கோத்­த­பாய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­த­போது இடம்­பெற்ற சம்­ப­வங்கள் என்ற ரீதியில் அவற்­றுக்குப் பொறுப்பு கூற­வேண்­டி­ய­வ­ராக உள்ளார் என மனித உரிமை அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றன. 
மனித உரிமை மீறல் குறித்த குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­கியும், இறு­திக்­கட்ட யுத்­தத்தின்போது இடம்­பெற்ற குற்றச் செயல்­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்­டிய ஒரு பத­வியை வகித்­தவர் என்ற ரீதியில் நாட்டின் அதி­யுயர் தலைமைப் பத­வி­யா­கிய ஜனா­தி­பதி பத­விக்­கான தேர்­தலில் கோத்­த­பாய வேட்­பா­ள­ராகக் களம் இறங்­கி­யி­ருப்­பது குறித்து பல­த­ரப்­புக்­க­ளிலும் கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது.  
இதே­போன்று இறு­திக்­கட்ட யுத்­தத்தின்போது, பாது­காப்பு அமைச்­ச­ரா­கிய அப்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ஆகி­யோரின் வழி­ந­டத்­தலில் 58 ஆவது படைப்­பி­ரிவின் கட்­டளைத் தள­ப­தி­யாக இருந்து படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்த சவேந்­திர சில்­வாவின் தலை­மையில் படை­யினர் பல மனித உரிமை மீற­ல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர் என குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 
யுத்தம் முடி­வ­டைந்­ததைத் தொடர்ந்து ஐ.நா.வின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நி­தி­யாக சவேந்­திர சில்வா தூதுவர் அந்­தஸ்தில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். அந்த நேரம் இந்த நிய­மனம் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தி இருந்­தது. கண்­ட­னங்­களும் எழுந்­தி­ருந்­தன. ஆயினும் அவற்றை  அப்­போ­தைய ஜனா­தி­பதி பெரிய அளவில் கவ­னத்திற் கொள்­ள­வில்லை. 
ஆனாலும் இலங்­கைக்­கான தூதுவர் என்ற அந்­தஸ்தில் ஐ.நா.வின் அமை­தி­காக்கும் படைகள் தொடர்­பி­லான குழுவில் இடம்­பெற்­றி­ருந்த சவேந்­திர சில்வா மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த போர்க்­குற்றச் சாட்டுக்­க­ளை­ய­டுத்து, அந்தக் குழுவில் இருந்து அவர் நீக்­கப்­பட்­டி­ருந்தார். இந்தத் தூதுவர் பத­வியை 2010 தொடக்கம் 2015 வரையில் அவர் வகித்­தி­ருந்­ததன் பின்னர் நாட்­டுக்குத் திரும்­பி­யதைத் தொடர்ந்து அவர் மீண்டும் இரா­ணு­வத்தின் தலை­மை­யக நிலையில் பதவி வழங்­கப்­பட்­டி­ருந்தார். 
அந்த வகையில் இரா­ணு­வத்தின் தலைமை அலு­வ­ல­கத்தின் பிர­தா­னி­யாக இருந்த சவேந்­திர சில்­வாவை மேஜர் ஜெனரல் அந்­தஸ்தில் இருந்து லெப்டின் ஜென­ர­லாக பதவி உயர்­வ­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அவரை இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மித்­துள்ளார். 
போர்க்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு மத்­தி­யிலும் நாட்டைப் பாது­காக்க கட­மைப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்வா தெரி­வித்­துள்ளார். சில போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் தன் மீது எப்­போதும் சுமத்­தப்­ப­டு­கின்ற போதிலும் இயற்கை நீதி நெறி முறை­களில் நம்­பிக்கை கொண்­டுள்­ள­தா­கவும் யுத்­த­கா­லத்தில் நாட்­டுக்­காகத் தான் செய்ய வேண்­டி­ய­தையே செய்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். 
விடை இல்­லாத வினாக்கள்
இரா­ணுவத் தள­ப­தி­யாக பொறுப்­பேற்­றதன் பின்னர் கண்டி அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­களைச் சந்­தித்து ஆசி பெற்­றதன் பின்னர் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­த­போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். 
இரா­ணுவத் தள­ப­தி­யாக அவர் இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் பொறுப்­பேற்­ற­வுடன், நாட்டு மக்­க­ளையும் நாட்டின் இறை­மை­யையும், அதன் ஆட்­புல ஒரு­மைப்­பாடு, ஒற்­றை­யாட்சி என்­ப­வற்றைப் பாது­காப்­ப­தற்­கா­கவே இந்தப் பத­வியை ஏற்­றுக்­கொள்­வ­தாக அவர் கூறி­யி­ருந்தார். 
யுத்த முடி­வின்­போது விடு­த­லைப்­பு­லி­களின் அர­சியல் துறை பொறுப்­பாளர் நடேசன், சமா­தான செய­லகப் பணிப்­பாளர் புலித்­தேவன் உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்கள் வேறு பல­ருடன் வெள்ளைக் கொடி­களை ஏந்­திய வண்ணம் சர­ண­டைந்­த­போது கொல்­லப்­பட்ட விவ­காரம், இரா­ணுவத் தரப்­பி­னரால் விடு­த­லைப்­பு­லி­களின் பெண் போராளி என குறிப்­பி­டப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களின் தொலைக்­காட்சி அறி­விப்­பாளர் இசைப்­பி­ரியா, விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் இளைய புதல்வன் பாலச்­சந்­திரன், விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கி­யஸ்­த­ரா­கிய பாலகுமார் போன்றவர்களின் மரணங்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. 
யுத்தம் முடிவடைந்ததும், பாதுகாப்பு வழங்கப்படும், பொதுமன்னிப்பு அளிக்கப்படும் என்ற உத்தரவாத அறிவிப்பைத் தொடர்ந்து முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் இராணுவம் பொறுப்பு கூற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றது. 
யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் 11 ஆயிரம் பேரை அரசு புனர்வாழ்வளித்து சமூகத்தில் இணைத்துள்ளது. ஆனால் அவர்களில் நூற்றுக் கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது. அவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது 
வெளிப்படுத்தப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளின்போது விடுதலைப்புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
இத்தகைய முரண்பாடான நிலைமைக்கு மத்தியில் பல்வேறு போர்க்குற்றச் சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடமை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ ஷ மற்றும் 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த, இப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் பொதுவாழ்க்கையில் பதவிகளை அலங்கரிப்பதும் அலங்கரிக்க முற்படுவதும் எந்த வகையிலான நியாயம் என்று கூற முடியாதுள்ளது. 
இது, மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் தண்டனை பெறுவதில் இருந்து முழுமையாக விலக்களிப்பதற்கானதோர் அரசியல் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில் நிலைமாறுகால நீதி நிலைநாட்டப்படுமா? ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்துக்கமைய பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு என்பன நிறைவேற்றப்படுமா? என்ற கேள்விகள் விடை இல்லாத கேள்விகளாகவே எழுந்து நிற்கின்றன.
பி.மாணிக்­க­வா­சகம் - நன்றி வீரகேசரி 











No comments: