சுபாஷினியின் தொடுகையிலிருந்த மென்மையால் நெகிழ்ந்துபோன அபிதா,
“ வெல்கம்
டு நிகும்பலை “ என அவள் சிந்திய
வார்த்தைகளிலிருந்த குளிர்மையை ரசித்தாள்.
ஜீவிகா, கற்பகம் ரீச்சர்,
சுபாஷினி அவரவர் அலுவல்களில் மூழ்கிவிட்டனர். மஞ்சுளாதான் இன்னமும் துயில் எழவில்லை.
அவளது தோற்றம் எப்படி இருக்கும்? குணாதிசயம் எத்தகையது? யாருடைய சாங்கத்திலிருப்பாள்?
அந்த வீட்டுக்கு அபிதா
வந்ததுமுதல் தொடர்ச்சியாக அவளது மனதில் கேள்விகளே எழுந்துகொண்டிருந்தமையால், கேள்வியின்
நாயகி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ள முடியுமா..? என்றும் நினைத்து தனக்குள் சிரித்தாள்.
அந்த வீட்டின் முன்விறாந்தாவில்
பேச்சரவம் கேட்டது. துயில் எழுந்துவிட்ட மூவரும் நடத்தும் மந்திராலோசனையை செவிமடுக்காமல், துடைப்பத்தை எடுத்து வீட்டின் சமையலறையையும் கூடத்தையும்
கூட்டிப்பெருக்கினாள்.
சுவரில் மாட்டியிருந்த
ராஜேஸ்வரியின் படத்தில் சருகாகிப்போயிருந்த பழைய பூமாலையை அகற்றினாள். அகற்றும்போது
உதிர்ந்தவற்றையும் கூட்டிப்பெருக்கிக்கொண்டு, முன்விறாந்தாவுக்கு அபிதா வந்தாள்.
அவளது வருகையை கண்டதும்
அங்கு நின்ற அவர்கள் மூவரும் தங்கள் உரையாடலை வேறு திசைக்கு மாற்றுவதற்கு பிரயத்தனம்
செய்ததையும் அவதானித்தாள்.
அதுவரையில் தன்னைப்பற்றியும்
தனக்கு பிறப்பிக்கவிருக்கும் கட்டளைகளைப் பற்றியும்
பேசியிருப்பார்கள். தன்னைக்கண்டதும் பேச்சின்
திசையை மாற்றியிருப்பர். அபிதா ஊகித்துக்கொண்டாள்.
தனக்கிடும் கட்டளை தவிர்ந்து
வேறு எந்த உரையாடலுக்கும் செவிகொடாதிருக்கும் கலையை இனித்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
அந்த வீட்டின் முற்றத்தில்
நின்ற நந்தியாவட்டை, நித்தியகல்யாணி மரங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கின. ஒரு மூலையில்
நின்ற மரத்தில் செவ்வரத்தம் பூக்கள் மலர்ந்திருந்தன. வீட்டுக்குள் திரும்பி, ஒரு எவர்சில்வர்
தட்டம் எடுத்துவந்து மலர்களை கொய்யத்தொடங்கினாள்.
அதனை அவதானித்த ஜீவிகா, “ என்ன செய்கிறாய்..? “ எனக்கேட்டாள்.
“ அம்மாவின் படத்திற்கு சின்ன பூச்சரம் செய்து மாட்டப்போகிறேன்.
அதிலிருந்த பழைய பூமாலையை அகற்றிவிட்டேன்
“ என்றாள் அபிதா.
“ பூமாலை, பூச்சரம் கட்டத்தெரியுமா….? “ இது
கற்பகம் ரீச்சர்.
“ ஓம் ரீச்சர். ஊர்ல பக்கத்துக்கோயில்களுக்கு கட்டிக்கொடுத்திருக்கின்றேன்.
வீட்டிலிருக்கும் படங்களுக்கு சூடப்படும் பூமாலைகள்
காய்ந்து சருகாகும் வரையில் வைத்திருக்கக்கூடாது. அடிக்கடி மாற்றவேண்டும். “
“ அபிதாவுக்கு
கொண்டை மாலையும் செய்யத்தெரியுமா…? “ இது ஜீவிகா.
“ கல்யாண மாலையும் கட்டத்தெரியுமா..? “ இது சுபாஷினி.
அபிதாவுக்கு சிரிப்பு
வந்தது.
“ கொண்டைக்கு மல்லிகை மொட்டுத்தான் அழகாக இருக்கும். கல்யாணத்திற்கு
ரோஜா நன்றாக இருக்கும். இங்கே மல்லிகை , ரோஜா
இல்லையா? “
“ இரண்டும்
இல்லை. மல்லிகைப்பந்தல் போடும் வேலையும் ரோஜாத்தோட்டத்திற்கு பாத்தி கட்டும் வேலையும் இனி உங்களுக்கு கிடைக்கலாம் “ என்று சொல்லிச்சிரித்தவாறு உள்ளே சென்ற சுபாஷினியின்
துள்ளல் நடையழகை பின்னிருந்து ரசித்த அபிதா, தன்னை “ நீங்க…
வாங்க… போங்க… “ என்று கனிவோடு விளிக்கும் ஒரு ஜீவனும் இங்கிருக்கும்
ஆறுதலில் சுறுசுறுப்பாக இயங்கினாள்.
ராஜேஸ்வரியின் படத்திற்கு
பூச்சரம் தயார். அதனை தான் அணிவிப்பதா…? அல்லது அந்த வீட்டிலிருக்கும் எவரையேனும் அணிவிக்குமாறு
கேட்டுப்பார்ப்பதா…? என்ற தயக்கமும் அபிதாவுக்கு வந்தது.
தொடுத்திருந்த பூச்சரத்தை
எடுத்துக்கொண்டு ஜீவிகாவிடம் வந்தாள். “ அம்மாவுக்கு
இந்த பூச்சரத்தை மாட்டிவிடுங்க.. “ எனச்சொல்லியவாறு அதனை நீட்டியபோது கற்பகம் ரீச்சர்,
“ அடடே, உனக்கு இதெல்லாம் தெரியுமா..? “ எனக்கேட்டவாறு உள்ளே நகர்ந்தாள்.
“ நீயே படத்துக்குப்போட்டுவிடு “ எனச்சொல்லிக்கொண்டு ஜீவிகாவும் தனது அறைக்குத்திரும்பிவிட்டாள்.
ராஜேஸ்ரியின் படத்திற்கு
அந்தச்சரத்தை அணிவிக்கும்போது கணவன் பார்த்திபனும் குழந்தை தமிழ்மலரும் நினைவுத்தடத்தில்
வந்தார்கள்.
அவர்களின் படங்களுக்கு
மாலை அணிவித்து ஒரு சொட்டுக்கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்துவதற்கும் வாய்ப்பில்லாமல்,
யாரோ முகம் தெரியாத முன்பின் அறிமுகமில்லாத
ஒரு ஆத்மாவுக்கு பூச்சரம் செய்யநேர்ந்துள்ள விதியை எண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
சமையலறைக்கு வந்து,
அங்கிருக்கும் பாத்திரங்கள் பண்டங்ளை ஆராய்ந்தாள். அன்றைய காலைப்பொழுதில் என்ன சமைக்கலாம்?
அது பற்றி யாரிடம் கேட்கலாம்? என்ற எண்ணம் வந்ததும், அந்த வீட்டில் வயதால் மூத்தவளான கற்பகம் ரீச்சரிடம்
வந்து கேட்டாள்.
“ வறுத்த சிவத்த அரிசி மாவு இருக்கவேணும். இன்றைக்கு புட்டு அவித்தால் நல்லம். அதற்கு ஏற்றமாதிரி
ஏதும் கறியும் சம்பலும் செய்துவிடு.
“ என்றாள் கற்பகம் ரீச்சர்.
“ புட்டுக்கு முட்டைப்பொரியல் நல்லா இருக்கும் ரீச்சர்.
செய்யட்டுமா…? “
“ இன்றைக்கு சனிக்கிழமை. நான் மச்சம் மாமிசம் சாப்பிடமாட்டேன்.
எனக்கு வேண்டாம். மற்றவர்கள் சாப்பிடுவார்கள். செய்துவிடு. “
“ உங்களுக்கு நல்லதொரு வெந்தயக்குழம்பு செய்து தாரன்
ரீச்சர் “ எனச்சொன்ன அபிதா, அதற்கான வேலைகளில்
மூழ்கினாள்.
அவளது துரிதமான இயக்கம்
ரீச்சருக்கு வியப்பூட்டினாலும் அதனைக்காண்பிக்காமல், தனக்கு இதுவரையில் அபிதா குறிப்பிடும் வெந்தயக்குழம்பு
செய்யத்தெரியாமலிருக்கும் ஆதங்கத்தை தனக்குள்
அடக்கிக்கொண்டாள்.
மூடியிருந்த ஒரு அறைக்குள்
கற்பகம் ரீச்சர் செல்வதை அபிதா அவதானித்தாள். அது சுப்ரபாதம் ஒலிக்கும் அறையல்ல. அப்படியாயின்
அந்த அறையில்தான் இதுவரையில் தான் பார்க்காதிருக்கும் மஞ்சுளா இருக்கவேண்டும்.
அங்கிருந்து பேச்சரவம்
கேட்டது. கீச்சிட்ட குரலில், “ புதிய துடைப்பம்
நன்றாகத்தான் நிலத்தை கூட்டித் துப்பரவு செய்யும்
“ என்ற தொனி அபிதாவுக்கு சன்னமாகக்கேட்டது.
அது மஞ்சுளாவின் குரல்தான்.
அபிதா ஊகித்துக்கொண்டாள்.
கற்பகம் ரீச்சர், தனது
வருகை பற்றியும் வந்ததும் செய்த வேலைகள் பற்றியும் அவளிடம் சொல்லியிருக்கக்கூடும்.
அதனால்தான் சமையலறைக்குப்பக்கத்தில் சிவனே எனக்கிடக்கும் அந்த பழைய துடைப்பத்தின் தொடக்க
காலத்தை தனது இயல்புகளுடன் அவள் ஒப்பீடு செய்கிறாளாக்கும்.
என்றைக்கும் எதிலும்
ஒப்பீடுகளை விரும்பாத பார்த்திபன், பல சந்தர்ப்பங்களில்
தன்னுடன் ஒப்பீடு பற்றி விவாதித்த சம்பவங்கள்
சில உடனடியாக நினைவுக்கு வந்தன.
இந்த வீட்டில் தனது
நடமாட்டம் கூரிய கத்தியின் மீதுதான் அமையப்போகிறது. கொஞ்சம் சறுக்கினாலும் கீறிவிடும்.
சொல்லும் வேலைகளைச்செய்வதா? வீட்டிலிருப்பவர்களின்
இயல்புகளை ஆராய்வதா..?
அதற்கு முன்னர் எந்தவொரு
வீட்டிலும் வேலைக்காரி – சமையல்காரி உத்தியோகம் செய்து அனுபவப்படாதிருந்த அபிதாவுக்கு
இனிமேல் யாவுமே புத்திக்கொள்முதல்தான்.
ஒரு பாத்திரம் நிரம்ப
உதிர்ந்த புட்டு தயாராகியதும், அதனை பக்குவமாக எடுத்து வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தாள்.
அதற்குத்தேவையான உறைப்புச் சம்பலுக்காக வெங்காயம் நறுக்கி, தேங்காயும் துருவினாள்.
ஜீவிகா வந்து ஒரு சிறிய
கிரைண்டரை எடுத்து துடைத்துக்கொடுத்தாள்.
“ இதனை பாவிக்கத் தெரியும்தானே…? கவனம்.
சூடு ஏறாமல் பார்க்கவேண்டும். இதற்கு முன்னர் சில கிரைண்டர்கள், முன்பிருந்தவர்களினால்
பழுதாகிவிட்டது. இதனை போனவாரம்தான் வாங்கினோம். அதனை இன்றுதான் வெள்ளோட்டம் விடப்போகிறோம். “
“ சரியம்மா… கவனமாக பாவிக்கிறேன். ரீச்சருக்கு வெந்தயக்குழம்பும்,
மற்றவர்களுக்கு முட்டைப்பொரியலும். எது எதை எவற்றில் சமைக்கவேண்டும் என்பதை மாத்திரம்
இப்போது சொல்லித்தந்திடுங்கோ. ரீச்சர் விரதங்கள் இருக்கிறவங்கபோலத் தெரியுது. “
“ என்ன கண்டறியாத விரதம். அப்படி விரதம் இருந்து என்னத்தை கண்டுவிட்டா…?
“ என்று சொன்ன சுபாஷினியை சுட்டுவிடும் கண்களினால்
ஜீவிகா ஏறிட்டுப்பார்த்தாள்.
கற்பகம் ரீச்சருக்குப்பின்னால்
ஏதோ ஒரு சுவாரசியமான கதை இருப்பதை சுபாஷினியின் பேச்சு புலப்படுத்தியது.
“ முட்டைப்பொரியல் வாசம் மூக்கைத்துளைக்குது “ எனச்சொல்லியவாறு மஞ்சுளா வெளியே வந்தாள். எலுமிச்சைப்பழ
நிறம். மெலிந்த தேகம். கூந்தலும் இருந்தால் மேலும் அழகாக இருப்பாள். ஏன்தான் கத்தரித்துக்கொண்டாளே…?
தனது ஊகம் சரியாக இருக்குமா
என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள , “ நீங்க…?
“ எனச்சொல்லி விளித்தாள்.
“ இவர்தான் இந்த வசந்தமாளிகையின் வாணிஶ்ரீ “ என்று சொன்னவாறு கலகலவென சிரித்தாள் சுபாஷினி.
அவளது குறும்புத்தனத்தை அபிதா ரசித்தாலும், அந்த லயிப்பினை வெளிப்படுத்தாமல், மஞ்சுளாவை
ஒரு கணம் உற்றுப்பார்த்தாள்.
இவள்தான் கற்பகம் ரீச்சரிடத்தில், “ புதிய துடைப்பம் நன்றாகத்தான் நிலத்தை கூட்டித் துப்பரவு செய்யும் “ எனச்சொன்னவள்.
சிவாஜியும் வாணிஶ்ரீயும்
நடித்த வசந்தமாளிகை படத்தை வீட்டிலிருந்த
வீடியோ டெக்கில் பார்த்திபனுடன் பார்த்தது அபிதாவுக்கு நினைவுக்கு வந்தது.
எதனைப்பார்த்தாலும்
படித்தாலும், அதன்பின்னணியிலிருக்கும் சுவாராசியங்களை ரசனை குன்றாமல் சொல்லும் பார்த்திபனைப்போல்
இங்கு சொல்வதற்கு யாரும் இருப்பார்களா?
தமிழில் அந்தப்படம்
வெளியானபோது இறுதிக்காட்சியில் “ யாருக்காக , இது யாருக்காக…? “ என்று உரத்த குரலில் பாடி, வாயிலிருந்து இரத்தம்
சிந்தச்சிந்த உணர்ச்சிகரமாக வாயசைத்து நடித்த சிவாஜி, உயிர்தப்பிவிடுவார். ஆனால், அதே படத்தை மலையாளத்தில்
டப்பிங் செய்தபோது, அவர் இறந்துவிடுவதாக காண்பித்தார்களாம்.
“ தமிழ் ரசனை – மலையாள ரசனை எப்படி இருக்கிறது பார்
அபிதா. மாநிலத்து மக்களுக்கு ஏற்றவாறு படம்
எடுத்து பணப்பெட்டியை நிரப்பியவர்கள் எப்படி
சர்வதேச விருதுகளை எதிர்பார்க்கமுடியும். “
பார்த்திபன் தனக்குச்சொல்லியிருக்கும்
பல கதைகளை இங்கே பகிர்ந்துகொள்வதற்கு இணக்கமான நபர் யாராக இருக்கும்…? இந்த நான்கு
பெண்களதும் இயல்புகளை ஆராய்வதற்கு வந்தேனா? அல்லது தஞ்சமடைய ஒரு குடில் தேடி வந்தேனா?
நீளமான விறாந்தை, அகலமான வரவேற்பு கூடம், அளவான
நான்கு படுக்கை அறைகள், சமையல் அறை, குளியல் அறை. களஞ்சிய அறை, பின்புறம் சிறிய விறாந்தை. இதுவே ஒரு சிறிய வசந்த
மாளிகையாகத்தான் அபிதாவின் மனதிற்குப்பட்டது.
இந்த மாளிகையின் ராணிகளுக்கு
சேவகியாக வந்திருக்கின்றேன். ராணிகளுக்கு ஏற்றவாறு நடிப்பதா…? மாநிலத்துக்கு மாநிலம்
ஏற்றவாறு படம் தயாரித்தவர்கள் போன்று நானும் இங்கிருப்பவர்களுக்குத்தக்கவாறு அவ்வப்போது
தன்னை தயார்படுத்திக்கொள்ளவேண்டியதுதான்.
அதற்காக நடிகையர் திலகமாவதா..?
( தொடரும்
)
No comments:
Post a Comment