அப்பாவின் தோழேறி
ஆசையாய் பார்த்ததெல்லாம்
இனிப்பாக இருக்கிறது
தப்பிதங்கள் செய்தாலும்
தவறென்று சொல்லாமல்
இப்படிநீ செய்யாதே
என்றுரைப்பார் எங்களப்பா !
கோவிலுக்குப் போனாலும்
கூடவே கூட்டிச்செல்வார்
காவலனாய் எங்களப்பா
கருணையுடன் இருந்தாரே
கோபமுற வைத்தாலும்
குறும்புபல செய்தாலும்
காதலுடன் எனையணைத்து
கன்னமதில் கொஞ்சிநிற்பார் !
காய்ச்சலிலே நானிருந்தால்
கஷாயமெலாம் தரமாட்டார்
கசப்பாக இருக்குமென்று
கற்கண்டை சேர்த்திடுவார்
நானழுதால் தானழுவார்
நான்சிரித்தால் தான்சிரிப்பார்
தன்வாழ்வின் சொத்தெனவே
தானிருந்தார் எங்களப்பா !
வறுமையிலே வாழ்ந்தாலும்
பொறுமைதனை பெற்றிருந்தார்
அறிவுடனே நான்வளரே
அனைத்துமே அவர்செய்தார்
குறைவின்றி கல்விபெற
அளவின்றி அவருழைத்தார்
அவருழைப்பால் நானிப்போ
அகநிறைவாய் வாழுகிறேன் !
அவருருவில் இருக்கின்றேன்
என்றுரைப்பார் பலபேரும்
அவர்போல இவ்வுலகில்
ஆரையுமே காணவில்லை
அப்பாவின் படத்தைநான்
அனுதினமும் பார்க்கின்றேன்
அவரருகில் இருக்கின்றார்
எனும்நினைப்பே எழுகிறது !
No comments:
Post a Comment