இலக்கியத்தால் இணைந்த பூபதி அண்ணா எனது பெற்றோரின் மாணவன் ! - கனடா ஶ்ரீரஞ்சனி


இரண்டு முறை சாகித்தியப் பரிசு, இன்னும் பல விருதுகள் … இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஐந்து கட்டுரை தொகுதிகள், சிறுவர்களுக்கான கதைகள் எனத் தன் பல்வேறு படைப்புக்களால் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகுந்த வளம் சேர்த்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி ஏனைய எழுத்தாளர்களைப் பற்றி உலகம் அறியவேண்டுமென்ற முனைப்புடன் செயல்படும் ஒரு கருமவீரராகவும் அவர் இருக்கிறார். அதற்கு அவரின் வாசிப்பும், பரந்துபட்ட அறிவும், அபாரமான நினைவாற்றலும் மிகவும் கைகொடுக்கின்றன.
நீர்கொழும்பில் பிறந்த பூபதி அண்ணா,  என்னுடைய பெற்றோரின் ஒரு மாணவர் என்பதில் எனக்கு நிறைந்த பெருமை இருக்கிறது. நீர்கொழும்பு விஜயரட்ணம் மகா வித்தியாலத்தில் நான் முதலாம் வகுப்பில் படித்தபோது அவர் அங்கிருந்திருக்கிறார். ஆனால், அது எனக்கு ஞாபகத்தில் இல்லை. பின்னர் கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் நான் ஆசிரியையாக இருந்த ஆரம்பகாலங்களில், ஒரு நாள் என்னைச் சந்திக்க வீரகேசரி துணையாசிரியர் முருகபூபதி அவர்கள் வந்திருக்கிறார் என்று சொன்னபோது என்னால் அதனை நம்ப முடியவில்லை. அவ்வளவு தூரத்துக்கு மிகவும் எளிமையான மனிதர் அவர்.
அந்த அறிமுகத்தின் பின்னர் எங்களின் சுயலாபத்துக்காக அவரின் வீட்டுக்குப் பல தடவைகள் நாங்கள் சென்றிருக்கிறோம். விமானநிலையத்துக்கு அண்மையில் அவரின் வீடு இருந்தமையால் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை அழைக்கவோ அல்லது வழியனுப்பவோ போகும்போது அவர்களின் அன்பான உபசரிப்பை அனுபவித்திருக்கிறோம்.
அதன் பின்னர், துரதிஷ்டவசமாக எங்களில் பலரை எங்கெல்லாமோ சிதறடிக்க வைத்த எங்கள் நாட்டு நிலைமைகளால், இடைவிட்டுப்போன உறவுகளில் ஒன்றாக பூபதி அண்ணாவின் உறவும் இருந்தது.
எனினும், உண்மையான அன்புக்கு அழிவில்லை என்பதற்கேற்ப, 2007 டிசம்பர்  அவர் ரொறன்ரோவுக்கு வந்திருந்தபோது எங்கள் உறவை நாங்கள் புதுப்பித்துக் கொண்டோம். அவருடனான அந்த நேர உரையாடல்களும், அவர் CTBC க்கு வழங்கிய பேட்டியும் இலக்கிய உலகில் மீளவும் என்னைத் தீவிரமாக இணைத்துக் கொள்வதற்கான உத்வேகத்தை எனக்குத் தந்தது. அதன் முதல் கட்டமாக அவரைப் பேட்டி காணவேண்டுமென்று ஓர் அவா எனக்குள் உருவாகியது.  அந்தப் பேட்டி கனடா உதயன் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.
பின்னர் இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகையை எனக்கு அறிமுகப்படுத்திய அவர் என் ஆக்கங்கள் அதில், தினக்குரல் பத்திரிகையில், மல்லிகை இதழில் பிரசுரிக்கப்படுவதற்கு ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தார். அத்துடன் விஜயரட்ணம் மகா வித்தியாலத்தின் நூற்றாண்டு மலர், சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு மலர் என அவரது பொறுப்பில் வெளிவந்தவற்றில் எல்லாம் என் எழுத்தும் இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தினார்.

மேலும் என்னுடைய ஆக்கங்கள் அவரின் வாசிப்புக்கு உட்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அழைத்துப் பாராட்டவும் ஊக்கம் தரவும் என்றுமே அவர் தவறியதில்லை. மெல்பேர்ணின் இலக்கிய அமைப்பொன்றில் இயங்கும் இவர் அங்குள்ள எழுத்தாளர்களினதும், ஏனைய எழுத்தாளர்களினதும் எழுத்துக்கள் விமர்சனத்துள்ளாகி படைப்பாளர்களுக்குப் பயனாக அமையவும், அவை வாசகர்களை சென்றடைவதற்கும் பெரிதும் தொண்டாற்றுகிறார். இலங்கையில் 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை  ஒழுங்குசெய்து, அது திறம்பட நடப்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
‘திரும்பிப் பார்க்கின்றேன்’ என்ற அவரது தொடரில், பல்வேறு எழுத்தாளர்களைப் பற்றி எழுதிவரும் பூபதி அண்ணா  ‘நிழலாகத் தொடர்ந்துவரும் நினைவுகளில் ஸ்ரீரஞ்சனி’ என என்னைப் பற்றியும் விரிவாகவும் சிறப்பாகவும் எழுதியிருக்கிறார், ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் என பெண்களைச் சிறப்பிக்க வெளிவந்த ஜீவநதி வெளியீட்டில், நீர்கொழும்பிலிருந்து கனடா வரையில் தொடரும் உறவில் என என்னையும் என் கதைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் .
 “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என வியக்குமளவுக்கு அவர் என் முன்னேற்றத்தில் கரிசனையாக இருக்கிறார். என் கதைகள் பற்றிய அவரின் விமர்சனக் குறிப்பை நான் நிழலானால் என்ற சிறுகதைத் தொகுதியிலும் என்னுடைய கட்டுரைகள் பற்றிய அவரின் கருத்துக்களை பின்தொடரும் குரல் என்ற கட்டுரைத் தொகுதியிலும் சேர்த்து நான் மகிழ்ந்திருக்கிறேன்.
இலக்கியத்தில் மட்டுமன்றி, பல்வேறு தன்னார்வத் தொண்டுகளிலும் தன்னை அர்ப்பணித்திருக்கும் இவர் 1988 இல் ஆரம்பித்த இலங்கை மாணவர் நிதியம் ஊடாகப் பல்வேறு ஏழை மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தனிப்பட்ட வாழ்வின் சவால்களை மேவி வாழும் அவரின் பயன்மிக்க வாழ்வும், சமூகத்துக்காக அவர் செய்யும் பெரும் பணிகளும், மிகவும் எளிமையாகவும் ஆர்வத்தைத் தூண்டும்வகையிலும் இருக்கும்.  அவரின் எழுத்துக்களும் எனக்கு மிகவும் பிடித்தவையாக உள்ளன.
-->No comments: