விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன்-2


22/07/2019 இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 என்ற விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு ஏவப்பட்டது.
இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி இந்திய ரூபா செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.
orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த திங்கட்கிழமை காலை மார்க்-3 ரொக்கெட் மூலம், ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படவிருந்தது.

ரொக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 56 நிமிடங்களுக்கு முன்னதாக, விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது. 
இந்நிலையில், அந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு ஆரம்பமாகியது. அதன்படி இன்று மதியம் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 
சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் கலன் (ரோவர்) ஒன்றும் இருக்கும்.
சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும்.
இந்த விண்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க் - 3 செலுத்து வாகனம் (ரொக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும்.
இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 தொன் எடையுள்ளது. 44 மீற்றர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ராடர்களின் உதவியோடு நடத்தியது.
150 மில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு' நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும்.
உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7 ஆம் திகதி தான் நடக்கும்.
ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வைத்தியர். சிவன் கருத்து தெரிவிக்கையில்,
நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் .   நன்றி வீரகேசரி 














No comments: