ஆட்சி மாற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அளித்திருந்த ஆதரவின் மூலம் நன்மைகள் விளை வதற்குப் பதிலாகக் குழப் பகரமான நிலைமையை உருவாக்குவதற்கே வழியேற்ப டுத்தி இருந்தது. அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கியிருந்த உறுதியான – நிபந்தனை யற்ற ஆதரவு விழலுக்கு இறைத்த நீராகி உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது? யார் தமிழ் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படுவார்கள்? யாரைத் தெரிவு செய்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்? என்ற கேள்விகள் சாதாரண வாக்காளர்களின் மனங்களைக் குடைந்து கொண்டிருக்கின் றன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல் திணைக்களத்திடம் இருந்து அதிகாரபூர்வமான அறிவித்தல் வெளியிடப் படாத போதிலும், அந்தத் தேர்தல் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
பெரும்பான்மை இன மக்களிலும் பார்க்க, சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு அடுத்த ஜனாதிபதி குறித்த அக்கறையும் கரிசனையும் அதிகமாக இருப்பதும் இந்த மனக்குடைச்சலுக்கு மற்றுமொரு முக்கிய காரணமாகும்.
ஜனாதிபதியாக வருபவர் அதிகாரம் உள்ளவராகவும், அதேவேளை, அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துப வராகவும் இருப்பார் என்ற அனுமானமே, தமிழ் மக்கள் வரப்போகின்ற ஜனாதிபதி குறித்து அக்கறை கொள்ளச் செய்திருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தலைமைகள் என்ன முடிவை எடுக்கப் போகின்றன என்பதற்குத் தெளிவான சமிக்ஞைகள் இன்னும் வெளிப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தெரிவாகின்ற வேட்பாளருக்கு சாதகமாகவே அந்த முடிவு இருக்கும் என்ற தகவல்கள் அடிபடுகின்றன. ஆயினும் அவை உறுதிப்படுத்தப்படாதவையாகவே உள்ளன.
நிலைமைகள் நேர்சீராக வேண்டும்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்க, உறுதியற்றிருக்கின்ற அரசியலை உறுதி பெறச் செய்வதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கே முன்னு ரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றின்போது அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தி வெளியிட்டிருந்தார்.
அவர் அவ்வாறு கோரியதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்து நல்ல ஆட்சியொன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தலையாய நிலைப்பாடாகக் கொண்டு அதற்கான உறுதிமொழிகளை வழங்கி ஆட்சி யைக் கைப்பற்றி இருந்தது.
ஆனால் எதிர்பார்த்த அளவில் காரியங்களை முன்னெடுத்து தனது பெயருக்கு ஏற்ற வகையில் ஆட்சியை நல்ல ஆட்சியாகக் கொண்டு நடத்த அது தவறிவிட்டது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அந்த நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நகர்ந்து அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டன.
ஆட்சியில் குழப்பங்களும், அரசியலில் இழுபறிகளும் ஏற்பட்டு, போட்டிகளும் உருவாகி இருந்தன. இதனால் உறுதியற்ற அரசியல் நிலைமைக்கே அவை வழிவகுத்திருந்தன. நல்லாட்சிக்காக சர்வாதிகாரப் போக்கிற்கு வழியேற்படுத்தி இருந்த ஜனாதிபதியின் வரையறையற்ற அதிகாரங்களை 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்திருந்த போதிலும், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. அதேபோன்று பிரதமரும் அவற்றை நிறைவேற்றவில்லை.
இருவரிடையேயும் ஏற்பட்ட அதிகாரப் போட்டியும் அதனால் எழுந்த அரசியல் நிலைமைகளும் நல்லாட்சி நிலவுவதற் குப் பதிலாக நாட்டில் குழப்பகரமான நிலைமைகளையே உருவாக்கி இருக்கின்றன. இத்தகைய பின்புலத்தில்தான் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்க புதிய அரசியலமைப்பை உருவாக்கி நிலைமைகளை நேர்சீராக்கிய பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்திருந்தார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆனாலும் தேர்தலுக்கான முன்னுரிமையே அரச தரப்பில் முனைப்புப் பெற்றிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலிலேயே அனைத்து அரசியல் கட்சிகளும் கவனத் தைக் குவித்திருக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்ட பரபரப்பான நிலைமைக்கும் இதுவே காரணம்.
துணிகரமான நிலைப்பாட்டைக் காணவில்லை
வழமைக்கு மாறாக இம்முறை அரசியல் கட்சிகளின் இரண்டாம் நிலையிலுள்ள தலைவர்கள் மத்தியில் இருந்தே வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமையும் வரப்போகின்ற ஜனாதிபதி குறித்த சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையீனங்களுக்கும் ஒரு முக்கிய காரணமாகி உள்ளது.
வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் கோத்தபாய ராஜபக் ஷவும் சரி, ஜே.வி.பி.யின் அனுரகுமார திசாநாயக்கவும் சரி, சிறுபான்மை இன மக்களுடைய அரசியல் நலன்களில் அவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கின்ற அரசியல் போக்குடையவர்களாகக் காணப்படவில்லை.
கோத்தபாய ராஜபக் ஷ சிங்களத் தேசியத்தில் தீவிர பற்றுடையவர். அதனால் அவர் சிறுபான்மை இன மக்களின் நலன்களில் தற்றுணிபுடன் அவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜே.வி.பி.யும் தமிழ் மக்களின் உரிமைகளில் நியாயமான அரசியல் கொள்கை வழிநின்று சிந்திப்பதாகவோ அல்லது அந்த வகையில் செயற்படுகின்ற ஓர் அரசியல் சக்தியாகத் தென்படவில்லை.
யுத்த காலத்தில் பேரினவாத போக்கைக் கொண்டிருந்த ஜே.வி.பி.யே இலங்கை –இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கையும் கிழக்கையும் இரு வேறு மாகாணங்களாகப் பிரிப்பதற்கு நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றிருந்தது.
இடதுசாரிப் போக்குடையதாகக் காணப்பட்ட போதிலும், ஜே.வி.பி. அந்தக் கொள்கை வழியில் செயற்படுகின்ற வல்லமை கொண்டதல்ல. பேரினவாதப் போக்கும், சிங்கள பௌத்த தேசியத்தைத் தழுவிச் செல்கின்ற ஒரு கொள்கை நிலைப்பாட்டையுமே அது கொண்டிருக்கின்றது.
இதனால்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து அதன் வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க துணிகரமான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாதவராகத் திகழ்கின்றார்.
வேடிக்கையான நிலைப்பாடு
ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதிக்கான வேட்பாளரைத் தெரிவதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையானது, அந்தக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுத்தி விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனாலும், தானே அந்தக் கட்சியின் வேட்பாளர் என சுய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாசவிடம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்ற கேள்விக்கு உறுதியான நிலைப்பாட்டைக் காண முடியவில்லை.
ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே தன்னுடைய நோக்கம் என அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியாகத் தன்னைத் தெரிவு செய்தால் ஆறு மாதங்களுக்குள் இத்தகைய தீர்வைத் தர முடியும் என்பது அவருடைய நிலைப்பாடு.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட தனி நாட்டுக் கோரிக்கைக்காகவே 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் தமது அமோகமான ஆதரவை வெளிப்படுத்தி இருந்தது. அதன் அடிப்படையிலேயே ஆயுதப் போராட்டம் எழுந்தது. இறுதி வரையிலும் அதற்காக விடுதலைப்புலிகள் ஆயுதமேந் திப் போராடினார்கள்.
ஆனால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வை வேண்டி நிற்கின்றனர். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததும், அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதாக உறுதியளித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நிறைவேற்று அதிகாரத்தின் உச்ச நிலைமையக் கொண்டிருந்த போதிலும், அரசியல் தீர்வு காணவில்லை.
அரசியல் தீர்வு காண்பதென்பதை ஓர் அரசியல் விளையாட்டாகவும், தமிழ் மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கானதோர் உத்தியாகவுமே அவர் பயன்படுத்தி இருந் தார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான அரசியல் ரீதியான ஆவலை, அவர்களின் ஆத்மார்த்தமான தேவையை அவர் புரிந்து கொள்ளவில்லை. புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை.
இத்தகைய பின்புலத்தில்தான் அவர் இராணுவ மயமான கடுமையான அரசியல் போக்கைக் கொண்டுள்ள தனது சகோதரர் கோத்தபாய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கி உள்ளார்.
தனி நாட்டுக் கோரிக்கையில் இருந்து இறங்கி, அர்த்தமுள்ள அரசியல் தீர்வை வேண்டி நிற்கின்ற தமிழ் மக்களிடம் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய் தால் பதவிக்கு வந்ததும் ஆறு மாதங்களுக்குள் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பேன் என சஜித் பிரேமதாச கூறியிருப்பது வேடிக்கையே அன்றி வேறொன்றுமில்லை.
தமிழ் மக்களின் நிலைப்பாடு
ஒருமித்த நாட்டுக்குள்ளேதான் தமிழ் மக்களும் தீர்வைக் கோரி நிற்கின்றார்கள் என்பது சாதாரண நடைமுறை உண்மை. அதன் அடிப்படையில்தான் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கிற்கும் கிழக்கிற்கும் வெவ்வேறு மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. கொள்கை ரீதி யில் மாகாண மட்டத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதும் சாதாரண நடைமுறை அரசியல் யதார்த்தம்.
மாகாணங்களுக்கான அதிகாரங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அர்த்தமுள்ளவைகளாக இல்லை என்பதையும், அவர்கள் பிராந்திய ரீதியில் வடக்கும் கிழக்கும் இணைந்ததோர் அர்த்தமுள்ள அதிகாரங்களைக் கொண்ட நிர்வாக அலகையே கோரி நிற்கின்றனர் என்பதையும் பேரின அரசியல் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
யுத்தத்தின்போது இடம்பெற்ற பாதிப்புகளுக்கும் அநியாயங்களுக்கும் நீதி வழங்க வேண்டும். அரசியல் ரீதியாக இழப்பீடாக நிவாரணம் வழங்க வேண்டும். தமது எதிர்கால வாழ்க்கை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக மீளப் பெற முடியாத வகையில் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் தீர்வைத் தர வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் அபிலாஷை.
சிங்கள மக்களை அவர்கள் தமது சக குடிமக்களாகவே கருதுகின்றார்கள். பேரின அரசியல் கட்சிகளையோ அல்லது பேரின அரசியல்வாதிகளையோ அவர்கள் தமது எதிரிகளாகக் கருதவில்லை. அவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு இணைந்து வாழத்தக்க நிரந்தரமானதோர் அரசியல் நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றார்கள்.
இந்த எதிர்பார்ப்புகளின் நியாயத்தன்மையையும் அவற்றின் ஆழத்தையும் அரசியல் ரீதியான உறுதியான உணர்வையும் பேரின கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உளப்பூர்வமாக உணர்ந்திருக்க வேண்டியதும் அவசியம்.
அத்தகைய அரசியல் உணர்வின் அடிப்படையில் பேரின கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய வெளிப்பாடு உண்மையான, நேர்மையான உறுதிப்பாட்டைக் கொண்டதாக அமைய வேண்டியதும் முக்கியம். ஆனால் தற்போதைய நாட்டின் அரசியல் சூழலில் அவர்களிடம் இருந்து அத்தகைய அரசியல் நிலைப்பாடு வெளிப்படுமா என்பது சந்தேகமே.
நம்பிக்கையை விதைக்க வேண்டும்
யுத்தத்தில் பெற்ற வெற்றியை அரசியல் முதலீடாக்கிய ராஜபக் ஷாக்கள் இனப்பிரச்சினைக்கு உறுதியானதோர் அரசியல் தீர்வைக் காணத் தவறிவிட்டார்கள். அவர்களுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு நல்லாட்சியை உருவாக்கிய மைத்திரி – ரணில் கூட்டு அமைப்பும் தமிழ் மக்களுக்கு அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளின்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறி விட்டது.
ஆட்சி மாற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அளித்திருந்த ஆதரவின் மூலம் நன்மைகள் விளை வதற்குப் பதிலாகக் குழப்பகரமான நிலைமையை உருவாக்குவதற்கே வழியேற்படுத்தி இருந்தது. அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கியிருந்த உறுதியான – நிபந்தனையற்ற ஆதரவு விழலுக்கு இறைத்த நீராகி உள்ளது.
என்ன செய்யலாம்.......?
அடுத்த ஜனாதிபதியாக வருபவர் எந்த வகையிலும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க மாட்டார் என்ற அரசியல் ரீதியான மனப்பதிவையே தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் நம்பிக்கையற்றவர்கள் ஜனாதிபதியானால் என்ன நடக்கும் என்ற கேள்வியும், அந்த நம்பிக்கையற்றவர்களைத் தெரிவு செய்கின்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து வருகின்ற பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுகின்ற தரப்பும், ஜனாதிபதியின் போக்கிலேயே அரசியலை முன்னெடுக்கும் என்ற ஐயப்பாடும் தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றன.
இந்த நிலைமையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தாங்கள் முன்வைக்கின்ற நிலைப் பாட்டை நிறைவேற்றுபவர்களாக இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்த உரிய சமிக்ஞையாக ஏதாவது ஒரு நடவடிக்கையை அவர்கள் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைக்க முடி யும். தொடர்ந்து தேர்தலில் அவர்களுடைய ஆதரவைப் பெறவும் முடியும்.
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற பலத்தின் மூலம் அதிகாரம் வாய்ந்ததாக இருக்கின்றது. அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால பொதுஜன பெரமுனவுடன் கொண்டுள்ள மென்போக்கான அரசியல் அணுகுமுறையின் மூலம் ராஜபக் ஷாக்கள் செல்வாக்கு பெற்றிருக்கின்றார்கள். ஆகவே ஜனாதிபதியின் அதிகார பலத்தைக் கொண்டு அவர்களும் தேர்தல் காலத்துக்கான ஒரு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்த முடியும். அதற்கான வாய்ப்பான நிலைமையும் காணப்படுகின்றது. தமிழ்...
இத்தகைய நல்லெண்ண சமிக்ஞையாக அரசியல் கைதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பளித்து உடனடியாக விடுதலை செய்வது – இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்து அவர்களின் மீள் குடியேற்றத்துக்கு வழிசெய்வது –
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இறைமையுள்ள அரசு என்ற வகையில் பொறுப்பேற்று அவர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்துவது, அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் அல்லது எங்கு, எவ்வாறு, என்ன நோக்கத்துக்காக வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற உண்மையான விபரத்தை வெளிப் படுத்துவது –
என்ற இது போன்றவற்றைச் செய்து தமது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு உறுதிப்படுத்த முடியும். பேரின அரசியல் கட்சிகளினாலும், பேரின அரசியல்வாதிகளினாலும் இது செய்யத்தக்கது. இவற்றைச் செய்வதற்குரிய அழுத்தத்தை உரிய அரசியல் வழிகளின் மூலம் பிரயோகிக்க வேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைமையினதும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினதும் கடமையும் பொறுப்புமாகும்.
சர்வதேசத்தின் உதவியின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று சர்வதேசத்தின் மீது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் சர்வதே சத்தையும் ஐ.நா.வையும் மத்தியஸ்தமாகக் கொண்டு ஓர் உடன்பாட்டின் மூலம் ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கலாம். அந்த ஆதரவின் மூலம் அவரை ஜனாதிபதியாக்க முடியும். அவர் பதவிக்கு வந்ததும், இது கால வரையிலும் நடந்ததைப் போலல்லாமல் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு சர்வதேசமும் ஐ.நா.வும் உறுதியான வலுவான அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
இத்தகைய வழிகளின் மூலம் மட்டுமே விடாக்கண்டன் கொடாக்கண்டன் போக்கில் செயற்படுகின்ற பேரின அர சியல் கட்சிகளின் வேட்பாளர்களை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணச் செய்ய முடியும்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அரசியல் தரப்பினர் சிந்திப்பார்களா?
- பி.மாணிக்கவாசகம் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment