இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு?
"காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு விவகாரம், 3 ஆம் நாட்டின் தலையீடு அவசியமில்லை"
அமேசனில் பற்றி எரியும் தீ : ஜி 7 நாடுகளின் உதவியை ஏற்க மறுத்த பிரேசில்
ராஜிவ் கொலை: 7 பேரை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய நளினியின் வழக்கு தள்ளுபடி
பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க மகாராணி ஒப்புதல்!
பிரித்தானிய பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு
கிறிஸ்மஸ் தீவில் அடைக்கப்பட்ட தமிழ் குடும்பம்- தாய்க்கு காயம் - தொடர்ந்து அழுதவண்ணம் பிள்ளைகள்
பாடசாலை உதைபந்தாட்ட போட்டியின் பின்னர் துப்பாக்கி பிரயோகம்- அமெரிக்காவில் சம்பவம்
இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு?
27/08/2019 ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வர்த்தகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமைச்சரவை கூட்டத்தின்போது இந்தியா குறித்து விவாதித்தோம். ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் வான் வழி, நில வழிகளுக்கு தடை விதிப்பது பற்றி பேசினோம். இதுதொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் நில மற்றும் வான் வெளிகளுக்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
26/08/2019 காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு விவகாரம், ஆகவே இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துக் கொள்வோம் என்றும் ‘3 ஆம் நாடு தலையீடு தேவையில்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடும் எடுத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்சில் ஜி7 மாநாட்டுக்கிடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் சந்தித்து உரையாடியுள்ளளனர். இதன்போதே மோடி மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் தாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக தன்னிடம் மோடி கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துக் கொள்வோம் என்றும் ‘3ம் நாடு தலையீடு கோரி தொந்தரவுபடுத்த விரும்பவில்லை’ என்றும் மோடி கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதாவது, 1947-க்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருநாடாக இருந்தது என்று கூறிய மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இம்ரான் கானுடன் சமீபத்தில் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலைக் குறிப்பிட்ட ட்ரம்ப், வறுமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருநாடுகளிலும் உள்ளது. ஆகவே இருநாடுகளும் மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும் என்று இம்ரான் கூறியதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள் என்பதே தன் நிலைப்பாடு என்றுட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நன்றி வீரகேசரி
27/08/2019 அமேசன் காடுகளில் பற்றி எரியும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நிதி உதவி வழங்க தயராக இருப்பதாக ஜி 7 நாடுகள் அறிவித்த நிலையில் , ஜி 7 நாடுகளின் உதவியை பிரேசில் நிராகரித்துள்ளது.
பிரேஸிலின் அமேசன் காடு 20 சதவீத ஒக்சிஜனை வெளியிட்டு வருகின்றதோடு , உயிரினங்கள் வாழ்வதற்கு பெரும் பங்களிப்பு செலுத்துகின்றது.
அமேசன் காடுகளில் கடந்த சில வாரங்களால் பல்வேறு இடங்களில் பெரும்பாலன அளவில் தீ பற்றி எறிந்து வருகின்றது.
இந்நிலையில் ஜி–7 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸில் கூடியுள்ள அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் பிரேசிலின் அமேசன் மழைக்காட்டுப் பிராந்தியத்தில் பரவிவரும் காட்டுத் தீயை அணைப்பதற்கான போராட்டத்திற்கு உதவுவதற்கான உடன்படிக்கையொன்றை எட்டுவதை நெருங் கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி காட்டுத் தீயை அணைப்பதற்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குவதற்கான உடன்படிக்கையொன்று எட்டப்படவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
கடற்கரையோர நகரான பியர்றிட்ஸில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுபட்ட னர்.
பிரேசில் ஜனாதிபதி ஜாயிர் பொல்ஸோனரோ காடழிப்பு நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறியமையே மேற்படி காட்டுத் தீ அனர்த்தத்திற்கு காரணம் என பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
காட்டுத் தீயை அணைக்க ஜாயிரின் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி உலகளாவிய ரீதியில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமேசன் காட்டுத் தீயை சர்வதேச பிரச்சினையொன்றாக பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியான அழுத்தம் காரணமாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சு மேற் படி காட்டுத் தீயை அணைக்கும் செயற்கிரமத்தில் 44,000 படையினரை ஈடுபடுத்துவதாக அறிவித்துள்ளது. அத்துடன் போர் விமானங்களும் காட்டுத் தீ பரவும் பிராந்தியங்கள் மீது பெருமளவு நீரை விசிறி காட்டுத் தீயை அணைக்கும் செயற்கிரமத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த அமேசன் காட்டுத் தீயை காரணம் காட்டி வெளிநாட்டு அரசாங்கங்கள் பிரேசி லின் தேசிய இறைமையில் தலையீடு செய்ய முயற்சிப்பதாக முன்னர் குற்றஞ் சாட்டியிருந்த பிரேசில் ஜனாதிபதி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை டுவிட்டர் இணையத் தளத்தில் தன்னால் வெளியிடப் பட்ட செய்தியில், இந்தக் காட்டுத் தீயை அணைப்பதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹுவால் வழங் கப்படும் அனுசரணையை ஏற்றுக்கொண் டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். நன்றி வீரகேசரி
ராஜிவ் கொலை: 7 பேரை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய நளினியின் வழக்கு தள்ளுபடி
29/08/2019 இந்தியாவில் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி, கடந்த பெப்ரவரியில் அரசுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது.
அதே போல, இந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது எனவும்,ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாகவும், 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும், வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த நீதிபதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அரசுக்கு அனுப்பிய கடிதம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நன்றி வீரகேசரி
பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க மகாராணி ஒப்புதல்!
28/08/2019 ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்குவதற்கு இரண்டாம் எலிசபெத் மகாராணி ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்.பிக்கள் எதிர்ப்பு காரணமாக, பாராளுமன்றத்தை எதிர்வரும் ஒப்டோபர் மாதம் 13 ஆம் தினதி வரை ஒத்தி வைக்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் திட்டமிட்டிருந்தார்.
அத்துடன் இது தொடர்பில் அனுமதி வழங்குமாறும் எலிசபெத் மகாராணியிடம் அவர் கோரியிருந்தார். இந் நிலையிலேயே மகாராணி, செப்டம்பர் 9 முதல் 12 வரையிலும் மற்றும் அதைத்தொடர்ந்து ஒக்டோபர் 14 ஆம் திகதி வரையிலும் பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்த விவகாரத்தை 'பிரெக்ஸிட்' என்று அழைத்து வந்தனர்.
ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மூன்று முறை தோல்வி அடைந்தது.
ஆளும் பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்) உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தெரசா மே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியின் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி ராஜினாமா செய்தார் தெரசா மே.
இதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜோன்சன் பிரிட்டன் பிரதமராக ஜூலை மாதம் பதவி ஏற்றுக் கொண்டார்.
பதவி ஏற்றதும் இன்னும் 3 மாதங்களுக்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்றும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து எதிர்மறைக் கருத்தைத் தெரிவிப்பவர்கள், சந்தேகிப்பவர்களின் கூற்றைத் தவறு என்று நிரூபிப்பேன் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிரித்தானிய பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு
30/08/2019 பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வதற்கு எடுத்த தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி விலகுவதற்கு எதிர்ப்பைக் கொண்டவர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் பிரதமரின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதமரின் பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக சட்ட ரீதியான சவால் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் வரையான 5 வாரங்களுக்கு பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது சம்பந்தமான பிறிக்ஸிட் செயற்கிரமம் தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கான நேரத்தை அனுமதிப்பதாக உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
இந்த நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கை எதுவுமின்றி விலகுவதற்கு முட்டுக்கட்டை போடுவதை தடுத்து நிறுத்த ஜனநாயகத்திற்குப் புறம்பாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியென அதன் எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்யும் மேற்படி திட்டத்திற்கு எலிஸபெத் மகாராணியார் நேற்று முன்தினம் புதன்கிழமை அனுமதியளித்துள்ளதாகவும் இது நிச்சயமாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி வெளியேறுவதற்கான எதிர்ப்பிற்கு தடை ஏற்படுத்துவதற்கான ஒரு அரசியல் நகர்வல்ல எனவும் அமைச்சர் மைக்கேல் கொவ் தெரிவித்தார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தினமான ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு பெருமளவு நேரம் உள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவிக்கையில், பாராளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி மகாராணியாரின் உரை இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.
''இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களை முன்னெடுக்க பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதற்கு பிற்பாடு வரை காத்திருக்க தான் விரும்பவில்லை" என போரிஸ் ஜோன்ஸன் கூறினார்.
மகாராணியாருடனான சந்திப்பின் போது பங்கேற்ற பாராளுமன்றத் தலைவர் ஜாகொப் றீஸ் மொக் கூறுகையில், இந்தப் பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரானது கடந்த 400 வருட காலத்திலேயே மிகவும் நீண்ட கூட்டத்தொடர் ஒன்றாக விளங்குவதால் அதனை இடைநிறுத்தி புதிய கூட்டத்தொடர் ஒன்றை ஆரம்பிக்க உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.
அதேசமயம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப், போரிஸ் ஜோன்ஸனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாராளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று பின்னர் டவுணிங் வீதியிலுள்ள பிரதமரின் அலுவலகம்வரை விரிவாக்கம் அடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெறும் ஆரம்பம் மட்டுமே எனவும் வார இறுதியில் மேலும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் ஒரு நாளிலும் குறைந்த காலப்பகுதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு அரசாங்க இணையத்தளத்தில் முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட தினமொன்றிலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதிவரை இடை நிறுத்தம் செய்யப்பட வுள்ளது. நன்றி வீரகேசரி
கிறிஸ்மஸ் தீவில் அடைக்கப்பட்ட தமிழ் குடும்பம்- தாய்க்கு காயம் - தொடர்ந்து அழுதவண்ணம் பிள்ளைகள்
31/08/2019 அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் கிறிஸ்மஸ் தீவில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தம்பதியினரின் இரு பெண் குழந்தைகளும் தொடர்ச்சியாக அழுத வண்ணமுள்ளனர் அவர்களின் தாய் பிரியாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தம்பதியினரை தொடர்புகொண்ட அவர்களது ஆதரவாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிரியாவை அதிகாரிகள் விமானத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்ட வேளை அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது அதற்கு கிறிஸ்மஸ் தீவில் கிசிச்சையளிக்கப்படுகின்றது என அவருடன் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் இதனை உறுதி செய்துள்ளார்.
கடந்த 36 மணித்தியாலங்கள் அந்த குடும்பத்தவர்களிற்கு மாத்திரமில்லை அவர்களது ஆதரவாளகளிற்கும் மிகவும் கடினமானவையாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் ஆதரவாளர்கள் பிரியாவுடன் இன்று காலை தொலைபேசி மூலம் உரையாடியவேளை அவர் கடந்த வியாழக்கிழமை பிரியாவை அதிகாரிகள் விமானத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்ட வேளை அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது அதற்கு கிறிஸ்மஸ் தீவில் கிசிச்சையளிக்கப்படுகின்றது என தெரிவித்தார் எனவும் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரியாவை பலவந்தமாக விமானத்தில் ஏற்ற முற்பட்டவேளை அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது,சுமார் ஐம்பது பேர் அவர்களை மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினர் அதற்கான வீடியோ படங்கள் எங்களிடம் உள்ளன,இதன் போது பிரியாவை அவர்கள் பலவந்தமாக விமான நிலையத்திற்குள் ஏற்றினார்கள் இதனால் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் தொடர்ச்சியாக அழுதவண்ணமுள்ளனர்,கோபிகா தனிமையை உணர்கின்றார் , கிறிஸ்மஸ்தீவில் உள்ள அகதிகள் அவர்கள் மாத்திரமே எனவும் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
நடேஸ் பிரியா குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பது அனுமதிக்குமாறு நாங்கள் அமைச்சர் பீட்டர் டட்டனிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்,தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்கள் சமூகத்தவர்கள் இவ்வாறு நடத்தப்படுவது குறித்து நாங்கள் கடும் துயரமடைந்துள்ளோம் நாங்கள் பாதுகாப்பு தேடியே இங்கு வந்தோம் இலங்கை தமிழர்களிற்கு பாதுகாப்பான நாடில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பாடசாலை உதைபந்தாட்ட போட்டியின் பின்னர் துப்பாக்கி பிரயோகம்- அமெரிக்காவில் சம்பவம்
01/09/2019 அமெரிக்காவின் அலபாமா நகரின் பாடசாலைகளிற்கு இடையிலான உதைபாந்தாட்ட போட்டியின் பின்னர் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் பத்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
லட் பீபிளெஸ் மைதானத்தில் லெப்லோர் வில்லியம்சன் உயர்தர பாடசாலைகளிற்கு இடையே இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி முடிவடைந்த பின்னர் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களே காயமடைந்துள்ளனர் இவர்களில் ஐவரின் நிலை ஆபத்தானதாக காணப்படுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மைதானத்திற்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்களையும் மாணவர்களை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களையும் உள்ளுர் மருத்துவமனைகளிற்கு விரையுமாறு கேட்டுக்கொண்டுள்ள காவல்துறையினர் பொதுநிகழ்வுகளில் இவ்வாறான சம்பவங்களை சகித்துக்கொள்ளப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை இந்த தாக்குதல் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக துப்பாக்கி வன்முறைகள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment