தமிழ் சினிமா


மாவீரன் கிட்டு 

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என ஒரு பேவரட் கூட்டணி இருக்கும். அப்படி ஒரு கூட்டணி தான் விஷ்ணு-சுசீந்திரன். ஏற்கனவே வெண்ணிலா கபடி குழு, ஜீவா என்ற தரமான படங்களை தந்த இந்த கூட்டணி ஹாட்ரிக் அடிக்க இந்த முறை மாவீரன் கிட்டுவில் களம் இறங்கியுள்ளது, ஹாட்ரிக் அடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

Maaveeran Kittu
மேல் ஜாதி, கீழ் ஜாதி என பிரிவினை உச்சத்தில் இருந்த 80களில் படம் தொடங்குகின்றது. ஊரில் கீழ் ஜாதியை சார்ந்த ஒருவர் இறந்தால், ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என கூற, பார்த்திபன் இதை எதிர்த்து போராடுகிறார்.

இந்நிலையில் விஷ்ணு கீழ் ஜாதியை சார்ந்தவராக இருந்து படிப்பில் சிறந்து விளங்கி, மாவட்ட கலெக்டர் ஆகவேண்டும் என்று எண்ணுகின்றார்.
ஆனால், வேண்டுமென்றே இவரை ஒரு கொலை வழக்கில் ஒரு சிலர் சதியால் கைது செய்ய, பின் ஜாமினில் வெளியே வருகிறார். அதை தொடர்ந்து போலிஸான ஹரிஸ் உத்தமன், விஷ்ணுவை ஒரு பிரச்சனையில் ஜெயிலில் கொண்டு சென்று அடித்துவிடுகிறார்.
இதன் பிறகு விஷ்ணு மாயமாகிறார், அவர் எங்கு இருக்கிறார் என்று ஊரே தேட ஆரம்பிக்கின்றது. பார்த்திபனும் இனி அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது, தன் போராட்டத்தை தொடங்க, இறுதியில் கிட்டு கிடைத்தாரா? பார்த்திபன் போராட்டம் வெற்றி பெற்றதா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மாவீரன் கிட்டு பெயருக்கு ஏற்றார் போலவே மிகவும் கம்பீரமான கதாபாத்திரம் தான் விஷ்ணுவிற்கு. ஆரம்பத்தில் கதைக்குள் வர கொஞ்சம் தடுமாறினாலும் போக, போக எளிமையான நடிப்பால் கவர்ந்து இழுக்கின்றார்.
படத்தின் முதல் ஹீரோ என்றே சொல்லிவிடலாம் பார்த்திபனை. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர் பேசும் வசனங்கள் விசில் பறக்கின்றது, ‘அடிக்க அடிக்க வாங்கிக்கொள்கின்றோம், திருப்பி அடித்தால் திமிருன்னு சொல்றீங்க’, ’சட்டம் விரோதமா செயல்பட கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா, இங்கே சட்டம் எங்களுக்கு விரோதமா இருக்கு’ போன்ற வசனம் கவர்கின்றது.
படம் 80 களில் நடப்பது போல் உள்ளது. அதற்கான காட்சியமைப்பில் ரசிக்கவும் வைத்துள்ளார்கள். குறிப்பாக எம்.ஜி.ஆர் இறந்த தகவலை கூறுவது, காமராஜரால் தான் கல்வி தமிழகத்தில் பரவியது என பல காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. ஜாதி வெறி ஒரு மனிதனை எத்தனை கொடூரமாக மாற்றுகின்றது என்பதை ஒரு பெரியவர் தன் மகளை கொல்லும் காட்சி நெஞ்சை உறைய வைக்கின்றது.
புரட்சி, போராட்டம் என படம் டாக்குமெண்ட்ரி பீல் கொடுக்குமோ என பலரும் நினைத்த நிலையில் முடிந்த அளவிற்கு கமர்ஷியலாக அனைத்து ஆடியன்ஸையும் திருப்திப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இருந்தாலும் இரண்டாம் பாதியில் பாடல்கள் தேவை தானா?
டி.இமான் பாடல்களை விட பின்னணி இசையில் கலக்கியுள்ளார். அதிலும் கிளைமேக்ஸில் வரும் இசை உருக வைக்கின்றது. ஒளிப்பதிவும் நம்மை 80களில் அழைத்து செல்கின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், பார்த்திபன், விஷ்ணுவின் யதார்த்தமான நடிப்பு.
கிளைமேக்ஸ் மற்றும் இணைவோம் இணைவோம் பாடல்களை படமாக்கிய விதம்.

பல்ப்ஸ்

சூரி எதற்கு இந்த படத்தில், ஒரு வேளை பெயர் வாங்கிக்கொடுத்த இயக்குனர் என்பதால் நடித்தாரா?
இரண்டாம் பாதியில் புரட்சி வெடிக்கும் சமயத்தில் காதல் பாடல் தேவையா?

Direction:
Music:
நன்றி  cineulagam 

No comments: