நேற்று
இதே காலை ஏழு மணிக்கு நல்ல சூரிய வெளிச்சம் இருந்தது. தேங்காய்த் துருவலை
தூவிவிட்டது போல பனித் தூவல் படிந்திருந்த புல்லில் சப்பாத்துப் பட்டவுடன் கரக், கரக்
என்று ஐஸ் உடைந்தது.
வெளியில் நின்ற காரை
பிளாஸ்டிக் உறையினால் போர்த்து மூடிவிட மறந்து விட்டதனால் விண்ட் ஸ்கிரீனிலிருந்த ஐஸ் பட்டையை கழற்ற தண்ணீர் ஊற்ற வேண்டியிருந்தது.
தோட்டத்து ஹோஸ் பைப்பை இழுத்து வந்து டப்பைத்
திருகினேன். தண்ணீர் ஒரு சொட்டும் வெளிவரவில்லை. பைப்பை வளைக்க உள்ளுறைந்திருந்த ஐஸ்
முறியும் சத்தம்.
வீட்டுக்குப் பின் பக்கதிலிருந்து வாளியில் நிரம்பியிருந்த மழைத் தண்ணீரை எடுத்து
வந்து ஊற்றலாமென்றால் வாளிக்குள் ஒரு சென்றி மீற்றருக்கு அது ஐஸ் தகடாயிருந்தது. அதைத்தூக்கி
கொங்கிறீட்டில் எறிய கண்ணாடி சிதறுவதுபோல சிதறியது.
இன்றைய காலை முற்றிலும்
வேறாய் விடிந்திருக்கிறது. ஒரு முப்பது மீற்றருக்கு மேல் எதுவும் தெரியாத பனிப்புகார். தூரத்தே இலை உதிரா பைன்
மரங்கள் புகைக்குள் தொங்கிக் கொண்டிருக்கும் கரு மேகங்களாயும், இலை உதிர்த்த உதிர்த்த மேப்பிள் மரங்கள் தலை கீழாகத்
தெரியும் நரம்பு மண்டலமாயும் தெரிகின்றன.
பனியில் நனைந்த புல்
மஞ்சலும், மண்ணிறமும் இடையிடையே பச்சை தூவின தோற்றம் கொண்டிருக்கிறது. சூரியன் இன்று வெளித்தெரியவேயில்லை.
பதினோரு மணிக்கு மேல் மேக மூட்டம் கலைய வெளி வரக்கூடும். குளிர்
எப்போதும் போல பூச்சியத்திற்கு கீழேயே நின்ற ஒரு காலை தான் இதுவும்.
எனது நடைபாதையும்
சிறுவர் பூங்காவிலிருந்து வரும் நடைபாதையும் குறுக்கறுக்கும் சந்தியை நான் அடைந்தபோது என்னை நோக்கி திடீர்த் தாக்குதலுக்கு ஓடி வந்த அந்த
மண்ணிற நாயை கண்டதும் எதிர்பாராப் பயத்தில் ஒரு கணம் விறைத்துப் போனேன்.
பனிப்புகை இல்லாதிருந்தால் கொஞ்ச தூரத்திலாவது கண்டிருந்திருப்பேன். மூஞ்சை
கறுத்து செவி நிமிர்ந்திருந்த அது மிக நெருங்கி
வந்து விட்டது.
ஊரிலென்றால் அடீக் அடீக் என்று கத்தினால் நாய்களுக்கு
விளங்கும். இங்கே எதை சொல்லி கத்தலாம்? அதையெல்லாம்
யோசிப்பதற்கு
நேரமெங்கே?
கல்லெடுத்து எறியலாமென்றால் பிறகு நாயைக் காயப்படுத்தி அதுவும் இங்கே மிருக உரிமை சட்டத்தில் குற்றாமாகிப் போய் விட்டால் என்ன செய்வது?
இந்தப் பதற்றத்தில் நான் பின்னகர எத்தனிக்க கால் இடறிப;பின்புறமாக
விழுந்தேன்
நான் விழுந்திருந்த
வேளையில் அது என்னைக் கடிக்கவில்லை. அது எதிர் பார்த்திருக்கவில்லையோ.? சற்று தள்ளியே உறுமியபடி நின்றது.
அல்லது விழுந்து கிடக்கும்
எதிரியைத் தாக்குவதில்லை என்ற யுத்த தர்மத்தைக் கடைப் பிடித்ததா?
விழுமுன் கையை கொங்கிறீட்
நடைபாதையில் ஊன்றியதால் மணிக்கட்டு வலித்தது
இதே நேரம் நாயின் சொந்தக்காரன்
நாயை விரட்டியபடி வந்தபடி நாயுடன் எதோ பேசினான். அது எனக்கு அந்நேரத்தில்
விளங்கவில்லை.
நான் கோபத்தில் வார்த்தைகள்
உளறலாக உதிர்த்ததை அவனும் அறிந்திரான்.
அவன் நிறம் ஒரு சராசரி வெள்ளையனின் நிறத்திலிருந்து மாறுபட்ட ஒரு கலப்பின நிறம் காட்டியது. தலையில் தொப்பி அணிந்த ஒரு ஒரல் முகம். மீசையைத் தாடியுடன் தொட வைத்து சவரம் செய்திருந்தான்.
‘நீ நாயை கட்டி கொண்டு
வரவேண்டும். இல்லையேல் நான் முறையிட வேண்டியிருக்கும்’ என்பதை மட்டும் உரத்து சொன்னேன்.
உண்மையிலேயே யாரிடம்
முறையிடுவதென்றும் எனக்கு தெரியாது.
எதுவும் பேசாமல் தலையை
குனிந்தபடி நாயை கூடிக்கொண்டு கணப் பொழுதில் அவன் பனிப் புகைக்குள் மறைந்து போனான்.
ஒரு சொறி கூட சொல்லத
தெரியாத நாகரீகமற்றவனா?
சாதாரணமாக பல நாய்கள்
நடைபாதையில் வாலையாட்டியபடி ஓடி வந்து நடப்புணர்வுடன் தலையாட்டி விட்டு போவது வழக்கம். அவையெல்லாம் கழுத்தில் வளையம் போட்டு வாரினால் கட்டியபடி எஜமானனோ அல்லது எஜமாட்டியோ கையில் இருப்பவைதான்.
ஆனால் இந்த கடி நாயை
வாரினால் கட்டாமல் கொண்டு வந்த இவனை நாய் வாரினாலேயே அடித்தாலும் தகும்.
மனப்படபடப்பிலிருந்து
ஒருவாறு விடுபட்டு குளத்தை தாண்டி நடந்தேன்.
பஸ் தரிப்பைக்
கடந்ததும் எதிரே லாரா நாயுடன் வருவது தெரிந்தது.
லாராவிடமாவாவது சொல்லிப்
பார்க்கலாம்.
லாரா வளர்க்கும் லியரி ஒரு கறுத்த மோல்டீஸ் கலப்பின சடை நாய்.
அது என்னைக் காணும் போதெல்லாம் ஓடி வந்து என் முழங்காலில் தன் முன்
கால்களை வைத்து நின்று வாலை ஆட்டி விட்டுப் போவது வழக்கம்.
அவளிடம் நடந்ததை சொன்னேன்.
'டாக்குவின் நாயா?'
என்று கேட்டாள் லாரா.
'ஒன்றும் பேசாது தலையைக் குனிந்தபடி போயிருப்பானே ? ' அடுத்த கேள்வியையும் கேட்டாள் .
'ஆம் அவனேதான். ஒரு
சொறி கூட சொல்லாமல் ஓடி விட்டான்.’ என்றேன்.
‘அவன் பிறப்பிலேயே மூளை
வளர்ச்சி குறைந்தவன்’.
' உனக்கு எப்படித் தெரியும்?'
என்றேன்.
லாரா முன்னரே இவனுடன்
பிரச்சினைப் பட்டவள். அவளது கருப்பு லியரியை ஒரு நாள்
கடிக்க வந்து அவளும்தான் டாக்குவிடம் சண்டை போட்டிருந்தாள்.
டாக்குவின் வீட்டுக்குப்
போய் டாக்குவின் தாயிடம் முறையிட்டிருக்கிறாள்
‘சரி இன்று போய் இன்னொரு முறை முறையிடுவோம்
வா’ என்றாள் லாரா.
லாராவும் நானும் லியரியுடன்
அவன் வீட்டுக்கு நடந்தோம்.
கடைக்கு முன்னெதிரேயுள்ள
அந்த தெருவின் கடைசியிலுள்ள வீடுதான் டாக்குவினுடையது.
வீட்டுக்கு வெளியே பலகாலம்
வெட்டப்படாத புல் தரையில் முன் வளவெங்கும்
பல ரகமான பொருட்கள் ஒரு உடைந்த விமானத்தின் சிதிலங்கள்போல பரவலாக எறிய பட்டிருந்தன.
பெரிய, பழைய கம் மரமொன்று கொப்பு விரித்து
கூரை வரை தொடுமாற் போல் நின்றது.
வெளியே ஒருத்தி தலையை மூடிய குளிர்த் தொப்பி போட்டபடி பிளாஸ்டிக் கதிரையொன்றிலிருந்து புகைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் பேசவில்லை. சிரிக்கவுமில்லை.
அது டாக்குவின் தாய்தான்
என்று அறிந்து கொள்ள அதிக நேரமெடுக்கவில்லை.
டாக்குவும், நாயும்
இன்னும் வராததை உறுதி செய்து கொண்டு கிட்டப்
போனோம்.
என்னை லாரா அவளுக்கு அறிமுகப் படுத்தி நடந்ததை சொன்னாள்.
‘அவனுக்கு நாய்தான் பாதுகாப்பு.
ஆனால் என்ன செய்வது முட்டாள்தனமாக
அவ்வப்போது
வாரினை அவிழ்த்து விடுகிறான்.’
‘அப்போ எங்களுக்கு என்ன பாதுகாப்பு?’
என்று இடைமறித்துக்
கேட்டேன்.
‘உண்மைதான்.
அவனை மன்னித்துக்
கொள்ளுங்கள்.
எனக்காக இன்னொரு முறை மன்னித்துக்
கொள்ளுங்கள்.
இனி இப்படி நடக்காது.’
‘எப்படி உறுதியாக சொல்லுகிறீர்கள்?
‘டாக்குவும்
நானும்தான் நாளை காலையே இங்கிருந்து வட கரைக்குப் போய் விடுவோமே.
நாயும்தான்.’ என்று சொல்லி சிரித்தாள்.
சொண்டு தடித்த அவள்
சிரிப்பு சற்று விகாரமாயிருந்தது.
அவள் நிறம் தனி வெள்ளையல்ல.
கருப்பு நிறம் சற்றுக் குழைத்து கலந்து விட்ட
வெள்ளை நிற சருமம்.
டாக்குவின் தாய் சிகரட்டை
புல்லில் எறிந்து விட்டுப் பேசத் தொடங்கினாள்.
டாக்குவின் தந்தை ஆதிகுடிகளின் மூரி இனக்
குழுவை சேர்ந்தவன். அவர்கள். எனது தாய் வழி மூதாதையருக்கு
உறவு கொண்டிருந்ததால் நான் டாக்குவின் தந்தையை
மணந்தேன்.
டாக்கு பிறந்த போது வலிப்பு வந்ததனால் எற்பட்டதே மூளை பாதிப்பு. அப்போது வலிப்பு
வராமல் தடுப்பூசிகள் போடப்பட்டு
வந்தாலும் டாக்குவின்
தந்தையின் கவனக்குறைவினாலும் எப்போதும் குடித்தபடியும், புகைத்தபடியும் அலைந்து திரிந்து குடும்பத்தை முற்றாகவே கை விட்டுப்போய் சேர்ந்து விட்டான்.
டாக்கு இரு விதத்தில் பாதிக்கப்பட்டவன். மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான நிலையத்தில் டாக்கு பதினேழு வயதாயிருக்கும்
போது இவனுடன் ஒரினப் பாலுறவு கொள்ள முற்பட்ட பாதுகாப்பு ஊழியனினால் மீண்டுமொருமுறை மனப் பாதிப்பிற்குள்ளானான்.
பாதுகாப்பு ஊழியன் மீது
வழக்கும் பதிவானது. ஆனால் குற்றவாளி ஒளித்து விட்டதால் வழக்கு பல ஆண்டுகள் நிலுவையில்
இருந்தது. நானும் டாக்குவுக்கு ஒரு மாறுதலான சூழலை கொடுக்க விரும்பியே 27 வயதாகும்
அவனை இங்கே கூட்டி வந்தேன்.
ஆனால் போன வாரம்தான் குற்றவாளியை கைது செய்து விட்டதாயும் விசாரணைக்காக
எங்களை வருமாறும் நீதி மன்றம் கடிதம் அனுப்பியிருந்தது.
நீண்ட இந்த பத்தாண்டுக்கு
கதையை பத்து நிமிடங்களில் சொல்லி முடித்தாள் டாக்குவின் தாய். இடையில் இன்னொரு சிகரெட்டும் புகைத்திருந்தாள்
.
டாக்குவின் தாயிடம்
விடை பெற்று வந்து விட்டோம்.
இதெல்லாம் நிகழ்ந்து
இப்போது மாதங்கள் சில கடந்து
விட்டன. அந்த நடை பாதையில் டாக்குவையும், நாயையும் பிறகு நான் காணாததால் என் மனத்திரையினின்று
முற்றாக அவர்கள் மறைந்து போய் விட்டனர்.
ஆனாலும் இடையிடையே அந்த நினைவை கிளறி விட வல்லதாய் இன்னும் ஒன்று என்னிடம; எஞ்சியிருக்கிறது.
அதுதான் என் மணிக்கட்டில் இடைக்கிடை ஏற்படும் வலி.
No comments:
Post a Comment