26/08/2019
2015இல் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், எல்லாவற்றையும் நிறைவேற்றுவோம் என்று ஜெனீவாவில் வாக்குறுதிகளைக் கொடுத்து, சர்வதேச சமூகத்தை நம்பவைத்து வந்த இலங்கையின் தற்போதைய அரசாங்கம், தமது வாக்குறுதியை மீறும் வகையில் செயற்படுவதை சர்வதேச சமூகத்தினால் பொறுத்துக்கொள்ள முடியா திருக்கின்றது.
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள விவகாரம், புதியதொரு பரிமாணத்தைத் தொட்டிருக்கிறது, இதனை ஐ.நாவும் சர்வதேச சமூகமும், தமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கின்றன.
2010ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்புக்கூறுவதற்கு எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகள், 2015இற்குப் பின்னர் மந்தகதியை அடைந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டே, இலங்கை அரசாங்கம் இவ்வாறான ஒரு நகர்வை முன்னெடுத்திருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் ஐ.நா மற்றும் மேற்குலகத்துடன் பனிப்போர் நடத்திக் கொண்டிருந்தது. அப்போது, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தால் இந்தளவுக்கு எதிர்வினைகள் வந்திருக்காது.
ஆனால், 2015இல் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், எல்லாவற்றையும் நிறைவேற்று வோம் என்று ஜெனீவாவில் வாக்குறுதிகளைக் கொடுத்து, சர்வதேச சமூகத்தை நம்பவைத்து வந்த இலங்கையின் தற்போதைய அரசாங்கம், தமது வாக்குறுதியை மீறும் வகையில் செயற்படுவதை சர்வதேச சமூகத்தினால் பொறுத்துக்கொள்ள முடியாதிருக்கிறது.
தம்மை ஏமாற்றி விட்டு தமக்கு சவால் விடும் வகையில் இப்படியான ஒரு நியமனத்தை இலங்கை ஜனாதிபதி செய்திருக்கிறார் என்ற கோபம் ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளின் அறிக்கைகளில் பிரதிபலிப்பதை காண முடிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகினதும், ஐ.நாவினதும் இந்த எதிர்ப்புகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கிறது, இது இலங்கையின் இறைமைக்குட்பட்டது என்றும், வெளியார் இதில் தலையீடு செய்ய முடியாது என்றும் கூறியிருக்கிறது.
அதுபோலவே, சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளும், அமெரிக்கத் தலையீட்டை ஏற்கமுடியாது, அவர்கள் எமக்கு உத்தரவிட இது ஒன்றும் அமெரிக்காவின் கொலனி இல்லை என்ற சூடான அறிக்கைகளும் வந்து கொண்டிருக்கின்றன.
இங்கு பிரதானமாக கோபம் வெளிப்படுத்தப்படுவது அமெரிக்கா மீது தான். இராணுவத் தளபதி நியமனம் நிகழ்ந்த மிகக்குறுகிய நேரத்துக்குள், அமெரிக்க தூதரகம் அதற்கு கவலை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், இதனைத் தான் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கும், கவலை தெரிவிப்பதற்கும் வேறுபாடு உள்ளது என்று தமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ்.
2015இற்குப் பின்னர், முதல் முறையாக இலங்கைக்கும் மேற்குலகம் மற்றும் ஐ.நாவுக்கும் இடையில் ஒரு பெரிய முரண்பாடு அல்லது விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனமே முழுக்காரணமாக அமைந்திருக்கிறது.
இந்தநிலை எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், இவ்வாறான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக் கூடிய நிலை ஏற்பட்டால், இதுபோன்ற முரண்பாடு எழும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான்.
ஆனால், அந்த முரண்பாட்டை முன்கூட்டியே, சவேந்திர சில்வாவின் நியமனத்தின் மூலம் ஆரம்பித்து வைத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இந்த நியமனம் மற்றும் அதையடுத்து எழுந்திருக்கின்ற முரண்பாடுகள், இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதில் ஐயமில்லை.
அதனால் தான், நிதியமைச்சர் மங்கள சமரவீர, மீண்டும் சர்வதேச சமூகத்துடன் முரண்படுகின்ற வகையில் வெளிவிவகார அமைச்சு செயற்படக்கூடாது என்றும், அவ்வாறு முட்டிக் கொண்டால் அது இலங்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் சர்வதேச சமூகத்துடன் கொண்டிருந்த, மோசமான உறவுகளை, சீர்படுத்துவதற்காக கடுமையாகப் போராடியவர், அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தான்.
அந்தவகையில் தான் அவர், வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது என, வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை பற்றி- இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.
புதிய இராணுவத் தளபதி நியமனத்தின் மூலம், ஐ.நா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகள், வசதி வாய்ப்புகள் என்பன பாதிக்கப்படும் சூழல் ஒன்று எழுந்திருக்கிறது.
முதலில் ஐ.நாவுடனான உறவுகளில் எத்தகைய பாதிப்பு நிகழும் என்று பார்க்கலாம்.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக கவலை தெரிவித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் வெளியிட்ட அறிக்கையில், “இது ஐ.நா அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்கேற்பதற்கான இயலுமையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்“ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளாக ஐ.நா அமைதிப்படைக்கு, இலங்கைப் படையினர் சுழற்சி முறையில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
மேற்கு சகாராவில், 4 பேர், மத்திய ஆபிரிக்க குடியரசில், 117 பேர், மாலியில் 203 பேர், லெபனானில், 149 பேர், தென்சூடானில் 173 பேர், அபேய் பிராந்தியத்தில் 6 பேர் என மொத்தம் 652 இலங்கைப் படையினர் ஐ.நா அமைதிப்படையில் தற்போது பணியாற்றுகின்றனர்.
ஐ.நா அமைதிப்படையில் 5000 இலங்கைப் படையினரை சேர்த்துக் கொள்வது என்பது தற்போதைய அரசாங்கத்தினதும், ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினதும் இலக்காக இருந்தது. ஆனால், போர்க்குற்றச்சாட்டுகளால், அது முடியாமல் போனது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் கொண்டு வரப்பட்ட, மனித உரிமை பதிவுகள் தொடர்பான ஆய்வுப் பொறிமுறை இலங்கைப் படையினருக்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியது.
மாலி, தென்சூடான் போன்ற பல நாடுகளுக்கு மேலதிக படையினரை அனுப்பும் வாய்ப்புகள் இருந்தபோதும், ஏற்கனவே அங்கிருந்து திரும்பும் படையினருக்குப் பதிலாக, வேறு படையினரை அனுப்புவதே சிரமமான காரியமாக மாறியிருக்கிறது.
பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் கடந்த மாதம் 61 படையினரை தென்சூடானுக்கு அனுப்பியிருந்தது இராணுவம். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படையினரின் தனிப்பட்ட மனித உரிமை பதிவுகள் ஆய்வு செய்யப்படும் இறுக்கமான முறையினாலும், ஐ.நா அறிக்கைகளில் போர்க்குற்றம் அல்லது மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படையணிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவுகளில் ஒதுக்கப்படுவதாலும், ஐ.நா அமைதிப்படையில் வாய்ப்பைப் பெறுவதில் இலங்கைப் படையினர் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நெருக்கடி, புதிய இராணுவத் தளபதியின் நியமனத்தினால் இன்னும் மோசமடையும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை சாதாரணமாக விடுக்கப்படவில்லை. ஐ.நாவின் உயர் ஆணையாளரினால் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் நாடு என்ற வகையில், இலங்கையின் இராணுவ மறுசீரமைப்பு மற்றும், ஏனைய ஒத்துழைப்புகள், உதவிகளை இலங்கை பெற்று வருகிறது. போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் தளபதி ஒருவரின் தலைமையில் இருக்கும் இராணுவத்துடன், ஐ.நாவினால், இத்தகைய உதவிகள் ஒத்துழைப்புகளை பேண முடியாது.
அவ்வாறு பேண முயற்சித்தாலோ, விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டாலோ, அது ஐ.நாவின் நடைமுறைகளுக்கு மாறாக அமைந்து விடும். குற்றச்சாட்டுகளை கடந்து செல்கிறது ஐ.நா என்ற அவப்பழிக்கு ஆளாக நேரிடும். குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்கிறது என்ற பழியை எதிர்கொள்ளவும் நேரிடும்.
இதுவரையில், ஒட்டுமொத்த இலங்கை இராணுவத்தையும், ஐ.நா அமைப்புகள், போர்க்குற்றமிழைத்ததாக கருத்தில் கொள்ளவில்லை. ஆனால், போர்க்குற்றமிழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் தலைமையில் இயங்கும் போது, அந்த இராணுவத்துடன் உறவுகளை வைத்துக் கொள்வதற்கு ஐ.நா தயங்கும். இங்கு ஒட்டுமொத்த இராணுவமும் ஒரேவிதமான கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படும்.
ஐ.நாவின் இந்த கண்ணோட்டம், தற்போது ஐ.நா அமைதிப்படையில் உள்ள இலங்கைப் படையினரைப் பாதிக்காவிடினும், அடுத்தடுத்த கட்டங்களில் பணிக்குச் செல்லவுள்ள இலங்கைப் படையினருக்கான வாய்ப்புகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, இந்த நியமனத்தினால், எதிர்கொள்ளப்படும் முக்கியமான சிக்கல், அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு உறவுகள் தான்.
இந்த நியமனம் தொடர்பாக முதலில் எதிர்ப்பை, கவலையை வெளியிட்டது அமெரிக்கா தான். அத்துடன் இந்த நியமனத்தினால், இலங்கையில் முதலீடுகள் பாதிக்கப்படும் என்றும், அமெரிக்காவின் இராணுவ உறவுகள் பாதிக்கப்படும் என்றும் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் கூறியிருந்தார்.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வளர்ச்சியடைந்திருந்தன. இந்த வேகமான வளர்ச்சியில் ஒரு சடுதியான வீழ்ச்சியை இந்த நியமனம் ஏற்படுத்தப் போகிறது. 2008ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அமெரிக்காவின் லெஹி சட்டத்திருத்தத்துக்கு அமைய, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட- போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ள வெளிநாட்டு ஆயுதப்படைகளுடன், அமெரிக்க இராணுவம் உறவுகளை வைத்துக் கொள்ள முடியாது.
இதனால் தான், ஐ.நா அறிக்கைகளில் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் 53, 55, 58, 59ஆவது படைப்பிரிவுகளுடன், அமெரிக்கா இராணுவ உறவுகளைத் தவிர்த்து வந்திருக்கிறது.
இப்போது, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட, 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர், ஒட்டுமொத்த இராணுவத்தினதும் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால், அவர் மீதுள்ள போர்க்குற்றச்சாட்டு, இப்போது, ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இலங்கை இராணுவத்துடனான அமெரிக்காவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளும் சீர்குலையும் என்று கூறப்படுகிறது
அமெரிக்காவின் இராணுவ உறவுகள் முறிக்கப்படுவதால், இயல்பாகவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் கதவுகள் இலங்கை இராணுவத்துக்காக திறக்கப்படும்.
ஆனாலும், அமெரிக்காவுடனான உறவுகளின் இழப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பது இலங்கை இராணுவத்துக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான ஆயுதங்கள், ரஷ்யா, சீனாவிடம் இருந்து கிடைத்திருக்கலாம். அதற்கான யுக்திகள், பயிற்சிகள் புலனாய்வுத் தகவல்கள் எல்லாமே அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்டவை தான்.
அவ்வாறான ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது, இலங்கை இராணுவத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கேள்விக்குள்ளாவது பெரும் பாதிப்பாகவே இருக்கும்.
இதைவிட, போர்க்குற்றம்சாட்டப்பட்டவரான இலங்கை இராணுவத் தளபதி எல்லா நாடுகளாலும், வரவேற்கப்பட முடியாத நிலை ஒன்றும் உருவாகும். மேற்குலக நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணத்தையும் கூட அவரால் மேற்கொள்ள முடியாதிருக்கும். இவ்வாறான ஒரு நிலைமை, இலங்கையின் எந்த இராணுவத் தளபதிக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
மொத்தத்தில், ஒரு இராணுவத் தளபதியின் நியமனம், ஒட்டுமொத்த இராணுவம் தொடர்பான பல்வேறு நாடுகள், ஐ.நாவினது நிலைப்பாடுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் முதல் சந்தர்ப்பமாக இது அமைந்திருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலி வாலைப் பிடித்து விட்டார். இனி அவர் வாலை இறுகப் பிடித்தாலும் சரி, கையை விட்டாலும் சரி என்ன நடக்கும் என்பது, அவரது கையில் இல்லை.
No comments:
Post a Comment