ஈழத்தில் பல்வேறுபட்ட போராளி இயக்கங்கள் நிலைபெற்றிருந்த காலத்தில் பொருண்மிய மேம்பாட்டின் அடிப்படை இலக்காக, ஈழத்தில் கிட்டும் வளங்களை முன்னுறுத்திய தொழிற் செயற்பாடுகள் தொடங்கப்பட்டன. எண்பதுகளில் அங்கு வாழ்ந்தோர் போராளி இயக்க உறுப்பினர்கள் வீடு தோறும் சென்று தும்புத்தடி, கைப்பை போன்ற பொருட்களை விற்று வந்ததை நினைவுபடுத்தக் கூடும். ஈழத்து அஞ்சல்துறையின் முன்னோடியாக ஈழச் சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரைகளும் அப்போது அச்சாகின. கலை, பண்பாட்டு விடயங்களில் ஈழத்து நாட்டுக் கூத்து மரபை அடியொற்றி கொஞ்சம் நவீனம் கலந்து போர்க்கால எழுச்சிக் கருத்துகள், ஈழத்தமிழர் காலாகாலமாகச் சந்திக்கும் கல்வித் தரப்படுத்தல்கள், அடக்குமுறைகளை வெளிக்கொணரும் கூத்து நாடகங்கள், வீதி நாடகங்கள் போன்றவை பல்கலைக்கழக மட்டம் தாண்டி போராளி இயக்கங்களாலும் அரங்கேற்றப்பட்டன. போரியல் வாழ்வின் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போன்றோரின் எழுச்சிப் பாடல்களைத் தமது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட போராளி இயக்கங்கள் மெல்லத் தாயகத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை உள்வாங்கிய படைப்புகளை வெளிக் கொணர்ந்தார்கள்.
இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை ஈழத்துக்கு இந்திய இராணுவம் வர முன்னதாக கவியரங்கங்கள், ஈழமுரசு நாளேடு, விடுதலைப் புலிகள் செய்தி ஏடு, சுதந்திரப் பறவைகள் செய்தி ஏடு, நிதர்சனம் தொலைக்காட்சிச் சேவை, தமிழீழத் திரைப்பட முயற்சிகள், தமிழகத்துப் பாடகர்களை வைத்துப் பண்ணப்பட்ட எழுச்சிப் பாடல்கள் என்று கலை, இலக்கிய முயற்சிகளிலும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம், அர்ச்சயா பழச்சாறு உற்பத்திகள் என்று பல்வேறு கூறுகளாக பொருண்மியம் சார்ந்த முன்னெடுப்புகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்திய இராணுவத்தின் வருகையின் பின் குழம்பிப் போயிருந்த சமூகம் முன்னெப்போதுமில்லாத வகையில் பரந்து பட்ட அளவில் தம்மை மீளக் கட்டியமைத்தது தொண்ணூறுகளுக்குப் பின்னான இரண்டாம் கட்ட ஈழ போரிலிருந்து தான்.
தொண்ணூறுகளில் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பித்த போது அது புதிய பரிமாணம் எடுத்தது. போரியல் முறைமைகளில் மட்டுமன்றி முன்னெப்போதுமில்லாத பொருளாதாரத் தடை தமிழர் பகுதிகளில் விதிக்கப்பட்டது. ஒரு நாட்டுக்குள்ளேயே இரண்டாகப் பிளந்தது போலத் தமிழர் தாயக நிலப்பரப்பில் மின்சாரம் இல்லாத சூழலில்
எரிபொருட்கள் தொடங்கி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை பகிரங்கமாகவே இலங்கை அரசாங்கம் பட்டியல் போட்டுத் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்தச் சூழலில் தமிழர் தம் விடுதலைக்கு சுய நிர்ணய உரிமை அங்கீகாரம் மட்டுமன்றி பொருளாதார ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய அனுபவ ரீதியான வாழ்க்கை முறைக்குள் தள்ளப்பட்டனர்.
இந்தச் சூழலில் போர்க்களத்தில் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் தம் மக்களின் தன்னிறைவான வாழ்க்கை நெறிகளைப் பேணுவதற்கான அடிப்படைச் செயற் திட்டங்களை வகுத்து அவற்றை நெறிமுறையோடும், தகுந்த பயிற்சித் திட்டங்கள், நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகள் என்று சீரான ஒழுங்கில் அமல்படுத்தினர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடங்கிய இம்முன்னெடுப்புகள் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், கலை மற்றும் பண்பாடு,ஊடகம், சட்டம் மற்றும் ஒழுங்கு, புனர்வாழ்வு என்று பரந்துபட்ட செயற்பாடுகளாக விரிந்தன. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைத் தொடும் காலம் வரை ஒரு உத்தேச அரசாங்கம் எப்படியிருக்குமோ அதன் ஒத்திகையாகவே ஈழத்து மக்கள் வாழ்வியலில் ஒன்று கலந்து பரிணமித்தது.
கடந்த கால வரலாறுகளை மீளக் கிளறி விட்டது அண்மையில் வெளியான Structures of Tamil Eelam : A Handbook என்ற நூல். செஞ்சுடர் ஜெமினி என்பவரை ஆசிரியராகக் கொண்டு புரட்சி மீடியாவினால் வெளியிடப்பட்ட இந்த நூல் கடந்த ஜூன் மாதம் சிட்னியிலும் வெளியப்பட்டு வைக்கப்பட்டது. முழுமையான வண்ணப் படத் தொகுப்புகள், உயர் ரக தடித்த வள வள காகிதம் கொண்டு மொத்தம் 225 பக்கங்கள் திரட்டிய இந்த நூலின் உள்ளடக்கம், வடிவமைப்பு, உசாத்துணை போன்ற விபரங்களில் ஆவணத்துக்குரிய நேர்த்தி தெரிகிறது. தமிழீழப் பயணத்தில் தம் இன்னுயிரை ஈய்ந்த உயிர்களுக்கு இந்த நூல் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
இப்போதுதான் Facebook போன்ற சமூக வலைத்தளங்கள், YouTube ஈறாகப் பல்லூடகத் தளங்களும் இருக்கின்றனவே இந்தச் சூழலில் ஏன் இப்படியொரு புத்தகம் என்ற எழுமாற்றான கேள்விக்கும் பதில் கொடுக்கிறார்கள்.
Glimpes of Tamil Eelam (GoTE) என்ற சமூக வலைத்தளம் 2017 ஆரம்பிக்கப்பட்டு ஈழத்துப் போரியல், அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை ஆவணப்படுத்த ஆரம்பித்த போது இந்த அமையத்தின் பேஸ்புக் கணக்கு 21.04.2018 இல் முடக்கப்பட்டதாகவும் தொடர்ந்து 09.08.2018 இல் Instagram கணக்கும் முடக்கப்பட்டதாகவும் இதன் படிப்பினையாக இவ்வண்ணம் ஆவண நூலொன்றைப் பிரசவிக்க வேண்டிய தேவை எழுந்ததாகவும், அத்தோடு நம்முடைய இளைய தலைமுறைக்கு இப்பேர்ப்பட்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட ஒரு அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பு ஈழத்தில் இருந்தது என்பதைக் காட்ட வேண்டும் என்ற நோக்கமும் கூடவே அமைந்ததும் இந்த நூலை வெளியிடும் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
கொஞ்சம் உணர்வு வயப்பட்டு இந்த நூலை ஆக்க வேண்டுமென்று அணுகியொருந்தால் அது வெறும் பிரச்சாரக் கையேடாக அமைந்திருக்கும். ஆனால் முறையான வகைப்படுத்தல்கள், தேவையான தரவுகள் போன்ற அணுகுமுறையோடு பயணிக்கும் இந்த நூல் தமிழீழத்தில் இயங்கிய ஒவ்வொரு அமைப்பினதும் தொடக்கம் தேதி, ஆண்டு வாரியாகவும், அதன் முக்கிய நோக்கம், செயற்பாடு என்பவற்றை ஒரு சில பக்கங்களிலேயே உள்ளடக்கி விடுகிறது.
அந்த வகையில்
தமிழீழத் தேசிய ஆட்பதிவு மையம்
அரசியல் பிரிவு அலுவலகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி
தமிழீழப் போக்குவரத்துக் கழகம்
திட்டம் மற்றும் மேம்பாட்டுக்கான பிரதேச செயலகம்
தமிழீழ நீதிமன்று
தமிழீழக் காவல்துறை
ஈழ நாதம் செய்தியேடு
ஊடகத் தொழில் நுட்ப மையம்
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி
புலிகளின் குரல் வானொலி
பொருண்மிய ஆலோசனை அமையம்
தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
தமிழீழ வைப்பகம்
தமிழீழ மருத்துவக் கல்லூரி, மருத்துவப் பிரிவு
பாடப் புத்தகம்
ஆங்கிலப் போதனை நிலையம்
சிறார் கணினிப் பூங்கா
கலை பண்பாட்டு அமைப்பு
உணவகம்
எழுச்சிப் படைப்புகள்
புனர்வாழ்வு முன்னெடுப்புகள்
சிறார் காப்பகங்கள்
என்று ஈழத்தில் பரந்து விரிந்த சமூகச் செயற்பாடுகள், மக்களின் அடி நாதமாக ஒலிக்கும் அரசாங்கம் ஒன்றிருந்தால் அதன் தூர நோக்கம் எப்படியிருக்கும் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது. அந்தக் கால கட்டத்தில் ஈழப் பரப்பில் வாழ்ந்தோருக்கு மீள் நினைவுகளாக விரியும் இந்த நூலில் ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்வாங்கம், விளைச்சலோடு காட்டப்பட்டிருக்கின்றன.
உண்மையில் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிட்டிருக்கும் அமைப்புகள், அவற்றின் செயற்பாடுகளை விரிவுபடுத்தினாலேயே பல ஆய்வு நூல்கள் எழுதக்கூடிய பெறுமானம் கொண்டவை. களத்தில் போரிட்டுத் தம் விழிப் புலம் இழந்தோர், கை, கால், அவயகம் களைந்தோரின் தோள் பற்றிக் கொண்டாடும் புனர்வாழ்வு முன்னெடுப்புகள் ஒரு புறம், ஈழச் சிறாருக்குக் கணினிக் கல்வி, ஆங்கில அறிவு போன்றவற்றைப் போதிக்கும் கல்வி அமைப்புகள் இன்னொரு புறமாக இருக்க, ஈழப் போரின் இறுதி நாட்களில் மரணத்துக்கு சில நிமிடங்கள் தொலைவில் இருந்தாலும் மக்கள் பணியில் இருந்த தமிழீழக் காவல்துறையின் செயற்பாடுகள் படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின் றன.
இந்த ஆவணத்தைப் படிக்கும் போது இன்று விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இல்லாத கடந்த பத்து வருட காலத்தில் குறித்த கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட துறை சார் அமைபுகளையோ, செயற்பாடுகளையோ தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளோ அன்றித் தன்னார்வ அமைப்புகளோ (புனர்வாழ்வு நீங்கலாக) செய்ய முன் வரவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.
ஈழத்தில் கிட்டும் வளங்களைக் கொண்டு ஆக்கக் கூடிய உற்பத்திகளுக்கான முன் மாதிரித் திட்டங்கள் எதிர்காலத்தில் விளையப் போகும் ஒரு நாட்டின் அடிப்படைப் பொருளாதார மூலாதாரமாக அமையப் போகிறது என்பதை முன்னுறித்திய செயற்பாடுகள் காணக் கிடைக்கின்றன.
இந்த நூல் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தாலும் தமிழிலும் கிட்ட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. விடுதலைப்புலிகள் தலைமையில் இயங்கிய அரசு போர் வெற்றிகளில் குளிர்ந்து கொண்டிருந்த ஒரு போராளி இயக்கமல்ல, அது தனது பரந்து பட்ட அரசியல், சமூகச் செயற்பாடுகளின் வழியே ஒரு நல்லாட்சியை நடத்தியிருக்கின்றது என்பதை இந்த ஆவணம் சான்றுகளோடு நிறுவியிருக்கின்றது.
கானா பிரபா
22.07.2019
பி.கு இந்த நூலை வாங்க விரும்புவோர் info@puradsimedia.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment