29/08/2019 எம்முடன் பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர்களில் மிகுந்த அமைதியானவர்களையும், எந்தப் பிரச்சினையையும் பதற்றப்படாமல் நிதானமாக அணுகுபவர்களையும் கூறுங்கள் என்று கேட்டால் நண்பர் அகஸ்டின் மொறாயஸை தவிர வேறு எவரும் முதலில் நினைவிற்கு வரமாட்டார்கள். அத்தகைய அமைவடக்கமான, பண்பட்ட ஒரு மூத்த ஊடகவியலாளர் எம்மத்தியிலிருந்து மறைந்து விட்டார்.

கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற அந்த மரணம் தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று சொல்வதிலும் பார்க்க, ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்றுதான் கூறவேண்டும். அத்தகைய ஒரு பண்பாளனை எம்மத்தியில் நாம் கொண்டிருக்க வேண்டும்.
வீரகேசரியில் ஒரு ஓவியராக 1960 களின் நடுப்பகுதியில் இளம்வயதில் இணைந்துகொண்ட நண்பர் மொறாயஸ், சுமார் அரைநூற்றாண்டு காலமாகப் பணியாற்றினார். அவரது சேவைக்காலத்தில் ஓவியத்துறைக்குப் புறம்பாக ஊடகத்துறையில் பல்வேறு பிரிவுகளிலும், குறிப்பாக சினிமாத்துறை, சிறுகதைகள், கார்ட்டூன்கள், கலை இலக்கிய விமர்சனம் என்று தனது திறமையை வெளிக்காட்டி சிறந்த ஊடகவியலாளர்களாக வளரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டார்.
சினிமாத்துறையின் மீதான ஆர்வம் நண்பர் மொறாயஸுக்கு குடும் பப் பின்னணியிலிருந்தே வந்த ஒன்று. இலங்கையின் சிங்கள சினிமாத்துறையில் ஒளிர்விட்டுப் பிரகாசித்த தமிழ் ஆளுமைகளில் முக்கியமான ஒருவராக விளங்கிய ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான காலஞ்சென்ற லெனின் மொறாயஸ் இவரின் மூத்த சகோதரராவார். அவரின் சினிமாத்துறைப்பணி நண்பர் மொறாயஸ் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்திய காரணத்தினால் வீரகேசரி வாரவெளியீட்டிலும், மித்திரன் தினசரி, மித்திரன் வாரமலர் ஆகியவற்றிலும் சினிமாத்துறை சிறப்பம்சங்களைக் கையாளும் பொறுப்பை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவருடைய அந்தப் பணிக்கு வீரகேசரி வாரவெளியீட்டின் முன்னாள் ஆசிரியர் காலஞ்சென்ற பொன்.இராஜகோபால், மித்திரனின் ஆசிரியர்களான கே.நித்தியானந்தன், நேசமணி, சூரியகுமாரன் போன்றவர்களும் மித்திரன் வாரமலரின் ஆசிரியராக அப்போது பணியாற்றிய திருமதி.அன்னலட்சுமி இராஜதுரையும் பெரும் ஊக்கத்தை அளித்தார்கள். மொறாயஸுடன் அவரது ஊடகத்துறை வாழ்வு குறித்துப்பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தனது முன்னேற்றத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்த இவர்களைத் தவறாமல் நினைவுகூருவார்.
மோனாலிஸா என்ற புனை பெயரில் அவரது படைப்புக்கள் எண்ணி மாளாது. பணியாற்றும் நிறுவனத்திற்கு விசுவாசம் என்றால் அதை நண்பர் மொறாயஸிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.
சினிமாத்துறை சார்ந்த பணிகளுக்கு அப்பால் கலை, இலக்கியவாதிகள், நாடகக் கலைஞர்கள் என்று பல பிரிவினருடனும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களது கலைத்துறைப் பங்களிப்புக்களுக்குப் பத்திரிகை வாயிலாக மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்து வந்தவர் நண்பர் மொறாயஸ். மறைந்த கலைஞர்களுடைய நினைவு தினங்களின் போது அவர்களைப் பற்றிய நினைவுப் பரவல் கட்டுரைகளைத் தவறாது வீரகேசரியில் மாத்திரமல்ல, ஏனைய பத்திரிகைகளிலும் பிரசுரிப்பதற்கு ஏற்பாடு செய்து வந்தவர் மொறாயஸ்.
மறைந்த கலைஞர்களின் நினைவைக் கொண்டாடும் இந்தப் பணியை மொறாயஸைப் போன்று ஆழ்ந்த அக்கறையுடன் வேறு யார் செய்யப் போகின்றார்கள்?
சினிமாத்துறை சிறப்பம்சங்களை செம்மையாகக் கையாண்ட காரணத்தினால் நண்பர் மொறாயஸ் தென்னிந்தியாவிலுள்ள சினிமாத்துறையினருடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். சமகாலத்தைப் போன்று தகவல் தொழில்நுட்பம் பெரும் உச்சங்களைக் கொண்டிராத அன்றைய காலகட்டத்திலேயே தென்னிந்தியாவிலிருந்து சினிமாத்துறை விடயதானங்களைத் துரிதமாக வரவழைத்து வாசகர்களின் எதிர்பார்ப்புக்களைத் தன்னால் இயன்றவரை பூர்த்தி செய்தார். பத்திரிகைத்துறையில் பணியாற்றிய அவரது நண்பர்கள் பலருக்கு கலையுலகின் ஆளுமைகளுடன் பழகுவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமென்றால் அதற்குக் காரணகர்த்தாவாக விளங்கியவர் நண்பர் மொறாயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய பத்திரிகைத்துறை வாழ்வில் ஏறத்தாழ சுமார் 40 வருடங்கள் நண்பர் மொறாயஸுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்திருக்கிறேன். அவருடைய இனிமையான சுபாவம் எதையுமே கடுமையாக அவருடன் பேசுவதற்கு அனுமதிக்காது. அதுபோன்றே அவரும் மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் எந்தக் காரியத்திலும் ஈடுபட்டதை யாருமே கண்டிருக்க முடியாது. ஆனால் சிறுமை கண்டு பொங்கி, சாது மிரண்ட" சம்பவங்களும் கூட உண்டு. அவற்றை நெருங்கிப் பழகியவர்கள் தான் அறிவார்கள்.
நல்லுள்ளம் கொண்ட நண்பர் மொறாயஸ் மிகுந்த பண்பாளன் - செயற்றிறன் மிக்க ஊடகவியலாளர் என்ற மரபை விட்டுச் செல்கின்றார். அதுகுறித்து அவருடன் பணியாற்றிய ஊடகவியலாளர்களும், குறிப்பாக அவர்களது குடும்பத்தவர்களும் என்றென்றைக்கும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
– -வீ.தனபாலசிங்கம் – நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment