பயணியின் பார்வையில் - அங்கம் 16 இலங்கை மணித்திருநாட்டுக்கு வரலாறு கற்பிக்கும் துறவிகள்?! தமிழ்க்கல்வியால் தமிழர் அடையாளத்தை தக்கவைத்துக்கொண்ட நீர்கொழும்பூர் - முருகபூபதி


   இந்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும், இந்த நாட்டின் உரிமை பௌத்த உரிமை என்பதையும், இது ஒரு பௌத்த நாடு என்பதையும் நாம் அனைவரும் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.  எனத்தெரிவித்துள்ளார் இலங்கை பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித். அவர் அத்துடன் நிற்கவில்லை.  “இனி இந்த நாட்டில் உள்ள அனைவரும் சிங்களவர்கள் என்ற ரீதியில் ஒன்றிணையவேண்டும் “ எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது இவ்விதமிருக்க, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட  ரத்னசார தேரர், “ இந்த நாடு பௌத்த சிங்களவருக்கு மட்டுமே உரியது!?” எனச்சொல்கிறார்.
இவர்கள்  இவ்வாறு  திருவாய்மலர்ந்தருளிச்சொல்லும் இந்த பொன்மொழி (?) களுக்கு பின்புலம்  கடந்த ஏப்ரில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும்.
நாட்டின் அதிபர் தேர்தலுக்கான நாள் குறிக்கும் காலப்பகுதியில்,  இவர்களின் இத்தகைய கருத்துக்கள் வெளிவருகின்றன என்பதையும் கவனித்தல் வேண்டும். இவர்கள் யாருக்கு கொம்பு சீவுகிறார்கள் என்பதையும் எளிதாக புரிந்துகொள்ளமுடியும்!
பயணியின் பார்வையில் தொடரின் இறுதி அங்கத்திற்கு வந்துள்ள தருணத்தில், இவர்களின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியதன் பின்னணியில்தான்,  நான் பிறந்து வளர்ந்த ஊரின் முதல் தமிழ்ப்பாடசாலைக்கு முதல் தலைமை ஆசிரியராக 1954 ஆம் ஆண்டு பணியாற்றவந்த பண்டிதர் கதிரேசர் மயில்வாகனனார் நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற தகவலையும் இங்கு பதிவுசெய்கின்றேன்.
முகாமைத்துவப் பாடசாலைகள் இலங்கை எங்கும் வியாபித்திருந்த காலத்தில், நீர்கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்த சைவத்தமிழ் மக்களுக்கும் வடக்கிலிருந்து தொழில், வர்த்தகம், திருமண உறவு முறைகளினால் இடம்பெயர்ந்து வருகைதந்த  சைவத்தமிழ் மக்களுக்கும் ஒரு குறைபாடு நீடித்தது.
அக்குடும்பங்களுக்கு கடற்கரை வீதியில் வழிபாட்டிற்கு மூன்று ஆலயங்கள் இருந்தபோதிலும்,  அக்குடும்பங்களின் குழந்தைகளுக்கென ஒரு சைவத் தமிழ்ப்பாடசாலை இல்லாத குறை நீடித்திருந்தது. எனினும் சைவ சமயத்தை போதிக்கின்ற - கூட்டுப்பிரார்த்தனை வகுப்புகளை நடத்துகின்ற தேவையை உணர்ந்த இந்து வாலிபர் சங்கம் சமூக அமைப்பாகவும் இயங்கியமையால் அதற்காக சாமி சாஸ்திரியார் என்ற ஆசான் மூலம் சமயபாட வகுப்பினைச் சங்க மண்டபத்தில் நடத்துவதற்கு தொடங்கியது.
 எனினும் அதற்கு வந்த குழந்தைகள், இதர பாடங்களை ( தமிழ், கணிதம், ஆங்கிலம், புவியியல், குடியியல்) படிப்பதற்கு அருகிலிருந்த  புனித செபஸ்தியார் பாடசாலை, புனித மரியாள்  பாடசாலை, நியூஸ்ரட் ஆங்கில மகளிர் பாடசாலை, ஆவேமரியா மகளிர் பாடசாலை ஆகியனவற்றுக்குத்தான் சென்றனர்.
1954  ஆம் ஆண்டு வரையில் இந்த நிலைமைதான் நீடித்தது.
இந்த நிலையை மாற்றுவதற்கு ஏதுவாக அச்சமயத்தில் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்த பெரியார் எஸ்.கே. விஜயரத்தினம் அவர்கள் ஒரு வழக்கறிஞராகவும் உத்தியோகப்பற்றில்லாத நீதிவானாகவும் விளங்கினார். அதேசமயம் நீர்கொழும்பு நகர பிதாவாகவும் (மேயர்) தெரிவாகியிருந்தார்.
தனது காலத்திலாவது இங்கு வாழும் சைவத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு பாடசாலையை தங்கள் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தொடக்கிவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சங்கத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைத்தார்.
கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழ்ந்த அந்தப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் இருக்கின்றன. அதனால் அதனை சின்னரோமபுரி எனவும் அழைப்பர்.
அவர்களின் தாய்மொழி தமிழாகத்தான் இருந்தது. முன்னக்கரை, குட்டித் தீவு, மணல்சேனை, தோப்பு, கொச்சிக்கடை, ஏத்துக்கால், நஞ்சுண்டான் கரை, மாங்குழி, பலகத்துறை முதலான தமிழ்ப்பெயர்கொண்ட இடங்களிலேயே  அவர்களின் முன்னோர்களும் பரம்பரையினரும் பிறந்தனர்.
அவர்கள் வழிபாட்டுக்குச்சென்ற தேவாலயங்களில் தமிழில்தான் பிரார்த்தனை திருப்பலி என்பன இடம்பெற்றன.
அந்த தேவாலயங்களின்  முன்றல்களில் உற்சவகாலங்களில் கிறிஸ்தவ வரலாற்றுப்பின்னணியில் தமிழ் நாடகங்கள் இரவிரவாக மேடையேற்றப்பட்டன. சில நாடகங்கள் சுமார் ஆறுமணிநேரத்திற்கு மேலும்  நடந்திருக்கின்றன.
இவ்வாறு தமிழ்பேசிய கத்தோலிக்க மக்களை சிங்களம் பேசவைத்து சிங்களவர்களாக்கிய பெருமை அங்கு வந்து  சிங்களத்தில்  மதவழிபாடுகளை தொடக்கிய கத்தோலிக்க மதகுருமார்களையே சாரும்.
பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் மசோதாவை கொண்டுவந்த சமயத்தில், சிங்களம் படித்தால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என ஆசைவார்த்தை காண்பித்ததிலும் அந்த குருமார் முன்னணியிலிருந்தனர்.

தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழ்ந்த நீர்கொழும்பு பிரதேசத்தில்  சிங்களத்தை இவ்வாறு படிப்படியாக பரப்பியவர்கள், பௌத்த பிக்குகளோ, சிங்கள  கடும்போக்காளர்களோ அல்ல! 
தமிழ் கற்பிக்கப்பட்ட பல கத்தோலிக்க பாடசாலைகள் அங்கு சிங்களமயமாக்கப்பட்டதற்கும் பெளத்த பிக்குகள் காரணமல்ல. அந்தக்கைங்கரியத்தை செய்தவர்கள் சிங்களம் பேசிய கத்தோலிக்க மதகுருமார்தான்.
இந்த வரலாற்றுப்பின்னணியிலிருந்து இலங்கைப்பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் அவர்களின் சமீபத்திய கூற்றை அவதானிக்கலாம்.
அந்தப்பிரதேசத்தில் தமிழ்பேசிய கத்தோலிக்கர்கள்தான் சிங்களவர்களாக மாறினார்கள் என்பதைத்தான் வடக்கின் முன்னாள் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள், வேறு விதமாக  அங்குள்ள தமிழர்கள் அனைவரும் படிப்படியாக சிங்களவர்களாகின்றார்கள் என்று சொன்னார்.
அவ்வாறு மாறியது சைவசமயத்தைச்சேர்ந்த தமிழர்கள் அல்ல. கத்தோலிக்கர்கள்தான் அவ்வாறு மாறினார்கள் என்று அவருக்கு நான் தெரிவித்த எதிர்வினைக்கட்டுரையும் இடம்பெற்ற சொல்லத்தவறிய கதைகள் நூலின் அறிமுக அரங்கினையும் பண்டிதர் நூற்றாண்டு விழா நீர்கொழும்பில் நடந்தபோது, ஒழுங்குசெய்திருந்தேன்.
அந்த நூலை தமது மகிழ் பதிப்பகத்தினால் வெளியிட்டிருந்த நண்பர் கருணாகரனையும் அவரது துணைவியாரையும் எங்கள் ஊருக்கு அழைத்திருந்தேன்.
எங்கு சென்றாலும் அவ்விடத்தின் பூர்வீக வரலாற்றை தெரிந்துகொள்வதில் கருணாகரனுக்கு ஆர்வம் அதிகம். ஒரு ஊடகவியலாளனின் இயல்பு அவ்வாறுதான் இருக்கும்.
நீர்கொழும்பு பிரதேசத்தின் முக்கியமான இடங்களுக்கு கருணாகரன் தம்பதியரை அழைத்துச்சென்று காண்பித்தேன்.  வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை கவரும் பல இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகளையும்  கடற்கரை ஓரமாக எழுந்திருக்கும் பெரிய உல்லாச விடுதிகளையும், தேவாலயங்களையும், வரலாற்றைக்கூறும் டச்சுக்கோட்டையையும் அதனுள்ளே அமைந்துள்ள சிறைச்சாலையையும் அழிந்துபோன திரையரங்குகளையும் காண்பித்தேன்.
அந்த சிறைச்சாலையில்தான் பல பிரபல தமிழ் அரசியல் கைதிகள்  1970 களில்  தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்த்தேசியம் பேசிய  சில தமிழ்த்தலைவர்கள் கத்தோலிக்க அல்லது அங்கிலிக்கன் சமயத்தை சேர்ந்தவர்கள். உதாரணமாக தந்தை செல்வநாயகம், ஈ.எம்.வி. நாகநாதன், சி.எக்ஸ். மார்டின், சாம் தம்பிமுத்து, ஜோசப் பரராஜசிங்கம், சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைச்சொல்லமுடியும்.  இவர்களின் கண்களில் கூட தென்படாத நீர்கொழும்பின் பூர்வீகத்தை நீதியரசர் விக்னேஸ்வரன் கண்டுகொண்டார் என்று கருணாகரனிடம் சொன்னேன்.
நீர்கொழும்பின் முன்னாள் எம்.பி. டென்ஸில் பெர்னாண்டோ தமிழ்பேசும் கத்தோலிக்கர். இந்தப்பிரதேசத்தின் மற்றும் ஒரு முன்னாள் எம்.பி. பெர்னாண்டோ பிள்ளையும் தமிழ்ப்பேசும் கத்தோலிக்கரே. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் லாண்ஸாவும் தமிழ்ப்பேசும் கத்தோலிக்கரே!
இவ்வாறிருந்தும் சிங்களம் பேசிய கத்தோலிக்க மதகுருமார் சாமார்த்தியமாக அங்கு சிங்களமொழியை முதலில் தேவாலயங்களிலும் பின்னர் பாடசாலைகளிலும் பரப்பினர்.
இவ்வாறு எதிர்காலத்தில் நடக்கலாம் என்று தீர்க்கதரிசனமாக சிந்தித்தவர்கள்தான்   அன்று எங்கள் ஊரில் வாழ்ந்த  தமிழ்ப்பெரியவர்கள்.  1954 ஆம் ஆண்டிலேயே சைவத்தமிழ்ப்பாடசாலைக்கு அத்திவாரம் இட்டனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் தற்போது எஞ்சியிருக்கும் ஒரே ஒரு சைவத்தமிழ்ப்பாடசாலைதான் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி.
இக்கல்லூரியுடனான எனது உறவு 1954 ஆம் ஆண்டு நடந்த விஜயதசமி வித்தியாரம்பத்துடன் தொடங்கிவிட்டது.  அந்த உறவு உணர்வுபூர்வமானது.
அதற்கு வாழ்நாள் பூராவும் நன்றி செலுத்தக்கடமைப்பட்டிருந்தமையால்தான், இக்கல்லூரி அறுபது  ஆண்டுகளை  நிறைவுசெய்தபோது நெய்தல் என்ற தொகுப்பு நூலையும் வெளியிட்டேன். மீண்டும் எங்கள் முதல் தமிழ் ஆசான் பண்டிதர் கதிரேசர் மயில்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழாவையும் ஒழுங்குசெய்வதற்காக இந்த நீண்ட பயணத்தை தொடங்கியிருந்தேன்.
பாரிஸ் மாநகரில் நடந்த நூற்றாண்டு விழா , அதற்கு உத்வேகமூட்டியது. கல்லூரி அதிபர் திரு. ந. புவனேஸ்வரராஜா தலைமையில் ஒரு உபகுழுவை தெரிவுசெய்து, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தோம்.  இக்குழுவில்   மருத்துவர் ஆர். வரதன்                  ( செயலாளர் கல்லூரி அபிவிருத்திச்சங்கம்) திருவாளர்கள்  ஆர். ஆர். சிவலிங்கம் ( தலைவர் – கல்லூரி பழைய மாணவர் மன்றம்)  அநுரகணேஷ் ( செயலாளர் – கல்லூரி பழைய மாணவர் மன்றம்)  ஜி. சுதாகரன் ( ஆசிரியர் – உறுப்பினர் கல்லூரி அபிவிருத்திச்சங்கம்) திருமதி ஶ்ரீகுமார் ( ஆசிரியர் – பொருளாளர் - கல்லூரி அபிவிருத்திச்சங்கம்)  ஆகியோர் இடம்பெற்றனர்.
பண்டிதரின் திருவுருவப்படம்  மாணவர் அணிவகுப்பு,   கல்லூரி பேண்ட் வாத்தியத்துடன்  ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
கல்லூரி  மண்டபத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
வரவேற்புரை:   திருமதி சுசீலகுமாரி நீதிராஜா (  முன்னாள் மாணவி – தற்போதைய ஆசிரியை)   தலைமையுரை: திரு. ந. புவனேஸ்வர ராஜா ( அதிபர்)  திரு. சு. நவரட்ண ராஜா  - பழைய மாணவர் மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர் , முன்னாள் அதிபர்கள்  திருவாளர்கள்  நா. கணேசலிங்கம் ,  வீ. நடராஜா ஆகியோரும் பண்டிதர் 1954 இல் இங்கு பொறுப்பேற்கும்போது துணை ஆசிரியராக இணைந்தவரான  திருமதி திலகமணி தில்லை நாதனும் பண்டிதரின் மகிமையை எடுத்துரைத்தபோது , நீர்கொழும்பின் வரலாற்றையும் விளக்கி, எவ்வாறு தொடர்ந்தும் ஒரே ஒரு தமிழ்க்கல்லூரியாக அந்தப்பிரதேசத்தில் தழைத்தோங்கி வளர்ந்திருக்கிறது என்பது பற்றியும் விபரித்தனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த நண்பர் திரு. இராஜரட்ணம் சிவநாதனும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர். அத்துடன் ஆசிரியை திலகமணி தில்லைநாதனிடம் தனது ஆரம்பக்கல்வியை கற்றவர். இவரும் தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டு உரையாற்றினார்.
எனது மனைவி மாலதியின் தம்பியும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கவிஞர் காவ்யன் விக்னேஸ்வரன் கவிவாழ்த்து சமர்ப்பித்தார்.
பாரிஸில் நடந்த விழாவில் வெளியிடப்பட்ட நூற்றாண்டு மலரை எழுத்தாளர் திரு. முத்துலிங்கம் ஜெயகாந்தன் அறிமுகப்படுத்தினார்.  இவர் மறைந்த பிரபல எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கத்தின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
இந்நிகழ்ச்சியில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் சில மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டது. அதனை முன்னாள் மாணவர்கள் நேரில் வந்து வழங்கினர்.
கல்லூரியின் தொடக்ககால வளர்ச்சியில் ஈடுபட்ட சமூகப்பணியாளர் ( அமரர் ) செல்லையா அவர்களின் ஞாபகார்த்தமாக பிரான்ஸில் வதியும் அன்னாரின்  புதல்வி ராணி மலர் செல்லையாவின் ஏற்பாட்டில் மாணவருக்கு கற்றல் உபகரணங்களும்  வழங்கப்பட்டன.
இரண்டவது அரங்கில் எனது  சொல்லவேண்டிய கதைகள் நூலை செல்வி பாமினி செல்லத்துரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.  இவரும் எமது கல்வி நிதியத்தின் உதவியுடன் பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரியாகி தற்போது நுவரேலியா மாவட்டத்தில்  பிரதிக்கல்விப்பணிப்பாளராக பணியாற்றுகிறார். 
நண்பர் திரு. கருணாகரன்  இந்நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, மேற்கிலங்கையில் ஒரு  தமிழ்ப்பிரதேசம் தனது அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசியல் ஊடாக அல்ல,  கல்வியின் ஊடாகவே  முன்னெடுத்திருக்கும் முயற்சிகளை சிலாகித்துப்பேசினார்.  அவரும் யாழ். ஜீவநதி பரணீதரனும்  பதிப்பித்து வெளியிட்ட நூல்களின் சிறப்பு பிரதிகளை  நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் திரு. பி. ஜெயராமனும், பொருளாளர் திரு. ஏகாம்பரமும், நீர்கொழும்பு தமிழ் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் திரு. சந்திரசேகரனும், பெற்றுக்கொண்டனர்.
எந்தவொரு பொதுப்பணியும்  ஆரோக்கியமான தொடர்பாடலின் மூலம்தான் சாத்தியமாகும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதனால்தான்,  அன்றைய பண்டிதர் நூற்றாண்டு விழாவை, எங்கள் ஊரில்   சிறப்பாக கொண்டாட முடிந்தது.
இதுவரையில் அவர் பிறந்து வளர்ந்து சேவையாற்றிய  வடபுலத்தின் சிந்துபுரம் என வர்ணிக்கப்படும் சித்தங்கேணியில் அன்னாரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்து கொண்டாடுவதற்கு அங்கு எவரும் முன்வரவில்லை என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த கவலையுடனும் ஏமாற்றத்துடனும் பதிவுசெய்துகொள்கின்றேன்.
எங்கோ பிறந்து, எங்கள் ஊருக்கு வந்து எங்கள் தமிழ்ப்பிரதேசத்தின் அடையாளத்தை இனிவரும் சந்ததிகளும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்த அந்த பெருந்தகைக்கும் -  தீர்க்கதரிசனத்தோடு ஆறு தசாப்தங்களுக்கு முன்பே செயலூக்கமுடன் உழைத்த முன்னோர்களுக்கும் தலைவணங்கி, இந்த பயணத் தொடரை நிறைவு செய்கின்றேன்.
இந்தத் தொடர் வௌியான சந்தர்ப்பங்களில் தங்கள் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் மின்னஞ்சல் ஊடாகவும் தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்த வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
( பயணங்கள் இனியும்  தொடரும்)





-->
















No comments: