சிங்கள பௌத்த ஆதரவை கொண்டிருக்கும் கோத்தாபய தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்று இதயசுத்தியுடன் எழுத்துமூல உத்தரவாதத்தினை வழங்குவாரா?
தமிழ்த் தரப்பின் விட்டுக்கொடுப்புக்களை தென்னிலங்கை கருத்திற்கொள்ளாது எதனையும் வழங்காது ஏமாற்றிவிட்டது. எமது தரப்பின் இராஜதந்திரம் தோற்றுவிட்டது. இத்தகையதொரு நிலைமையானது அடுத்த தலைமுறையின் சிந்தனைகளில் திசைமாற்றத்தினை ஏற்படுத்தும் சூழலை தோற்றுவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் உங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இராணுவம் செயற்படுவதாக கூறியுள்ளீர்களே?
பதில்:- ஆம், சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் கடுமையான விமர்சனத்தினை பாராளுமன்றில் முன்வைத்த மறுதினமே வட்டக்கச்சியில் உள்ள எனது காணியில் ஆய்வு செய்யவேண்டும் என்று இராணுவத்தினர் கூறியுள்ளார்கள். உடனடியாகவே அவ்விடத்திற்கு வருகைதந்தவர்களை தொடர்பு கொண்ட போது அந்த விடயத்தினை திசை திருப்பிவிட்டார்கள். 2011ஆம் ஆண்டிலிருந்து இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் இவ்வாறு என்மீது அவ்வப்போது அச்சுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.
தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பங்கேற்காது விட்டால் கோத்தாபய ஆட்சியில் அமரும் நிலைமை நிச்சயம் ஏற்படும்
சபாநாயகரிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக எழுத்துமூலமான முறைப்பாடும் செய்துள்ளேன். என்னால் முன்வைக்கப்படும் உண்மையான கருத்துக்களை ஜீரணிக்க முடியாது. இராணுவ மேலாதிக்க சிந்தனையுடன் செயற்படுகின்றார்கள். இந்த நிலைமைகள் தொடர்ச்சியாக இருக்கும் என்றே கருதுகின்றேன்.
கேள்வி:- தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ள நிலையில் அவை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது?
பதில்:- கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் கோத்தாபயவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இவ்விரண்டு நிகழ்வுகள் தொடர்பாக எமது பாராளுமன்றக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமாரவுடன் உத்தியோகப் பற்றற்ற பேச்சுக்கள் சில முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை விட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு எவ்விதமான விடயங்களையும் முன்னெடுக்கவில்லை. அதேபோன்று எமது பாராளுமன்றக்குழுவிலோ, மத்திய குழுவிலோ இதுவரையில் யாரை ஆதரிப்பது என்பதில் உத்தியோக பூர்வமான முடிவுகள் எவையும் எடுக்கப்படவுமில்லை.
கேள்வி:- தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் வலுக்கின்ற நிலையில் உங்களுடைய நிலைப்பாடு எவ்வாறுள்ளது?
பதில்:- ஜனநாயக முறைமையான தேர்தல்களில் தமிழர்கள் பங்கேற்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாம் வாக்களிப்பில் பங்கேற்காமையால் தான் மஹிந்த ஜனாதிபதியானார். அடிப்படையில் நோக்குகின்றபோது அன்று தமிழர்களே மஹிந்தவை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள். தமிழர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருப்பார். அன்று ஆயுத ரீதியான பலத்துடன், எமது மண்ணில் சமவலிமையுடன் நாம் இருந்தோம்.
அத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே ரணில் பின்கதவால் கருணாவை பிளவுபடுத்திய காலமாகவும் இருந்தது. இதனால் தான் அன்று வாக்கெடுப்பினை புறக்கணிக்க வேண்டியேற்பட்டது. அவ்வாறிருக்க தற்போதைய தேர்தலில் தமிழர்கள் பங்கேற்காது விட்டால் கோத்தாபய ஆட்சியில் அமரும் நிலைமை தான் இருக்கின்றது. இனப்படுகொலையாளியை, எம்மீது போர்க்குற்றங்களை புரிந்தவரை வாக்களிக்காமலேயே தெரிவு செய்கின்ற கைங்கரியத்தினை செய்ய முடியாது.
கேள்வி:- அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய வேட்பாளரை ஆதரிக்கலாம் என்று எண்ணுகின்றீர்கள்?
பதில்:- யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்களால் நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்திருக்கின்றோம். தமிழர்களுக்கான தேசிய விடுதலை அங்கீகாரம் செயலிழந்த பின்னர் போர் வெற்றியை முன்னிலைப்படுத்தி மஹிந்த ராஜபக் ஷ
இருதடவைகள் ஆட்சியை தன்னகப்படுத்தினார். தேசிய இனப்பிரச்சினை குறித்து அவருடன் கூட்டமைப்பு 19தடவைகள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தபோதும் ஏமாற்றமே எஞ்சியது. மஹிந்த இராணுவ வெற்றியை முன்னிலைப்படுத்தினாரே தவிர புரையோடிப்போயிருந்த பிரச்சினைகளுக்கு ஜனநாயக அரசியல் ரீதியான தீர்வுகளை காண்பதற்கு சிந்திக்கவே இல்லை. 2015இல் மைத்திரிபால சிறிசேனவை நாம் அரசியல் புரட்சியின் மூலம் ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினோம். நெல்சன் மண்டேலாவே வருக என்று எமது தலைவர் அவரை ஆராதித்திருந்தார்.
ஆனால் அவர் வினைத்திறனாக செயற்படுவதற்கு பதிலாக கடந்த காலத்தில் இருந்த ஜனாதிபதிகளின் செயற்பாடுகளுக்கு பல படிகள் அப்பாற் சென்று சிங்கள பௌத்த இனவாத சிந்தனையில் செயற்பட்டார். இதனால் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாதவாறு அடியோடு புரட்டிப்போட்டு விட்டார். ஆகவே அடுத்த தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதில் ஆழமாகச் சிந்தித்து நிதானமாகவே முடிவெடுக்க வேண்டியுள்ளது.
கேள்வி:- நேரடியாக போரில் கட்டளைகளைப் பிறப்பித்து வழிநடத்திய சரத்பொன்சேகாவை ஆதரித்த கூட்டமைப்பு கோத்தாபயவுடன் தமது நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுக்களை நடத்த முடியும் என்றும் அவரை ஆதரிப்பதாக அறிவிக்காது விட்டாலும் தமிழ் மக்களை திசைதிருப்பாது இருக்கவேண்டும் என்று மஹிந்த தரப்பினால் விவாதிக்கப்படுகின்றதே?
பதில்:- 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது நான் பாடசாலை அதிபராக இருந்ததோடு சிரேஷ்ட தலைமைதாங்கும் அதிகாரியாக தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்தேன். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தான் அரசியலில் பிரவேசம் செய்திருந்தேன். சரத்பொன்சேகா ஜனாதிபதியாகின்றபோது, உடனடியாக அரசியல் தீர்வினை முன்வைப்பேன் என்று எழுத்துமூலமான உத்தரவாதத்தினை வழங்கியிருந்தார். அந்த எழுத்துமூல உத்தரவாதத்தினை எமது கட்சியின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்தியதன் காரணத்தால் தான் சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்டார் என்று எமது கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் எம்மிடத்தில் கூறியுள்ளார்கள்.
தற்போது சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை கோத்தாபய கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறான நிலையில் தமிழர்களுக்கு அவர் எழுத்துமூல உறுதிப்பாட்டினை வழங்குவதற்கு தயாராக இருப்பாரா என்பது கேள்விக்குரிய விடயமாகும். மேலும், காணிகள் அபகரிக்கப்பட்டு எமது மக்கள் இராணுவ ஆட்சிக்குள் வாழ்கின்றார்கள். காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறிருக்கையில் இனப்படுகொலை புரிந்து, மனித உரிமைமீறல்களை அப்பட்டமாகச் செய்த ஒருவருக்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருவதில் எந்த முகாந்திரமும் கிடையாது.
கேள்வி:- 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐ.தே.க தலைமையிலான அரசுக்கு கூட்டமைப்பு முண்டுகொடுத்துவருகின்றது என்ற பகிரங்க விமர்சனத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- அந்த விமர்சனம் நேர்மறையானது அல்ல. எந்தவிதமான அடைவுகளையும் பெறாது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அபரிதமாக முண்டுகொடுத்திருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. எமது மக்களுக்கு ஒருசில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஐ.தே.க முன்னெடுத்திருந்தாலும் எமது அடிப்படை அபிலாஷைகளை தீர்ப்பதற்கான செயற்பாட்டில் அக்கட்சி இதயசுத்தியுடன் செயற்பட்டிருக்கவில்லை. ஆகவே கடந்த காலத்தில் விட்ட தவறுகளை சுயபரிசீலனை செய்து கொண்டு அடுத்தகட்டம் குறித்த தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.
கேள்வி:- இடதுசாரித்துவ சித்தாந்தத்தைக் கொண்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் பங்கேற்றுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் மக்கள் விடுதலை முன்னணியும் கணிசமான வாக்குகளை பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு, கவர்ச்சிகரமான தலைமைத்துவம், இளைஞர்களின் விருப்பு ஆகியவற்றை பார்க்கின்றபோது அத்தரப்பும் தம்மை பலம்வாய்ந்த தரப்பாக அடையாளப்படுத்தும் என்றே கருதுகின்றோம்.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுடன் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகள் சார்ந்து தனித்தனியான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?
பதில்:- மக்களின் அபிலாஷைகள் சார்ந்து எந்தவொரு தரப்புடனும் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் இதுவரையில் உத்தியோக பூர்வமான பேச்சுக்கள் எவையும் நடைபெறவில்லை. வேட்பாளர்கள் நியமிக்கப்படுவதில் இருக்கும் குழப்பங்கள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னர் அவர்களின் கொள்கைத்திட்டங்களை அடிப்படையாக வைத்து எமது நிபந்தனையுடன் பேச்சுக்களை முன்னெடுப்பது பற்றி ஆராய்ந்து முடிவெடுப்போம்.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை போட்டியொன்று உருவாகின்றபோது கூட்டமைப்பின் கரிசனை எவ்வாறு இருக்கும்?
பதில்:- மும்முனை போட்டியோ அல்லது அதற்கும் அதிகமாக வருகின்ற
போது எவராலும் ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியாது போகும் நிலைமையே ஏற்படும். அவ்வாறான தருணத்தில் தமிழ் மக்களே தீர்மானிக்கும் சக்தியை கொண்டிருப்பார்கள். வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தான் வெற்றி பெறும் நபர் பெயரிடப்படுவார்.
ஆகவே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள விருப்பு வாக்குகளை எவ்வாறு அளிப்பது என்பது தொடர்பில் எமது மக்களை தெளிவுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க தலைப்பட்டிருக்கின்றோம். அதுகுறித்த இறுதி முடிவுகளை விரைவில் முன்னெடுப்போம்.
கேள்வி:- தற்போதைய சூழலில் ஐ.தே.கவுக்கே தொடர்ந்தும் கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்படுமாயின் அதன் தலைமைத்துவத்தில் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றீர்களா?
பதில்:- எவர் பதவிக்கு வந்தாலும் எமது விடயத்திற்கு நேர்மையாக முன்னுரிமை அளித்து சிங்கள பேரினவாத சகதிக்குள் விழாது கையாளுவார்கள் என்று நம்பிக்கை வைக்க முடியாது. ஆகவே முதலில் சிங்கள பௌத்த இனவாதத்திலிருந்து விடுபடக் கூடிய ஒருவர் முதலில் ஜனாதிபதியாக வேண்டும்.
மேலும் தேசிய விடயங்களை கையாண்ட நீண்ட அனுபவம் வாய்ந்தவர் ஜனாதிபதியாகின்றபோது விடயத்தினை முன்னகர்த்துவதற்கு சுலபமாக இருக்கும். இளைய தலை
முறையொருவர் தலைமையேற்று அவர் அனைத்தையும் கற்று அதற்குப்பின்னர் தீர்வினை காண்பதென்றால் தேசிய பிரச்சினை முழுமையாக நீக்கம் பெறும் நிலையே ஏற்படும். மறுபக்கத்தில் இளம் தலைமுறையைச்சேர்ந்தவர் தலைமையேற்பதென்றால் தேசிய பிரச்சினை விடயத்தில் தனது நிலைப்பாட்டினை பகிரங்கப்படுத்தி அதற்குரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.
கேள்வி:- 2015இற்கு பின்னர் கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சரியான அணுகுமுறையின்மையால் சந்தர்ப்பங்களை தவறவிட்டிருக்கின்றதென விமர்சிக்கப்படுகின்றதே?
பதில்:- நாம் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி விட்டுக்கொடுக்காது கிடுக்குபிடியுடன் செயற்பட்டிருந்தால் எதனையுமே பெறமுடியாதவொரு சூழல் ஏற்பட்டிருக்காது. பேரம்பேசும் சக்தியை சரியாக பயன்படுத்தவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகின்றது. அவற்றையெல்லாம் கடந்து, சர்வதேச தரப்பிற்கும் தார்மீக கடமையொன்று உள்ளது. இந்த நாட்டில் இனப்படுகொலை, மனித உரிமைமீறல்கள் நடைபெற்றுள்ளமைக்கான சகல ஆதாரங்களும் உள்ள நிலையில் அரசாங்கம் பொறுப்புக் கூறலை செய்வதற்கு தயாரில்லாதிருக்கின்ற போது அதற்குரிய அழுத்தங்களை அளிக்க வேண்டிய கடமை சர்வதேசத்திற்கு உள்ளது.
அக்கடமையிலிருந்து சர்வதேசம் விலகி நிற்க முடியாது. சர்வதேசமும் தமிழர்களை கைவிடுமாயின் மீண்டும் ஆயுதரீதியிலான விடுதலை நோக்கிய சிந்தனை ஏற்படும் நிலை தோன்றுமாயின் அதனை யாருமே தடுக்க முடியாத சூழலே உருவாகும்.
தமிழர்கள் வன்முறைகளை விரும்பவில்லை. தந்தை செல்வா ஜனநாயக வழியில் போராட ஆரம்பித்தபோது அது கருத்திற்கொள்ளப்படாமையின் காரணத்தினால் தான் அவருடைய கட்டுப்பாட்டை மீறி இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுத்திருந்தார்கள். தற்போது சம்பந்தன் ஐயாவின் காலத்தில் அவருடைய அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டுள்ளன. அவருடைய விட்டுக்கொடுப்புக்களை அரசு மதிக்கவில்லை.
அவருடைய இராஜதந்திர நகர்வுகள் வெற்றிபெறவில்லை. தன்னை தென்னிலங்கை தலைவர்கள் அனைவரும் ஏமாற்றிவிட்டார்கள் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இத்தகையதொரு நிலைமையானது அடுத்த தலைமுறையின் சிந்தனைகளில் திசைமாற்றத்தினை ஏற்படுத்தும். இதனால் இலங்கை வேறு திசைக்கு இட்டுச் செல்ல வாய்ப்புக்களையும் ஏற்படுத்தும்.
கேள்வி:- பல சந்தர்ப்பங்களில் சிறிதரனின் கருத்துக்களுக்கும் கூட்டமைப்பின் முடிவுகளுக்கும் நேரெதிரான நிலைமைகள் காணப்படுவதேன்?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக கட்டமைப்பாகும். 14பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஜனநாயக அடிப்படையில் தான் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. கருத்தியல் ரீதியாக எனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த முடியுமே தவிர தீர்மானிக்கும் தனிச்சக்தியாக என்னால் மாற முடியாது.
பெரும்பான்மையின அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றபோது எமது கருத்துக்கள், முன்வைக்கப்படுகின்ற வாதங்கள் தோல்வி கண்டுவிடுகின்றன.
இருப்பினும் எமது கருத்துக்களை நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு கட்சியில் தடைகள் விதிக்கப்படவில்லை. மாறாக கட்சி ரீதியாக ஏகோபித்த தீர்மானங்களை எடுக்கின்றபோது தவிர்க்க முடியாத சூழலில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகின்றோம்.
கேள்வி:- கடந்த கால நிகழ்வுகளை தமிழ்மக்கள் மறந்து புதிய அத்தியாயத்தினை நோக்கி நகரவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தரப்பினரே முன்வைக்கின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- தமிழ் மக்களுக்கு நன்மைகளை செய்யாதவர்கள் அண்மைய காலங்களில் நாடு திரும்பி அரசியல் பயணத்தினை ஆரம்பித்திருக்கின்றார்கள். 1987இல் இந்திய இராணுவத்தோடு வருகை தந்து பின்னர் அவர்களுடனேயே நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தமது குடும்பங்களை சரியான முறையில் வளப்படுத்தி விட்டு தற்போது பிரசன்னமாகியுள்ளார்கள்.
இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நடைபெற்றபோது இரகசியமாக கொழும்புக்கு வருகை தந்து மஹிந்த ராஜபக் ஷவுக்கு உதவியளித்தவர்கள் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும்.
இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் தோற்றுவிட்டோம். இந்த நிலையில் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் எம்மிடத்தில் எதுவுமில்லை. தமது பதவிகளுக்காக எம்மீது போர்புரிந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக நீதியை கோருவதற்கு முயலவேண்டும்.
No comments:
Post a Comment