27/07/2019 இந்து சமுத்திரத்தின் முத்தாகத் திகழ்கின்ற இலங்கைத் தீவில் இனக்குழுமங்களும், சமயம் சார்ந்த சமூகத்தினரும், மொழிவாரியான மக்களும் தீவுகளாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் காலங்காலமாக நிலவி வந்த நல்லுறவும் நல்லிணக்கமும், ஐக்கியமும் படிப் படியாகத் தேய்ந்துள்ளமையே இதற்குக் காரணம்.

இனப்பிரச்சினை காரணமாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின்போது இனவாத அரசியல் கொள்கைகள் அளவுக்கு மீறிய வகையில் கடைப்பிடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் அனைவரையுமே பயங்கரவாதி களாக நோக்கும் ஒரு நிலைமை உருவாகியிருந்தது. இதனால் சிங்கள, தமிழ்மக்களுக்கிடையில் சமூக ரீதியாக இருந்து வந்த பிணைப்பு அறுந்து போனது. ஒருவரை ஒருவர் சந்தேகத்துடனும் பகை உணர்வோடும் நோக்கும் நிலைமை ஏற்பட்டது.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இரு சமூகங்களுக்கிடையிலும் நிலவிய சந்தேகம், பகை உணர்வு என்பவற்றைக் களைந்து இன நல்லிணக்கம் உருவாக்கப்படவில்லை. மாறாக சிங்கள பௌத்த தேசியம் எழுச்சி பெறவும், வீச்சுடன் அது மேலாதிக்கம் கொள்ளவுமே வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் சிங்கள பௌத்த மதவாதிகள் முஸ்லிம்கள் மீது சினம் கொண்டு பாய்ந்தனர். முஸ்லிம்கள் அடித்து நொருக்கப்பட்டார்கள். அவர்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் தாக்கப்பட்டன எரியூட்டப்பட்டன.
இதனால் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் சமூக ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுபட்டுப் போயின. இதற்கும் மேலாக அரசியல் ரீதியாகவும் சமூகங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. அதிகாரம் சார்ந்த பிடிவாதப் போக்கினால் இனங்களுக்கிடையில் நிலவ வேண்டிய நல்லிணக்கம் கேள்விக்
குறியாகி உள்ளது. இந்தப் பின்னணியில் இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில், அரசியல் கட்சிகளுக்கிடையில் நல்லிணக்கப் போக்கு கட்டி எழுப்பப்பட வேண்டிய தேவை, மிக அவசரமாகவும், அவசியமாகவும் எழுந்துள்ளது.
மேலாண்மையில்
மூழ்கியுள்ள ஆட்சியாளர்கள்
பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் அடிப்படை உரிமை, அரசியல் உரிமை, அபிவிருத்தி உரிமை, ஆட்சி உரிமை என்ற நான்கு தூண்களில் நல்லிணக்கம் கட்டி எழுப்பப்பட வேண்டும். பல மொழிகளைப் பேசுவோரும், பல்லின சமூகங்களும், பல மதங்களைச் சார்ந்தவர்களும் வாழ்கின்ற நாட்டில் சகவாழ்வு வாழ்
வதற்கும், நீடித்த சமாதானத்துக்கும் இது அத்தியாவசியமாகின்றது.
ஆனால் எழுபது வருடகால இனப்பிரச்சினை வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கையில் பிரச்சினைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இனங்களுக் கிடையில் நல்லிணக்கம் உருவாக்கப்படவில்லை. இதனால், ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தேசிய உணர்வோடு, அனைவரும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற சிந்தனைக்கு இடமில்லாமல் போயுள்ளது. அத்தகைய தேசிய சிந்தனைக்கு வழிவகுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
இன, சமூக, மதங்களிடையே நல்லிணக்கம் நாளுக்கு நாள் அருகிச் செல்கின்றது. மக்கள் மத்தியில் சந்தேகமும், அச்ச உணர்வுமே மேலோங்கி இருக்கின்றன. சகவாழ்வுக்கும், நிலையான சமாதானத்திற்கும் உரிய சமூக, அரசியல், பொருளாதாரச் செயற்பாடுகள் இதய சுத்தியுடன்; முன்னெடுக்கப்படுவதில்லை.
இனத்துவம் சார்ந்த மறைமுக நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, பேரின மேலாண்மையை நிலைநிறுத்து வதற்கான நடவடிக்கைகளிலேயே ஆட்சியாளர்கள் மூழ்கிப் போயுள்ளார்கள்.
சிறுபான்மை இனத்தவர்களும் இந்த நாட்டின் குடிமக்களே. அவர்களுக்கும் இந்த நாட்டில் சரிசமமாக வாழ உரிமை உண்டு. அந்த உரிமைக்கு வழிவிட்டு அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அல்லது அவர்களையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை பேரின அரசியல்வாதிகளிடம் இல்லை. அந்த மனப்பாங்கு அவர்களிடம் உருவாகுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.
ஆட்சியாளர்களும் இது விடயத்தில் உரிய கவனம் செலுத்துவதாக இல்லை. பொதுவாக தேசஅபிமானத்துடன் செயற்படுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஐக்கிய இலங்கை என்ற அடிப்படை கோட்பாட்டுக்குப் பாதகமான இந்த நிலைமையின் நீட்சியே தமிழர்கள் தனிநாடு கோருவதற்கு காரணமாகியது.
தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுவிட்ட பின்னர் ஐக்கிய இலங்கைக்குள் சிறுபான்மை இன மக்களும் பெரும்பான்மை இன மக்களும் இணைந்து வாழ்வதற்குரிய அரசியல் சூழலை உருவாக்குவதிலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. மாறாக யுத்த வெற்றிவாதத்தின் மீதான அடக்குமுறை அரசியலை முன்னெடுப்பதிலேயே அவர்கள் தீராத மோகம் கொண்டிருக்கின்றார்கள். இது கவலைக்குரியது.
சர்வதேச ஒழுங்கில் பின்தள்ளப்படும் நிலை
சிறுபான்மை இன மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் வெறுமனே பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் அரைகுறையான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது, அவற்றுக்குப் பெரிய அளவில் அரசியல் பிரசாரத்தை மேற்கொள்வது என்ற போக்கையே ஆட்சியாளர்கள் கடைப் பிடித்து வருகின்றார்கள்.
அந்த மக்களின் வாழ்வியல் சார்ந்த உண்மையான அபிவிருத்தித் தேவைகள் சரியாக இனம் காணப்பட்டு அதற்கேற்ற வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை. அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு அவசியமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுமில்லை.
அவர்களின் தனித்துவம் மதிக்கப்படு வதில்லை. அவர்களின் உணர்வுகள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. அபிவிருத்திச் செயற்பாடுகளாக இருந்தாலும், அவை சார்ந்த அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும், அவை தொடர்பில் அவர்களின் கௌரவத்திற்கும் உரிய இடம் அளிக்கப்படுவதில்லை.
அபிவிருத்தித் திட்டங்களும் மக்களுக்கான வேலைத் திட்டங்களும் முழுமையான பயனை அடைய வேண்டுமாயின், அவை கீழிருந்து மேல் நோக்கித் திட்டமிடப்பட வேண்டும். அந்த மக்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட வேண்டும் என்பது நிர்வாக நியதி. ஆனால் ஆட்சியாளர்கள் அந்த நியதியைக் கவனத்திற் கொள்வதே இல்லை. எல்லாமே மேலிருந்து கீழாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பல வேலைத் திட்டங்களில் மக்கள் முழுமையான பயனை அடைய முடியாத நிலைமையே உருவாகி இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறிமாறி ஆட்சி செய்தாலும், இரு தரப்பினரும் இந்த அரசியல் போக்கையே பொதுவான ஆட்சி நிலைப்பாடாகக் கொண்டிருக்கின்றனர். இதனால் சிறுபான்மை இன மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை. அவர்களின் அரசியல் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை. அவை நிலைநிறுத்தப்படுவதும் இல்லை. இந்த நிலைமை காலங்காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
கால மாற்றத்திற்கு அமைவாகவும், சர்வதேசப் போக்கின் ஒழுங்குக்கு அமையவும் புதிய சிந்தனையின்பால் அவர்கள் கவனம் கொள்வதில்லை. உலகமே ஒரு கிராமமாக, ஒரு சிறிய அமைப்புக்குள் சுருங்கிச் செல்கின்ற விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி நிலையில் மாற்றங்களின் ஊடாக வளர்ச்சி பெறுவதற்கு நாட்டம் கொள்ளாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட பேரின மேலாண்மைவாத அரசியல் செல் நெறி யில் ஆழ்ந்து கிடக்கின்ற பேரின அரசியல்வாதிகள் சர்வதேச ஒழுங்கில் தாம் படுமோசமாகப் பின்தள்ளப்படுவதை உணர்கின்றார்களில்லை. அதனை அவர்கள் உணர மறுக்கின்றார்கள்.
கற்ற பாடங்கள் மறக்கப்பட்டுள்ளன
அரசியல் உரிமைகளைக் கோரிய சிறுபான்மை தேசிய இனமான தமிழ்மக்களை அழித்து அடக்குவதற்காகவே கறுப்பு ஜூலை தாக்குதல்கள் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டன. ஆனால் அந்த அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் அரசுகளையே திகைத்து திண்டாடச் செய்யும் அளவுக்கு விசுவரூபமெடுத்தது. ரத்தஆறு ஓடி, இதயங்களைப் பிளந்த, அந்த எழுச்சியை, - அந்தப் போராட்டத்தை முளையிலேயே கிள்ளிவிட முயற்சித்தவர்களினால் அது முடியாமல் போனது. ஒரு கால் நூற்றாண்டுக்கும் மேலாக – கிட்டத்தட்ட 30 வருடங்கள் நீடித்த அந்த ஆயுதப் போராட்டத்தை, பிந்திய சந்ததியினால், கபடத்தனமான முறையிலேயே 2009 இல் மௌனிக்கச் செய்வது சாத்தியமாயிற்று.
மனித உரிமை மீறல்களும், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களும், மோசமான போர்க் குற்றச் செயற்பாடுகளும் மலிந்திருந்த அந்த மோசமான யுத்தத்திற்கு, தமிழர்கள் மீதான 1983 கறுப்பு ஜூலை இன அழிப்புத் தாக்குதல் சம்பவங்களே உத்வேகம் ஊட்டியிருந்தன.
தமிழர்களின் சமூக, பொருளதார, அரசியல், கலை, கலாசார, பண்பாட்டு உரிமை சார்ந்த வாழ்வியலைக் குலைத்துப்போட்ட கறுப்பு ஜூலை தாக்குதல்கள் குறித்து எழுந்த விமர்சனங்கள், கண்டனங்கள், குற்றச்சாட்டுக்கள், இலங்கை பற்றிய சர்வதேசத்தின் கணிப்பீடு என்பன ஆட்சியாளர்களின் சிறுபான்மை மக்கள் மீதான இனவாத விரோதப் போக்கில் பாடங்களைப் போதித்திருந்தன.
ஆனாலும் கறுப்பு ஜூலை சம்பவங்களில் தாங்கள் கற்ற பாடங்களைக் கவனத் தில் கொண்டு தமது இனவாத இனப் படுகொலை போக்கில் ஆட்சியாளர்கள் மாற்றங்களைச் செய்யவில்லை. கறுப்பு ஜூலையின் பின்னர் வெகுண்டெழுந்த தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் கார
ணமாக மூண்டிருந்த யுத்தமோதல்களில் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு உள்ளாகி அவர்கள் பாடம் படித்துள்ளனர். கறுப்பு ஜூலை சம்பவங்களின் பின்னர், நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே இனப்பிரச்சினைக்கு அரசியல் கண்டிருக்க வேண்டும். அதனையும் அவர்கள் செய்யவில்லை.
தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லாமல், நிதானம் தவறிய வீராவேசத்துடன் அதிகப்படியான ஆயுத பலத்தைப் பயன்படுத்திய ராணுவ நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச மத்தியஸ்தமாகிய நோர்வேயின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த காலத்துப் பேச்சுவார்த்தைகளிலும் ராஜதந்திர ரீதியாக சமாதான வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.
அரசாங்கம் என்ற பொறுப்பிலிருந்து நிதானம் தவறிய உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய அதிக ராணுவ பலத்தில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்டதன் காரணமாக மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மட்டு மல்லாமல், மோசமான போர்க்குற்றச் சாட்டுக்களுக்கும் சர்வதேச அரங்கில் கைகட்டி நின்று பொறுப்புக்கூற வேண்டிய நிலைமைக்கு ஆட்சியாளர்கள் ஆளாகி இருக்கின்றனர். விடுதலைப்புலிகள் மீதும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன என்பது வேறு விடயம்.
போருக்குப் பின்னரான நிலைமைகள்
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சக்திகளையும் இணைத்துக் கொண்டு 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ராணுவரீதியாக மௌனிக்கச் செய்து அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ யுத்தத்தில் வெற்றிவீரனாக மேலெழுந்திருந்தார்.
யுத்த வெற்றி என்ற போதையில் மிதந்த அவர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின் உண்மையான சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சிக்கவில்லை. மாறாக அரசியல் உரிமைக்காகப் போராடிய மக்களை ராணுவ மயமான ஒரு சூழலில், தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, அடக்கி வைத்திருந்தார்.
அவர்கள் மத்தியில் தனது அரசியல் செல்வாக்கை விருத்தி செய்து வாக்கு வங்கியை உருவாக்கும் நோக்கத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் உண்மையான வாழ்வியல் ஈடேற்றத்திற்காக மேற்கொள்ளப்படவில்லை. ஏமாற்று வழிசார்ந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களே மேற்கொள்ளப்பட்டன. அதேநேரம் ராணுவ அடக்குமுறைக்குள் அந்த மக்களை வைத்துக் கொண்டு பெயரளவிலான நல்லிணக்க நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சர்வதேச மட்டத்திலான அரசியல் லாப நோக்கத்திற்காக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களை ஏமாற்றும் வகையிலேயே அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால் உண்மையில் அந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவற்றை அரங்கேற்றியவர்களையே ஏமாற்றியிருந்தன.
ஏனெனில் யுத்தம் முடிவடைந்த 6 வருடங்களின் பின்னர் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் வடக்குகிழக்கு மக்கள் மகிந்த ராஜபக்ஷவைப் புறந்தள்ளி மண் கவ்வச் செய்திருந்தார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இரு கட்சிகள் இணைந்து புதிதாக உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சியும் தோற்றுப் போனது. அந்த அரசாங்கம் உருவாக்கப் பட்டபோது மக்களுக்கு அளித்த வாக்குறு திகளும் தேர்தல்கால ஆணைகளும் கிடப் பில் போடப்பட்டன.
தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில், அரசியல் கைதிகளின் விடுதலை, ராணு வத்தின் பிடியில் உள்ள காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்பு கூறல், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் அரசியல் தீர்வு காணும் முயற்சி என்பவற்றில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் பொல்லாத ஆட்சி யாகக் கருதப்படும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. ஆட்சியாளர்களினாலேயே மோசமாக்கப்பட்டுள்ளன.
கறுப்பை வெள்ளையாக்க முடியுமா?
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே கறுப்பு ஜூலை இன அழிப்புத் தாக்குதல்கள் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டன. அந்தத் தாக்குதல்கள் அன் றைய ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனத்தை, பேரினவாதிகளின் கொடூர முகத்தை சர்வதேச அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டின. கறுப்பு ஜூலையின் இனப்படுகொலை நடவடிக்கைகள் வரலாற்றில் அழிக்க முடியாத கரிய அடையாளமாகப் பதிவாகியிருக்கின்றன.
நாட்டின் சக குடிமக்கள் மீது அன்றைய அரசாங்கமே வெறியாட்டம் ஆடிய காட்சிகளின் திரட்சியாக அமைந்துள்ள அந்த கரிய, படுமோசமான அடையாளத்தை 36 வருடங்களின் பின்னர் வெள்ளையாக்க அதே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயன்றிருக்கின்றது.
ஜூலை முதலாந்திகதி ஒரு வேடிக்கை நிகழ்ந்திருந்தது. முதல் பக்க விளம்பரமாக ஜூலை 1 முதல் வெள்ளை ஜூலை என்றும் வெள்ளை ஜூலையான இன்று முதல் மக்களுக்கு பல நிவாரணங்கள் என்ற கொட்டை எழுத்திலான செய்தி வடிவ விளம்பரத்தை அரசு வெளியிட்டிருந்தது.
அபிவிருத்தி என்ற போர்வையில் கறுப்பு ஜூலையின் கறுப்பை வெள் ளையாக்குவது நடைபெறக் கூடிய காரி யமல்ல. அபிவிருத்தி என்பது வேறு. நடத்தப்பட்ட கொடூரங்களுக்கும் அநீதி களுக்கும் பரிகாரம் காண்பது என்பது வேறு. கறுப்பு ஜூலை கொடுமைகளின் மூலம் அழிக்கப்பட்ட தமிழ்மக்களின் தனித்துவம், அவர்களுடைய சுயமரி யாதை, சுயகௌரவம் என்பன மீண்டும் நிலைநிறுத்தப்படும் வகையில் நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அவர்களின் அரசியல் உரிமை கோரிக்கையை அடித்து நொறுக்கி அவர்களை இனரீதியாக அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு கறுப்பு ஜூலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை இதய சுத்தியுடன் ஏற்று, பாதிக்கப்பட்ட மக்களுடன் சமரசம் செய்து கொள்ளப்பட வேண்டும். அது இதயசுத்தியான இணக் கப்பாடாக அமைய வேண்டும்.
அந்த சமரசம் என்பது வெறுமனே, திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் பற்றிய அறிவித்தல் விடுப்பதல்ல. இந்த அபிவிருத்தி அறிவித்தல் அல்லது அபிவிருத்தியின் அரங்கேற்றத்தின் மூலம் 1983 கறுப்பு ஜூலை நாட்களில் படிந்த அந்த துயரம்மிகுந்த, அவமானம் மிகுந்த மனக்காயங்களாகிய கறுப்பை வெள்ளையாக்கிவிட முடியாது.
தாக்குதல்களுக்குப் பின்னர் அபி விருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கப் போகிறோம் என்று மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை குறித்த உடன்பாடு எட் டப்படவேண்டும் இதற்கு போருக்குப் பின்னர் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மனிதாபிமானரீதியில் தீர்வுகளைக் காண முயற்சிக்க வேண்டும். அதனூடாக தமிழ்மக்களின் நம்பிக்கையை வென் றெடுக்க வேண்டும். தேர்தல்களை எதிர் கொண்டுள்ள இன்றைய சூழலில், ஒரு காலகட்டத்தில் இது தவிர்க்க முடியாத தேவையாக எழுந்து நிற்கின்றது.
- பி.மாணிக்கவாசகம் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment